Published:Updated:

ஜாமீன் இல்லாமல் கடன் வேண்டுமா?

ஜாமீன் இல்லாமல் கடன் வேண்டுமா?

ஜாமீன் இல்லாமல் கடன் வேண்டுமா?

ஜாமீன் இல்லாமல் கடன் வேண்டுமா?

Published:Updated:
கடன்
ஜாமீன் இல்லாமல் கடன் வேண்டுமா?
 


ஜாமீன் இல்லாமல் கடன் வேண்டுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜாமீன் இல்லாமல் கடன் வேண்டுமா?

வே லைவாய்ப்பு அலுவலகங்களில் கால்கடுக்கக் காத்திருக்கும் இளைஞர்கள், சுய தொழில் செய்து முன்னேறுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. ‘எங்கள் கையிலும் அசத்தலான திட்டங்கள் இருக்கின்றன. ஆனால், நம்பி கடன் தருபவர்கள் யார்..? எங்கு போனாலும் செக்யூரிட்டி, ஜாமீன் கேட்கிறார்களே?’ என்று தயங்கி நிற்கும் இளைஞர்கள் பக்கமும் நியாயம் இருக்கிறது.

இவர்களுக்கு உதவிசெய்யும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டம்தான் ‘பி.எம்.ஆர்.ஒய்’ எனப்படும் ‘பிரதம மந்திரி சுயவேலைவாய்ப்புத் திட்டம்’. சொந்தத் தொழில் செய்ய நினைக்கும் இளைஞர்களுக்கு ஜாமீன் எதுவும் கேட்காமல், சலுகைகளுடன் கூடிய கடன் இரண்டு லட்சம் ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது.

சென்னை நகரில் தொழில் வணிகத்துறையின் மண்டல இணை இயக்குநர் அலுவலகமும், தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் மாவட்ட தொழில் மையங்களும் ‘பி.எம்.ஆர்.ஒய்’ திட்டத் தைச் செயல்படுத்துகின்றன. இவற்றின் பரிந்துரை யின் பேரில், பொதுத்துறை வங்கிகள் கடன் வழங்குகின்றன. இத்திட்டத்தின் கீழ் கடன்பெற்று, சேலை வியாபாரம் செய்து வருகிறார் தேவிகா.

‘‘எங்க அரும்பாக்கம் ஏரியாவில் உள்ளவர் களுக்கு துணி தைத்துக் கொடுத்துவந்த நான், கூடுதலாக வருமானம் பெற என்ன வழி என்று யோசித்தபோது, சேலைவியாபாரம் செய்யலாம் என்று தோன்றியது. ‘அதற்கு நிறையப் பணம் வேண்டுமே..!’ என்று தயங்கி நின்றபோதுதான், இந்தக் கடன் திட்டம் பற்றிச் சொன்னார்கள். உடனே, முயற்சி செய்தேன். ரூபாய் 60 ஆயிரம் கடன் கிடைத்தது. அதை வைத்து தொழிலை ஆரம்பித்து, இப்போது மாதம் 3,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். வாங்கிய கடனுக்கு மாதம் 1,250 ரூபாய் வீதம் ஐந்து வருடத்துக்கு லோன் கட்டவேண்டும்’’ என்றார் தேவிகா.

ஜாமீன் இல்லாமல் கடன் வேண்டுமா?

இத்திட்டத்தின் கீழ் கடன் பெற, கொஞ்சம் விடா முயற்சி தேவை! ஒருவருக்கு சுய தொழில் தொடங்குவதில் எந்த அளவுக்கு ஆர்வம் இருக்கிறது, தொழிலில் நீடிப்பாரா என்பதை எல்லாம் ஆராய்ந்து தெரிந்து கொண்ட பின்தான், கடன் வழங்குகிறார்கள்.

சுய உதவிக் குழுக்களும் இந்தத் திட்டத்தில் கடன்பெறலாம். பெண்கள் கடன் வாங்கினால், மாநில அரசின் மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத் தின்கீழ் பயிற்சியும் கிடைக்கிறது.

விவசாயம் தவிர, அனைத்துத் தொழில்களுக்கும் நிதி உதவி கிடைக்கும். தொழில்களுக்கு இரண்டு லட்ச ரூபாயும், வியாபாரத்துக்கு அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாயும் கிடைக்கும். திட்டத்தின் மதிப்பில் 15% அல்லது அதிகபட்சம் 7,500 ரூபாய் மானியமும் கிடைக்கும். கடன் பெறுபவர் சுமார் 5 முதல் 16% வரை கைமுதல் போடவேண்டி இருக்கும். 5 பேர் வரை சேர்ந்து கூட்டுத்தொழில் செய்ய, அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் கடன் கிடைக்கும்.

சுயதொழில் செய்யத் திட்டமிட்டிருப்பவர்கள், முதலில் தொழில் வணிகத்துறையின் மண்டல இணை இயக்குநர் அலுவலகம் அல்லது மாவட்ட தொழில் மையத்தை நேரில் தொடர்புகொள்ளவேண்டும். அவர்கள் நேர்முகத் தேர்வுநடத்தி, இத்திட்டத்தில் கடன் பெற தகுதியானவர்தான் என்று உறுதி செய்வார்கள். அப்படி தேர்வு பெறுவோருக்கு தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சிறப்புத் தொழிற் பயிற்சியோடு உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.

சென்னை, கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டையில் உள்ள தொழில் வணிகத்துறையின் மண்டல இணை இயக்குநர் விவேகானந்தனிடம் பேசினோம். “வாங்கிய கடன் தொகையை முறையாகத் தொழிலுக்கு எப்படிப் பயன்படுத்துவது, இதில் வரும் மொத்த லாபத்தையும் இதிலேயே போட்டு தொழிலைப் பெருக்குவது எப்படி? என்பன போன்ற விஷயங்களும் பயிற்சி முகாமில் கற்றுத்தரப்படுகிறது. தொழிலுக்கான பிராஜெக்ட் ரிப்போர்ட்டைத் தயாரிக்கவும் உதவி செய்கிறோம். அண்மைக் காலமாக சுய தொழில் தொடங்கும் ஆர்வம் இளைஞர் கள் இடையே மிகவும் அதிகரித்திருக்கிறது’’ என்றார்.

இக்கடனுக்கு வங்கிகள் அவற்றின் அடிப்படை வட்டி விகிதத்திலேயே வட்டி வசூலிக்கிறது. அது, சாதாரணமாக 10.5 சதவிகிதமாக இருக்கிறது.

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி, இத்திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று, எலக்ட்ரானிக் பொருட்களின் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார்.

‘‘இக்கடனை ஆந்திரா பேங்க் கே.கே.நகர் கிளை மூலம் வாங்கியிருக்கிறேன். என் கடை இருக்கும் இடம், வீடு ஆகியவற்றை வங்கி அதிகாரிகள் நேரில்வந்து பார்வையிட்டு, முழு திருப்தி ஏற்பட்ட பின்தான் கடன் தந்தனர். பத்தாவது படித்துவிட்டு ரேடியோ, டி.வி மெக்கானிஸம் முடித்த என்னால் மாதம் ஏழாயிரத்துக்கு மேல் சம்பாதிக்க முடிகிறது’’ என்கிறார்.

உங்களிடம் சுய தொழில் ஆர்வம் நிறைய இருக்கிறதா? பிறகென்ன இன்னும் தயக்கம்... பி.எம்.ஆர்.ஒய்-ஐ பயன்படுத்தி வளம்பெற வேண்டியதுதானே?

அடிப்படை தகுதிகள்

சி றுதொழில் மூலம் நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்குவதை மனதில்கொண்டு இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இதில் சாதாரணமாக 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் பயன்பெறலாம். எஸ்.சி/எஸ்.டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், உடல் ஊனமுற்றோருக்கு 45 வயது வரை சலுகை தரப்படுகிறது. கல்வித் தகுதியாக குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். அரசு சார்ந்த அமைப்புகளில் குறைந்தது ஆறு மாத தொழில்நுட்ப கோர்ஸ் முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. தற்போதுள்ள பகுதியில் குறைந்தது மூன்று வருடமாவது வசித்து வரவேண்டும். புதிதாக திருமணமான பெண் என்றால் கணவரின் முகவரி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுபவரின் குடும்ப ஆண்டு வருமானம் 40 ஆயிரத்துக்குள் இருக்கவேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism