தொழில் |

முருங்கையில் இத்தனை லாபமா? காசை
அள்ளும் விவசாயிகள்!... |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

க ற்பக மரத்தைக் கண்ணால் பார்த்திருக்கிறீர்களா..? போதிய தண்ணீர் இல்லாமல் தவிக்கும் விவசாயிகளுக்கு லட்ச லட்சமாகப் பணத்தை அள்ளித்தரும் கற்பக மரமாகவே காட்சி தருகிறது முருங்கை! ‘‘உண்மைதான்... விவசாயம் செய்து நஷ்டப்பட்டு, கடனில் சிக்கித் தவித்த என்னை இன்று லட்சாதிபதியாக்கியது முருங்கை மரம்தான்’’ என்கிறார் ஜெயங்கொண்டத்தை அடுத்த கோட்டியால் கிராமத்தில் இரண்டு ஏக்கருக்கு மேல் முருங்கை பயிரிட்டிருக்கும் சூரியநாராயணன். ‘‘ஐந்து வருடங்களுக்கு முன் நெல் பயிரிட்ட போது நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. என்ன பயிரிட்டால் லாபம் பெறலாம் என்று தேடிய போது, திருநெல்வேலி மாவட்டத்தின் வளையபட்டி பகுதி விவசாயிகள் முருங்கைக்காய் பயிரிட்டு, லாபம் சம்பாதிப்பதை அறிந்து, நேரில் போய்ப் பார்த்தேன். நாமும் முயற்சிக்கலாமே என்று முதலில் ஒரு ஏக்கரில் முருங்கைக்காய் பயிரிட்டேன். |

அதில் கிடைத்த வருமானத்தில், பழைய கடனை எல்லாம் ஒரே வருடத்தில் அடைத்து விட்டேன். அன்றுமுதல் முருங்கை விவசாயம்தான் என் முழுநேரத் தொழில்!’’ என்ற சூரியநாராயணன், முருங்கை பயிரிடுவது பற்றி தன்னுடைய அனுபவத்தில் இருந்து சொல்லத் தொடங்கினார். ‘‘தண்ணீர் அதிகம் தேங்கும் நிலங்களில் முருங்கை வளராது. 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினாலே போதுமானது. தண்ணீரும் மிச்சம், அதிக ஏக்கரில் விளைவிக்கவும் செய்யலாம். இப்போது பக்கத்து ஊர்களில் இருப்பவர்கள் எல்லாம் முருங்கை பயிரிட்டு வருமானத்துடன் வாழ்வதைப் பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது’’ என்றார். இதில் மரமுருங்கை, செடி முருங்கை என்று இரண்டு விதம் உண்டு. மரமுருங்கை 30 வருடங்கள் வரை காய்க்கக்கூடியது. செடி முருங்கை மூன்று வருடங்கள் வரைதான் காய்க்கும். ஆனால், சடசடவென விளைச்சல் தரும். செடி முருங்கை முதல் வருடம் காய்கள் காய்த்து ஓய்ந்ததும் தரையிலிருந்து அரை அடி உயரத்தில், தண்டுப் பகுதியில் வெட்டிவிட்டால், தானாகவே வளர்ந்து அடுத்த ஐந்து மாதங்களில் மீண்டும் காய்களைக் கொடுக்கும். ‘‘ஆனால், இப்படி வெட்டிவிட்ட பிறகு கிடைக்கும் காய்களில் ‘பிசின்’ அதிகமாகச் சுரப்பதால் காய்களின் தரம் குறைந்துவிடுகிறது. எனவே, ஒரு வருட முடிவில் மரத்தை அழித்துவிட்டு மீண்டும் புதிதாகப் பயிர் செய்து வருகிறோம்’’ என்றார் சூரியநாராயணன். விதைகள் மூலமாகவோ அல்லது 30 முதல் 40 நாட்கள் வரை நர்சரியில் வளர்த்து, அந்த நாற்றை நட்டோ முருங்கையைப் பயிரிடலாம். நர்சரியில் வளர்த்து, பிறகு நடும்போது, களை எடுக்கும் வேலை குறைவதோடு, அதிகக் காய்களும் கிடைக்கிறதாம். ஒரு ஏக்கரில் 7 அடி நீளம் 6 அடி அகலம் இடைவெளி விட்டு கன்றுகளை நடவேண்டும். ஒரு ஏக்கருக்கு 800 முதல் 900 கன்றுகள் வரை நடலாம். உரம், பூச்சி மருந்து மற்ற செலவுகள் என ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய்வரை செலவாகும். 5 மாதங்களுக்குப் பிறகு காய்க்கத் தொடங்கி, 4 மாதங்கள் தொடர்ந்து காய் கிடைக்கும். ஒரு ஏக்கரில் 16 டன் வரை காய்கள் கிடைக்கும். ஒரு கிலோவுக்கு சராசரி விலையாக 7 ரூபாய் வந்தால் செலவுகள் போக ஒரே வருடத்தில் ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் லாபம் பெறலாம். முருங்கைக்கு ஊடுபயிராக தர்பூசணி, தக்காளி, கடலை, முள்ளங்கி, பூசணி போன்றவற்றைப் பயிரிடலாம். ஜெயங்கொண்டத்தைச் சுற்றி கோட்டியால், சுத்தமல்லி, போளூர் போன்ற பகுதிகளில் மட்டும் சுமார் 1,000 ஏக்கருக்கு மேல் முருங்கை பயிராகிறது. டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடப்பட்டு மே, ஜூன், ஜூலை மாதங்களில் தினமும் 200 டன்களுக்கு மேல் இந்தியா முழுவதும் அனுப்பப்படுகிறது. முருங்கைக்கான விற்பனை வாய்ப்புகள் எப்படி? சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய அளவில் முருங்கையை விற்பனை செய்யும் பரமசிவனுடன் பேசினோம்.
|

‘‘எப்போதுமே டிமாண்ட் இருக்கிற காய்கறின்னா அது முருங்கைக் காய்தான்’’ என்று தொடங்கினார். ‘‘தமிழ்நாட்டில் முருங்கை சீசனான மார்ச் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை 2,700 டன், சீசனற்ற சமயங்களான செப்டம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை 540 டன் என்று முருங்கையை நாங்கள் சப்ளை செய்கிறோம். எங்களைப் போன்று இங்கே கோயம்பேட்டிலும், ஒட்டன்சத்திரம் போன்ற தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் எத்தனையோ பேர் சில்லறை வியாபாரமாக முருங்கை விற்பனை செய்கிறார்கள். மார்ச், ஏப்ரல் மாதங்களில் விலை கிலோவுக்கு 5 ரூபாய் அளவிலேயே இருந்தாலும், அதற்கு முன்னும் பின்னும், ஏற்ற இறக்கங்களுடன் கிலோவுக்கு 30 ரூபாய்க்கு மேல்கூட கிடைப்பது உண்டு. எத்தனை டன் உற்பத்தியானாலும் முருங்கைக்கு மார்க்கெட் இருக்கிறது’’ என்றார் பரமசிவன் நம்பிக்கையுடன். முருங்கை பயிரிட கடன் வசதியெல்லாம் இருக்கிறது. பாரத ஸ்டேட் வங்கியின் கிராமப்புற வளர்ச்சிப் பிரிவின் சென்னை பகுதி முதன்மை மேலாளர் இளங்கோவன், ‘‘முருங்கையின் உள்ளூர் விற்பனை வாய்ப்புகள், ஏற்றுமதி வாய்ப்புகள் போன்றவற்றைப் பற்றி நாங்கள் ஆய்வுகள் மேற்கொண்டோம். உண்மையிலேயே விவசாயிகளுக்கு லாபத்தைக் கொட்டும் பயிர்தான் என்பது புரிந்தது. உடனே, நபார்டு வங்கி மற்றும் தேசிய தோட்டக்கலை வாரியத்துடன் இணைந்து, ஒப்பந்த விவசாய அடிப்படையில் விவசாயிகளுக்கு உதவ முன்வரும் நிறுவனங்களுக்கு கடன் அளிக்க முடிவு செய்துள்ளோம். இதற்கான முழுத்திட்டமும் தயாராகிக் கொண்டிருக்கிறது. முருங்கையிலிருந்து எண்ணெய் எடுக்கவும், கேப்சூல்கள் தயாரிக்கவும், தூளாக மாற்றவும், ஏற்றுமதி செய்யவும் முன்வரும் நிறுவனங்களுக்கும் கடன் வழங்க இருக்கிறோம்’’ என்றார்.
|

முருங்கை பயிரிட வங்கிக் கடனுதவி மட்டுமன்றி, இந்த விவசாயிகளை ஊக்கப்படுத்த, மானியமும் கொடுக்கிறது அரசு. ‘‘எத்தனை ஏக்கரில் முருங்கை போட்டாலும் மானியம் தரத் தயாராகவே இருக்கிறோம்’’ என நம்பிக்கையுடன் பேசினார் மத்திய தோட்டக்கலை வாரியத்தின் உதவி இயக்குநர் பாலசுதாகரி. ‘‘25 லட்ச ரூபாய் வரைக்குமான முருங்கை பயிரிட 20% மானியம் கொடுக்கிறோம். திட்டத்தில் 30% பணத்தை வங்கிகளின் மூலம் கடனாகப் பெற்றிருக்கவேண்டும் என்பது முக்கியமான நிபந்தனை. அனைத்து வங்கிகளுடனும் சேர்ந்து இத்திட்டத்தைச் செயல்படுத்த இருக்கிறோம். விவசாயிகளும் வங்கிக்கடன் பெற்று, மானியத்துக்கு எங்களை தாராளமாக அணுகலாம்’’ என்றார் அவர். இவரது அலுவலகம் கிண்டியில் உள்ளது. முருங்கையின் விதவிதமான பயன் பாடுகளைப் பட்டியலிட்டார், கே.சி.பி சுகர் நிறுவனத்தின் விற்பனை மேலதிகாரியான நாச்சியப்பன். இவர் முருங்கையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டிருப்பவர். ‘‘வைட்டமின்களும், இரும்புச்சத்தும் நிறைந்தது முருங்கை. இலை, பூ, காய் என முருங்கையின் எல்லா பகுதிகளும் 100% பயன்பாடு கொண்டவை. இலைகளைத் தூளாக்கி பவுடராக்குவது, விதைகளிலிருந்து எண்ணெய் எடுப்பது என்று பல பொருட்களை ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்கிறார்கள். முருங்கை எண்ணெயில் கொழுப்புச் சத்து மிகக் குறைவாக இருப்பதால், சமைப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். இந்த எண்ணெய்க்கு தோலை மிருதுவாக வைத்திருக்கும் தன்மையுள்ளதால், மருந்து நிறுவனங்களும் பயன்படுத்துகின்றன. இதற்கு ஐரோப்பாவில் ‘பென் ( Ben ) ஆயில்’ என்று பெயர். இது ‘ஆலிவ் ஆயிலை’ விட சிறந்தது. விதையிலிருந்து எண்ணெய் எடுத்தபிறகு, மீதி இருக்கும் சக்கையை, நீரைச் சுத்தப்படுத்தும் காரணியாகப் பயன்படுத்துகிறார்கள். முருங்கை மரத்தை பேப்பர் தயாரிப்பதற்கான மூலப் பொருளாகவும் பயன்படுத்துகிறார்கள். சாப்பிடுவதற்காக பதப்படுத்தப்பட்ட முருங்கைப் பொருட்கள் டின்னில் அடைக்கப்பட்டு ஏற்றுமதியாகிறது. ஆப்ரிக்கா கண்டத்தின் சிலநாடுகளில் குழந்தைகளின் சத்துப் பற்றாக்குறையை நீக்க, உணவில் முருங்கை பவுடர், கேப்சூல் மற்றும் முருங்கை காய்களை அதிகம் சேர்த்துக் கொடுக்கின்றனர். இப்படி பல்வேறு பயன்பாடுகளும் தேவைகளும் இருப்பதால் முருங்கை பயிரிடும் விவசாயிகளுக்கு வளமான எதிர்காலம் இருக்கிறது’’ என்றார். முருங்கையில் இருக்கும் சத்துக்களில் முக்கியமானது வைட்டமின் ப... அதாவது, பணம்! வாழ்க்கைக்கு முக்கியமான அந்தச் சத்தைப் பெருக்கி, வளமாகுங்கள் விவசாயிகளே!
|

|

|

|