வேலை |

தமிழகத்தைக்
கலக்குது கே.பி.ஓ! |
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘பி .ஏ படிச்சவன் பெஞ்சு துடைக்கணும், எம்.ஏ படிச்சவன் மாடு மேய்க்கணும்’\ இது தொழிற்கல்வி படிக்காத மாணவர்களைத் திட்டுவதற்காகச் சொல்லப்படும் பழமொழி. இந்த இரண்டிலுமே குறைந்த வாய்ப்புகளே இருந்ததால் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு என்பது குறைவாகவே இருந்தது. இன்று அந்த நிலையை மாற்றி எல்லோருக்கும் வேலை வாய்ப்புக் கொடுக்கும் அளவுக்கு பிரமாண்டமாக வளர்ந்து நிற்கிறது பி.பீ.ஓ துறை! ஒரு நிறுவனம் தன்னுடைய அலுவலகப் பணிகளைச் செய்வதற்கு வெளியில் சில நிறுவனங்களை ஏற்பாடு செய்துகொள்வதற்குப் பெயர்தான் அவுட்சோர்ஸிங் எனப்படும் பி.பீ.ஓ வேலை. பெரும்பாலும் வங்கிகள் தங்கள் வேலைகளுக்கு இதுபோன்ற அவுட்சோர்ஸிங் நிறுவனங்களை நாடுவது அதிகரித்திருக்கிறது. குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் பணிகளைச் செய்துதர, அதிக அளவில் இந்தியர்களைப் பயன்படுத்தி வருகிறது. ‘‘ஒரு வங்கியின் கணக்கு, வழக்குகளை கம்ப்யூட்டரில் பதிவு செய்வதற்கும் வங்கிக் கணக்குகள் தொடர்பாக வாடிக்கையாளர்களின் சந்தேகங்களைக் களைவதற்கும் அவுட்சோர்ஸிங் முறை பயன்படுத்தப்படுகிறது. காரணம், இதுபோன்ற வேலைகளுக்கு வெளிநாடுகளில் அதிக சம்பளம் கொடுக்கவேண்டும் என்பதுதான். ஒப்பீட்டு அளவில் இந்தியாவில் இந்தச் செலவு குறைவு. அதேசமயம் தரமான, திறமையான ஆட்கள் கிடைப்பதால் பல நிறுவனங்களும் தங்கள் அவுட் சோர்ஸிங் நிறுவனங்களை இந்தியாவில் அமைக்கப் போட்டி போடுகின்றன’’ என்றார் இந்தத் துறையில் பணியாற்றி வரும் ஒருவர். |

பொதுவாக அவுட்சோர்ஸிங் பற்றி சென்னை, காக்னிஸென்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக இருக்கும் ராம்குமார் விரிவாகப் பேசினார். ‘‘இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அள்ளித்தருவதாக இருக்கிறது இந்த அவுட்சோர்ஸிங் துறை! இதில் மூன்று விதங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. கால்சென்டர்கள் எனப்படும் வேலை வாய்ப்புதான் இந்தியாவில் 50% இருக்கிறது. இதில் பி.ஏ, பி.காம், பி.எஸ்ஸி படித்த இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. தங்கள் தயாரிப்புகள், திட்டங்கள் பற்றி விளக்குவதற்காக பல நிறுவனங்கள் டிகிரி படித்தவர்களைத்தான் வேலைக்கு எடுக்கிறது. இன்ஷூரன்ஸ், வங்கிகள் போன்ற துறைகளில் இந்த வேலைக்கு நிறைய இளைஞர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கிறது. நல்ல கம்யூனிகேஷன் திறமை இருந்தால் போதும். சூப்பரான வேலைவாய்ப்பைப் பெறலாம்’’ என்று சொன்ன ராம்குமார் அவுட்சோர்ஸிங்கில் இருக்கும் அடுத்த வாய்ப்பைப் பற்றிச் சொன்னார். ‘‘இது கொஞ்சம் டெக்னிக்கலான விஷயம். எல்லா நிறுவனங்களிலுமே நிதிசார்ந்த வேலைகள் இருக்கும். சம்பளம், பி.எஃப், கிராஜுவிட்டி கணக்கிடுவது என்பது ஒரு நிறுவனத்தில் மிகப்பெரிய வேலை. அரசு ஊழியர்கள் சார்ந்த நிதி தொடர்பான கணக்கீடுகளுக்கு ஏ.ஜி’ஸ் அலுவலகம் இருப்பது போல, ஒரு பெரிய டீமே இதற்காக வேலைசெய்ய வேண்டியிருக்கும். இந்த வேலைகளையும் அவுட்சோர்ஸிங் நபர்கள் செய்கிறார்கள். இந்த வேலைகளை எடுத்துச்செய்யும் அவுட் சோர்ஸிங் நிறுவனங்கள் கணக்கிடும் திறமைகொண்ட, அதற்கான படிப்புகளை முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. இந்தியாவில் சுமார் 25% அவுட்சோர்ஸிங் வேலைவாய்ப்புகளைத் தருவது இந்தத்துறைதான்’’ என்றவர், இப்போது மிக வேகமாக வளர்ந்து வரும் கே.பீ.ஓ பற்றிச் சொல்லத் தொடங்கினார். ‘‘ கே.பீ.ஓ என்பது நாலெட்ஜ் பிராசஸ் அவுட்சோர்ஸிங் ( Knowledge Process Outsourcing )இது கொஞ்சம் ஆராய்ச்சி தொடர்பான வேலை. மருத்துவ நிறுவனம் ஒன்று புதிதாக ஒரு மருந்து கண்டுபிடிப்பில் இறங்கியிருக்கும். அந்த மருந்தை பல்வேறு கட்டங்களாகச் சோதனைசெய்து பார்த்திருப்பார்கள். அந்தச் சோதனையின் முடிவுகளை வைத்து, புதிய மருந்தைப் பற்றி குறிப்புகளைத் தயார் செய்யவேண்டும். அந்த வேலையை அவுட் சோர்ஸிங் முறையில் செய்வார்கள். அப்போது மருத்துவத் துறையில் நல்ல திறமை பெற்றவர்களுக்கு இந்த வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இதேபோல, சட்டம், கம்பெனி நடவடிக்கைகள், பங்குச் சந்தை ஆராய்ச்சிகள் போன்றவற்றுக்கு ஆட்களைத் தேர்வுசெய்து ஆராய்ச்சிக்குப் பயன்படுத்துகிறார்கள். எங்கள் காக்னிஸென்ட் நிறுவனம்கூட சமீபத்தில் பி.எல், பி.பி.எல், படித்தவர்களைச் சட்டம் தொடர்பான பணிகளுக்கும், எம்.பி.பி.எஸ், எம்.டி, பி.டி.எஸ் படித்தவர்களை மருத்துவம் தொடர்பான பணிகளுக்கும் விண்ணப்பிக்கச் சொல்லி விளம்பரம் செய்திருக்கிறது. அதேபோல, பப்ளிகேஷன் தொடர்பான வேலைகளுக்கும் இப்போது நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தத் துறைதான் இப்போது வேகமாக வளர்ந்துவருகிறது’’ என்றார் ராம்குமார். காக்னிஸென்ட், இன்டெல்நெட், நிபுணா, 24X7 , சதர்லேண்ட், ஆபீஸ் டைகர் போன்ற பி.பீ.ஓ சேவையில் இருக்கிற பல நிறுவனங்கள் கே.பீ.ஓ\விலும் கவனம் செலுத்திவருகின்றன. இப்போது சென்னையில் இருந்து செயல்படும் இந்த நிறுவனங்கள், தேவைகள் அதிகரிப்பதை அடுத்து, தமிழ்நாட்டின் பிற நகரங்களிலும் கிளைகளை அமைக்கும் திட்டத்தில் இருக்கின்றன.
|

கோவையில் உள்ள ‘கே.ஜி இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ்’ என்ற நிறுவனம் ஜப்பானில் உள்ள ஒரு ஆங்கிலப் பாடம் எடுக்கும் நிறுவனம் ஒன்றின் விடைத்தாள் திருத்தும் பணியை இங்கிருந்தபடியே செய்துகொடுக்கிறது. கே.ஜி நிறுவனத்தைச் சேர்ந்த ஜெயமுரளியிடம் பேசியபோது, ‘‘ஜப்பான் நாட்டில் இப்போது ஆங்கிலம் பற்றிய கவனம் அதிகமாகிவிட்டது. அதனால், அங்கு ஆங்கிலப் பயிற்சிக்கு வரும் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணியை எங்களுக்குத் தந்திருக்கிறது அந்த நிறுவனம். இதுவும் ஒருவகையான கே.பீ.ஓ வேலைதான். ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள் எங்களுக்கு வந்து சேரும். ஒருவாரத்துக்குள் அதைத் திருத்தி அனுப்ப வேண்டும். திருத்துவது என்றால் வெறுமே மார்க் போடுவது இல்லை. தவறாக இருந்தால், அதை எப்படி எழுதி இருந்தால் சரியாக இருக்கும் என்ற திருத்தத்தையும் எழுதி
அனுப்பவேண்டும். ஜப்பானியர்களின் கல்வி முறையே அப்படித்தான். திருத்தத்தையும் சேர்த்துச் சொல்லும்போதுதான் அடுத்தமுறை, அந்தத் தவறு நிகழாமல் இருக்கும் என்பது அவர்களுடைய கணிப்பு. அதனால், நல்ல மொழிப்புலமை உள்ள கோவை வாசிகளைக் கொண்டு இந்தப் பணியைச் செய்து வருகிறோம். நம் இளைஞர்களிடம் நல்ல பேச்சாற்றல் இருக்கிறது. ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் திறமையோடு இருக்கிறார்கள். ஆனால், எழுதும்போதுதான் இலக்கணச் சிக்கல் வருகிறது. இப்போது எங்களிடம் 50 பேர் முழுநேரமாகவும், பலர் பகுதிநேரமாகவும் வேலை செய்கிறார்கள். இவர்களைத் தேர்வு செய்வதற்கு சுமார் ஐயாயிரம் பேரை இன்டர்வியூ செய்ய வேண்டியிருந்தது. இந்தப் பணிக்கு நல்ல தகுதியான ஆட்கள் தேவைப்படுகிறார்கள். ஆட்களைத் தேடிக்கொண்டே இருக்கிறோம்’’ என்றார் ஜெயமுரளி. இப்போது அலுவலகத்தில் வந்து வேலை செய்யும் சூழ்நிலைதான் எல்லா கே.பீ.ஓ-விலும் இருக்கிறது. இது ஆன்லைன் வேலை இல்லை என்பதால், கூடிய சீக்கிரமே வீட்டில் இருந்தபடியே ஓய்வுநேரத்தில் கே.பீ.ஓ வேலை செய்யும் நிலை வரலாம். அதிர்ஷ்டம் ஒருமுறைதான் கதவைத்தட்டும் என்பார்கள். நல்ல வாய்ப்புகளும் அப்படித்தான்! வாய்ப்புகள் வரும்போது முழுமையான தகுதிகளோடு அதைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டியது முக்கியம்... தயாராக இருங்கள்!
|