Published:Updated:

கரடி ராஜ்ஜியம்? கலங்க வேண்டாம்!

கரடி ராஜ்ஜியம்? கலங்க வேண்டாம்!

கரடி ராஜ்ஜியம்? கலங்க வேண்டாம்!

கரடி ராஜ்ஜியம்? கலங்க வேண்டாம்!

Published:Updated:
நடப்பு
கரடி ராஜ்ஜியம்? கலங்க வேண்டாம்!
 

கரடி ராஜ்ஜியம்? கலங்க வேண்டாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கரடி ராஜ்ஜியம்? கலங்க வேண்டாம்!

சு னாமியில் சிக்கித் தப்பியது மாதிரி திகிலடித்துக் கிடக்கிறார்கள் சிறு முதலீட்டாளர்கள்.

18-ம் தேதி, வியாழனன்று ஆரம்பித்தது அந்நிய முதலீட்டாளர்களின் ‘பேக் டூ பெவிலியன்’ ஆபரேஷனால் மார்க்கெட் விழ ஆரம்பித்து, திறந்துவிட்ட அணையாய் தொடர்ந்து, இறங்கிக்கொண்டே போனது சந்தை. பணப்புழக்கத்தில் உற்சாகமாக நீந்திக்கொண்டு இருந்த மீன் குஞ்சுகளாக இருந்த சிறு முதலீட்டாளர்கள் திகிலில் துள்ள ஆரம்பித்தனர். சிலர் சந்தையை விட்டு, வந்தவரை முதலீடு செய்த தொகையைக் காப்பாற்றுவோம் என்று தவ்விக் குதித்தனர். ஏன் இந்தப் பதற்றம்..?

‘கரடி ராஜ்ஜியத்தில் பங்குச் சந்தை சிக்கிக் கொண்டதே... இதிலிருந்து மீண்டால் போதும்’ என்று கலங்க வேண்டாம். பங்குச் சந்தையிலேயே பழம் தின்று கொட்டைபோட்ட அனுபவஸ்தர்கள் புலம்பியதைக்கண்டு கூட மிரளவேண்டாம். இனி பங்குச் சந்தை அவ்வளவுதான் என்று பதறுவதைவிட, தரமான பங்குகளை நியாயமான விலையில் வாங்கு வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என பாஸிட்டிவாகப் பாருங்கள்.

இதைப்போன்ற எதிர்பாராத தாக்குதல்களில் இருந்து நம் முதலீட்டைப் பாதுகாகாக்க முதலீட் டாளர்கள் செய்யவேண்டியது என்ன? என்பதைப் பார்க்கும் முன், இந்தச் சரிவின் பின்னணியை ஆராய்வோம்.

கரடி ராஜ்ஜியம்? கலங்க வேண்டாம்!

உலகச் சந்தையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஏறிவந்த உலோகங்களின் விலை, திடீரென பெரும் வீழ்ச்சியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, பங்குச் சந்தைகளும் இறங்குமுகமானது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் பங்குச் சந்தை மட்டுமல்லாது ரஷ்யா, தென்கொரியா, இந்தோனேஷியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் பங்குச் சந்தையும் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது.

நம் மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸைப்போல வளர்ந்து வரும் நாடுகளுக்கென தனியாக ஒரு குறியீட்டை பின்பற்றி வருகிறது பிரபல நிறுவனமான மார்கன் ஸ்டான்லி. எம்.எஸ்.சி.ஐ எமெர்ஜிங் மார்க்கெட்ஸ் எனக் குறிப்பிடப்படும், இதில் இடம்பெற்றுள்ள அனைத்து நாடுகளிலும் பங்குச் சந்தை கணிசமாக வீழ்ந்துள்ளது. அதிலும், மலேஷியா, பிலிப்பைன்ஸ் தவிர மற்ற சந்தைகள் அனைத்தும் 5 சதவிகிதத்தில் இருந்து 9 சதவிகிதத்துக்கு மேல் வீழ்ச்சி அடைந்தன.

பங்குகளை வாங்குவதே லாபம் பொங்கும் நேரத்தில் விற்கத்தானே... இந்த சூழ்நிலையை நன்கு பயன்படுத்திக் கொண்ட அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் மடமட வென விற்கத்துவங்கின.

உலகச் சந்தையின் வீழ்ச்சி பாதிப்பு இந்தியாவை யும் தாக்கத் துவங்கிய அதே நேரத்தில், சி.பி.டி.டி-யின் சுற்றறிக்கை எனும் சூறாவளியும் சேர்ந்துகொண்டு நம்மைச் சுழற்றி அடிக்க ஆரம்பித்தது.

பங்குகளின் விலை குறைந்ததால் ஏற்பட்ட இழப்பைச் சரிசெய்ய பங்குச் சந்தை நிர்வாகத்துக் கும், கடன் கொடுத்த வங்கிகளுக்கும் கொடுக்க வேண்டிய மார்ஜின் பணத்தைச் சரிசெய்யவும், முதலீட்டாளர்களும், தரகர்களும் மேலும் பங்குகளை சந்தையில் விற்க, விலை மேலும் சரிந்தது. ஒரு சுழலில் ஒருவர் பாதிக்கப்பட்டால் அது மற்ற எல்லோரையும் உள்ளே இழுக்கும் என்பார்களே, அதுதான் நடந்தது.

நிலைமை கைமீறிப்போவதை உணர்ந்த செபி, நிதி அமைச்சகம் மற்றும் மத்திய ரிசர்வ் வங்கி ஆகியோர் ஆலோசித்து, மேலும் மோசமடையாமல் தவிர்க்கத் தேவையான நடவடிக்கைகளில் மளமளவென இறங்கினர். தேவையான கடனுதவி வழங்கும்படி வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கப் பட்டது. பங்குச் சந்தையில் கட்டவேண்டிய மார்ஜின் எனப்படும் முன்பணத்தின் அளவு பாதியாகக் குறைக்கப்பட்டது. பங்குகளின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதைக் கண்ட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனங்களும் பங்குகளை வாங்கிக் குவிக்க ஆரம்பித்தன. பங்குச் சந்தை ஓரளவுக்கு நிமிர்ந்தது.

ஓகே! இதில் நம்மைப்போன்ற சிறு முதலீட்டாளர்கள் கற்றுக்கொண்டது என்ன?

லாபத்தை வெளியே எடுங்கள்!

லாபத்தை பேப்பரில் பார்ப்பதைவிட, கையில் பாருங்கள். வாங்கிய பங்குகளின் விலை ஓரளவு அதிகரித்தபின் இன்னும் மேலே ஏறும்... இன்னும் ஏறும் எனக் காத்திருப்பதைவிட, அவ்வப்போது அவற்றை ஓரளவு லாபம் வந்ததுமே விற்றுக் காசாக்குவதே நல்லது. குறைந்தபட்சம், அவற்றில் ஒரு பகுதியையாவது விற்றுவிடுங்கள். சிறிது லாபம் பார்த்துவிட்டோம் என்ற திருப்தியுடன் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம். மனோதத்துவ ரீதியில் இது சந்தை வர்த்தகத்தில் ஈடுபட தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கும்.

சமயம் பார்த்து வெளியேறு!

சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் மாதிரி, அவ்வப்போது திட்டமிட்டு வெளியேறும் முறையும் கற்றுக்கொள்ளவேண்டும். இதற்குமேல் ஏறாது என்று தெரிந்ததும் அந்தப் பங்குகளை விற்று வெளியேறிவிட வேண்டும். மேலேபோன பங்குகளின் விலை, கீழே வந்துதான் ஆகவேண்டும். அப்போது மீண்டும் உள்ளே நுழையலாம். என்ன ஒன்று! பங்குகளின் தராதரத்தைப் பொறுத்து வீழ்ச்சி கடுமையானதாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம்.

துணிந்து செல்!

பங்குச் சந்தை கிடுகிடு இறக்கம் கண்ட இந்தச் சந்தர்ப்பத்தில், நல்ல பங்குகளை துணிந்து வாங்கிப்போட்டிருந்தால், குறுகிய காலத்திலேயே நல்ல லாபம் பார்த்திருக்கலாம். மே 22, 23-ம் தேதிகளில் தேர்ந்தெடுத்த பங்குகளை நீங்கள் வாங்கியிருந்தால், அடுத்த சிலநாட்களிலேயே நல்ல வருமானம் பார்த்திருக்க முடியும் என்பது அதன் விலையேற்றத்தைக் கவனித்தாலே புரிந்திருக்கும். ஐ.ஓ.பி ரூபாய் 70-க்கு இறங்கி, வார இறுதியில் 85-ஐத் தொட்டது. என்.டி.பி.சி 101-ல் இருந்து 121 ஆக மாறியது. சன் டி.வி 1,020 வரை இறங்கி, 1,200 ஆக மாறியது. குஜராத் அம்புஜா 77 ரூபாயில் இருந்து 98 ரூபாய் வரை சென்றது. இது எல்லாமே சொல்வது ஒரே வாரத்தில் 20% லாபம் என்பதைத்தான்.

தேவை அசாத்திய பொறுமை!

மேலே சொன்னதைப் படித்தவுடன் அடுத்த கேள்வி வரும். இப்போது இப்படிச் சொல்கிறீர்கள். நடந்தபின் சொல்வது எளிது. ‘இந்த மாதிரியெல்லாம் நடக்கும் என்று யாருக்குத் தெரியும்?’ என்கிறீர்களா..? இதுபோன்ற தருணங்களில் கொஞ்சம் பின்நோக்கிப் பார்ப்பதும் அவசியம்.

சென்ற ஆண்டு ஐபிஓ ஸ்காம் பற்றி செபி நடவடிக்கை எடுத்த சமயத்தில்; மே 17, 2004-ல் மன்மோகன் அரசு பதவி ஏற்கும் முன்; நம் நாடாளுமன்றம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட போது; செப்டம்பர் 11-ல் அமெரிக்காவின் மீதான தாக்குதல்; ஒய்-2 கே வீழ்ச்சி; இப்படிப் பல சந்தர்ப்பங்களில் வீழ்ச்சிகளை சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறது பங்குச் சந்தை.

ஆனால், ஒவ்வொரு முறையும் சிறுமுதலீட்டாளர்கள் இவ்வீழ்ச்சிகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வ தில்லை. கண்ணுக்குத் தெரிந்து நல்ல சந்தர்ப்பத்தைத் தவறவிட்டுவிட்டு, பின் புலம்புவதில் என்ன பலன்? எனவே, முதலீட்டுக்கான நேரம் வரும்வரை, அது எவ்வளவு காலமானாலும் பரவாயில்லை. காத்திருத்தல் முக்கியம். ஓடு மீன் ஓட, உரு மீன்... பழமொழியை நினைவில் நிறுத்துங்கள்.

வெங்காய சந்தை!

பங்குச் சந்தை படுவேகத்தில் ஏறும்போது, ‘எதை வாங்கலாம்’ என கண்ணில் பட்டவர்களை எல்லாம் கேட்டுத் துளைத்தெடுத்த முதலீட்டாளர்கள், அதே பங்குகள் மலிவாகக் கிடைக்கும்போது வாங்கத் தயங்கலாமா? வெங்காயம், தக்காளி விலை ஏறியபோது குறைவாக வாங்கிய நாம், விலை இறங்கியபின் மொத்தமாக வாங்கி தொக்கு போடுவதில்லையா? வாங்குமுன் சரிபார்க்க வேண்டிய ஒரே தகவல் - அவை, அடிப்படை வலுவும் நல்ல நிர்வாகமும் கொண்ட நிறுவனங்களா? என்பதை மட்டும்தான்.

அனுபவம் பயில்!

எப்போதுமே ஒன்று வைத்துக்கொள்ளுங்கள்; பங்குச் சந்தை மேலே மேலே எனப் போகும்போதே பங்குகளை விற்று, ஓரளவு பணத்தைக் கையிருப்பில் வைத்துக்கொள்வது அவசியம். இந்தச் சரிவு இதை உணர்த்தியிருக்கும். கையில் பணம் இருந்தவர்களெல்லாம் கடந்த வாரத்தில் பங்குகளை மலிவான விலையில் அள்ளிப் போட்டதைப் பார்க்க முடிந்தது. மியூச்சுவல் ஃபண்ட்களும் காப்பீட்டு நிறுவனங்களுமே இதற்கு நல்ல உதாரணம். சிறு முதலீட்டாளர்களும் எதிர்காலத்தில் இதை மனதில்கொண்டால், எப்போதுமே முதலீட்டுக்கு பங்கம் வராது என்பது ஒரு பக்கம்... நல்ல லாபம் பார்க்கலாம் என்பது மிக முக்கியமான மறுபக்கம்.

வேண்டாம் குழப்பம்!

நிச்சயமற்ற இம்மாதிரி சூழலில் குழம்பிப்போய் ஸ்தம்பிக்காமல், தெளிவாக முடிவெடுக்கக் கற்றுக் கொண்டால், பங்குச் சந்தையை எளிதில் வெல்ல முடியும். நமக்கு ஏற்படும் பயத்தையும் குழப்பத்தையும் தான் நம்பி இருக்கிறார்கள் பங்குச் சந்தையில் வெறியாட்டம் போடும் சிலர். நம் குழப்பத்தை அதிகரிக்கும் விதமாக வதந்திகளையும் கிளப்பி விடுவார்கள் இவர்கள்! அடுத்தவர் அழிவில் பணம் பண்ணும் இவர்களின் பயமுறுத்தல்களுக்கு இரை ஆகாமல், நம்மைக் காத்துக் கொள்ளும் மனப்பக்குவம் வரவேண்டும். வதந்திகளுக்கு வசப்படாதீர்!

மேலே சொன்னவை எல்லாம் பொதுவான பங்குச் சந்தைக்குப் பொருந்தும் விஷயங்கள். நல்ல ஸ்திரமான நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்தவர்கள் கவலையே படவேண்டியதில்லை. ஒட்டு மொத்தப் பங்குச் சந்தையின் வீழ்ச்சியைவிட நல்ல பங்குகளின் விலை குறைவாகத்தான் வீழ்ந்திருக்கும். இவற்றை மேலும் வாங்கிப்போடும் வாய்ப்பாகப் பாருங்கள்.

புதிதாக வாங்கிப்போடுவது சரி... பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கும்போது அது இன்னும் ஏறும் என்ற நம்பிக்கையுடன் பங்குகளை வாங்கி அடுக்கியவர்கள் என்ன செய்வது..? பல ஆயிரம் முதலீட்டில் சில ஆயிரங்களை இழந்து நிற்கிற சிறு முதலீட்டாளர்களுக்கு இரண்டே விஷயங்கள்தான் சொல்லமுடியும்.

முதலாவது, நீங்கள் ஏற்கெனவே வாங்கிய பங்குகள் இப்போது நல்ல வீழ்ச்சியில் இருக்கும்போது, மேலும் சிறிது வாங்கி உங்கள் பங்குகளின் சராசரி விலையைக் குறைக்க முயற்சியுங்கள். அடுத்தது - கசப்பு மருந்து!

உங்கள் கையில் உள்ள சிறிய நிறுவனப் பங்குகள், பென்னி ஸ்டாக்குகளை நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என்று விற்றுவிடுங்கள். நல்ல தரமான நிர்வாகத்திறமைகொண்ட பங்குகள் குறைந்த விலையில் கிடைக்கும்போதே, வாங்கிவிடுங்கள்.

இப்போதைய வீழ்ச்சி, நம் முதலீட்டாளர்களை நன்கு தயார்படுத்தி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். வெற்றியை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்த புதிய முதலீட்டாளர்கள் ஒரு முறை சூடுபட் டிருக்கிறார்கள். இனி மிகக்கவனமாக இருக்க, இந்த அடி உதவும். அதேசமயம், வழியில் வரும் வாய்ப்புகளையும் தவறவிடக் கூடாது.

‘நம்பி வாங்க நல்ல நேரமிது... சரிந்து வரும் பங்குச் சந்தையைப் பார்த்து மிரண்டு ஒதுங்கி ஓடாதீர்கள். உங்கள் முதலீட்டை ஈட்டி எடுக்க பொன்னான நேரம் இது, பொருளீட்டும் காலமிது!’ என்பதுதான் கரடி ராஜ்ஜியத்தில் நாம் சொல்ல விரும்புவது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism