Published:Updated:

ரஞ்சன் பெற்ற ரஷ்ய ரகசியம்!

ரஞ்சன் பெற்ற ரஷ்ய ரகசியம்!

பிரீமியம் ஸ்டோரி
சேமிப்பு
ரஞ்சன் பெற்ற ரஷ்ய ரகசியம்!
 

 

ரஞ்சன் பெற்ற ரஷ்ய ரகசியம்!

ரஞ்சன் பெற்ற ரஷ்ய ரகசியம்!

ஞ்சனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. செல் போனோடு டாக் டைமும் ஃப்ரீயாகக் கொடுத்தது மாதிரி, வருடாவருடம் கிடைக்கும் இன்க்ரிமென்ட் மட்டுமின்றி, ஆபீஸில் புரமோஷனும் கொடுத்துவிட்டார்கள். மற்ற எல்லாவற்றையும்விட அவருக்கு அதிக சந்தோஷம் தந்தது சம்பளத்தில் உயரப்போகும் ஆயிரம் ரூபாய்!

ஸ்வீட்டும் பூவும் வாங்கிக்கொண்டு வீட்டுக்குள் நுழையும்போதே மனைவிக்கும் மகளுக்கும் பஞ்சாயத்து நடந்துகொண்டிருந்தது. பள்ளிக்கூட கலை நிகழ்ச்சிக்காக புதிய பட்டுப்பாவாடை கேட்டுக் கொண்டிருந்தாள் மகள். ஆனால், மனைவியோ ‘ஒருநாள் கூத்துக்காக புதுத்துணி வாங்க முடியாது. இதுக்காக நான் ஒரு பைசா தரமாட்டேன். இருப் பதைப் போட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்’ என்று விரட்டிக் கொண்டிருந்தாள்.

இரண்டு பேருக்கும் நடுவே போய் நின்ற ரஞ்சன், ‘‘யாரும் எக்ஸ்ட்ராவா பைசா தர வேண்டாம். என் மகளுக்கு நானே பட்டுப்பாவாடை வாங்கிக் கொடுப்பேன்’’ என்றார்.

‘‘எப்படி..?’’ என்று இருவரும் ஆச்சரியமாகப் பார்க்க... பையில் வைத்திருந்த புரமோஷன் கடிதத்தை எடுத்துக்காட்டினார்.

டைனிங் டேபிளில் உட்கார்ந்து டிபன் சாப்பிட்டபடியே இந்த நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சனின் மகன் பாலாஜி, கவிழ்த்து வைத்திருந்த புத்தகத்தை மீண்டும் எடுத்து படிக்க ஆரம்பித்தான்.

‘‘என்ன பாலாஜி... ஆயிரம் ரூபாய் சம்பளம் கூடப் போகுது... உனக்கு என்ன வேணும், கேளு... காலேஜ் போறதுக்கு ஒரு பைக் ட்யூவிலே வாங்கிடலாமா!’’ என்றார்.

‘‘பைக் எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம், முதல்ல நம்ம வீடு செழிப்பாக வேண்டாமா... அந்த வேலைகளைப் பார்க்கலாம்’’ என்றான் அமைதியான குரலில்.

‘‘உன்னை எகனாமிக்ஸ் சேர்த்தது தப்பாப் போச்சு. எதுக்கெடுத்தாலும் வாதம் பண்றே... நீ பைக் வாங்கறதுக்கும் நம்ம வீடு செழிப்பாகறதுக்கும் என்னடா சம்பந்தம்?’’ என்று கொஞ்சம் எரிச்சலோடு கேட்டார். புரமோஷனை பிள்ளை கொண்டாடவில்லையே என்ற கோபம் அவருக்கு!

‘‘ரஷ்யா தெரியுமாப்பா உங்களுக்கு?’’ என்றான் பாலாஜி.

‘‘ம்ம்... அதுக்கென்ன, சொல்லு!’’

‘‘அவங்க எப்படி முன்னேறினாங்க?’’

‘‘நீயே சொல்லு...’’

‘கர்ப் ஆன் கன்சம்ஷன்’ ( Curb on consumption ) பண்ணித்தான்!’’

‘‘அப்படின்னா?’’

‘‘செலவைக் கட்டுப்படுத்தி முன்னேறுவது... ஆடம்பரச் செலவெல்லாம் கிடையவே கிடையாது. கிடைக்கிற பணமெல்லாம் தேசத்தின் கட்டுமானப் பணிகளுக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும்தான். இப்படியே பல ஆண்டுகள் செய்து செலவைக் கட்டுப்படுத்தி அதை முதலீடு செய்தாங்க... உச்சத்துக்குப் போனாங்க...

நம்மளை மாதிரி மிடில்கிளாஸ் குடும்பத்துக்கு ரஷ்யாதான் ரோல் மாடலா இருக்கணும்ப்பா! வருமானம் கூடும்போது அதை ஆடம்பரச் செலவுகள் செய்யாம, சேமிக்கிறதுதான் குடும்பம் செழிப்பாக்க வழி...’’ என்று நீண்ட லெக்சர் அடித்தான் பாலாஜி.

‘‘நம்மூரிலே வாயைக் கட்டு வயித்தைக் கட்டுனு சொல்வாங்களே... அதுமாதிரியா..?’’ என்றார் ரஞ்சனின் மனைவி.

‘‘அவ்வளவு யோசிக்க வேணாம்மா! போன மாச சம்பளத்திலேயே நாம திருப்தியா சாப்பிட்டோம் இல்லையா..? அதேதான் இந்த மாசமும்னு நினைச் சுக்கோ! இந்த ஆயிரம் ரூபா எப்படிப் பார்த்தாலும் நமக்குக் கூடுதல் வருமானம்தானே! இது வரலேன்னாலும் நம்ம வாழ்க்கை ஓடிட்டுதானே இருந்திருக்கும்? இந்தப் பணத்தில் ஆடம்பரச் செலவுகள் செய்யவேண்டாம். அதுக்குப் பதிலா தங்கமோ, சேமிப்புப் பத்திரங்களோ வாங்கி முதலீட்டுச் செலவா செய்யலாமே!’’ என்றான் பாலாஜி.

ரஞ்சன் நிதானமாக யோசிக்க ஆரம்பித்தார்... அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பனாக மாறி, மகன் சொன்ன வார்த்தைகளில் இருந்த உண்மை அவரது ஆடம்பர எண்ணங்களைச் சுட்டு வீழ்த்தியது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு