Published:Updated:

பிஸினஸ் குட்டிக்கதை

பிஸினஸ் குட்டிக்கதை

பிரீமியம் ஸ்டோரி
தொழில்
பிஸினஸ் குட்டிக்கதை
 

பிஸினஸ் குட்டிக்கதை

ழக்கமாக ஒன்பதரைக்கு கடையை மூடும் ராஜு, அன்று கரன்ட் இல்லாததால் ஒன்பது மணிக்கே மூடத் தீர்மானித்துவிட்டான். ஸ்டேஷனரி கடை. பக்கத்திலேயே ஸ்கூல், அலுவலகங்கள் என இருந்ததால், தினமும் மூவாயிரம், நாலாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் வியாபாரம் நடக்கும்.

கல்லாவைப் பூட்டி, சாவியைப் பையில் போட்டுக்கொண்டான். வெளியே வந்து, ரோலிங் ஷட்டரை இழுத்து இறக்கி, இரண்டு பக்கமும் பெரிய பூட்டுகளைப் பூட்டிவிட்டுப் புறப்பட்டான்.

சாவியையும், கல்லாவில் உள்ள பணத்தையும் முதலாளி வீட்டில் கொடுத்துவிட்டுத்தான் வீட்டுக்குப் போவான். அதிகம் வியாபாரம் ஆகாதபோது, நாலைந்து நாள் வருமானத்தைச் சேர்த்தும் கொடுப்பது உண்டுதான். முதலாளி ஒரு வாரம் குடும்பத்தோடு மும்பை போயிருந்ததால், கடைச் சாவியும் கல்லாப் பணமும் இவன் பொறுப்பிலேயே இருந்தன. இப்போது கல்லாவில் 20,000 ரூபாய்க்கு மேல் சேர்ந்திருக்கிறது. இன்றைக்கு முதலாளி ஊர் திரும்பிவிட்டார். பணத்தைக் கொடுத்துவிடலாம் என்று பார்த்தால், கரன்ட் போய்விட, எண்ணி எடுத்துக்கொள்ள முடியவில்லை.

மறுநாள் காலை. கடை திறக்கப் போனபோது, ஏரியாவே ஏக பரபரப்பாக இருந்தது. வரிசையாக ஏழெட்டுக் கடைகளில் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. ராஜு தன் கடையை நோக்கி ஓடி, அவசரமாகக் கதவைத் திறந்து பார்த்தான். கல்லாப் பெட்டியும், அதில் இருந்த பணமும் பத்திரமாக இருந்தன.

‘அப்பாடா!’ என்று ஒரு நிம்மதி பரவியது மனசில். அப்போதுதான் கவனித்தான், கடையில் இருந்த மின் விளக்குகள் எரிந்துகொண்டு இருந்தன. நேற்று கரன்ட் போன சமயத்தில், ஸ்விட்ச்சுகளை ஆஃப் செய்ய மறந்துவிட்டிருக்கிறான் ராஜு.

சட்டென்று ஒரு விஷயம் உறைத்தது. கடை சாத்தியிருந்தாலும், உள்ளே எரிந்த பிரகாசமான மெர்க்குரி பல்பு வெளிச்சம், ரோலிங் ஷட்டரின் கீழ் விளிம்பு வழியாக வெளியே கசிந்திருக்கும். கடை யைச் சாத்திவிட்டு, ‘உள்ளே அமர்ந்து கணக்கு வழக்கு பார்க்கிறார்கள்’ என்று கொள்ளையர்கள் நினைத்திருக்கவேண்டும்.

முதலாளி விஷயம் கேள்விப்பட்டுப் பரபரப்பாக கடைக்கு வந்தார். அவரிடம் நடந்ததை விலாவாரியாக விளக்கிய ராஜு, ‘‘நான் கடை ஸ்விட்ச்சுகளை அணைக்காமல் போனதால்தான் பணம் பிழைத்தது!’’ என்று முகம் முழுக்கப் பூரிப்பாகச் சொன்னபடியே பணத்தை நீட்டினான். பணத்தை வாங்கிய முதலாளி, அதிலிருந்து ஒரு சிறுதொகையைப் பிரித்தெடுத்து எண்ணி, அவன் முன் நீட்டினார்.

‘’நல்லது! இவ்வளவு நாள் வேலை செஞ்சதுக்கான சம்பளம். இன்னியோட வேலையை விட்டு நின்னுடு!’’ என்றார்.

பதறிவிட்டான் ராஜு. ‘‘ஐயா, என்ன சொல்றீங்க?’’ என்றான் அழுகை வெடிக்கும் குரலில்.

‘‘இதோ பார் ராஜு! ‘கரன்ட் போனதுல லைட்டை அணைக்க மறந்து போயிட்டேன்’னு சொல்லியிருந்தா, போகட்டும்னு விட்டிருப்பேன். ஆனா நீயோ, பண்ணின தப்பையே, எதிர்பாராதவிதமா நடந்த ஒரு நன்மையோடு முடிச்சுப்போட்டு நல்ல பேர் வாங்கப் பார்க்கிறே! ஒண்ணு புரிஞ்சுக்கோ... நம்மளோட சரியான செயல்களால தான் விளைவுகள் நல்லபடியா அமையணுமே தவிர, விளைவுகளை வெச்சு நம்ம செயல்களை சரி, தப்புன்னு தீர்மானிக்கக்கூடாது!’’ என்றபடி கிளம்பினார் முதலாளி.

ராஜுவுக்குச் சின்ன வயது. முதலாளி இன்று கற்றுக்கொடுத்த பாடம் புரிபட, அவனுக்கு இன்னும் சில வருடங்களாவது ஆகும். அதுவரை மனசுக்குள் பொருமிக்கொண்டுதான் இருப்பான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு