Published:Updated:

க்ளைம் க்ரைம்.. தெரிந்தது ஒரு துளி..!

க்ளைம் க்ரைம்.. தெரிந்தது ஒரு துளி..!

பிரீமியம் ஸ்டோரி
நடப்பு
க்ளைம் க்ரைம்.. தெரிந்தது ஒரு துளி..!
 

 

க்ளைம் க்ரைம்...

தெரிந்தது ஒரு துளி..!

க்ளைம் க்ரைம்.. தெரிந்தது ஒரு துளி..!

‘‘சே லம், நாமக்கல் மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இன்ஷூரன்ஸ் மோசடி மலையின் நுனி அளவுதான்... இன்னும் பெரிய பெரிய மோசடி எல்லாம் வெளியில் வராமல் புதைந்து கிடக்கிறது’’ என்றார் இன்ஷூரன்ஸ் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர்.

‘இயற்கையாகவோ, வேறுவகையிலோ உடல் நிலை பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து விபத்தில் காயமடைந்ததாகவும் ஊனமுற்ற தாகவும் சொல்லி இன்ஷூரன்ஸ் க்ளைம் வாங்கிக்கொடுத்து ஒரு கும்பலே மோசடி செய்திருக்கிறது’ என்பதுதான் குற்றச்சாட்டு!

இப்படிப்பட்ட மோசடியின் பின்னணியில் சில வழக்கறிஞர்கள், டாக்டர்கள், காவல்துறை அதிகாரிகளேகூட இருப்பதாக அவர் சொன்ன போது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.

‘‘ஒரே ஒரு சாம்பிள் மட்டும் சொல்கிறேன்... ‘நெடுஞ்சாலை விபத்தில் சிக்கிய தனக்கு 2 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும்’ என்று வந்தார் ஒருவர். விபத்து குறித்த எஃப்.ஐ.ஆர் காப்பி தவிர முறையான தஸ்தாவேஜ்கள் ஏதும் இல்லை. எங்கள் வழக்கறிஞர், ‘இது பொய்வழக்கு’ என்று ஆணித்தரமாக வாதாட, உண்மை, பாதிக்கப்பட்டவர் மூலமாகவே வெளிப்பட்டுவிட்டது.

உண்மையில் அவருக்கு சர்க்கரை வியாதி. அதனால், பிரச்னை ஏற்பட்டு காலை எடுத்திருக் கிறார்கள். இந்தத் தகவலைத் தெரிந்துகொண்ட வழக்கறிஞர் ஒருவர், டாக்டர், போலீஸ் துணை யோடு களமிறங்கி இருக்கிறார். காலை இழந்த வரை நஷ்ட ஈடு க்ளைம் செய்யவைத்து மோசடி செய்திருக்கிறார். இதுபோல பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன’’ என்றார் அவர்.

‘‘இதில் இன்ஷூரன்ஸ் துறையைச் சேர்ந்த பலரே உள்ளிருந்து ஈடுபடுகிறார்களோ என்ற சந்தேகமும் இருக்கிறது. ஏனென்றால், அவர்கள் தயவு இல்லாமல் க்ளைம் வாங்கமுடியாதே!

சிவில் மற்றும் கிரிமினல் கேஸ்களில் கையாளப்படுவதுபோல இதில் விரிவான விசாரணைமுறை கிடையாது. அதையே சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஏகப் பட்ட தில்லுமுல்லுகள் நடக்கின்றன’’ என்றார் இந்த மோசடி விவகாரத்தை ஆழ்ந்து கவனித்துவரும் நிதித்துறை வல்லுநர் ஒருவர்.

முன்பெல்லாம் விபத்து நடந்த பகுதியில் உள்ள நீதிமன்றத்தில்தான் நஷ்டஈடு கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் வேறு பகுதியைச் சேர்ந்தவராக இருந்தால் நஷ்டஈடு கேட்டு அலைய வேண்டியிருக்குமே என்ற எண்ணத்தில் 1955\ம் ஆண்டு மோட்டார் வாகன விபத்தில் நஷ்ட ஈடு கோருவது தொடர்பான சட்டத்தில் சில மாற்றங் களைக் கொண்டுவந்தனர். அதன்படி, விபத்து நடந்த இடம், விபத்துக்குள்ளான நபரின் சொந்த ஊர், விபத்துக்குள்ளான வாகன உரிமையாளரின் ஊர் ஆகிய இடங்களில் ஏதாவது ஒன்றில் விண்ணப்பிக்கமுடியும்.

தனியார்துறை இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், ‘‘இதனால் நாங்கள் படும்பாடு கொஞ்சமல்ல. ஒரே வாகனம் ஒரே நாளில் இரண்டு விபத்துகளைச் சந்தித்ததாகக்கூட வழக்கு வருகிறது. விபத்தில் பாதிக்கப்பட்டவர் இரு இடங்களில் தனித்தனியே வழக்குத் தொடர்ந்தாலும் அதை அடையாளம் காணும் வசதிகள் இல்லை. இதற்கு ஐ.ஆர்.டி.ஏ போன்ற அமைப்புகள் உடனடி கவனம் செலுத்தவேண்டும். அதேபோல பழைய வரையறைப் படி விபத்து நடந்த ஆறு மாதங்களுக்குள் நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படவேண்டும் என்றிருந்தது இப்போது அந்த வரம்பு நீக்கப்பட்டுள்ளதால், 10 ஆண்டு களுக்கு முன்பு நடந்த விபத்து வழக்குகளில் எஃப்.ஐ.ஆர் காப்பி பெற்று அதற்கெல்லாம் வழக்கு பதிவு செய்வது நடக்கிறது’’ என்றார் கொந்தளிப்போடு.

வழக்குப் போட்டு நஷ்டஈடு வாங்கித் தருவதாகச் சொல்லி அப்பாவி கிராம மக்களை ஏமாற்றி பல தாள்களில் கையெழுத்து வாங்கி, இன்ஷூரன்ஸ் க்ளைம் செய்துவிட்டு பேருக்கு ஒரு தொகையைக் கொடுத்துவிட்டு, மீதி பெரும் தொகையை சுருட்டும் சதிகளும் நடக்கத்தான் செய்கின்றன.

நண்பன் போலிருந்து ஆபத்து காலத்தில் உதவும் இன்ஷூரன்ஸ் துறையில் நடக்கும் இது போன்ற மோசடி சமாசாரங்கள் கத்தி பாய்ச்சும் விஷயங்கள்! எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்ற மனப்போக்கு இனியும் தொடராமல் இருந்தால்தான் நல்லது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு