Published:Updated:

தனியார் மயம்... தவிர்க்க முடியாது!

தனியார் மயம்... தவிர்க்க முடியாது!

பிரீமியம் ஸ்டோரி
நடப்பு
தனியார் மயம்... தவிர்க்க முடியாது!
 

 

தனியார் மயம்... தவிர்க்க முடியாது!

தனியார் மயம்... தவிர்க்க முடியாது!

நெ ய்வேலி பழுப்பு நிலக்கரி மின் உற்பத்தி வாரியம் (என்.எல்.சி) மற்றும் தேசிய அலுமினிய வாரியம் (நால்கோ) என்கிற இரண்டு பொதுத்துறை நிறுவனங்களின் 10 சதவிகிதப் பங்குகளை விற்பது என்ற மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, அண்மையில் நடந்துமுடிந்த நாடகம், பல தமிழ்ப் பழமொழிகளை நினைவூட்டுகிறது. அவற்றுள் சில - பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிவது; சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுப்பது; யானை தன் தலையிலேயே மண்ணைப் போட்டுக் கொள்வது!

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்குள்ளேயேகூட கொள்கைகளில் வேறுபாடுகளும், அணுகுமுறைகளில் முரண்பாடு களும், செயலாற்றுவதில் மாறுபாடுகளும் இருக்கின்றன என்பதை நாடே அறிந்திருக்கும் போது, மன்மோகன்சிங் அறியாமலிருந்தால் அதற்கு மன்னிப்பு கிடையாது. அக்கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவளிக்கும் இடதுசாரி கட்சிகள் பொருளாதாரச் சீர்திருத்தம் சம்பந்தப் பட்ட எந்த அம்சத்தைத் தொட்டாலுமே சாமி வந்து ஆட ஆரம்பித்துவிடும் என்பதும் ஊரறிந்த ஒன்றுதானே!

இந்தச் சூழ்நிலையில், கூட்டணிக்கட்சிகளையும், இடதுசாரி கட்சிகளையும் ஆற, அமரக் கலந்தாலோசித்து, அவற்றின் கண்ணோட்டங்களை ஒருங்கிணைத்த பிறகு முடிவை அறிவித்திருக்க வேண்டும். ஏனென்றால், பொதுத்துறைப் பங்கு விற்பனை ஏற்கெனவே பலசந்தர்ப் பங்களில் மோதல்களை உண்டாக்கி, உணர்ச்சிகளைக் கிளறிய விஷயம். அதைத் திடுதிப்பென்று அறிவிப்பது நெருக்கடியை உண்டாக்குமென்பதை சிங் உணர்ந்திருக்காவிட்டாலும், அரசியல் நிலவரங்களில் அனுபவப்பட்ட ப.சிதம்பரமாவது அவருக்குச் சொல்லி இருக்கவேண்டும்.

பலகோணங்களில் பலாபலன்களைச் சீர்தூக்கி ஆராய்ந்தபின் எடுக்கப்பட்ட முடிவென்றால், யார் என்ன சொன்னாலும் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம், நீங்கள் ஒப்புக்கொண்டால் ஓகே, இல்லாவிட்டால் போங்களென்று சூளுரைக்கும் தைரியம் அரசுக்கு இருக்க வேண்டும்.

பிரச்னை பெரிதாகி, அரசியல் கட்சிகள் அவற்றைக் கையில் எடுத்து விளையாட ஆரம்பித்த பிறகும் ‘இந்தப் பங்குகளை விற்க நாங்கள் முன்வந்தது இந்தந்த காரணங்களால்தான்’ என்பதை வெளிப்படையாக அறிவித்து தன் தரப்பை விளக்கிக் குழப்பத்தைத் தீர்த்திருக்கவேண்டாமா..?

தனியார் மயம்... தவிர்க்க முடியாது!

செய்வதையும் செய்துவிட்டு, குட்டுபட்ட பின் சிறுபிள்ளைத்தனமாக கண்ணைக் கசக்கிக்கொண்டு இரண்டுங்கெட்டானாக நிற்பது அரசின் நம்பகத் தன்மையும், மதிப்பையும் குறைத்துவிடுமென்று சிங், சிதம்பரம் போன்ற அறிவாளிகளுக்குத் தெரியாமல் போனதெப்படி?

அரசின் அதிரடித்தனம் ஒருபுறமிருக்கட்டும். அதன் முடிவைப் பூதாகாரமாக்கிய கட்சிகளும், தொழிற் சங்கங்களுமாவது விவேகத்துடனும், நிதானத்துடனும் நடந்துகொண்டனவா என்றால், அதுவுமில்லை. பங்கு விற்பனைக்கும் தனியார் மயமாக்குவதற்குமுள்ள வேற்றுமையைப் புரிந்துகொள்ளாததால் வந்த வினை இது. ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் அரசின் பெயரில் இருக்கும் பங்குகள் அத்தனையையும் தனியாருக்கோ அல்லது தனியார் நிறுவனங்களுக்கோ விற்றுவிடுவதைத்தான் தனியார் மயமாக்குவதென்று எடுத்துக்கொள்ள வேண்டும். குறைந்த அளவில் பங்குகளை விற்று, அரசு தன் நிதி நிலையைச் சீர்படுத்த முனைவதை எதிர்ப்பதற்கு யாதொரு காரணமும் இல்லாதபோது அரசியல் கட்சிகள் அநாவசியமான சூறாவளி கிளப்பி, பிரதமரின் முகத்தில் கரி பூசியிருக்க வேண்டாம்.

வருங்காலத்தில் இம்மாதிரியான நிகழ்வுகள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளும் வழியை அரசு அனுசரிக்க வேண்டும். அதற்கான வழியும் இல்லாமல் இல்லை. கூட்டணிக் கட்சிகள், தோழமைக் கட்சிகள் மற்றும் எதிர்க்கும் கட்சிகள் எல்லாவற்றின் தலைவர் களையும் கூட்டிப் பொருளாதாரச் சீர்திருத்தத்தின் எல்லா அம்சங்களையும் தீர, நுணுக்கமாக விவாதித்து, முன்னுரிமைப்படுத்தி, ஒரு செயல் திட்டத்தைத் தீட்டி முன்னேறுவது அதில் ஒரு வழி.

இந்தக் கட்டத்தில், தனியார்மயம் ஆக்குவதைப் பற்றியும் பொதுவான சில கருத்துக்களை எடுத்துவைப்பது பயனுள்ளதாக இருக்கும்.

ஒரு ஜனநாயக நாட்டை ஆளும் அரசின் முக்கியமான குறிக்கோள் என்ன..? தன்னை நம்பி இருக்கும் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, அவர்களுக்கு அடிப்படை வசதிகளை உண்டாக்கித் தருவது, சட்டம் ஒழுங்கைக் காத்து மக்களின் நிம்மதிக்கும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருவது, உலக அளவில் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச்செல்லும் திட்டங்கள் தீட்டுவது போன்ற சில அடிப்படையான அம்சங்கள்தானே!

தொழில், வியாபாரம் போன்ற அரசின் இயல்பான திறமைக்கு அப்பாற்பட்ட திசைகளில் கவனத்தைச் செலுத்தினால், அதன் முக்கிய, அடிப்படைக் குறிக்கோளில் கவனம் செலுத்தமுடியாத நிலைதானே ஏற்படும்..?

ஆகையால், அரசு காலப்போக்கில் ஆரம்பித்து நடத்திய தொழில், வர்த்தக நிறுவனங்களைத் தனியார் வசம் ஒப்படைத்து விட்டு, அவை நன்றாக இயங்குவதற்கான நெறிமுறைகள், கட்டுமானங்கள் மற்றும் வாய்ப்புகளை உண்டாக்கும் பொறுப்பை மாத்திரம் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசிடமே நிறுவனம் இருக்கும்போது, அங்கே ஒரு பிரச்னை என்றால் அதற்குள் தலையை விடுவது, அதனால் ஏற்படும் நாட்டின் பொருளாதார, உற்பத்தி இழப்புக்கு என்ன செய்யலாம் என்று மண்டையை உடைப்பது இதெல்லாம் குறையுமே! தனியார் வசம் என்றால், அதனை நிர்வகிப்பவர்கள் சரியாகச் செய்யாத நிலையில் அங்கே தலையிட்டுச் சமாளிக்கலாமே!

தொழில், வர்த்தக நிறுவனங்களை அரசு நடத்துவதில் பல சங்கடங்கள் உள்ளன. அரசியல் அழுத்தத்தினாலும், தொழிற்சங்கங்கள் தரும் தொல்லையாலும், அதற்கு ஈடுகொடுக்க முடியாத தளர்ச்சியான மேலாண்மை யினாலும் பொதுத்துறை நிறுவனங்களில் ஊழியர் களின் எண்ணிக்கை தேவைக்கும் மேலாகப் பலமடங்கு அதிகமாகப் பெருகி, உற்பத்தித் தரத்திலும், திறத்திலும் வீழ்ச்சி ஏற்படுகிறது.

அவர்களை வேலை வாங்குவதில் ஆரம்பித்து, புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தும் முயற்சிவரை தொழிற்சங்கங்களின் இடையூறுகள் ஏராளம். ஆணைகளுக்குக் கட்டுப்படாத, அல்லது அத்துமீறும், ஊழியர்களுக்கெதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதென்பது பொதுத்துறை நிறுவனங் களிலிருந்து மறைந்துவிட்டதென்றே சொல்லலாம். மேலும், உரிய நேரத்தில், உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியாதபடி அங்கு ‘அரசியல்’ ஆட்டிப் படைக்கும். பொதுத்துறை நிறுவனத்தார் படுத்தும் பாட்டால், சாதாரண மக்கள் படும் பரிதாப கதி பற்றி அதிகம் கூற வேண்டியதில்லை. அவர்கள் துன்புறுத்தப் படுவதும், அலைக்கழிக்கப்படுவதும் கண்கூடு.

தனியார் மயம்... தவிர்க்க முடியாது!

இப்படிப்பட்ட காரணங்களால்தான் பல பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்திலே தள்ளாடிக்கொண்டு இருக்கின்றன. இவற்றின் பங்குகளை மக்கள் வாங்குவார்கள் என்று எதிர்பார்ப்பது யதார்த்தத்துக்குப் புறம்பானது. லாபத்தில் நடப்பதாகக் கூறப்படும் ஒருசில நிறுவனங்கள் கூட, தனியார் வசமானால், அவை ஈட்டும் நிதி இன்னும் பலமடங்கு விருத்தியாகும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியப் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்ட இந்த 15 ஆண்டு காலத்தில், தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் மேம்பட்ட நிலையில் தரம், திறன், தொழில்நுட்ப முன்னேற்றம், அதீத வருவாய் ஈட்டுவது என்று முன்னுதாரணமாகத்தான் திகழ்ந்து கொண்டு இருக்கின்றன.

உலகில் இன்று வளமாக வளர்ந்து வலுவடைந்துள்ள நாடுகள் பலவும் பிரச்னைகளைத் தன் வசமே வைத்துக்கொண்டு உழல்வதில்லை. அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் பொருளாதார பிரச்னைகளுக்காக வேலைநிறுத்தம், உற்பத்தி பாதிப்பு, நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் என்று எதையாவது கேள்விப்படுகிறோமா..? அங்குள்ள அரசியல் கட்சிகள் கையாளும் கையிலெடுக்கும் பிரச்னை எல்லாம் ஆண்களை ஆண்கள் திருமணம் செய்துகொள்வது சரியா, தவறா..? அதிபர் அரை டவுசருடன் அந்நிய நாட்டில் நடமாடியது உண்மையா... இல்லையா? என்பது போன்றவை யாகத்தான் இருக்கின்றன.

தனியார் மயமாக்குவதில் உள்ள சிக்கல்களைப் பட்டியலிடத் துடிப்போர், ஒன்றை மாத்திரம் புரிந்து கொண்டு மனதைப் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதிமுக்கியமான, நாட்டின் பாதுகாப்பு, சட்டம்- ஒழுங்கு நிலைநாட்டல் சம்பந்தப்பட்டவை தவிர, மற்றவற்றிலிருந்து அரசு இன்றில்லாவிட்டால், என்றாவது விலகவேண்டிய நிலை வந்தேதீரும். தனியார் கைகளில், அரசின் திடமான கண்காணிப்போடு நடக்கும்போது பொருளாதாரம் வலுவடையும். வேலைவாய்ப்புகள், போக்குவரத்து வசதிகள், கட்டுமான வளர்ச்சி, ஊரக மேம்பாடு போன்ற அடுத்தகட்ட வளர்ச்சிகள் எந்தத் தங்குதடையும் இல்லாமல் நடக்கும்.

தனியார் மயம்... தவிர்க்க முடியாது!

ட்டுரையாளர் ராகவன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி. மேற்கு வங்கம், மத்திய அரசில் தலைமைப் பதவிகள் வகித்தவர். நான்கு பொதுத் துறை நிறுவனங்களின் தலைவராக இருந்தவர். ஐக்கிய நாடுகள் கொள்கை ஆலோசகர், அகில உலக அமைதி மற்றும் வளர்ச்சிக் குழுமத்தின் ஆலோசகர் ஆகிய பதவிகள் வகித்தவர்.

கட்டுரையில் வெளியாகி இருப்பவை, அவருக்கே உரிய கருத்துக்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு