பாதுகாப்பு |

இன்ஷூரன்ஸ்
என் சேவகன்! |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


ந ம்மைச் சுற்றி தினசரி வாழ்க்கையில் ஏற்படும் நஷ்டத்தையும் மரணத்தையும் பார்த்தாலும், நமக்கும் ஒரு நாள் இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு... நாமும் ஒரு நாள் மரணத்தைச் சந்திப்போம் என்று யாரும் நினைப்பதில்லை. அதனாலேயே, இன்ஷூரன்ஸ் என்று சொல்லைக் கேட்டாலே, தமது மரணத்தை நேரில் பார்த்துவிட்டது போல் பலரும் நடுங்குகிறார்கள். காரணம், நாம் இன்ஷூரன்ஸ் என்பதையே மரணத்தோடு தொடர்புபடுத்தி பார்த்துத்தான் பழகியிருக்கிறோம். ஆனால், உண்மையில் அப்படியில்லை... விமானத்தில் போகும் யாருமே, கீழே விழப்போகிறோம் என்ற எண்ணத்தோடு பயணிப்பதில்லை. ஆனால், ஒருவேளை விழ நேர்ந்தால் உயிர்காக்கப் பயன்படுமே என்ற நினைப்பில்தான் பாராசூட்டை விமானத்தில் வைத்திருக்கிறார்கள். இன்ஷூரன்ஸ் என்பது பாராசூட் மாதிரி! இன்று நேற்றல்ல... சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே இன்ஷூரன்ஸ் என்பதற்கான ஆணிவேர் வளர்ந்துவிட்டது. சீன, பாபிலோனிய வர்த்தகர்கள் கப்பலில் செல்லும் தங்கள் சரக்குகளைப் பாதுகாக்க, இன்ஷூரன்ஸ் போன்ற உத்திகளைக் கையாளத் தொடங்கிவிட்டனர். சுமார் 10 கப்பல்கள் ஒருசேரக் கிளம்பி வேறொரு நாட்டுக்குப் பயணப்படுகிறது எனும்போது, ஏதாவது ஒருவரின் கப்பல் சரக்குகள் கெட்டுப் போனாலோ, பாதிப்புக்கு உள்ளானாலோ அந்தப் பெருத்த நஷ்டத்தை ஈடுகட்ட, அந்தக் குழுவில் பயணம் செய்த பிற கப்பல் சரக்கு உரிமையாளர்கள் ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு அந்த நஷ்டத்தை ஈடுகட்டும் வழக்கம் வைத்திருந்தார்கள். நம் அலுவலக ஊழியர் ஒருவரின் குடும்ப விழா என்றால், ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு ஒரு பரிசுப் பொருள் தருவோமே! அதுபோல ஒரு ஏற்பாடு இது. பிறகு, சரக்குகளை அனுப்பும் நான்கு வெவ்வேறு வகையான வணிகர்கள், தங்கள் கப்பலின் சரக்குகளை நான்கு பிரிவுகளாகப் பிரித்து, கப்பலுக்கு ஒரு பாகம் வீதம் அனுப்பும் முறையைக் கையாண்டார்கள். குழு பாதுகாப்புத் திட்டமாக இதைச் செயல்படுத்தினார்கள். ஏதாவது ஒரு கப்பல் இயற்கைச் சீற்றத்துக்கு ஆளானாலும் மீத 75% சரக்குகள் கைக்கு வந்துவிடுமே என்ற எண்ணம்தான் அது. இதன் அடுத்தகட்டமாக, கி.மு1750-ம் ஆண்டுவாக்கில் சரக்குகளைக் கடனுக்கு யாரிடமாவது வாங்கும் வியாபாரி, அவருக்கு வட்டியுடன் கூடுதலாக ஒரு தொகையும் கொடுக்கும் வழக்கம் இருந்தது. ‘சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பலுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால், அந்த சரக்கின் பணத்தை என்னால் கொடுக்க முடியாது. அந்த இழப்பீட்டை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கும்’ என்பதற்கான கட்டணம் தான் அந்தக் கூடுதல் தொகை! இன்றைக்கு இன்ஷூரன்ஸ் பாலிசித் தொகை என்று வசூலிக்கப்படுவதன் முன்னோடி இதுதானே! பொருட்களுக்கான பாதுகாப்பு என்ற அளவில் இருந்த இந்த இன்ஷூரன்ஸ் கி.பி 600\ம் ஆண்டில் வேறுவகையான ரூபம் பெற்றது. கிரேக்க மக்கள் தங்கள் சமூகத்தில் மரணம் அடையும் நபர்களின் இறுதிச் சடங்குகளுக்காகவும், இறந்தவரின் குடும்பத் துக்கு உதவுவதற்காகவும் பணம் சேர்த்தார்கள். 1680\ம் ஆண்டு, லண்டனில்தான் நாம் இப்போது கடைபிடித்து வரும் இன்ஷூரன்ஸ் முறை வழக்கத்துக்கு வந்தது. எட்வர்ட் லாயிட் என்பவரின் காபிக்கடைதான் இன்று மிகப்பெரிய ரீ\இன்ஷூரன்ஸ் சந்தையாக மாறி இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஒரு தீ விபத்தில் நிகழ்ந்த திருப்பம் அது! 1666\ல் நடந்த The Great Fire of London என்று வர்ணிக்கப்பட்ட மாபெரும் தீ விபத்து, லண்டன் வாசிகள் பலரையும் உலுக்கி எடுத்துவிட்டது. அந்தக் காலத்தில் எல்லாமே மரவீடுகள் என்பதால், ஒரு இடத்தில் பிடித்த b, மளமளவென பரவ... கிட்டத்தட்ட 13,000 வீடுகளும் வணிக நிலையங்களும் தீக்கிரையாகிவிட்டன. பெருத்த சேதம். லண்டன் நகரம் அந்த பெரும் நஷ்டத்தில் இருந்து வெளியே வர பல ஆண்டுகள் பிடித்தது. அந்தச் சமயத்தில்தான் இன்ஷூரன்ஸ் பற்றிய தேவை பெருமளவு எழுந்தது. ‘தங்கள் இழப்புக்கு உதவி செய்ய யாராவது இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும்!’ என பலரும் சிந்திக்கத் துவங்க, இன்ஷூரன்ஸ் திட்டங்கள் உருவாக ஆரம்பித்தன. 1680\களில் எட்வர்ட் லாயிடின் காபிக்கடைக்கு பல கடல் வணிகர்களும் சிப்பந்திகளும் வந்து போவது உண்டு. இதனால், ‘உங்கள் சரக்குக்கு நான் இன்ஷூர் தரட்டுமா..?’ என்று கேட்டு, இன்ஷூரன்ஸ் தருபவர்களும் வந்து போக ஆரம்பித்தனர். லாயிடின் கடைக்கு கடல் வணிகம் பற்றியும் அதன் கஷ்ட நஷ்டங்கள் பற்றியும் உட்கார்ந்த இடத்திலேயே தகவல் வந்தது. மேலும், எந்தக் கப்பல் எங்கு செல்கிறது, எது திரும்பியது, எது மூழ்கியது என்ற தகவல் பரிமாற்றம் நடக்கும் இடமாகவும் லாயிடின் கடை மாறியது. தன் கடையின் ஒருபகுதியை இன்ஷூரன்ஸ் ஜாயின்ட்டாக பயன்படுத்திக்கொள்ளவும் ஏற்பாடு செய்துதந்தார் லாயிட். அங்கே ஆரம்பித்து படிப்படியாக வளர்ந்து, ‘லாயிட்ஸ் ஆஃப் லண்டன்’ என்று இன்று உலகின் மிகப்பெரிய ரீ\இன்ஷூரன்ஸ் சந்தையாகச் செயல்படுகிறது.
|

அது என்ன ரீ\இன்ஷூரன்ஸ்? தாங்கள் கொடுத்த பாலிசிகள் மூலம் காப்பீடு செய்யப்படும் பொருட்களை இன்ஷூரன்ஸ் கம்பெனிகளும் ஒரு நிறுவனத்திடம் இன்ஷூர் செய்து கொள்கின்றன. அந்த நிறுவனம்தான் ரீ\இன்ஷூரன்ஸ் கம்பெனிகள்! இந்தியாவில் இயங்கும் ஒரே ரீ\இன்ஷூரன்ஸ் கம்பெனி, ‘ஜெனரல் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இண்டியா’தான். இந்தக் கதைகள் இருக்கட்டும். அதற்கு முன்னதாக இன்ஷூரன்ஸ் பற்றிய தெளிவான சிந்தனையை இங்கே உருவாக்க வேண்டியிருக்கிறது. ஒரு இயக்கம் போல செயல்பட்டு கற்றுத்தரவேண்டிய அவசியத்தில் இருக்கிறது இன்றைய இன்ஷூரன்ஸின் நிலை! எந்த வயதில் கற்றுத் தரலாம்? பள்ளிப் பாடத் திட்டத்திலேயே தனிநபர் பொருளாதாரம் பற்றி பாடங்கள் ஏற்படுத்துவது மிக நல்லது. இது வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைக் கல்வியாகும். படிப்பது, உழைப்பது, சம்பாதிப்பது, பணத்தைப் பாதுகாப்பது, சேமிப்பது, முதலீடு செய்வது ஆகியவற்றைப் பற்றி அந்த வயதிலேயே அறிந்துகொண்டால், சுயமாகச் சிந்திக்கும் திறனும் பொறுப்பு உணர்வும் வளரும். படிப்பை முடித்து சம்பாதிக்கத் தொடங்கும் 18, 20 வயதுதான் இன்ஷூரன்ஸ் செய்துகொள்ள சரி யான வயது. அதனால், அந்த வயதில் இன்ஷூரன்ஸ் பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த வயதில் யாரும் இன்ஷூரன்ஸ் பற்றியே நினைத்துப் பார்ப்பதில்லை. சாதாரண சேமிப்பைப் பற்றிக்கூட நினைத்துப் பார்க்காத வயது அது. ஆனால், இந்த வயதில் இன்ஷூரன்ஸ் செய்து கொள்வது மிக முக்கியம். அதுதான், அவர்களுக்கும் ஆதாயம். ஒரு தனிநபர், தன் பொருளாதார வளர்ச்சித் திட்டத்தைத் தொடங்கும், தான் பயணிக்கப்போகும் பாதையைத் தீர்மானிக்கும் காலம் அது. தன் குடும்பத்தின் உடனடி தேவைகள் என்னென்ன... அடுத்த 2, 5, 10, 20 வருடங்களுக்குப் பின் என்ன செய்ய விரும்புகிறார்கள்... அந்த குறிக்கோள்களை எட்டுவதற்கு என்ன சேமிப்பு அல்லது முதலீடு செய்யவேண்டும்... அவற்றை எப்போது, எப்படி செய்யவேண்டும் என்று முடிவு செய்து, அதன்படி செயலாற்றவேண்டும். அதில் இன்ஷூரன்ஸுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. இன்ஷூரன்ஸ்தான் தனிநபர் பொருளாதார வளர்ச்சிக்கு சரியான, திடமான அஸ்திவாரம். எந்த வயதில் எந்த விதமான பாலிசிகள் எடுப்பது லாபம்? அதுபற்றி...
|