Published:Updated:

‘‘மெரீனாவில் குல்ஃபி விக்கப் போறேன்!’’

‘‘மெரீனாவில் குல்ஃபி விக்கப் போறேன்!’’

‘‘மெரீனாவில் குல்ஃபி விக்கப் போறேன்!’’

‘‘மெரீனாவில் குல்ஃபி விக்கப் போறேன்!’’

Published:Updated:
தொழில்
‘‘மெரீனாவில் குல்ஃபி விக்கப் போறேன்!’’
 

‘மெரீனாவில் குல்ஃபி விக்கப் போறேன்!’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘மெரீனாவில் குல்ஃபி விக்கப் போறேன்!’’

‘‘ஒரு குல்ஃபி ஐஸ் ஒன்றரை ரூபாய்... அதை மூன்று ரூபாய்க்கு விற்கலாம். அதேபோல, இரண்டரை ரூபாய் ஐஸை ஐந்து ரூபாய்க்கு விற்கலாம். நல்ல லாபம் கிடைக்கும்... என்ன சொல்றீங்க..?’’ என்று கரகரவென்று போனில் பேசினார் சதீஷ்குமார் என்ற சென்னை வாசகர்.

‘‘மெரீனாவில் குல்ஃபி விக்கப் போறேன்!’’

‘‘நல்ல தொழில்தான்... இதை எதற்கு எங்களிடம் சொல்கிறீர்கள்?’’ என்றதும், ‘‘ப்ராஜெக்ட் ஓகே என்றால் ஆயிரம் ரூபாயைக் கொடுப்பீர்களே...’’ என்றார். ‘‘அட... இந்த அணுகுமுறையே அசத்தலாக இருக்கே’’ என்றபடி சதீஷ்குமாரை அழைத்து, ஆயிரம் ரூபாயைக் கொடுத்தோம். சென்னை பல்கலைக்கழக விடுதியில் வரவேற்பாளராக இருக்கும் சதீஷ்குமார், கிடுகிடுவென செயலில் இறங்கினார்.

ராயப்பேட்டை ஏரியாவில் உள்ள குல்ஃபி ஐஸ் மொத்த விற்பனைக் கடைக்குச் சென்று, ‘‘அண்ணே... நீங்க மனசு வெச்சா நான் பொழச்சுக்கு வேன். குல்ஃபி ஐஸ் விக்கலாம்னு திட்டம். அதுக்கு சரக்கு மட்டுமல்ல... சைக்கிள், லைட் எல்லாம் கொடுத்து உதவுங்க...’’ என்று குரலில் கொஞ்சம் பணிவைக் கூட்டிக்கொண்டு கேட்டார் சதீஷ்குமார்.

‘‘தொழிலுக்குப் புதுசா... இந்த சைக்கிளை மெறிக்கக் கத்துக்கவே, உனக்கு ஒருவாரம் டிரெயினிங் தேவைப் படுமே!. ஒயுங்கா வியாபாரத்தைப் பண்ணுவியா...’’ என்று சந்தேகப் பார்வை பார்த்த கடைக்காரர், கடைசியில் சைக்கிள், சார்ஜர் பேட்டரி, ஐஸை போட்டுவைக்கும் பானை போன்றவற்றுக்கு 200 ரூபாய் வாடகை தர சம்மதித்தார் சதீஷ். ஆயிரம் ரூபாயில் அந்த அட்வான்ஸ் போக, மீதத்துக்கு ஐஸ்கள் வாங்கத் திட்டமிட்டார்.

அடுத்த கட்டமாக ஐஸ் விற்பனைக்கு தேவைப்படும் மூங்கில் குச்சி, தேக்கு இலை, ஐஸை உருகாமல் வைக்க உதவும் ஐஸ்கட்டிகள், உப்பு போன்றவற்றை 100 ரூபாய் முதலீட்டில் வாங்கினார். அடுத்து ஐஸ்க்ரீமுக் கான பேரம் தொடங்கியது.

1.50 விலையில் 200 மற்றும் 2.50 விலையில் 160 என்ற கணக்கில் 700 ரூபாய்க்கு பர்ச்சேஸை முடித்த சதீஷ்குமார், ஐஸ் கட்டிகளை உடைத்து பானையில் போட்டு, குல்ஃபி ஐஸ்களை அடுக்கினார். அவை கரையாமல் இருக்க உப்பையும் போட்டார். மாலை மயங்கும் நேரத்தில் தொடங்கியது வியாபாரம்.

‘‘இந்த ஐஸுக்கு சாப்பாட்டை ஜீரணிக்க வைக்கும் தன்மை இருக்கறதாச் சொல்றாங்க. ஆனால், குல்ஃபி ஐஸ்னாலே ஏதோ சிட்டுக்குருவி லேகியம் போல, வயக்ரா போல வேற மாதிரி சமா சாரம்னு பரவிப்போச்சு. என்ன பலன் தருதுங்கறது நமக்கு எதுக்கு? நல்ல லாபம் தரும் வியாபாரமா இருக்கு. அதைக் கவனிக்கலாம்’’ என்றபடி, மெரீனா கடற்கரையை நோக்கி சைக்கிளை விரட்டினார்.

‘‘மெரீனாவில் குல்ஃபி விக்கப் போறேன்!’’

காந்தி சிலைக்கு வந்தவுடன், சைக்கிளை விட்டு இறங்கி தேசப்பற்று மிளிர ஒரு வணக்கத்தைப் போட்ட சதீஷ்குமார், மெதுவாக கடற்கரையின் உள்சாலையில் சைக்கிளை நகர்த்தினார்.

முதல் கஸ்டமரே கொஞ்சம் ‘கஷ்ட’மராக வந்து சேர்ந்தார். ஆசாமி நெல்லைச் சீமைக்காரர் போலிருக்கிறது. எடுத்த எடுப்பிலேயே, ‘‘ஏன் தம்பி, இது பால் ஐஸா... சேமியா ஐஸா?’’ என்று லோக்கலாக டீலிங்கை ஆரம்பித்தார்.

‘‘இல்லை அண்ணாச்சி... இது குல்ஃபி ஐஸ்... டைனோசர் பிரியாணியே சாப்பிட்டிருந்தாலும் டைஜஸ்ட் பண்ணி காலையிலே காலி வயிறாக்கிடும். அஞ்சே ரூபாய் தான். டேஸ்ட் பண்றீங்களா?’’ என்று பானையை மூடியிருந்த சிவப்புத் துணியை விலக்கி, உள்ளே துழாவி ஒரு ஐஸை எடுத்தார்.

‘‘அட... எனக்குத் தொண்டையில் ஆபரேஷன் பண்ணியிருக்குப்பா... ஐஸெல்லாம் வேண்டாம், சும்மா ஜிலுஜிலுனு லைட் போட்டுக்கிட்டு வர்றியே, அதான் விசாரிச்சேன்’’ என்று ஜகா வாங்கினார்.

‘‘உங்களுக்குதானே தொண்டை சரியில்லை. குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுங்க’’ என்றபடி, அருகே நின்றிருந்த குழந்தைகளின் கைகளில் ஆளுக்கொன்றாகத் திணித்துவிட்டார் சதீஷ்குமார். ‘‘என்னப்பா இப்படி பண்ணிட்டே... சரி, இந்தா எனக்கும் ஒரு ஐஸ் குடு, டேஸ்ட் பண்ணிப் பார்த்துடலாம்’’ என்றபடி இன்னும் இரண்டை வாங்கிக்கொண்டு இருபது ரூபாயைக் கையில் கொடுத்தார். அதே வேகத்தில் மனைவியைத் தேடிப் போனார்.

சதீஷ்குமாரின் உற்சாகம் வண்டியில் கட்டப்பட் டிருந்த மணியின் ஓசையில் தெரிந்தது. ‘டிகிங்... டிகிங்...’ என்று மணியை அடித்துக்கொண்டே, சைக்கிளை ஓட்டிய சதீஷ் குமாரை சடன் பிரேக் போட வைத்தார் ஒரு கம்பெனி ஐஸ்க்ரீம் வியாபாரி.

‘‘என்னாப்பா... புது பார்ட்டியா..? நீ பாட்டுக்கு பீச்சுக்குள்ளே புகுந்து பிஸினஸில் இறங்கிட்டே... நாங்கல்லாம் என்ன பண்றது?’’ என்று எடுத்த எடுப்பிலேயே டாப்கியரில் எகிற, சைக்கிளை கொஞ்சம் ரிவர்ஸ் எடுத்தார் சதீஷ்குமார். ‘‘அண்ணே... கோவிச்சுக்காதீங்க... நான் உங்களுக்குப் போட்டி கிடையாது. நீங்க எல்லாம் இருபது ரூபாய், முப்பது ரூபாய் ரேஞ்சு! நான் அஞ்சு ரூபா பார்ட்டி. உங்க ஆசீர்வாதத்துடன் நானும் ஓர் ஓரமா பொழைச்சுக்கறேன்’’ என்று முழு சரணாகதி அடைந்து வியாபாரத்தில் கண்ணாக நின்றார் சதீஷ்குமார்.

கைமேல் பலன் கிடைத்தது. ‘‘நீ நம்மாளு தம்பி... இப்படி ஓரமா வண்டியைப் போடு. இது நம்ம பேட்டை. தாராளமா வித்துக்கோ!’’ என்றார்.

சொன்னதோடு, சில்லறையாக வந்த பல கஸ்டமர்களை சதீஷ்குமார் பக்கம் திருப்பி விட, கிடுகிடு விற்பனை நடந்து, குல்ஃபியில் கால்வாசி அங்கேயே காலி! ‘‘ரொம்ப தேங்க்ஸ்ணே...’’ என்றபடி அடுத்த லொகேஷனுக்குத் தாவினார் சதீஷ். வண்டியை அண்ணா சதுக்கம் பக்கமாகக் கொண்டு சென்றார். தேர்தல் பிரசார களைப்பு முகத்தில் தெரிய, பல கட்சித் தொண்டர்களும் அந்த ஏரியாவில் உலவிக் கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட கட்சிக்கு ஏற்ற மாதிரி... வார்த்தைகளைப் போட்டு, பம்பரமாகச் சுற்றி பரபரப்பாக வியாபாரம் பார்த்தார் சதீஷ்குமார்.

அந்த ஏரியாவில் கொஞ்சம் கூட்டம் குறைய, அடுத்து அயோத்தி குப்பத்துக்கு ரூட்டை மாற்றினார். ‘‘ராத்திரி சாப்பாட்டை முடித்துவிட்டு குல்ஃபிக்காகக் காத்திருக்கும் கூட்டம் அங்கே இருக்கும்’’ என்று சதீஷ் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, குப்பத்தில் எதிர்பட்ட ஒரு அம்மா, ‘‘என்ன விலை?’’ என்று கேட்க, சதீஷ்குமார், ‘‘மூன்று ரூபாய், ஐந்து ரூபாயில் இருக்கிறது’’ என்று சொல்ல, ‘‘சரி, அந்த ஐஞ்சு ரூபாய் ஐஸை மூணு ரூபாய்க்குக் கொடு’’ என தடாலடியாக பேரத்தில் இறங்கினார்.

‘‘மெரீனாவில் குல்ஃபி விக்கப் போறேன்!’’

‘‘அக்கா... கத்திரிக்கா வியாபாரம் கணக்கா பேரம் பேசுறியே... நான் மிதிக்கிற சைக்கிளுக்கு காத்தடிக்கிற காசுதான், நான் சம்பாதிக்கறது. ரேட்டு கரெக்ட்டா இருக்கும்க்கா! எத்தினி வேணும் சொல்லு...’’ என்று உரிமையோடும் கறார் குரலிலும் சொன்னார் சதீஷ்குமார்.

‘‘ஏம்பா... பசங்க ஆசையா திங்கிற ஐஸ் இது! கையிலே காசு கம்மியா இருக்குதே!னு பார்த்தேன். இப்படி சலிச்சுக்கிறியே... இந்தா, காசு...’’ என்றபடி காசை எடுத்து நீட்டினார்.

அவரோடு வந்திருந்த குழந்தைகள் எண்ணிக்கை ஐந்து... ஆனால், கொடுத்த பணமோ நான்கு ஐஸுக்குத்தான் தேறும். ஐந்தாவதாக ஒரு ஐஸை இலவசமாகவே கொடுத்து, அந்த அம்மாவிடம் வாழ்த்துகளை வாங்கிக்கொண்டு குப்பத்தின் மையத்தை அடைந்தார்.

வண்டியின் மணியோசை கேட்டதும் சிறுசுகள் வண்டியை நோக்கி ஓடிவந்தார்கள். ஒரு சிறுவன் ஐந்து ரூபாயைக் கொடுத்துவிட்டு, ‘‘பத்து ஐஸ்..!’’ என்று கேட்க, ஜெர்க்கானார் சதீஷ். அந்த சிறுவனிடம் இரண்டு மூன்று ரூபாய் ஐஸை கொடுத்துவிட்டு, நீ கொடுத்த காசுக்கு இவ்வளவு தான்’’ என்று சொல்லி அங்கிருந்து வண்டியை நகர்த்திச் சென்றார்.

அயோத்தி குப்பத்தில் ஒரு ரவுண்ட் அடித்து முடித்துவிட்டு, பானையில் கை விட்டு பார்த்தார். ‘‘இன்னும் கொஞ்சம்தான் மீதியிருக்கிறது’’ என்றபடி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலை நோக்கி வண்டியைச் செலுத்தினார்.

வழியில் தென்பட்ட மேன்ஷன்களில் சினிமா செய்திகள் அரைபட்டுக் கொண்டிருந்தன.

சதீஷ்குமாரை நிறுத்திய இளைஞர் கூட்டம் ஒன்று, ‘‘ஏம்பா... உனக்கு யாரைப் பிடிக்கும், ரஜினியா, கமலா... தெளிவா சொல்லு! பானையோடு ஐஸை வாங்கிக்கறோம்’’ என்று கலாய்த்தார்கள்.

‘‘அண்ணே... எனக்குப் பிடிச்சது வடிவேலும் விவேக்கும்தான். உங்களில் இவங்க ரசிகர்கள் இருந்தால் பத்து பர்சன்ட் டிஸ்கவுன்டில் ஐஸ் தர்றேன்...’’ என்று சிரித்தார் சதீஷ்குமார். அவருடைய பேச்சை ரசித்த இளைஞர்கள், ஆளுக்கொரு ஐஸை வாங்கிக்கொண்டு, சினிமாவைத் தொடர்ந்தார்கள்.

இரவு பத்தரை மணி ஆகிவிட்டது. செகண்ட் ஷோ முடிந்து வரும்கூட்டத்தில் காலியாகிவிடும் என்ற நம்பிக்கை பிறக்க, அண்ணாசாலையில் உள்ள ஒரு பிரியாணி கடை ஓரமாக வண்டியை நிறுத்தினார். அருகில் இருந்த டீக்கடையில் ஒரு டீயை சாப்பிட்ட சதீஷ்குமார், அதுவரையில் ஒருவர்கூட ஐஸ் கேட்டு வராததைக் கவனித்து, இடத்தைக் காலி செய்தார்.

அங்கிருந்து அண்ணாசாலையில் உள்ள ஒரு தியேட்டர் முன் கொஞ்சம் நேரம் வண்டியை நிறுத்திப் பார்த்தார். ஒரு காதல் ஜோடி கிசுகிசுப்பாக பேசிக்கொண்டிருந்தது. அவர்களை அணுகி, ‘‘குல்ஃபி..?’’ என்றார். காதலர், காதலியைப் பார்த்தார். தலையசைப்பு பதிலாக வர... இரண்டு குல்ஃபிகளை வெளியே எடுத்தார் சதீஷ். ‘‘ரெண்டு இல்லே... ஒண்ணு! நான் இந்த ஐஸை சாப்பிட்டுட்டு வந்து கேட்பேன். அப்புறம் அடுத்ததைக் கொடுக்கணும். ஓகே!’’ என்று கேட்டு, இருபது ரூபாய் நோட்டைக் கையில் கொடுத்தார் அந்தக் காதலர்.

உண்மையிலேயே குல்ஃபிக்கு வேறு பயனும் இருக்குமோ என்று சந்தேகம் ஒருபக்கம், காசை வாங்கி கமிட் ஆகிவிட்டதால், அங்கேயே மேலும் சிறிது நேரம் வியாபாரம் செய்யவேண்டிய கட்டாயம் மறுபக்கம். ஆனால், ஆர்வமாக வந்து பலரும் வாங்கிய பிஸியான ஏரியாவாகத்தான் இருந்தது அந்த இடம்.

அப்படி இப்படி என்று பானை ஐஸ் குறைந்து க்ளைமாக் ஸுக்கு வர... சதீஷ்குமார் ஐஸ் மொத்த வியாபாரக் கடையின் அருகே வந்து விட்டார்.

கடைசியாக இருந்த இரண்டு ஐஸ்களில் ஒன்றை நமக்குக் கொடுத் துவிட்டு இன்னொன்றை தானும் சுவைத்தபடியே கணக்குப் பார்க்க ஆரம்பித்தார்.

எண்ணிப் பார்த்த போது, ஆயிரத்து முன்னூறு ரூபாய் இருந்தது. ‘‘700 ரூபாய்க்கு ஐஸ் வாங்கி அறுநூறு ரூபாய் லாபம் கிடைத்திருக்கிறதே...’’ என்று உற்சாகமாக விசிலடித்த சதீஷ்குமார், ‘‘சார்... அடுத்த வாரம் பீச் பக்கம் வந்தால் நம்மகிட்டேதான் குல்ஃபி வாங்கணும்’’ என்றபடி, ஆயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டு, முந்நூறு ரூபாயை சட்டைப் பையில் வைத்துக்கொண்டு சைக்கிளை ஒப்படைக்கக் கிளம்பினார்.

குல்ஃபியின் சுவை கூடுதலாகத் தெரிந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism