Published:Updated:

முகேஷ் அண்ணாச்சியின் மளிகை கனவு!

முகேஷ் அண்ணாச்சியின் மளிகை கனவு!

பிரீமியம் ஸ்டோரி
நடப்பு
முகேஷ் அண்ணாச்சியின் மளிகை கனவு!
 

 

முகேஷ் அண்ணாச்சியின் மளிகை கனவு!

முகேஷ் அண்ணாச்சியின் மளிகை கனவு!

ல மெகா கனவுகளைச் சாத்தியமாக்கிய ரிலையன்ஸ் நிறுவனம் புதிதாக ரீ\டெய்ல் துறையில் இறங்க 25 ஆயிரம் கோடி ரூபாயில் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை முகேஷ் அம்பானி இப்போதுதான் வெளியிட்டிருக்கிறார் என்றாலும், பூர்வாங்க வேலைகள் தொடங்கி நீண்ட நாட்களாகி விட்டன.

ரீ\டெய்ல் துறைக்கான ஆரம்ப முதலீடாக சுமார் பத்தாயிரம் கோடி ரூபாயை இறக்கிவிடப் போகிறது ரிலையன்ஸ். இந்தியாவின் மிகப்பெரிய ரீ\டெய்ல் நிறுவனமான ‘பேன்டலூன்’ ஓராண்டில் விற்பனை செய்வதைவிட 15 மடங்கு அதிக தொகை இது. அடுத்தகட்டமாக மேலும் 15 ஆயிரம் கோடி ரூபாயைக் களமிறக்கும் திட்டம் இருக்கிறதாம்.

மக்கள் தொகையில் பாதி அளவுக்கு இருக்கிற இளைஞர் கூட்டத்தை இலக்காக்கி ரீ-டெய்ல் துறையில் குதிக்கும் ரிலையன்ஸ், அவர்களுடைய சராசரி வருமானத்தின் மீதும், மாறியிருக்கும் வாழ்க்கை முறையின் மீதும், பெரிய அளவில் நம்பிக்கை வைத்திருக்கிறது.

பெரு நகரங்கள் தவிர, இரண்டாம், மூன்றாம் நிலையில் இருக்கும் நடுத்தர நகரங்களிலும் சேர்த்து மொத்தம் சுமார் 1,500 இடங்களில் கிளை பரப்ப இருக்கிறது. கடலைமிட்டாயில் தொடங்கி, கார், பேன்ட், நகை உள்ளிட்ட எல்லாவகையான நுகர்வோர் பொருட்களையும் இடைத்தரகர்களின் இடையூறு இல்லாமல் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பது ரிலையன்ஸின் திட்டம்.

இந்த முயற்சியால் இடையே கொள்ளை லாபம் பார்க்கும் தரகர்களை ஒழித்து, அவர்கள் அடைந்து வரும் லாபத்தை நுகர்வோருடன் நேரடியாகப் பகிர்ந்துகொள்ள பாதை வகுத்திருக்கிறது ரிலையன்ஸ். இதனால், தயாரிப்பாளரும் நுகர்வோரும் அதிக லாபம் அடையமுடியும். அதோடு, ரிலையன்ஸின் இந்தத் திட்டம் மூலம் 10 லட்சம் பேருக்கு உறுதியான, நம்பகமான வேலைவாய்ப்பும் கிடைக்கும்!

பொதுவாகவே ரிலையன்ஸின் திட்டங்கள் குறித்து ஆர்வம் எழுவதைப் போலவே, அதுகுறித்த விமர் சனங்களும் கிளம்புவதுண்டு. அது என்ன..?

ரிலையன்ஸின் இந்த ரீ\டெய்ல் திட்டம் பெரிய வெற்றியைத் தராது என்பதுதான் அதைக் கிளப்புபவர்களின் வாதம். ‘‘ரிலையன்ஸ் வரப் போவதை அறிந்த மற்ற ரீ\டெய்ல் நிறுவனங்கள் நகரின் முக்கியமான இடங்களை வளைத்துப் போட்டுவிட்டார்கள். அதனால், ரிலையன்ஸ் புறநகர் பகுதிகளில்தான் இடம் பிடிக்கமுடியும். அப்படி இருக்கும்போது, பக்கத்தில் இருக்கும் அண்ணாச்சி கடையில் பொருட்கள் வாங்கிப் பழக்கப்பட்ட நம்மூர் மக்கள், தொலைவில் இருக்கும் ரிலையன்ஸை தேடிப்போய் வாங்குவார்களா என்பது சந்தேகம்தான். அதனால், ரிலையன்ஸ் வெற்றி அத்தனை உறுதி இல்லை’’ என்கிறார்கள்.

ஆனால், ரிலையன்ஸோ சக நிறுவனங்களைப் போட்டியாக நினைக்காமல் அரவணைத்துக் கொள்ளவே நினைக்கிறது. தென்னகத்தில் மிக வலுவாக கால் ஊன்றியுள்ள சுபிக்ஷமான நிறுவனப் பங்குகளில் கணிசமான அளவைக் கைப்பற்ற முயற்சிக்கிறது.

செல்போன் கொண்டு வந்து ரிலையன்ஸ் செய்த புரட்சி இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது... அதே வேகம் ரீ\டெய்ல் துறையிலும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மனதிலும் இருக்கிறது.

முகேஷ் அண்ணாச்சியின் மளிகைக் கனவு ஜெயிக்குமா?

அம்பானி வெற்றி ரகசியம்!

முகேஷ் அண்ணாச்சியின் மளிகை கனவு!

ரி லையன்ஸ் நிறுவனங்களின் இன்ஷூரன்ஸ் ஆலோசராகப் பணியாற்றியவர் ஓ.என்.வெங்கட்ராமன். திருபாய் அம்பானியின் நெருக்கமான வட்டாரத்தில் பணியாற்றிய இவர், ‘‘எந்த ஒரு விஷயத்திலுமே, அவர்கள் காட்டும் தெளிவான அணுகுமுறைதான் அவர்களுடைய அடுத்தடுத்த வெற்றிகளுக்குக் காரணம்’’ என்கிறார். இப்போது சென்னையில் இருக்கும் வெங்கட்ராமனுடன் ரிலையன்ஸ் பற்றிய மலரும் நினைவுகளைப் பேசினோம்.

‘‘திருபாய் அம்பானியின் அணுகுமுறை, நல்ல பண்புகள், முன்னுதாரணமான தலைமை, மனித நேயம், மற்றவர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் குணம், அது சரியான கருத்து என்றால் தயங்காமல் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை போன்ற பல விஷயங்கள்தான் அந்த நிறுவன வளர்ச்சிக்கு அடித்தளம்.

அறுபதுகளின் முற்பகுதியில் கையில் பல ஆர்டர்களை வைத்துக் கொண்டு நூல் வாங்க 2 லட்ச ரூபாய் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார் அம்பானி. அவருக்கு சிண்டிகேட் வங்கியின் மேனேஜர் ஒருவர் தன்னுடைய ரிஸ்க்கில் கடன் கொடுத்தார்.

அதன்பிறகு மிக உயர்ந்த இடத்துக்குச் சென்றுவிட்டாலும் திருபாய் அம்பானி பழைய சம்பவங்களை மறக்காமல் அதே சிண்டிகேட் வங்கியில் தன்னுடைய கணக்கைத் தொடர்ந்துவந்தார். அதோடு, அந்த மேனேஜர் ஓய்வுபெற்றவுடன் தன்னுடனேயே வைத்துக்கொண்டார். ரிலையன்ஸில் வேலைக்குச் சேருபவர்கள் யாருமே சம்பளத்துக்காக மட்டுமே வேலை செய்வதில்லை. அதைத்தாண்டி ஒரு பிணைப்பு இருக்கும்’’ என்று ரிலையன்ஸ் பற்றிச் சொன்னார்.

முகேஷ் அண்ணாச்சியின் மளிகை கனவு!

‘கால் வைக்கும் துறைகளில் எல்லாம் முத்திரை பதிக்கிறார்களே... அது எப்படிச் சாத்தியமாகிறது?’ என்ற பலரது மனதிலும் இருக்கும் கேள்வியைக் கேட்டோம்.

‘‘ரிலையன்ஸ் நிறுவனம் ஈடுபடும் தொழில்கள் பெரும்பாலும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புகொண்டதாகவே இருக்கும். முற்றிலும் தொடர்பில்லாத, அறிமுகம் இல்லாத புதிய தொழில்களில் அவர்கள் குடும்பம் எப்போதுமே அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. அத்துடன் திருபாய் அம்பானியின் திட்டங்கள் எல்லாமே பெரும்பாலும் அடுத்த தலைமுறை தொழிலாக இருக்கும். இன்னும் 5 வருடம் கழித்து இந்தத் தொழிலுக்குச் சந்தை உண்டு என்பதை இன்றே அடையாளம்கண்டு, அதில் இறங்கி விடுவார்.

ஒரு தொழிலில் இறங்குவது என்று முடிவுசெய்தால், அதை மெகா திட்டமாகப் போடுவதுதான் ரிலையன்ஸ் பாணி. சின்னச் சின்ன கனவுகள் எப்போதுமே இருந்ததில்லை. அதேபோல திட்டத்துக்குத் தகுதியான, திறமையான ஆட்களைத் தேடுவதிலும் சளைப்பதில்லை. ‘இருப்பதிலேயே மிகச்சிறந்த ஆட்களைத் தேடிப்பிடித்து அழைத்து வரச் செய்வார்கள். தனக்கு ஆலோசனை சொல்ல ஒருவர் தேவைப்பட்டால் அவர் எந்த உயர் பொறுப்பில் இருந்தாலும் அந்த அதிகாரியை உள்ளே கொண்டுவந்து விடுவார்கள். அவரைத் தவிர, வேறு யாருக்கு அந்த நிறுவனத்தின் வலுவும், நெளிவும் தெரிந்திருக்க முடியும். இதுதான் ரிலையன்ஸின் வெற்றி ரகசியம்’’ என்றார் வெங்கட்ராமன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு