பிரீமியம் ஸ்டோரி
தொழில்
ஒரு நாள் முதலாளி
 

 

புதுமை சாக்ஸ் பூரிப்பு வருமானம்!

ஒரு நாள் முதலாளி

வா ரத்தின் முதல்நாள் காலையில் அலுவலகத்துக்குள் நுழையும்போதே காத்திருந்தார் ஒரு வாசகர். ‘‘என் பெயர் ரவிச்சந்திரன். சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர். உங்கள் ஒரு நாள் முதலாளி சவாலுக்குத் தயாராக வந்திருக்கிறேன். வாய்ப்புக் கிடைக்குமா?’’ என்று எதிர்பார்ப்பு கலந்த குரலில் கேட்டார்.

‘‘சரி... என்ன விற்கப் போகிறீர்கள்?’’ என்று நாம் விசாரித்ததும், ‘‘திருவிளையாடல் தருமி பாணியில் ‘பிரிக்க முடியாதது..?’ என்று கேள்வி கேட்டால், ‘சாக்ஸும் வியர்வை நாற்றமும்’ என்று தாராளமாக பதில் சொல்லலாம். இப்போ மார்க்கெட்டுக்குப் புதுசா வந்திருக்கிற நாற்றம் அடிக்காத ஸ்பெஷல் சாக்ஸ் விற்கலாம்னு திட்டம்!’’ என்றார். ‘‘நாற்றமடிக்காத சாக்ஸா..? புதிதாக இருக்கிறதே!’’ என்றோம்.

ஒரு நாள் முதலாளி

‘‘நான் தி.நகரில் ஒரு ஜவுளிக்கடையில் பார்த்து விட்டு, விசாரித்தபோதுதான் அதன் ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் தயாரிப்பு பற்றிச் சொன்னார்கள். சந்தையில் புது அறிமுகமாக இருக்கும் அந்த சாக்ஸை விற்றால் வேகமாக விற்பனையாகும் என்பதால் அதைத் தேர்ந்தெடுத்தேன்’’ என்றார்.

விற்பனையில் புதுமை செய்த வாசகர்களுக்கு மத்தியில் விற்கும் பொருளிலேயே புதுமை இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் ரவிச்சந்திரனை உற்சாகப்படுத்தி, ஆயிரம் ரூபாயைக் கொடுத்தோம்.

ராயப்பேட்டை பகுதியில் இருந்தது காரா-பேஸ் என்ற அந்த சாக்ஸ் கம்பெனி. அங்கிருந்த விற்பனை மேலாளரைச் சந்தித்து தயாரிப்பை ஒரு ரவுண்ட் பாராட்டிவிட்டு, தன் திட்டத்தைச் சொன்னார் ரவிச்சந்திரன். ‘‘நாங்கள் கடைகளுக்குத் தருவதைவிட குறைந்தவிலையிலேயே உங்களுக்குத் தருகிறேன். 75 ரூபாய் மட்டும் கொடுங்கள்’’ என்று கூற, ‘‘சார்! நான் முதன்முதலாக பிஸினஸ் பண்ணப் போறேன்’’ என்றெல்லாம் பிட்டைப் போட்டு, ஆயிரம் ரூபாய்க்கு 14 சாக்ஸ்களை வாங்கிக் கொண்டார். கஸ்டமர்களை நம்ப வைக்க, அந்த சாக்ஸ் கம்பெனியின் விசிட்டிங் கார்ட்களையும் வாங்கிக்கொண்டார். புரியாமல் பார்த்தோம். ‘‘யாருக்காவது ஏதாவது சந்தேகம் வந்தால் கார்டைக் கொடுத்துடலாம் இல்லையா..!’’ என்றபடி வியாபாரத்துக்குக் கிளம்பினார்.

ரவிச்சந்திரன் முதலில் களம் இறங்கிய இடம் முதலமைச்சரின் வீடு இருக்கும் கோபாலபுரம்! ஏரியாவில் தென்பட்ட ஒரு வக்கீலைப் பிடித்தார்.

‘‘சார்... உங்க வேலைக்கு காலையில் இருந்து ராத்திரி வரை ஷூவோடுதான் இருந்தாகணும். அப்படி இருக் கும்போது உங்க சாக்ஸ் கிளப்பும் வாசனையே குற்ற வாளிக்குப் பெரிய தண்டனையா அமைஞ்சிடும். ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட இந்த சாக்ஸ், வியர்வையை உறிஞ்சி வெளியேற்றிவிடும். அதனால், சாக்ஸில் ஈரம் படிந்து கெட்ட வாசனை வருவதில்லை’’ என்று வேக வசனங்களை விட்டார். வக்கீல் குறுக்கு விசாரணையில் இறங்கினார்.

‘‘சரி தம்பி... இதுக்கெல்லாம் என்ன ஆதாரம்? நீ வித்துட்டுப் போய்டுவே! வாடை வந்தா உன்னை எங்கே பிடிக்கிறது..?’’ என்று கேள்வியைப் போட்டார்.

ஒரு நாள் முதலாளி

‘‘இது கம்பெனி விசிட்டிங் கார்ட் சார்! உங்களுக்குத் திருப்தியா இல்லைன்னா இந்த நம்பருக்கு ஒரு போன் பண்ணலாம். இரண்டு வருஷம் நல்லா உழைக்கும்... செட் 100 ரூபாய்தான் சார்...’’ என்று கார்டையும் ஒரு செட் சாக்ஸையும் வக்கீல் கையில் திணித்தார்.

ரவிச்சந்திரனின் பேச்சில் இருந்த உண்மையை உணர்ந்த வக்கீல் சிரித்தபடியே, ‘‘என்னோட ஜூனியர் கள் எப்போ பார்த்தாலும் அழுக்கு சாக்ஸோடு வந்து ஆபீஸையே நாறடிக்கிறாங்க... அவங்களுக்கும் சேர்த்துக் கொடுங்க’’ என்று மூன்று செட்களாக சாக்ஸ்கள் வாங்கி ரவிச்சந்திரனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

உற்சாகத்தோடு வேட்டையைத் தொடர்ந்தார் ரவிச்சந்திரன். ஆனால், அந்த ஏரியாவில் பல வீடுகளில் ‘சேல்ஸ் மேன்களுக்கு எச்சரிக்கை... உள்ளே வராதீர்கள். விற்பனை செய்யா தீர்கள்’ என்று ஏக மிரட் டல் விட்டுக்கொண்டி ருக்க, ஏரியாவை மாற்றி ஆழ்வார்பேட்டை பக்கம் போனார்.

சிக்னலில் நின்று கொண்டிருந்த வண்டிக் காரர்களிடம் விற்கும் சாக்ஸ் பற்றி விளக்க ஆரம்பித்தார். இவரிடம் சுவாரஸ்யமாக விவரம் கேட்டவர், பச்சை சிக்னல் விழுந்ததும் சீறிக் கிளம்பி விட, திகைத்து நின்றார் ரவிச்சந்திரன்.

இவருடைய சாகசத்தைப் பார்த்துக்கொண்டிருந்த டிராஃபிக் போலீஸ், இவரைக் கைகாட்டி கூப்பிட்டபடியே வந்தார். ‘ஐயோ... என்னாகப் போகுதோ..?’ என்ற பதற்றத்தோடு டிராஃபிக் போலீஸ் முன் போய் நின்றார்.

அவர் மிரட்டவெல்லாம் இல்லை. ‘‘தம்பி, என்ன விற்கிறீங்க?’’ என்று அன்போடு கேட்க, ‘‘ஆஹா இன்னொரு கஸ்டமர் கிடைச்சிட்டார்யா!’’ என்ற சந்தோஷத்தில், ‘‘சார்... முதலில் உங்களைப் பார்க்க மறந்துட்டேன். புதுசா வந்திருக்கிற சாக்ஸ் சார். பகலெல்லாம் இந்த வெயிலில் நிற்கும்போது, இந்த இடம் ரொம்ப சூடேறி உங்க காலே வியர்வையில் நனைஞ்சுடும். ‘எப்படா ஈவ்னிங் வரும்... சாக்ஸைக் கழற்றி எறிவோம்’னு இருக்குமில்லே... அந்தக் கஷ்டம் இதிலே இல்லை சார்!’’ என்று ஆரம்பித்து சாக்ஸின் அருமை பெருமைகளை விளக்க ஆரம்பித்தார்.

அந்த போலீஸோ, ‘‘எங்கே தம்பி! வாரத்தில் எல்லா நாட்களும் காக்கி சாக்ஸ்தான்...’’ என்றார். ‘‘ஆஹா, அந்த கலரில் இல்லை சார்! ப்ளூ, வெள்ளை, கறுப்பு கலர்ல இருக்கு!’’ என்ற ரவி ஒன்றைக் கையில் கொடுத்துவிட்டு, 120 ரூபாய் என்று விலையைச் சொன்னார்.

‘‘என்ன தம்பி... ரேட் ஜாஸ்தியா சொல்றே..?’’ என்று கேட்க, ‘‘கடையில் இதைவிட டபுள் ரேட் சார்..!’’ என்று இழுத்தார் சமயோஜிதமாக.

‘‘வெயிலில் அலைஞ்சு பிழைக்கிறே... 100 ரூபாய் வாங்கிக்கோ..!’’ என்று ரூபாயைக் கொடுத்தவர், ‘‘இது சி.எம் வர்ற நேரம். உன் வியாபார ஏரியாவை மாத்திடு...’’ என்று அட்வைஸும் கொடுத்தார்.

அங்கிருந்து நகர்ந்து அலுவலகங்கள் நிறைந்திருக்கும் ஏரியாவுக்குள் நுழைந்தார். அவருடைய கண்கள் தரை பார்த்தே நடந்தன... ஷூக்கால்களை நோட்டமிட்டன.

மதியநேரம் சாப்பிட்டுவிட்டு கம்பெனியின் வெளியே தம் அடித்துக்கொண்டிருந்தவர்களை எப்படியும் வாங்க வைத்துவிடவேண்டும் என்று பேசிப்பார்த்தார். வைராக்கியத்தோடு அலுவலகப் படிகளில் ஏறி இறங்கியதில், நான்கு ஜோடி விற்றது.

கொஞ்சம் சோர்வுடன் அடுத்த பகுதிக்குச் செல்ல பஸ்ஸைப் பிடிக்க நின்றுகொண்டிருந்த ரவிச்சந்திரனைத் தேடி, கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த கதையாக மூன்றுபேர் வந்தார்கள்.

ஒரு நாள் முதலாளி

‘‘தி.நகருக்கு எந்த பஸ் போகும்..? பையனை இன்ஜினீயரிங் காலேஜில் சேர்த்திருக்கோம். கொஞ்சம் ட்ரஸ் எடுக்கணும்’’ என்றார்கள். ‘‘சார்! காலேஜுக்கு கண்டிப்பா ஷூ போட்டுட்டுப் போகணும். சாக்ஸ் வாங்கிட்டீங்களா... நம்ம சாக்ஸ் நல்ல குவாலிட்டி...’’ என்று தொழிலை ஆரம்பித்துவிட்டார். கூடவே, தி.நகரில் உள்ள ஜவுளிக்கடைகளைப் பற்றியும் டிப்ஸ் கொடுக்க, நிறத்துக்கு ஒன்றாக இரண்டு ஜோடி சாக்ஸ்கள் கைமாறின.

அவர்கள் பஸ் ஏறியதும் அருகில் உள்ள டீக்கடையில் நின்றுகொண்டிருந்த சில ரெப் ஆட்களை அணுகிய ரவிச்சந்திரன், மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவாக மாறி ஸ்டைலாகப் பேசினார். ‘‘மற்ற சாக்ஸ் போட்டா... எப்படா கழற்றுவோம் என்று நினைப்பு இருந்துக்கிட்டே இருக்கும். ஆனால், இந்த சாக்ஸ் போட்டால் குஷனிங் எஃபெக்ட் இருக்கும். இந்த சாக்ஸ் கொஞ்சம் திக்காக இருக்கும். இதனால் வியர்வையை உடனே உறிஞ்சி விடும். அதனால, வியர்வை மேல் பாகத்துக்கு வந்து ஆவியாகிவிடும். வியர்வை நாற்றம் இருக்கவே இருக்காது. 85% காட்டன்... 15% எலாஸ்டிக்’’ என்று டெக்னிக்கலாக விளக்க, ‘‘பரவாயில்லை... நல்லாத்தான் இருக்கு...’’ என்றவர்கள், ‘‘மாப்ளே, நாளைக்கு ‘இன்டர்வியூ’னு சொன்னியே! சாக்ஸ் இருக்கா?’’ என்று கேட்டுவிட்டு இரண்டு செட் சாக்ஸ் வாங்கிக் கொண்டனர். அவர்களுக்கு ஒரு சலாம் போட்டு அடுத்த ஸ்பாட்டுக்குப் போனார் ரவிச்சந்திரன்.

அங்கு ஒரு வெளிநாட்டுக்காரரை மடக்கி, விரிவாக விளக்க, பல கேள்விகளை கேட்டுவிட்டு ஒரு செட் சாக்ஸ் வாங்கினார். ‘இதைப் பயன்படுத்திப் பார்த்துவிட்டு நன்றாக இருந்தால் மெயில் அனுப்புகிறேன்’ என்று மெயில் ஐ.டி-யை வாங்கிக்கொண்டார்.

இப்படிப் பல இடங்களிலும் விற்றது போக, ஒரே ஒரு ஜோடி மிச்சமிருந்தது. சுற்று முற்றும் பார்த்தவர், தங்கள் பேரன் பேத்திகளுடன் டிபார்ட்மென்ட் ஸ்டோருக்கு வந்தவர்களிடம் பேச்சுக் கொடுத்து விளக்கினார். ‘‘அடடே... தம்பி, எங்க குடும்பத்திலே தினம்தினம் நடக்கிற சண்டைக்கு ஒரு தீர்வைச் சொல்லிட்டே... இனிமே என் பொண்டாட்டி சண்டைக்கு வரமாட்டாள்’’ என்று அந்த ஜோடியை வாங்கிக்கொண்டார்.

க்ளைமேக்ஸ் சுபமாக முடிந்துபோக... கையிலிருந்த பணத்தை எண்ணினார். 1,400 ரூபாய் இருந்தது. ஆயிரம் ரூபாயை நம்மிடம் கொடுத்துவிட்டு ‘‘ஆட்டோ.!’’ என்றழைத்தார் ஸ்டைலாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு