பிரீமியம் ஸ்டோரி
நடப்பு
ஷேர்லக் ஹோம்ஸ்
 

 

சாயுது ரியல் எஸ்டேட்..?

ஷேர்லக் ஹோம்ஸ்

சி .என்.என் - ஐ.பி.என் சேனலில் மும்பை குண்டு வெடிப்பு காட்சிகளை பார்த்துக்கொண்டிருந்தோம். கவலை முகத்தோடு உள்ளே நுழைந்தார் ஷேர்லக்.

‘‘ச்சே... இந்த மும்பைக்கு மட்டும் ஏன் இத்தனை சோதனைகள்..? தொடர்மழையால் தண்ணீரில் மூழ்கிய மும்பை, இப்போது அடுத்தடுத்த குண்டு வெடிப்புகளால், கண்ணீரில் மூழ்கிக் கிடக்கிறது. நம் நாட்டின் பொருளாதார தலைநகரமான மும்பையைக் குறிவைத்தால் இந்தியாவையே ஸ்தம்பிக்க வைத்துவிடலாம் என்பது நாசக்காரர்களின் நோக்கமாக இருக்கிறது’’ என்றார் கொஞ்சம் கம்மிய குரலில்.

‘‘ஏற்கெனவே ‘பங்குச் சந்தையில் இன்னும் ஒரு கரெக்ஷன் வரப் போகிறது...’ என்று பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். மெள்ள 11000 நோக்கி உயர்ந்துகொண்டிருந்த நேரத்தில் இந்த விவகாரம் என்ன விளைவுகளை ஏற்படுத்துமோ? என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் பரவியது. அதையும் மீறி குண்டு வெடிப்புக்கு மறுநாளான இன்றே 315 பாயின்ட்கள் கூடியிருக்கிறதே...!’’ என்றபடி ஷேர்லக்கை சப்ஜெக்ட்டுக்குள் இழுத்தோம்.

‘‘அதுமட்டுமல்ல... மத்திய அரசின் ஸ்திரத்தன்மை குறித்து பங்குச் சந்தை சார்ந்த யாருமே நம்பிக்கையுடன் இல்லை. இந்த மாதத்தின் முதல் வார இறுதியில் ‘பிரதமர் ராஜினாமா’ வதந்தியால், சந்தை சடசடவென்று சரிந்தது. அதை மறுத்து அறிக்கைகள் வந்தாலும், அதை நம்பும் ஆட்கள் பங்குச் சந்தை வட்டாரத்தில் மிகக்குறைவு. ‘நெய்வேலி பங்கு விற்பனையை இப்போதைக்கு நிறுத்திவைக்கிறோம்’ என்று சொன்னது மாதிரியே, பிரதமரின் ராஜினாமாவும் இப்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறதாம். இதுபோல எந்த சீர்திருத்தத்துக்கும் இடம் இல்லாமல் போனால் பட்ஜெட்டில் துண்டுவிழுவதைத் தவிர்க்க திட்டச் செலவுகளில் கைவைக்க வேண்டி வரும். இந்தச் சூழல், தொழில் துறையில் ஒரு மந்தமான நிலையைக் கொண்டு வந்துவிடுமோ என்றும் கவலைப்படுகிறார்கள் சந்தை வட்டாரத்தினர்’’ என்றார்.

‘‘நடப்பு ஆண்டின் முதல் காலாண்டு முடிவுகள் நன்றாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறதே!’’ என்ற சந்தேகத்தைக் கேட்டோம்.

‘‘நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை பலமாக இருப்பதால்தான், இன்னும் பங்குச் சந்தை தாக்குப்பிடிக்கிறது. இல்லாவிட்டால், இந்நேரம் சரிந்து பள்ளத்தில் வீழ்ந்திருக்கும். ஆனால்...’’

‘‘ஆனால்.....’’

‘‘இப்போது இல்லாவிட்டாலும் இன்னும் சில வாரங்கள்... அல்லது, அதிகபட்சமாக ஒரு மாதம்தான்! அதன்பிறகு இன்னொரு குறிப்பிடத்தக்க வீழ்ச்சி இருக்கிறது என எல்லாரும் நம்புகிறார்கள். அதனால் ஊசலாட்ட பங்குகளில் மாற்றார் சொல்வதை நம்பி மாட்டிக்கொள்ளாதீர்கள் என்றுதான் சொல்வேன். ஆனால்...’’

‘‘என்ன மறுபடியும் ஆனால்..?’’

‘‘ஐ.பி.எம், எல்.என்.மிட்டல் மற்றும் ஸ்விஸ் நாட்டிலிருந்து சிலரிடம் இருந்து கணிசமான டாலர்கள் இந்திய சந்தைக்குள் பாயத் தயாராகி வருவதாகவும், டாலர் மதிப்பு இன்னும் கொஞ்சம் குறையட்டும் என அவர்கள் காத்திருப்ப தாகவும், அவர்கள் சார்பாகத்தான் சந்தையைப் பள்ளத்தில் தள்ள ஆட்கள் தயாராகிக் கொண்டிருப்பதாகவும் இன்னொரு தகவல் பட்சி காதைக் கடிக்கிறது. இப்படி ஆளாளுக்கு ஒரு செய்தி சொன்னாலும் அவை அனைத்தின் அடிநாதமும், சீக்கிரமே இன்னொரு சரிவு இருக்கிறது என்பதுதான்...’’

‘‘இப்படி குண்டு வைக்கிறீர்களே..?’’ என்றோம்.

‘‘காதுக்கு வரும் செய்தியைச் சொன்னேன். விரும்பினால் உஷாராகிக்கொள்ளும். பங்குச் சந்தை வீழ்ச்சி பற்றிய செய்திகள் கொஞ்சம் கலவரப் படுத்தினாலும், இன்னொரு வீழ்ச்சி பற்றி வரும் செய்தி முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஊட்டலாம்’’ என்று அடுத்த சப்ஜெக்ட்டுக்குத் தாவினார்.

‘‘முதலில் அதைச் சொல்லுங்கள்!’’

‘‘ரியல் எஸ்டேட் துறையில் இருக்கும் கிடுகிடு விலையேற்றம் கட்டுக்குள் வரும் என்று தகவல். கடந்த சில வருடங்களில் தொடர்ந்து மலையேறிய விலைகள், சரியும் சந்தர்ப்பங்கள் இருப்பதாகச் செய்திகள் வருகின்றன.’’

‘‘நகர்ப்புறத்தில் வீடோ, ஃப்ளாட்டோ வாங்கலாம் என்று ஒரு திட்டம் வைத்திருந்தோம்’’ என்று இழுத்தோம்.

‘‘அதை இன்னும் ஒரு வருடம் தள்ளிப்போடுங்கள். இன்றைய உச்ச விலையோடு ஒப்பிடும்போது, கணிசமான விலை குறைவில் வாங்க வாய்ப்புகள் வரும் எனத் தெரிகின்றன.’’

‘‘ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை இன்னும் உயர்த்தும் என்ற நம்பிக்கையில் இப்படிச் சொல்கிறீர் களாக்கும்’’ என்றோம்.

‘‘அது காரணங்களில் ஒன்றுதான். அதைத்தாண்டி, வீடு கட்ட கடன் கொடுக்கவே வங்கிகளிடம் பணம் இல்லாது போகலாம். கடந்த கடன் கொள்கை அறிவிப்பின்போதே ரிசர்வ் வங்கி மற்ற வர்த்தக வங்கிகளுக்கு ஓர் எச்சரிகை வெளியிட்டதையும் இங்கே இணைத்துப் பார்க்கிறார்கள். அத்துடன் பொதுவாக எல்லா வட்டி விகிதங்களும் அதிகரிக்கும்போது சம்பளக்காரர்களுக்கு குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் கிடைக்காமல் போகலாம்.’’

‘‘அதனால்..?’’

‘‘சொந்த முதல் போட்டு வீடு வாங்க முன் வருபவர்கள் எண்ணிக்கை இயல்பாகவே குறைந்து போகும். ஏற்கெனவே திட்டமிட்டு கட்டிய வீட்டை, நினைத்த விலைக்கு விற்கமுடியாத நிலை வரும். கையைக் கடிக்காத விலை வந்தால் விற்றுவிட்டுப் போகலாம் என விலையைக் குறைப்பார் புரோமோட்டர். அத்துடன் இப்போது பல இடங்களிலும் நகரத்தின் எல்லைகள் விரிந்து ஊருக்கு வெளியே புதுப்புது நகர்கள் உருவெடுத்து வருகின்றன. விலை குறைவாகக் கிடைக்கும் அந்த இடங்களை நோக்கிப் பலரும் ஓட ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால் நகர்ப்புறத்தில் உள்ள வீடுகளின் விலை குறைய ஆரம்பிக்கும்...’’ என்றார் ஷேர்லக்.

‘‘பொதுவாகவே, பொருளாதார சுழற்சியில் ஒரு கட்டம்வரை ஏறியது எந்த விலையானாலும் அது சீக்கிரத்திலேயே குறைந்துதான் ஆகவேண்டும் என்பது தானே நிஜம்!’’ என்றோம் நாம்.

‘‘சரியாகச் சொன்னீர்! மும்பைபோல கருப்புப் பணச் சந்தையிலும், மாஃபியா கூட்டத்திடமும் மாட்டிக்கொண்ட இடங்கள்தவிர, மற்ற எல்லா இடங்களிலும் 20% வரை விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுதவிர, இன்கம்டேக்ஸ் துறையின் அதி தீவிர செலவு கண்காணிப்பில் இது போன்ற பெருந்தொகை சம்பந்தப்பட்ட விஷயங்கள் கட்டாயமாக இடம் பிடிப்பதால் கருப்புப் பணத்தைக் கொண்டு வாங்குபவர்களும் மடக்கப்படும் சாத்தியங் கள் அதிகரிக்கின்றன. இப்படி சுற்றி சுற்றி வந்து ரியல் எஸ்டேட் விலைகள் சரியும் என்பதற்கு ஆதரவாக பல காரணங்களைச் சொல்கிறார்கள்!’’

‘‘காசை ரெடி பண்ணிக்கொள்ள வேண்டியது தான்! அது சரி... பங்குச் சந்தையில் குறிப்பிட்ட சில பங்கு பற்றி செய்தி சொல்வீர்களே!’’ என்று நூல் விட்டோம்.

‘‘உமக்கு இல்லாததா..? எஃப்.எம்.சி.ஜி பங்குகள்தான் இப்போதைக்கு நம்பிக்கை தருவதாக உள்ளன. அடுத்து சத்யமான சாஃப்ட்வேர் கம்பெனியும், ‘பை..பை..’ காட்டும் குழும சாஃப்ட்வேர் கம்பெனியும் மிக நல்ல ரிசல்ட் தருவார்கள் என்கிறார்கள். அதோடு, பங்காளி சண்டையில் மாட்டிக்கொண்டுள்ள மருந்து கம்பெனிக்கும் நல்ல காலம் பிறக்கிறதாம். புதிதாக பல சுபச்செய்திகள் வரப்போகின்றன என்கிறார்கள்.’’

‘‘வேகமாக அடுக்கிக்கொண்டே போகிறீர்கள். அவசரமாக எதுவும் கிளம்பவேண்டுமா?’’

‘‘அப்படி ஒன்றுமில்லை. ஆனால், சில காலம் முன்புவரைகூட மார்ஜின் லிமிட்டுக்கு கொஞ்சம் மேலேகூட டிரேடிங் செய்ய அனுமதித்த பல முன்னணி பங்குத்தரகர்கள் இப்போது மார்ஜின், செக்யூரிட்டி விஷயத்தில் நம்பமுடியாத அளவுக்கு கறார் பார்ட்டிகளாக மாறிவிட்டார்கள். இதற்கு செபி நடவடிக்கை காரணமில்லை’’ என்றவர் தொடர்ந்து,

‘‘இது எனது குளோசிங் நோட்! குறித்துக் கொள்ளுங்கள். அவர்களது லேட்டஸ்ட் டிப்ஸே, ‘முடிந்தவரை கொஞ்சம் பெரிய கம்பெனி பங்குகளாக... வங்கியில் அடமானம் வைக்கக்கூடிய பங்குகளாகப் பார்த்து வாங்குங்கள்!’ என்பதுதானாம்’’ என்று சொன்னவர், சரேலெனக் கிளம்பிவிட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு