Published:Updated:

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்

பிரீமியம் ஸ்டோரி
தொழில்
‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்
 


‘மூளை’தனம்

லேட்டஸ்ட் வியாபார உத்திகள்!

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்
‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்

ங்கள் மகளை என் பையனுக்கு திருமணம் செய்து தருவீர்களா..?’ என்று கேட்டார் அவர். ‘நோ சான்ஸ்..!’ என்று தீர்க்கமாக மறுத்தார் பில்கேட்ஸ். அந்த மனிதர் விடவில்லை. ‘ஒருவேளை என் மகன் உலக வங்கியில் துணைத் தலைவர் பதவியில் இருந்தால்..?’ என்று கேட்க... பில்கேட்ஸ் கண்களில் சிறிய ஆச்சர்யம். ‘அப்படியானால் ஒப்புக்கொள்ள வாய்ப்பிருக்கிறது!’ என்ற பில்கேட்ஸ் யோசனையோடு நகர்ந்தார். அந்த மனிதருக்கு மகிழ்ச்சி.

அடுத்த ஓரிரு நாள். உலக வங்கியின் தலைவரைச் சந்தித்தார் அந்த மனிதர். ‘என் மகனுக்கு உலக வங்கியில் துணைத் தலைவர் பதவி தரமுடியுமா..?’ என்று எடுத்த எடுப்பிலேயே படாரெனக் கேட்டார். வங்கித் தலைவர் முகத்தில் ஆயிரம் கேள்விக் குறிகள். ‘துணைத் தலைவர் பதவி என்ன அத்தனை சாதாரணமா..?’ - கோபம் கொப்பளித்தது வங்கித் தலைவருடைய முகத்தில். தொடர்ந்த அவரே, ‘உங்கள் மகன் இப்போது என்னவாக இருக்கிறார்..?’ என்றார்.

‘சும்மாதான் இருக்கிறார். ஆனால், பில்கேட்ஸின் மருமகனாகப் போகிறார்!’ என்றார் கூலாக.

வங்கித் தலைவர் முகத்தில் வானவில் மாற்றங்கள். ‘பில்கேட்ஸே சும்மா இருக்கிற ஒருவரை மாப்பிள்ளை ஆக்க முயற்சி செய்கிறார் என்றால் உங்கள் மகனிடம் அதீத திறமை ஏதோ ஒளிந்திருக்கவேண்டும். அதுபோக, உலகமே கவனிக்கும் ஒருவரின் மாப்பிள்ளை எங்களிடம் வேலை பார்ப்பது எங்களுக்கும் பல பெரிய மனிதர்களின் தொடர்பை உண்டாக்கித் தரும். அது வங்கிக்கு லாபம்தான். உங்கள் மகனை உடனே விண்ணப்பிக்கச் சொல்லுங்கள்!’ என்றார் கனிவும் அன்பும் கலந்த குரலில்.

சும்மா இருந்த மகனுக்கு பிரமாதமான வேலை வாங்கித் தந்த அந்த அப்பா, உலகக் கோடீஸ்வரரை சம்பந்தியாக்கிய திறமையில் அவரது மூலதனம் என்ன..? மூளைதானே! சும்மா ஜாலிக்காக சொல்லப் படும் இப்படி ஒரு கதை நெட்டில் ஓடிக்கொண்டு இருக்கிறது. லாஜிக் இல்லாத உதாரணம் என்றாலும் இதிலும் நமக்குக் கிடைக்கிறதே ஒரு வேடிக்கையான பிஸினஸ் வெற்றி! நாம் அதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

எப்படியோ தட்டுத் தடுமாறி தொழில் தொடங்கி விட்டீர்கள்! அந்தத் தொழிலில் நிற்பது, காலூன்றுவது எப்படி... தொடர்ந்து வெற்றிகரமாக நடத்துவதற்கு என்ன தேவை..?

இரண்டே விஷயங்களைச் சொல்லலாம். புத்திசாலித்தனமான பொறுமை, வாடிக்கையாளர் திருப்தி.

முதலாவது நம் கேரக்டர் சார்ந்த விஷயம். வாடிக்கை யாளர் சொல்லும் குறைகளைக் கவனமாகக் கேட்டு, அதைச் சரிசெய்வது! அண்மையில் மதுரை சென்று அங்கே அறை எடுத்துத் தங்கி வந்த ஒரு நண்பர் என்னிடம் பெரிதாகக் குறைபட்டுக்கொண்டார். ‘தன் ஓட்டலை ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்த வேண்டும் என்று அழகழகான திரைச்சீலை, மெகா சைஸ் டி.வி வசதியான சில சோபாக்கள், நல்ல ஏ.ஸி எல்லாம் போட்டிருக்கிறார். மேற்கத்திய கலாசார மோகத்துக்கு ஈடுகொடுக்கும் விதமாக வெஸ்டர்ன் டாய்லெட் கட்டி இருக்கிறார். ஆனால், அந்த டாய்லெட்டின் மேற்புறத்தை துடைத்துவிட்டு அமர டிஷ்யூ பேப்பருக்கான ஏற்பாடு ஏதுமே செய்யவில்லை. ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்தும் அசூசையோடு தங்கி இருந்தேன். ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரில் நானே வாங்கிக்கொள்ள வேண்டியதாகிவிட்டது. வெஸ்டர்ன் டாய்லெட் வைக்கத் தெரிந்தவருக்கு, அதை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் வைக்கத் தெரியாததால் இப்படி ஒரு பிரச்னை. அதேபோல, பால்கனி கதவின் தாழ்ப்பாள் சரியாக லாக் ஆகவில்லை. மிகச் சிரமப்பட்டு முயற்சித்து லாக் போடவேண்டி இருந்தது. ஒருமுறை திறந்துவிட்டு, மூட சிரமப்பட்டதால் அந்த பால்கனியையே திறக்கவில்லை. இருக்கிற வசதியைப் பயன்படுத்தமுடியவில்லை!’ என்று அறை மேலாளரிடம் புகார் செய்தேன். ‘ம்ம்... பார்க்கச் சொல்கிறேன்!’ என்றார் அவர். அந்தப் பிரச்னை சரி செய்யப்படும் என்ற நம்பிக்கை வரவில்லை. இனி அங்கே தங்கமாட்டேன் நான்!’ என்றார்.

இது எங்குமே நடக்கும். ஒரு வாடிக்கையாளர் உங்களுக்குத் தெரியாமலே கழன்று போவது இப்படித்தான். என்ன நடந்தது என்று அவராகவே சொல்லும் போதாவது நடவடிக்கை எடுத்தாலோ, அல்லது ‘மன்னிக்க வேண்டும்... உடனே பார்த்து சரி செய்கிறேன். அடுத்தமுறை நீங்கள் வரும் போது பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்!’ என்று ஆறுதலாகச் சொல்லி இருந்தாலோ நண்பர் எவ்வளவு மகிழ்ந்திருப்பார். இதற்காகவே அடுத்த முறை ஆர்வமாக அந்த ஓட்டலுக்குப் போவார் இல்லையா..? இந்த அணுகுமுறை கொண்ட நிறுவனங்கள்தான் தொடர்ந்து மேலேறிச் சென்றுகொண்டே இருக்கின்றன.

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இதுபோன்ற பண்பான, சேவை மனப்பான்மை குணங்களும் மிக முக்கிய காரணம். மதிப்பவரைத் தேடித்தான் வாடிக்கையாளர்கள் வந்து குவிவார்கள். காசு கொடுத்து நம் பொருளை, சேவையை அனுபவிக் கும்போது, வெவ்வேறு குணம் கொண்ட வாடிக்கையாளர் ஒவ்வொருவரும் 100 குறைகள் சொல்லத்தான் செய்வார்கள். அதைப் பொறுமை யுடன் களைந்து அவர்களைத் தக்க வைத்துக் கொள்வதுடன் அந்தவகை பிரச்னை அதன்பிறகு வராதபடி பார்த்துக்கொள்ளும் புத்திசாலித்தனம் ஒருவகை.

அடுத்த வகை, இதற்கு அடுத்த கட்டம். வாடிக்கையாளரே திகைக்கும் அளவுக்கு திருப்தி தருவது! நம் சேவையில் மயங்கி நம்மிடமே முழுமையாக தன்னை அர்ப்பணித்துவிட வைப்பதுதான் அது. முடி வெட்டப் போகிற இடத்தில் கண்மூடி ஒத்துழைப்புக் கொடுப்பது நம்மில் பலரும் செய்வது. அப்படியான இடங்களில் இனிய இசையைத் தவழவிடுவது... காய்கறி வாங்க வரும் இடத்தில் இது உங்கள் அன்புக்குரிய இடம் என்பதைச் சிம்பாலிக்காக உணர்த்த ஒரு மீன் தொட்டியை வைப்பது... வீடு கட்டும் கான்ட்ராக்டர் வேலை முடித்தபின், தன் சொந்த செலவில் வெளி அலங்கார விளக்குகளைப் போட்டுத் தருவது... ரெகுலர் கஸ்டமர்களாக வருபவர்கள் ஆர்டர் செய்யாத அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு டிஷ்ஷை அன்பளிப்பாக தந்து அசத்துவது... காரை சர்வீஸ் விட வருபவருக்கு, அன்றைய பயன்பாட்டுக்கு வாடகை கார் தருவது... தான் விற்ற பொருளில் ஒரு குறை கண்டுபிடித்து வாடிக்கையாளர் கோபத்துடன் திருப்பித் தர வரும்போது, அவருக்குப் பொருளை மாற்றித் தருவதோடு, ‘இந்தத் தவறைச் சுட்டிக்காட்டி சரி செய்யத் தூண்டியதன் மூலம் பல வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க உதவினீர்கள்!’ என்று சொல்லி, சிறு அன்பளிப்பு தந்து அவரை நெகிழ வைப்பது... என்பதெல்லாம் அந்த வாடிக்கையாளரை நம்மிடமே தொடர்ந்து தக்கவைக்கும் சில உதாரணங்களாகச் சொல்லலாம்.

‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்

சென்னையில் இருக்கிற சத்யம் தியேட்டருக்கு சமீபத்தில் சென்றிருந்தேன். ரயில்வே ரிசர்வேஷன் போல எந்த கவுன்ட்டரிலும் எந்த தியேட்டருக்குரிய டிக்கெட்டையும் எடுக்கலாம் என்ற கம்ப்யூட்டர் நெட்வொர்க் வசதியையே பலரும் ரசிக்கையில், இன்டர்நெட்டில் டிக்கெட் எடுக்க வாய்ப்பு தந்திருக்கிறார்கள். எந்தப் படத்துக்கு எவ்வளவு இடவசதி உள்ளது... என்ற வெளிப்படையான தகவல்கள் ஒருபக்கம், நமக்குத் தேவையான இருக்கைகளை நாமே தேர்வு செய்துகொள்வதோடு, இடைவேளையில் நாம் என்ன சிறு உணவு சாப்பிடப் போகிறோம் என்று தீர்மானித்திருந்தால், அதையும் டிக்கெட்டுடனே நாம் ஆர்டர் செய்ய முடிகிறது.

இடைவேளையின்போது, அந்த ஸ்நாக்ஸ் நம் இருக்கைக்கே தேடிவருகின்றன. எத்தனை சொகுசு பாருங்கள். கூட்டத்தில் இடிபட வேண்டியதில்லை. ‘ரெண்டு பஃப்ஸ்!’ என்று காசை நீட்டிய படி கத்தி, தாமதமாகும்போது எரிச்சலடைய வேண்டியதில்லை என்ற வசதி நமக்கு. இன்று இவ்வளவு ஸ்நாக்ஸ், கூல்ட்ரிங்ஸ் நிச்சயமாக விற்கும் என்ற உறுதி தியேட்டர்காரர்களுக்கு. டிஜிட்டல் துல்லிய ஒலி அமைப்பு, அகலமான மெத்தென்ற இருக்கைகள், உடலை உறுத்தாத ஜில் குளிர், தரமான படங்கள் என்பதுதான் தியேட்டருக்கு அடிப்படையாக இருக்கவேண்டிய வாடிக்கையாளர் திருப்தி. ஆனால், இங்கே அதையும் தாண்டிப் போகும்போது, ஒரு வாடிக்கையாளரிடம் ஏற்படும் மகிழ்ச்சியின் அளவை யோசித்துப் பாருங்கள். ‘பார்த்தா, சத்யத்திலே படம் பார்க்கணும்பா!’ என்பார்களே, அதுதான் அவர்களுக்குக் கிடைத்த வெற்றி!

இதோடு அவர்கள் நிற்கவில்லை. புதுமணத் தம்பதியருக்கு, இரட்டை இருக்கை வசதி... குழந்தைகளோடு வந்தால் அவர்களை தியேட்டர் பெண் ஊழியர்களின் பராமரிப்பில் விட்டுவிட்டு நிம்மதியாகப் படம் பார்க்கச் செல்ல வசதியாக தனி விளையாட்டு அறை... 6 தியேட்டர்கள் காம்ப்ளெக்ஸில் அதிக பட்சம் 15 படங்களுக்கு மேல் ஒரே நாளில் திரையிடும் தெளிவான திட்டம், மேல்தட்டுக்கு மட்டுமின்றி, அனைத்துத் தரப்பினரையும் ஈர்க்கும் படங்களின் தேர்வு என்று வாடிக்கையாளர் திருப்திக்குள்ளும் இருக்கிறது பிஸினஸ் தெளிவு. ஒரு சிறிய விஷயம், ஒரு தியேட்டரின் முகப்பை அலங்கரிக்க, ஏக செலவு செய்யவேண்டி இருக்கும். அங்கே பிரமாண்ட ஹோர்டிங் வைத்து வருமானம் பார்க்கிற சத்யம் தியேட்டர், உள்ளே தன் சொந்த செலவில், ‘சூப்பர் மேன்’ கட்-அவுட், ‘நார்னியா’ படம் வந்தபோது குழந்தைகளை ஈர்க்க, பனி பொழியும் காட்டு அட்மாஸ்பியர் என்று கலக்கி இருந்தார்கள். எங்கே எதைச் செய்யவேண்டும் என்ற சிந்தனை தானே இதற்குக் காரணம்...

வெவ்வேறு கலவையான ஆடியன்ஸையும் ஒவ்வொரு இடத்தில் திகைத்து மகிழவைக்கும் அவர்களது வெற்றி ரகசியம் இன்னும் தொடர்கிறது.

குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி விட்டால், ஒரு பாஸ் தருகிறார்கள். அதைக்காட்டி குறிப்பிட்ட காலத்துக்கு நான் ஸ்டாப்பாக எத்தனை படம், எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கமுடியும்.

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ‘6 டிகிரி’ தியேட்டரில் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்க வசதியாக, கிட்டத் தட்ட வீட்டுச்சூழலில் சரிந்து அமர்ந்து படம் பார்க்கும் பாக்ஸை உருவாக்கி உள்ளனர். இவை எல்லாம் சற்று கூடுதல் கட்டணத்தோடு கிடைத்தாலும், நாம் அடைகிற மன மகிழ்ச்சியில் பெரிதாகத் தெரியாது. பொழுது போக்க வேண்டும் என்று வந்துவிட்டால் அதை முழுதாக அனுபவிக்கட்டுமே! என்ற சத்யத்தின் முயற்சி சிலிர்க்க வைக்கிறது. படம் போகவேண்டும் என்ற சிந்தனை வந்தவுடனே, ‘சத்யத்தில் அந்த படம் ஓடுகிறதா..?’ என்றுதானே பார்க்கத் தூண்டுகிறது. அதுதான் திகைக்க வைக்கும் திருப்தி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு