நடப்பு |

தங்கம், வெள்ளி தடுமாறப் போகுது!
|

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘வா ரும் ஷேர்லக்... உங்கள் கருநாக்கு பலித்தேவிட்டது. கடைசி வாரத்தில் சந்தையில் ஒரு சரிவு இருக்கும் என்று சொன்னீர். நாமும் ஏதோ சிறு அதிர்வாக இருக்கும் என்று எண்ணினோம். ஆனால், பூகம்பமே அல்லவா வந்து ஓய்ந்திருக்கிறது! இனியருமுறை உம்ம வாயால் அப்படி ஏதும் சொல்லிவிடாதீர்!’’ என்று பாராட்டு -கம்-திட்டோடு வரவேற்றோம். நாம் சொல்வது, வேடிக்கைக்குத்தான் என்பதைத் தெளிவாகவே புரிந்துகொண்டார் ஷேர்லக். ‘‘இதை நாம் மட்டும் சொல்லவில்லை. வாசகர்கள் சிலரும் இதைப் படித்துவிட்டு, முதலில் புன்முறுவலாகச் சிரித்திருக்கிறார்கள். ‘வில்லில் இருந்து கிளம்பிய அம்பாகச் சீறிப்பாயும் மார்க்கெட்டாவது... சரிவதாவது! ஜோராகப் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் இதென்ன தேவையில்லாத கமென்ட்!’ என்று நினைத்தார் களாம். ஆனால், 22-ம் தேதிக்குப் பிறகு ரொம்பவே ஃபீல் பண்ணி இருக்கிறார்கள். ஒழுங்காக ஷேர்லக் சொன்னதை உற்றுக் கவனித்திருந்தால், இந்தச் சரிவில் என் பங்குகள் வாங்கிய 30% அடியைக் கொஞ்சமாவது குறைத்திருக்கமுடியும்’ என்று வருத்தப்பட்டார்கள். உங்களுக்கு ரசிகர் பட்டாளம் உயர்ந்துகொண்டே போகிறது ஷேர்லக்!’’ என்றோம். மகிழ்ந்தார் ஷேர்லக். அதற்குள் நம் செல்போன் சிணுங்க, அதை ஒத்தி காதில் வைத்தோம். ‘‘இல்லீங்க... அவர் ரொம்ப பிஸியான நபர். எதுவா இருந்தாலும் எங்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள்.’’ என்றபடியே மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு, ஷேர்லக் பக்கம் திரும்பினோம். ‘‘கோவை வாசகர் ஒருவர். உங்கள் செல் நம்பர் கேட்டு ஒரே போன் மயம். உங்கள் கணிப்பு பலித்ததில் ஆளாளுக்கு அருள்வாக்கு கேட்கும் அளவுக்குக் கிளம்புகிறார்கள். அவர்களுக்கு நாலு நல்ல தகவலாகச் சொன்னால்தான் ஆச்சு!’’ என்றோம் உரிமையுடன். ‘‘சொன்னால் போச்சு. கோவை உள்ளிட்ட இடங்களில் உள்ள ரீஜினல் எக்ஸ்சேஞ்களை முடுக்கிவிட்டு புத்துணர்ச்சி கொடுக்கும் வேலைகளில் இறங்கி இருக்கிறது செபி. விரைவில் இதற்கான உத்தரவு வெளியாக இருக்கிறது. அதோடு, 20 கோடி ரூபாய் மார்க்கெட் கேப்பிடலைசேஷன் கொண்ட நிறுவனங்கள் இனி ரீஜினல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுகளின் கைகளுக்கு வரப்போகிறது. அதனால், இப்போது முடங்கிக்கிடக்கும் இந்தச் சந்தைகளில் விரைவில் விறுவிறுப்பை எதிர்பார்க்கலாம்’’ என்றார். ‘‘பரவாயில்லையே! அடுத்தது..?’’ ‘‘இன்னொரு செய்தி இருக்கிறது... ஆனால், அது நல்ல செய்தியா, கெட்ட செய்தியா என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும்’’ என்று புதிர் போட்டார். ‘‘எதுவாக இருந்தாலும் சொல்லிவிடுங்கள்... சஸ்பென்ஸ் தாங்காது நமக்கு!’’ என்றோம் படபடப்போடு. ‘‘ஏன் பதற்றம்..? சமீபத்திய பங்குச் சந்தை வீழ்ச்சி போல, இன்னொரு சரிவு இருக்கிறது.’’ ‘‘இன்னொன்றா..?’’ ‘‘வெயிட்! இது பங்குச் சந்தையில் இல்லை. தங்கம், வெள்ளி மார்க்கெட்டில்! ஆகஸ்ட் மாதத்துக்குள் விடுவிடுவென ஏறிக்கொண்டிருக்கும் வெள்ளி, தங்கம் விலையில் நல்ல சறுக்கல் இருக்கும் என்று மெஸேஜ் அனுப்புகிறது ஒரு பொருளாதார பட்சி. மேலும், விவரங்கள் கேட்டு மெயில் போட்டிருக்கிறேன்.’’ ‘‘பெண்ணைப் பெற்றவர்களுக்கு நல்ல செய்தி தான்! சந்தை செய்திகள் உண்டா..?’’ என்று அடுத்த செய்தியை நோக்கி அவரை நகர்த்தினோம். ‘‘சென்னையிலிருந்தே தொடங்கலாமா? இங்கே தலைமையகம் கொண்ட ஓட்டல் நிறுவனம் ஒன்று, கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்களில் இடம் தேடிக்கொண்டிருக்கிறது. விரைவில் பிராஜெக்ட் டேக் ஆஃப் ஆகும்போது, இன்று சீண்டுவாரின்றி கிடைக்கும் அதன் பங்குகள்... ‘‘ஜிவ்வென்று ஏறும். சரிதானே!’’ என்று எடுத்துக் கொடுத்தோம். ‘‘நன்கு ஏறியபின் ‘ரா...ரா’ என்று அழைத்தாலும் இன்றைய விலைக்கு வராது அந்த மூன்றெழுத்து நிறுவனம். இப்போதே வளைத்து வையுங்கள்’’ என்ற ஷேர்லக், ‘‘விவசாயத் தொழில்களில் தீவிரமாகக் காட்டிக் கொள்ளும் எஃப்.எம்.சி.ஜி நிறுவனம் ஒன்று தனது பேக்கேஜிங் பிரிவை அக்கக்காகப் பிரித்து சீரமைப்பு செய்யப் போகிறதாம். இப்படி பல காரியங்களில் இது ஈடுபட உள்ளதால் அதனிடம் புதைந்துகிடக்கும் பொக்கிஷங்கள் வெளியே வர வாய்ப்பிருக்கிறது. அதன் பங்குகள் இப்போது சீப்பாகக் கிடைக்கின்றன. வாங்கிப்போட்டால் ஐ.டி கட்டுமளவு வருமானம் பார்க்கலாம்’’ என்றார். எதைச் சொல்கிறார் என்று புரிந்தது. ‘‘ஐ ஸீ!’’ என்று பதில் கோட் வேர்டைப் போட்டோம். ‘‘நான் என்ற அகந்தையை விலக்குங்கள்!’’ என்று தன் க்ளூவுக்கு இன்னும் வலு சேர்த்தார். நாம் உள்வாங்கிக் கொண்டதில் கொஞ்சம் குஷியாகிவிட்ட ஷேர்லக், நாம் மேலும் செய்தியை எதிர்பார்த்துக் காத்திருந்ததை உணர்ந்தும்கூட விட்டார் ஜூட். அடுத்தமுறை வட்டியும் முதலுமாக செய்திகளைக் கறந்துவிட வேண்டியதுதான் என்று உள்ளூர நினைத்தபடியே அவருக்குக் கையாட்டினோம் நாம். |