Published:Updated:

கரன்சியில் கேரள வாசம்!

கரன்சியில் கேரள வாசம்!

பிரீமியம் ஸ்டோரி
தொழில்
கரன்சியில் கேரள வாசம்!
 

 

கரன்சியில் கேரள வாசம்!

கரன்சியில் கேரள வாசம்!
கரன்சியில் கேரள வாசம்!

டவுள் முதல் கன்னிப்பெண்கள் வரை மொத்த கேரளமும் வாசமும், அழகும் பெறுவது கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தோவாளையால்தான்! இந்த மார்க்கெட்டில் இருந்துதான் கேரள மாநிலம் முழுவதும் பூ மணம் வீசுகிறது.

உற்பத்தியைவிட விற்பனையில்தான் அதிக லாபம் என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள் தோவாளை மக்கள். அதனால், சுற்றி உள்ள பல ஊர்களிலிருந்தும் பூக்களைக் கொள்முதல் செய்து, விற்று வருகின்றனர். தோவாளை கிராமத்தை ‘குமரி மாவட்டத்தின் துபாய்’ என்று சுற்றுவட்டார மக்கள் அழைக்கிறார்கள். காரணம், அங்குள்ள சராசரி மனிதன் ஒவ்வொருவரின் வாழ்க்கைத்தரம், மிகச் சிறப்பாகவே இருக்கிறது.

திசையன்விளை, திருநெல்வேலி, மதுரையில்கூட காணமுடியாத மல்லி, சம்பங்கி, கொழுந்து, கிராந்தி, அரளி என எல்லா பூ வகைகளும் வந்து குவிகின்றன தோவாளை பூ மார்க்கெட்டில்! பூக்களுக்கு அதிக தேவை இருப்பதால், இங்கு விலை நிலவரம் மற்ற மார்க்கெட்களை விடவும் எப்போதுமே அதிகம்.

பூ உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், கேரளாவுக்கு அனுப்பும் ஏஜென்ட்கள், வீடுகளில் பூ கட்டுபவர்கள், பூ கடைக்காரர்கள் என பூக்களை மூலாதாரமாக வைத்து அன்றாட கூலிகள் முதல் கோடீஸ்வரர்கள் வரை தோவாளையில் காய் நகர்த்துபவர்கள் பலர். ஆனாலும், பூக்களைப் பொறுத்தவரை மறுநாள் அழுகிவிடும் என்பதால், வீணாவதற்கும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. (பிச்சி பூ, மல்லி பூ, ரோஸ் போன்ற பூக்கள் மறுநாள் பயன்படுத்த முடியாது. ஆனால், சம்பங்கி பூ, வாடாமல்லி, கிராந்தி, கொழுந்து, அரளி போன்ற பூக்கள் இரண்டு நாட்கள் வரை பயன்படுத்தமுடியும்).

கரன்சியில் கேரள வாசம்!

பணகுடி அருகேயுள்ள சிவகாமிபுரத்தைச் சேர்ந்த விவசாயி மாசானம், ‘‘என்னை மாதிரி சுற்று வட்டாரத்திலுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள், சுமார் 5,000 ஏக்கர்ல பூ விவசாயம்தான் பண்றோம். இதிலே விவசாயிகளுக்குப் பெரிய அளவில் லாபம் கிடைக்காதுன்னாலும் மழை இல்லாததாலும், நீர்வளம் சரியாக அமையாத தாலும்தான் பூ உற்பத்தி பண்ணிட்டிருக்கோம். பூ உற்பத்தியோட சேர்த்து நெல், வாழை, காய் வகைகள் என விவசாயம் செய்வோம்’’ என்றவர் தொடர்கையில், ‘‘எங்களை மாதிரி உற்பத்தியாளர்கள் மொத்தமா பூக்களைப் பறித்து வியாபாரிகளிடம் கொடுத்து விடுவோம்! இடைத்தரகர்கள் போல செயல்படும் அந்த வியாபாரிகள், தங்களுக்குள் பேசி, ஒவ்வொரு நாளும், சீசனுக்கு ஏற்ற மாதிரியும், அன்றைய தேவையைப் பொறுத்தும் பூக்களின் விலையை நிர்ணயம் செய்வாங்க! மொத்தத் தொகையில் 10% கமிஷனாக எடுத்துக்குவாங்க. நஷ்டம் வந்தா, பாதிப்பு எங்களுக்கு மட்டும்தான்.

கரன்சியில் கேரள வாசம்!

அதிக அளவில் பூக்களை உற்பத்தி செய்பவர்களுக்கு எப்போதுமே கையில் காசு தங்கும். அவர்களைப் பொறுத்தவரை அன்றாட வருமானம் தருகிற பூ பயிர்தான் லாபம்! அதுபோல, பூக்களை கூலி வைத்துப் பறிக்காமல் குடும்பத்தினரே பறித்தாலும் ஓரளவு லாபம்தான்! ஆனா, வியாபாரிகளைப் பொறுத்தவரை, விலை கூடினாலும், குறைந்தாலும் அவருடைய கமிஷன் போய்ச் சேர்ந்துவிடும்’’ என்று முடித்தார்.

தோவாளையைச் சேர்ந்த வியாபாரி தங்கம் என்பவரிடம் பேசினோம்,

‘‘விவசாயிகளுக்கு முதலிலேயே கொடுக்கிற அட்வான்ஸ் தொகைதான் எங்களைப் பொறுத்த வரைக்கும் முதலீடு. இந்த மார்க்கெட்டில் 35 வியா பாரிகள் இருக்காங்க! அதில் 5 பேர் பெரிய வியாபாரிகள். அவர்களிடம்தான் அதிக அளவில் பூக்கள் கொள்முதல் ஆகும். அப்படியிருக்கும் போது சீசனுக்கு ஏத்தமாதிரி அவங்க நிர்ணயிக்கிற விலையைத்தான் எல்லா வியாபாரிகளுக்கும் கொடுப்போம். ஒவ்வொரு நாளும் 3 லட்சம் முதம் 30 லட்சம் ரூபாய் வரைக்கும் இங்கே வியாபாரம் இருக்கும். கேரளாவில் ஓணம்பண்டிகை வந்துட்டா, ஒரு கோடி ரூபாய் வரைக்கும்கூட பணப்புழக்கம் இருக்கும். மற்றபடி இந்த மார்க்கெட்டே கேரளாவை நம்பித்தான் இருக்கு! தோவாளையிலே பூ வாசம் வீசினாலும் இங்கே புழங்கற கரன்சியிலே எல்லாம் கேரள வாசம்தான்’’ என்று ஜாலியாகச் சொல்கிற தங்கம், ‘‘கேரளாவில் பூக்களுக்குக் கிராக்கி இருந்தால் தோவாளை மார்க்கெட்டில் விலை எகிறிடும். அதேநேரத்தில் கேரளாவில் பூ விற்பனை ‘டல்’அடித்தால் இங்கே ஈ ஓட்டுவோம். கேரளாவுக்கு பூக்கள் அனுப்புவதற்கென்றே சில ஏஜென்ட்கள் இருக்கிறார்கள்! இங்கிருந்து கேரளாவுக்கு 7 வேன்களில் தினமும் பூக்கள் போகின்றன!

கரன்சியில் கேரள வாசம்!

திருவனந்தபுரத்தில் இருந்து வெளிநாடுகளுக்கும் ‘சென்ட் கம்பெனிகளுக்காக’ பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. காலை 8 மணிக்கெல்லாம் கேரளாவுக்கு பூக்கள் போய்விடும் என்பதால், அதற்குப் பிறகு வரும் விவசாயிகளுக்கு பெரிய அளவில் பணவரவு இருக்காது. கேரளாவுக்கு அனுப்பியதுபோக, சில்லறை வியாபாரிகளும், பூ கடைக்காரர்களும் எங்களிடம் இருந்து வாங்கிட்டுப் போறாங்க! அதாவது சில்லறை வியாபாரிகள் பூக்களை வாங்கி வீடு, வீடாகக் கொண்டுசென்று விற்பவர்கள்! அடுத்தது தோவாளையில் வரிசையாக மணம் பரப்புகிற மலரகங்கள். எங்களிடமிருந்து மொத்தமாக பூக்களை வாங்கி வீடுகளில் சம்பளத்துக்கு பூ கட்ட கொடுத்து கல்யாணம் மற்றும் இதர விசேஷங்களுக்கு அனுப்புகிறவர்கள் இவர்கள். வீடுகளைப் பொறுத்தவரை தோவாளையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பூ கட்டுவதுதான் பொழுதுபோக்கு, தொழில் எல்லாமே! பூ கட்டும் பெண்களுக்கு 150 ரூபாயும், ஆண்களுக்கு 200 ரூபாயும் ஒரு நாளைக்கு சராசரி வருமானமாகக் கிடைக்கிறது!’’ என்றும் சொன்னார்.

கரன்சியில் கேரள வாசம்!

‘‘ஆனி, ஆடி மாதங்களில் கேரளாவுக்கு பூக்கள் குறைவாகத்தான் போகும். அந்த மாதங்களில் மதுரை, தேனி பக்கம் இருக்கிற சென்ட் ஃபேக்டரிகளுக்கு பூக்களை அனுப்பிவிடுவோம். இங்கே அறுபது ரூபாய் விலை போகிற பூக்களை, சென்ட் கம்பெனிக்கு கொடுக்கும்போது போக்கு வரத்துச் செலவெல்லாம் போக, வெறும் ஆறு ரூபாய்தான் கிடைக்கும். தோவாளையிலேயே ஒரு சென்ட் ஃபேக்டரி இருந்தால் நஷ்டப்படாமல் நல்ல விலைக்குக் கொடுக்கமுடியும். பூக்கள் வீணாவதையும் தடுக்கமுடியும்! விவசாயமும், வேலை வாய்ப்பும் அதிகரிக்கும். இதற்கு அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்தால் நல்லது!’’ என்று வருத்தத்துடன் சொல்கிறார்கள் விவசாயிகள்.

‘உற்பத்தி செய்கிற இடத்தில்தான் சந்தை என்பது இல்லை. உதிரி, உதிரியாக இருக்கிற பலரும் கூடி ஒரு இடத்தில் சந்தை போட் டாலும் ஜெயிக்கமுடியும்’ என்கிற தோவாளை மக்களின் வருமான டெக்னிக் மற்ற ஊர்க் காரர்களுக்கு நல்ல உதாரணம்.

ஊர்கூடி வருமானம் பார்ப்பது என்பது இதுதானோ..?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு