Published:Updated:

தொழிலுக்குப் பெயர் வைப்போம்!

தொழிலுக்குப் பெயர் வைப்போம்!

பிரீமியம் ஸ்டோரி
தொழில்
தொழிலுக்குப் பெயர் வைப்போம்!
 

 

தொழிலுக்குப் பெயர் வைப்போம்!

தொழிலுக்குப் பெயர் வைப்போம்!

‘‘க டைக்காரரே, வத்தல் பாக்கெட் கொடுங்கன்னா ஏதோ பேர் தெரியாத பாக்கெட்டைத் தர்றீங்களே... இதைச் சாப்பிட்டு எனக்கு ஏதாச்சும் ஆகிப்போனா, யார்கிட்டப் போய்க் கேட்பது..?’’ என்று கேட்ட வாடிக்கையாளருக்கு, பிராண்டட் வத்தலாக எடுத்துத் தந்தார் கடைக்காரர்.

இந்த ஒரு கோணத்தில் மட்டுமே யோசிக்க வேண்டியது இல்லை. ஒருவேளை, அந்த வத்தல் பாக்கெட்டின் சுவையில் மயங்கி, அந்த வாடிக்கை யாளர் அடுத்தமுறையும் அதையே வாங்க விரும்புகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தச் சூழலில் என்ன பெயர் சொல்லி அந்த பாக்கெட்டைக் கேட்பார்..?

வியாபாரத்தைப் பெருக்க நேரம் காலம் பார்க்காமல் ஓடி, உழைத்தால் மட்டும் போதாது, பாதுகாக்கவும் தெரிந்திருக்கவேண்டும். தொழில் எதுவாகவும் இருக்கலாம். அவற்றின் பெயரை, பிராண்டை முறையாகப் பதிவு செய்யாமல் இருப்பது, வேலி இல்லாத விவசாயமாகிவிடும். விதைத்தவன் ஒருவன் இருக்க, அறுவடை செய்பவன் இன்னொருவனாகிவிடுவான். எனவே, பெயரை வைத்தால் மட்டும் போதாது, அதனை பதிவு செய்தல் வேண்டும். அதைத்தான் ‘டிரேட் மார்க்’ என்கிறார்கள். உங்களை அடையாளம் காண பெயர் வைத்திருப்பது போல உங்கள் பொருட்களை அடையாளம் காண முத்திரையை வைத்துவிடுங்கள். அது ஒரு சின்னமாக, உருவமாக, குறியீடாகக் கூட இருக்கலாம்.

‘‘நான் பேரீச்சம்பழ பிஸினஸில் இறங்கியபோது, கடைகளில் பலரும் பேரீச்சம்பழ பாக்கெட்டுகளை விற்றுவந்தார்கள். அதிலிருந்து என்னுடையதை வித்தியாசப்படுத்திக்காட்ட ஒரு பெயர் தேவைப்பட்டது. அப்போதுதான் ‘லயன்’ என்ற பெயரைத் தேர்ந்தெடுத் தேன். தரமான பேரீச்சம்பழம் கேட்கும் வாடிக்கை யாளர்கள், ‘லயன் படம் போட்ட பேரீச்சம்பழம் கொடுங்க’ என்று கேட்க ஆரம்பித்தார்கள். என் தயாரிப்பின் தரத்தை மக்கள் அடையாளம் காட்ட இந்தப் பெயர்தான் உதவியது’’ என்றார் ‘லயன் டேட்ஸ்’ பொன்னுதுரை.

தொழிலுக்குப் பெயர் வைப்போம்!

குடிசைத் தொழிலாக சிலர் பொருட்களைத் தயாரித்து லோக்கல் மார்க்கெட்டில் விற்பனை செய்து வருவார்கள். ‘எங்கள் பெயரே எல்லோருக்கும் நன்றாகத் தெரியுமே... பிறகு எதற்கு பிராண்டும் பெயரும்..?’ என்று அவர்கள் நினைக்கலாம். ஆனால், பிரபலமான உங்கள் பெயரையே வேறு சிலர் பயன்படுத்தி போலிகளைத் தயாரித்து விடலாம். அதனால், உங்கள் பெயரும் கெட்டு விடலாம். இதையெல்லாம் தடுக்க பிராண்ட் வாங்குவது அவசியம்.

‘‘எங்க குடும்பம் தொழிலில் பேர் வாங்கிய குடும்பம். நாங்க ஊறுகாய் பிஸினஸ் பண்ணிக்கிட்டிருந்தோம். எங்க குடும்பப் பேர் சொல்லி, அந்த வீட்டு ஊறுகாய் கொடுங்கனு பலரும் கேட்டு வாங்குறதா கடைக் காரங்க சொல்வாங்க. பெருமையாக இருந்தது. திடீர்னு ஒருநாள், நாங்க ஊறுகாய் போடுறதுக்காக கடைக்குப் போனபோது, எங்க குடும்பத்துப் பெயரில் ஓர் ஊறுகாய் பாக்கெட் தொங்கிட்டு இருந்தது. ‘என்ன அநியாயம் இது?’னு கேட்டபோது, அந்த கம்பெனிக்காரங்க, ‘ஊறுகாய்னு சொன்னால் இந்தப் பேர் மக்களிடம் நல்ல பிரபலமாக இருக்கு. அதனால், எங்க ஊறுகாய்க்கு அந்த பேரை வெச்சோம். அதை பிராண்டாக ரெஜிஸ்டர்கூட பண்ணிட்டோம்’னு கூசாம சொல்றாங்க. அப்புறம் எங்க ஊறுகாய் மார்க்கெட்டில் அடிவாங்கிடுச்சு. இப்போ கஷ்டப்பட்டு எங்க பெயரை மீட்டெடுத்திருக்கோம்’’ என்றார் ஓர் ஊறுகாய் கம்பெனி அதிபர்.

பிராண்டிங் செய்வது செலவு பிடிக்கிற காரியமோ, சிரமமான விஷயமோ இல்லை. இதுபற்றி சென்னையின் டிரேட்மார்க் சட்ட ஆலோசகரும் வழக்கறிஞர் டேனியல் மற்றும் அவருடைய பார்ட்னர் கிளாடிஸ் ஆகியோர் விரிவாகச் சொன்னார்கள்.

‘‘குண்டூசி முதல் ஓட்டல் வரை அனைத்துக்கும் வந்துவிட்டது பிராண்ட்.! நம் தயாரிப்பு பற்றி நான்கு பேர் வாய்வழித் தகவலாக விளம்பரம் கொடுக்கவேண்டுமானால், அதற்கென தனி பெயர் இருந்தால்தான் முடியும்.

சிறிய தயாரிப்பாளர்கள்தான் என்றில்லை. பெரிய நிறுவனங்கள் சிலவே, தங்கள் பிராண்ட்களை சரியான நேரத்தில் பதிவு செய்யாமல் விட்டதால் பல பொருளாதார இழப்புகளைச் சந்தித்துள்ளன. பிராண்ட் பெயரைப் பதிவுசெய்யாமல் விட்டுவிட்டால், அதேபெயரில், வேறு ஒரு நிறுவனம் பதிவு செய்துகொண்டு பலனை அனுபவிக்கத் தொடங்கி விடும். ஒரே பெயரை இரு நிறுவனங்கள் சொந்தம் கொண்டாடும் விசித்திரங்கள் நிறைய! அப்படியான பல வழக்குகள் இன்னும்கூட நீதிமன்றங்களில் நடந்துவருகின்றன.

இதுபோன்ற வழக்குகளில் யார் அதிக காலம் மக்கள் மத்தியில் வியாபாரம் செய்திருக்கிறார்கள் என்பதை பில், கணக்கு, விளம்பரக் கட்டணம் போன்ற சாட்சிகளை அடிப்படியாக வைத்து முடிவு செய்வார்கள். அந்த நிலை வரைக்கும் கொண்டுபோகத் தேவையில்லை. ஒரு பொருளைத் தயாரிப்பது என்று முடிவெடுத்து விட்டால், அதை பிராண்ட் செய்துவிடுவது நல்லது’’ என்று சொன்னவர்களிடம், பிராண்ட் செய்வதற்கான விதிமுறைகளைக் கேட்டோம்.

‘‘ஒருவர் தன் தயாரிப்புக்கென பெயர், முத்திரை, சின்னம் போன்றவற்றைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டால், அவர் அதற்குச் சொந்தக்காரர் ஆகிறார். அதை சட்டரீதியாக பதிவு செய்யும்போது முழு உரிமையும் கொண்டவராகமுடியும்.

தென்னிந்தியாவுக்கே சென்னையில் உள்ள கிண்டிதான் அலுவலகம். உங்கள் பெயர், நிறுவனம் பயன்படுத்தி வந்த அல்லது பயன்படுத்தப் போகும் பெயர், முகவரி, எத்தனை வருடமாக இந்தப் பெயர் பயன்படுத்தப்படுகிறது, அதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா, தொழிலில் எந்தப் பிரிவின் கீழ் வருகிறது என்பன போன்ற விவரங்களைக் கொடுத்தால் போதும். இதற்கு அதிகபட்சம் இரண்டு நாட்களுக்குள் தற்காலிக பதிவு எண் கொடுப்பார்கள். நீங்கள் வைத்திருக்கும் பெயரை ஏற்கெனவே யாரும் பதிவு செய்திருக்கிறார்களா எனச் சரிபார்த்த பின்னர் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வார்கள்.

அதன்பிறகு, அவர்களது அதிகாரபூர்வ இதழான ‘டிரேட் மார்க்’ பத்திரிகையில் வெளியிடுவார்கள். மூன்று மாதம்வரை மறுப்பு ஏதும் வரவில்லை என்னும் பட்சத்தில் அந்த பிராண்ட் கேட்டவருக்கே ஒதுக்கித் தரப்படும். அத்தனைக்குமே கட்டணம் 2,500 ரூபாய்தான். பத்து வருடங்களுக்கு ஒருமுறை 5,000 ரூபாய் செலுத்தி புதுப்பித்துக்கொள்ள வேண்டி இருக்கும்.

ஏற்கெனவே இருக்கும் பெயரோடு எழுத்துகளைச் சேர்த்து புதிய பெயராகப் பதிவுசெய்ய முடியாது. உதாரணமாக, ராஜா மார்க் என்ற பெயரில் பிராண்ட் இருந்தால் நியூ ராஜாமார்க் என்று பதிவு செய்ய முடியாது. ஒருவேளை இவரும் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்திருந்தால் பதிவு செய்யலாம். அது டிரேட் மார்க் பதிவாளரின் முடிவைப்பொறுத்தது.

யானை போல வியாபாரத்தை வளர்த்துவிட்டு அங்குசமான பிராண்டிங் செய்யாமல் விட்டால் எப்படி..? அங்குசம் இல்லாத யானை கட்டுக்குள் அடங்காதே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு