Published:Updated:

ஒரு நாள் முதலாளி

ஒரு நாள் முதலாளி

ஒரு நாள் முதலாளி

ஒரு நாள் முதலாளி

Published:Updated:
பிறவிப்பயன் தொடரும்
ஒரு நாள் முதலாளி
 

டைனமோ, டைலாமோ... டார்ச் லைட்டு தூளுமா!

‘‘டைனமோ டார்ச்லைட் புதுசா மார்க்கெட்டுக்கு வந்திருக்கு.
பேட்டரி இல்லாமல் கைகளால் அழுத்தினாலே,
டைனமோவில் பவர் ஏறி லைட் எரியும்! அ
ந்த டார்ச்சை வாங்கி விற்றால் நல்ல லாபம் கிடைக்கும்.
சென்னைக்கு வந்த இடத்தில் லாபம் பார்க்கலாமேனு யோசித்தேன்...
என்ன சொல்றீங்க?’’ என்று சென்னை பாரிமுனையில் இருந்து
தொலைபேசியில் ஆர்வமாகப் பேசினார், வேலூர் வாசகர் சரவணன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு நாள் முதலாளி

ர்வத்துக்கு பரிசாக ஆயிரம் ரூபாயைக் கொடுத்தோம். நாம் செல்லும் முன்பே பல கடைகளில் ஏறி இறங்கி விலையை விசாரித்து வைத்திருந்தார்.

நேராக ஒரு எலக்ட்ரானிக்ஸ் கடையில் புகுந்து 60 ரூபாய் ரேட்டில் 16 டைனமோ டார்ச் லைட்களை வாங்கினார். அங்கேயே தன் வியாபாரத்தைத் தொடங்கி விட்டார்.

எதிர்ப்பட்ட ஒரு ஆளிடம் டைனமோ டார்ச் பற்றி ஆதியோடு அந்தமாக விளக்கி, வியாபாரத்துக்கு அடி போட்டார். ஆனால், அந்த பார்ட்டி அவசர வேலையாக சட்டென்று பஸ்ஸில் ஏறிவிட்டார்.

ஆனாலும், சோர்வடையாமல் ஒரு ஒரு டி.டி.பி கடைக்குள் புகுந்தவர், அங்கிருந்தவர்களைப் பார்த்து பெரிதாக ஒரு வணக்கத்தைப் போட்டார். ‘‘ஏன் இவ்வளவு டல் வெளிச்சத்தில் வேலை பார்க்கிறீங்க..? கரன்ட் கட் ஆயிடுச்சா? இதோ பாருங்க, இந்த டார்ச் லைட்டை பேட்டரி போடவோ, சார்ஜ் பண்ணவோ தேவையில்லை. டைனமோ சார்ஜ் லைட். ரொம்ப நேரம் கம்ப்யூட்டரில் டைப் அடித்து களைச்சுப்போனால் நாலு தடவை இதை அழுத்தி எக்ஸர்சைஸ் பண்ணிக்கலாம். இதனால், லைட்டோடு சேர்த்து உங்களுக்கும் சார்ஜ் ஏறிக்கும்’’ என்று பேசிப்பேசியே ஆளை மயக்கிவிட்டார். நூறு ரூபாய்க்கு முதல் லைட் கைமாறியது.

சட்டென்று பஸ் பிடித்து சேப்பாக்கத்துக்குச் சென்றார். பஸ் ஸ்டாப்பிலேயே சிக்கினார் இன்னொரு பார்ட்டி.

‘‘சார்... புது மாடல் டைனமோ லைட்! சைக்கிளில் டைனமோ பேட்டரி இருக்கும் இல்ல, அதே சிஸ்டம்தான். இந்தப் பிடியை பத்து தடவை அழுத்தினால் போதும், ஒரு மணி நேரம் லைட் பவர்ஃபுல்லா எரியும். சாதா லைட்னா, அடிக்கடி பேட்டரி செல் வாங்கிப் போட வேண்டி இருக்கும்... மாசத்துக்கு இருபது, முப்பது ரூபாய் செலவாகும். அப்படியே போனா, வருஷத்தில் முன்னூறு, நானூறு செலவாகும். இந்த லைட்டை வாங்கினா, ஐந்து வருஷம் வரை உழைக்குதுனு வெச்சுக்கங்க. ஆயிரக்கணக்கில் மிச்சம்தானே!’’ என்று சரவணன் அடுக்கிக்கொண்டே போக, பார்ட்டியின் கைகள், தானாகவே பாக்கெட்டுக்குப் போனது.

ஒரு நாள் முதலாளி

அடுத்து, ஒரு கார்மென்ட்ஸ் கடையில் நுழைந்த சரவணன், அங்கு துணியை வெட்டிக் கொண்டிருந்தவர் களிடம், தன் பொருளின் அருமை, பெருமைகளை அள்ளி வீசினார்.

தைத்துக்கொண்டிருந்த பெண்கள் ஆர்வமாக லைட்டைக் கையில் வாங்கிப் பார்த்தார்கள். ‘‘என்ன ரேட்?’’ என்று கேட்டதும், ‘‘120-னு விக்கறது... நீங்க எத்தனை பீஸ் எடுக்கப் போறீங்கனு சொல்லுங்க. விலையைப் பார்த்துக்கலாம்’’ என்றார் சகாயம் செய்பவரைப் போல!

தங்களுக்குள் பேசி முடிவெடுத்து மூன்று லைட்களை வாங்கினார்கள். 300 ரூபாய்க்கு 25 ரூபாய் குறைத்து வாங்கிக்கொண்டார்.

கடைகள்தான் இலக்கு என்பது போல கடை, கடையாக ஏறி இறங்கினார். ‘‘தெருவில் போகிறவர் களிடம் விற்கலாமே...’’ என்றபோது, ‘‘கடையில் இருப்பவர்கள்தான் இப்படிப்பட்ட பொருட்களை வாங்கமுடியாமல் இருப்பார்கள். அவர்கள் கடையைச் சாத்திவிட்டு, கிளம்பும்போது இந்த ஃபேன்ஸி அயிட்டங்கள் விற்கிற கடைகள் மூடியிருக்குமே... அப்புறம் எங்கே போய் பொருள் வாங்குவார்கள். அவர்களைக் குறிவைத்து இப்படியான பொருட்களுடன் போனால், வியாபாரம் நன்றாக இருக்கும். இன்னொன்று அவர்களிடம் எப்போதும் காசு இருக்கும். மனசு லேசாக சலனப்பட்டாலே வாங்கிவிடுவார்கள்!’’ என்று லாஜிக் சொன்னபடியே, ஒரு மெடிக்கல் ஷாப்புக்குள் நுழைந்தார்.

அங்குபோய் சரவணன் டெமோ காட்ட, ‘‘நீ சொல்றது எல்லாம் சரிதான்... ஆனால், டாக்டர் அட்வைஸ் இல்லாமல் நான் எந்த எக்ஸர்சைஸும் செய்றதில்லை... அதனால், எனக்கு வேண்டாம். பக்கத்திலேயே டாக்டர் இருக்கிறாங்க. போய்க் கேட்டுப் பாருங்க...’’ என்றார் கேலியான குரலில்.

‘‘டாக்டருக்கு டார்ச் லைட் தேவைப்படுமே... இருங்க கேட்டுட்டு வர்றேன்...’’ என்று க்ளினிக் உள்ளே புகுந்தார். டாக்டரும், ‘‘என்ன?’’ என்றபடி பார்க்க, டக்கென்று தன் டார்ச் லைட்டை எடுத்துக் காட்டி விளக்க ஆரம்பித்தார் சரவணன். ஆர்வமாக கையில் வாங்கிப்பார்த்த டாக்டர், விலையை விசாரிக்க ஆரம்பிக்க, ‘‘ஒரு கன்சல்டேஷன் காசுதான் டாக்டர்! விலையை யோசிக்காதீங்க...’’ என்று உரிமையோடு பேசினார். காரியம் வெற்றியானது.

ஒரு நாள் முதலாளி
ஒரு நாள் முதலாளி

வெற்றிவீரராக வெளியில் வந்தவர், மெடிக்கல் ஷாப்காரரிடம், ‘‘டாக்டர் ஒரு லைட் வாங்கி இருக் காங்க. நீங்க ஒரு கஸ்டமர் பிடிச்சுக் கொடுத்ததால, கமிஷன் ரேட்ல தர்றேன். இந்தாங்க... 90 ரூபாய் கொடுங்க...’’ என்று அதிரடியாகப் பேச, அசந்து போன மெடிக்கல்காரர் ஒரு லைட்டை வாங்கினார்.

அடுத்து, திருவல்லிக்கேணி பக்கத்தில் இருந்த ஓட்டலுக்குள் புகுந்தவர், பிரியாணிக்கு ஆர்டர் கொடுத்து காத்திருந்தவர்களிடம், ‘‘அண்ணே... இந்த டைனமோ லைட்டை வாங்கிப் பாருங்க. பிரகாசமா எரியும்’’ என்று ஆரம்பித்து, பக்கத்து இலை சிக்கன் பிரியாணிக்கே டார்ச் அடித்தார். ‘‘யாருப்பா அது... எங்க கடைக்குள்ளே தனிக்கடை போடறது?’’ என்று கல்லாவில் இருந்து குரல் கேட்டது. கல்லாவைத் திரும்பிப் பார்த்தார் சரவணன். அங்கே ஒரு சார்ஜர் டார்ச் லைட் பிளக்கில் மாட்டப்பட்டிருந்தது.

‘‘சார்... என்ன சார் இன்னும் சார்ஜ் போட்டு பவரை வீணாக்கிட்டிருக்கீங்க! இப்படி ‘டக்டக்’னு பத்துமுறை அழுத்தினா போதும். அப்படியே கண்ணு கூசற அளவுக்கு லைட் அடிக்கும்’’ என்று சொல்லிக்கொண்டே டெமோவும் காட்டினார்.

டைனமோ லைட்டின் பிரகாசத்தில் கல்லாக்காரர் கொஞ்சம் டைலமாவுக்குப் போனார். அவரது முகத்தில் தெரிந்த மாற்றத்தில், பேரம் படியும் என்று புரிய கொஞ்சம் அழுத்தமாக கேன்வாஸ் செய்து ஒரு லைட்டைத் தள்ளிவிட்டார். வாங்கிக் கொண்ட கடைக்காரர், பத்து ரூபாயும் ஐந்து ரூபாயுமாக 85 ரூபாயை எண்ணி வைத்தார் கல்லாகாரர். ‘‘கட்டுபடி ஆகாதுங்க’’ என்று கொஞ்சி, கெஞ்சி பேசி ஐந்து ரூபாயை எக்ஸ்ட்ராவாக வாங்கிக் கொண்டார்.

அந்த நேரத்தில், சாப்பிட்டு முடித்து பில்லோடு வந்தவர்கள் எட்டிப் பார்க்க, ‘‘சூப்பர் லைட் சார்...’’ என்று கல்லாக்காரரே கேன்வாஸ் செய்தார்.

ஒரு நாள் முதலாளி

பில்லைக் கொடுத்துவிட்டு, லைட்டைக் கையில் வாங்கிப் பார்த்தவர், நாலைந்துமுறை லிவரை அழுத்திப் பார்த்தார். பிறகு லைட்டை எரியவிட்டுப் பார்த்தார். திருப்தியாக தலையசைத்துக் கொண்டு பர்ஸைப் பிரித்தார்.

பாதிக்கிணறு தாண்டிய உற்சாகத்தில், டிராஃபிக் நிறைந்த திருவல்லிக்கேணி ஹைரோடு சிக்னலுக்கு வந்தார் சரவணன்.

இரண்டு சக்கர வண்டியில் சிக்னலை தாண்டி போன ஒருவர், லைட் வெளிச்சத்தை பார்த்தும் டக்கென்று பிரேக் போட்டு விட்டு, விலையை விசாரிக்க ஆரம்பித்தார். ‘‘நூற்றி இருபது ரூபா சார்’’ என்று சரவணன் சொல்ல, ‘‘நூறு ரூபாய் வைத்திருந்தேன். ஹோட்டலில் இருபது ரூபாய்க்கு சாப்பிட்டு விட்டேன். எண்பது ரூபாய் தான் இருக்கு, அதற்கு ஏற்றமாதிரி நல்ல லைட்டாகக் கொடுங்க...’’ என்று காசை நீட்ட, ‘‘சரி கொடுங்க’’ என்று காசை வாங்கிக் கொண்டு லைட்டை கொடுத்த சரவணன், ‘‘என்னை பார்த்தசாரதி கோயில் பக்கமாக இறக்கி விட்டுடுங்க... ப்ளீஸ்...’’ என்று லிப்ட் கேட்டு ஏறிக் கொண்டார்.

கோயில் பக்கம் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்க, டக்கென்று பக்கத்தில் இருந்த அரசு அலுவலர் ஒன்றிய சங்க கட்டடத்துக்குள் போனார் சரவணன். அங்கு தீவிர டிஸ்கஷனில் இருந்த அரசு ஊழியர்கள் என்னவென்று விசாரிக்க... லைட் மேட்டரை சொல்லி விளக்கம் ஆரம்பித்தார். ‘‘தம்பி, என்ன சொல்றீங்க... ஏதாவது ஃப்ரீ உண்டா?’’ என்றார் ஒருவர்.

‘‘பேருதான் சார் லைட்! ஆனா, இதோட செயல்பாடு செம வெயிட். கரகரனு நாலு அமுக்கு அமுக்கி சார்ஜ் பண்ணினா, மினி ட்யூப் லைட் கணக்கா பளிச்னு எரியும். மார்க்கெட்டுக்கு புது பிராடக்ட் சார்... இன்னிக்கு விலை 100 ரூபாய்!’’ என்று சரவணன் சொல்ல, ‘‘அட தம்பி... நல்லாப் பேசுறியே!’’ என்று சொன்ன அந்த அலுவலர், தான் ஒன்றை வாங்கிக்கொண்டதோடு, தன் சகாக்களும் சிபாரிசு செய்து மூன்று லைட்களை வாங்கிக்கொள்ள வைத்தார்.

அங்கிருந்து அப்படியே நடைபோட்டு ஒரு டீக்கடைக்கு வந்தார். ஒரு டீ ஆர்டர் செய்துவிட்டு, வியாபாரத்தை ஆரம்பித்தார்.

ஒரு நாள் முதலாளி

‘‘அடிக்கடி கரன்ட் கட் ஆகுதுல்ல சேட்டா... அதுக்கு அருமையான வழியிருக்கு... இதுக்கு ‘டைனமோ லைட்’னு பேரு... பார்த்திருக்கீங்களா..?’’ என்றார். சேட்டா ஆர்வமாகிவிட்டார். ‘‘எங்கே கிடைக்கும் அந்த லைட்?’’ என்று கேட்டார். டக்கென்று பையில் இருந்து லைட்டை வெளியே எடுத்துக் காட்டினார்.

இந்த ட்விஸ்டை எதிர்பார்க்காத சேட்டா, ‘‘முதலாளி இல்லையே...’’ என்று கொஞ்சம் ஜகா வாங்க, ‘‘சேட்டா... நீங்கதான் முதலாளினு எனக்குத் தெரியும். நல்ல பொருள் தேடி வரும்போது வாங்கிப் போடுங்க...’’ என்று கேன்வாஸ் செய்ய ஆரம்பித்தார்.

லைட்டை வாங்கி இருட்டாக இருந்த பக்கத்தில் வெளிச்சத்தை அடித்துப் பார்த்தார். திருப்தி வந்தவுடன், விலையே கேட்காமல் ‘‘பத்து ரூபாய் குறைச்சுக்கோ... சரியா?’’ என்றபடி எடுத்து கல்லாப் பெட்டிக்குள் போட்டார்.

‘‘வெளியிலே 120 ரூபாய்க்கு விற்கறேன். நீங்க பத்தைக் குறைச்சுக்கோங்க...’’ என்றார் சரவணன். சேட்டா தெளிவாக எண்ணி 90 ரூபாயைக் கொடுத்தார்.

கட்டக் கடைசியாக ஒரு லைட் கையில் இருந்தது. ‘‘இதை விற்கப் போறதில்லை... நானே எடுத்துக்கப் போறேன்’’ என்றார் சரவணன். ‘‘உங்க வீட்டுக்கா..?’’ என்றதும், ‘‘இல்லை சார், சென்னையிலேயே இந்த டார்ச் இத்தனை பரபரப்பாக விற்பனை ஆகுதுன்னா... எங்க ஊர் வேலூரில் இன்னும் பரபரப்பாகப் போகும். அங்கே உள்ள கடைக்காரர்களிடம் ஆர்டர் பிடிச்சுக் கொடுக்கலாம்னு ஒரு ஐடியா வந்தது. அங்கே போய் விளக்கம்சொல்லி மாளாது. அதனால், இந்த டார்ச்சைக் கையில்கொண்டுபோய் காட்டி ஆர்டர் பிடிச்சுடுவேன். இந்த டார்ச்தான் இப்போ எனக்கு மூலதனம்’’ என்று சொல்ல, அசந்து போய் அவரைப் பார்த்தோம்.

‘‘ஆர்டர்களைப் பிடிச்சுட்டு அப்புறமா சென்னை வந்து மொத்தமாக வாங்கிட்டுப் போய் வியாபாரம் செய்ய வேண்டியதுதான்...’’ என்று பேசிக்கொண்டே கையில் இருந்த காசை எண்ணினார்.

1,425 ரூபாய் இருந்தது. ஆயிரம் ரூபாயை எண்ணி நம் கையில் கொடுத்துவிட்டு, மீதமிருந்த காசோடு புதிய மூலதனமான டார்ச்சையும் பையில் போட்டுக்கொண்டு கோயம்பேடு பஸ் ஏறினார் சரவணன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism