Published:Updated:

இண்டஸ்ட்ரி - கம்பீர கப்பல் துறை!

இண்டஸ்ட்ரி - கம்பீர கப்பல் துறை!

இண்டஸ்ட்ரி - கம்பீர கப்பல் துறை!

இண்டஸ்ட்ரி - கம்பீர கப்பல் துறை!

Published:Updated:
பங்குகள்
இண்டஸ்ட்ரி - கம்பீர கப்பல் துறை!
 

கம்பீர கப்பல் துறை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இண்டஸ்ட்ரி - கம்பீர கப்பல் துறை!

கப்பல் பங்குகளை வைத்திருப்பவர்கள் கன்னத்தில் கைவைக்கத் தேவையில்லாத அளவுக்கு, ஏற்றுமதியில் வளமான லாபத்தோடு கம்பீரமாக ஓடிக்கொண்டிருக்கிறது கப்பல் துறை!

விருத்தாசலம் தொகுதியின் புதிய எம்.எல்.ஏ\வான விஜயகாந்த் பாணியில் சொல்வதானால், ‘இந்தியாவில் 5,000 கிலோமீட்டர் நீள கடற்கரை இருக்கிறது... இதில் சிறியதும் பெரியதுமாக சுமார் 150 துறைமுகங்கள் உள்ளன... இவற்றில் முக்கியமான 12 பெரிய துறைமுகங்கள் ஏற்றுமதியில் பெரும்பங்கு வகிக்கின்றன... மற்ற சிறு துறைமுகங்கள் பல, ஏற்றுமதிப் பொருட்களை முக்கிய துறைமுகங்களுக்குக் கொண்டு சேர்க்கும் சப்ளை முனைகளாக உள்ளன. இது ஒருபக்கமிருக்க... ஏற்கெனவே இருப்பதை வலுவாக்கவும், புதிதாக ஏழு துறைமுகங்களை அமைக்கவும்கூட திட்டங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. சேது சமுத்திரம் திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது’ என்று புள்ளிவிவரங்களை அடுக்கலாம்.

இவை எல்லாமே, கப்பல் துறை வளமான பாதையில் செல்கிறது என்பதைச் சொல்வதற்கானவை என்று எடுத்துக்கொள்ளலாம்.

இந்திய கப்பல் (ஷிப்பிங்) நிறுவனங்களின் வருமானம், ஏற்றுமதி மட்டுமல்லாமல் இறக்குமதியும் சார்ந்த விஷயம். அதோடு, மற்ற நாடுகளின் ஏற்றுமதி, இறக்குமதியிலும் இந்திய நிறுவனங்களின் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டு பெரிய வருமானம் பெற்றுத்தருகின்றன.

இண்டஸ்ட்ரி - கம்பீர கப்பல் துறை!

கப்பல்களை யானையோடு ஒப்பிடுவார்கள். வேலை செய்யாமல் சும்மா நின்றுகொண்டிருக்கும் யானைகளைக் கட்டி தீனி போடுவது, பெருத்த நஷ்டத்தில் தள்ளிவிடும். அதுபோல, பொருட்களை ஏற்றிச்செல்லும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் சும்மாயிருக்கும் கப்பல்களின் லாப விகிதம் குறைய வாய்ப்பு உள்ளது. அந்த நேரத்தைக் குறைத்து, எப்போதுமே பிஸியாக கடலில் மிதக்கும் கப்பல்களை வைத்திருக்கும் நிறுவனங்கள்தான் ‘முதலீட்டாளர்களின் டார்லிங்!’

முதலீட்டாளர்கள் முக்கியமாகக் கவனிக்கும் விஷயம் - கப்பலின் வயது! நடிகைகளுக்கு மட்டுமல்ல... கப்பல்களுக்குமே இளமையில்தான் மரியாதை. வயது ஏற ஏற... கப்பல்களுக்கான செலவு அதிகரிக்கும். அதோடு, பராமரிப்புக்காகக் காத்திருக்கும் நேரத்தில் சுமை தூக்காமல் ‘சும்மா’ இருப்பதால் ஏற்படும் கூடுதல் நஷ்டம் வேறு! இப்படி பழைய கப்பல்களை வைத்துக்கொண்டு தொழில் நடத்தும் கம்பெனிகள் கொஞ்சம் தடுமாறத்தான் செய்யும்.

வயதைப் போலவே வாடகைக்கும் தனி வசீகரம் இருக்கிறது. எந்த சரக்குக்கு, என்ன வாடகை என்பதில் உலக அளவில் ஒருமித்த கருத்து இருக்கிறது. எல்.பி.ஜி எனப்படும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவைக் கொண்டுசெல்லும் கப்பல்களின் வாடகை சீராக இருக்கும். அதேசமயம், மற்ற பொருட்கள் என்றால், வாடகையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.

இண்டஸ்ட்ரி - கம்பீர கப்பல் துறை!

நம்மூர் லாரி டிரான்ஸ்போர்ட் போலவே, நீண்ட கால கான்ட்ராக்ட் அடிப்படையில் செயல்படும்போது ஒருவிதமாகவும், உடனடி ஆர்டர்களின்போது வேறொரு விதமாகவும் வாடகையை நிர்ணயிக்கும் பழக்கம் கப்பல் நிறுவனங்களிலும் இருக்கிறது. இதுபோன்ற ஏற்ற இறக்கங்கள், கப்பல் நிறுவனங்களின் வருமானத்திலும் பிரதிபலிக்கவே செய்யும். அப்படி இருக்கும்போது, முதலீட்டாளர்களின் மனநிலையிலும் மாற்றத்தை உண்டாக்கும்.

‘வரப்புயர...’ என்று ஒரு வார்த்தையில் வாழ்த்துவதன் பின்னணியில் பெரிய கதை இருப்பது போல, இங்கும் வருமான தத்துவம் ஒன்று உண்டு. தனிநபர் வருமானம் உயர்ந்து, அப்படியே மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து, அதன்மூலம் மக்களின் வாங்கும் சக்தி உயர்ந்து, அவர்கள் வாங்குவதால் வாகனங்களின் விற்பனை உயர்ந்து, அதனால் எழும் எரிபொருள் தேவையால், எரிபொருட்களை இறக்குமதி செய்யப் பயன்படும் கப்பல்களின் தேவை உயர்ந்து, அதனால் அந்த கப்பல் கம்பெனிகளின் வருமானம் உயர்ந்து, அதனால் அந்த கம்பெனிகளில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்களின் பங்கு விலை உயரும்!

இண்டஸ்ட்ரி - கம்பீர கப்பல் துறை!

இன்று எல்.பி.ஜி எடுத்துச்செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை உலக அளவில் குறைவாகவே உள்ளன. எனவே, எல்.பி.ஜி-யைக் கையாளும் கப்பல் நிறுவனங்கள் கூடுதல் லாபமீட்டும் வாய்ப்புகள் தெரிகின்றன. இதுதவிர, அனல் மின்உற்பத்தி நிலையங்கள் மற்றும் பிற தொழிற்சாலைகளின் தேவைக்காகவும் இறக்குமதி செய்யப்படும் குரூட் ஆயில், நிலக்கரி, எல்.என்.ஜி போன்ற எரிபொருட்களின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

எரிவாயு கையாளும் கப்பல் நிறுவனங்களுக்கு இதற்கேற்ப சவால்களும் இருக்கின்றன. ‘கப்பல் எல்லாம் எதற்கு..? குழாய் மூலமாகவே எரிபொருட்களை எடுத்துச் செல்லலாமே!’ என்ற யோசனையை சில நிறுவனங்கள் செயல்படுத்தத் தொடங்கிவிட்டன. இந்தியாவிலேயே பெட்ரோ நெட் எல்.என்.ஜி, ஜி.எஸ்.பி.எல் போன்ற பல நெட்வொர்க்குகள் உருவாகி வருவதால் கப்பல் பயன்பாடு கணிசமாகக் குறைந்துவருகிறது.

குஜராத் மாநிலத்திலும், கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரையோரங்களிலும் குழாய் மூலம் எரிபொருள் எடுத்துச்செல்வது ஓரளவு நடந்து வருகிறது. ஈரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக எரிவாயுவையும், பெட்ரோலிய எண்ணெயையும் குழாய்கள் மூலம் கொண்டுவரும் திட்டங்களும் பரிசீலிக்கப்படுகின்றன. இது கொஞ்சம் சிக்கனமானதாக இருப்பதால், இவ்வகைத் திட்டங்கள் வரும்நாட்களில் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இது கப்பல் நிறுவனங்களுக்குச் சவால்தான். ஆனாலும், இந்தக் குழாய் திட்டத்துக்கான ஆரம்ப முதலீடு மிக அதிகம் என்பதோடு, இதற்கான பாதுகாப்பில் முழு உத்தரவாதம் இல்லாதது, கப்பல் நிறுவனங்களுக்கு உடனடி பாதிப்பு உண்டாக்காத அம்சங்கள்.

இண்டஸ்ட்ரி - கம்பீர கப்பல் துறை!

இதுதவிர, நாட்டில் பெருகிவரும் விவசாயத் துறை சார்ந்த உர உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான மூலப்பொருட்கள், இரும்புத்தாது போன்றவற்றின் இறக்குமதியும் தற்போது அதிகரித்து வருகிறது. இவையும் கப்பல் நிறுவனங்களுக்கான வாய்ப்புதான். ஆட்டோ துறை, டெக்ஸ்டைல்ஸ், பதப்படுத்திய உணவு போன்ற துறைகளின் ஏற்றுமதி யிலும் இந்தியா கடந்த காலங்களைவிட நல்ல முன்னேற்றம் கண்டுவருகிறது.

ஏற்றுமதி, இறக்குமதி போன்ற விஷயங்களில் இத்தனை சாதகமான அம்சங்கள் இருக்க... பல இந்திய கப்பல் நிறுவனங்கள் தங்கள் பங்குகளை மற்ற நாடுகளின் பங்குச் சந்தையிலும் பட்டியலிடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதும் இந்தத் துறை நிறுவனங்களின் மீது அதிக கவனம் செலுத்த வைக்கிறது. உதாரணமாக வருண் ஷிப்பிங், மற்ற சில நாடுகளில் பட்டியலிடத் திட்டமிடுவதோடு, சிங்கப்பூர் டெபாசிட்டரி ரிசிட் விற்பனை செய்யவும் முயன்று வருகிறது.

இவைதவிர, நடுக்கடலில் எண்ணெய் துரப்பன பணியில் ஈடுபடும் நிறுவனங்கள் பயன்படுத்தும் கப்பல்களும் முக்கியமானவை. இவற்றை ‘ஆஃப்ஷோர் வெஸல்ஸ்’ என்கிறார்கள். இவை நீண்டகால ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தப்படுவதால் பொதுவாக இதுபோன்ற கப்பல்கள் அதிக லாபம் ஈட்டக்கூடியவை. இந்திய எண்ணெய் துரப்பன பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் கப்பல்களின் தேவையும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. நாட்டின் பல பகுதிகளிலும் இதுபோன்ற புதிய திட்டங்கள் உருப்பெற்று வருகின்றன. மெர்க்கெட்டர் லைன்ஸ், சவுத் ஈஸ்ட் ஏசியா மெரைன் போன்ற நிறுவனங்கள் பெருமளவு இத்துறையிலேயே செயல்பட்டு வருகிறார்கள். அண்மைக்காலமாக ஜி.ஈ.ஷிப்பிங், வருண் ஷிப்பிங் போன்ற மற்ற நிறுவனங்களும் இத்துறையில் அதீத ஆர்வம்காட்டி வருகின்றன. எண்ணெய் துரப்பன பணிக்கான அனுமதி தரும் புதிய கொள்கையின்படியும், அதற்கு முன்பாகவும் ஒதுக்கப்பட்ட 100 இடங்களில் இப்போது கடலடி எண்ணெய் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இது ஆஃப்ஷோர் வெஸல்ஸ் வைத்திருக்கும் கப்பல் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இண்டஸ்ட்ரி - கம்பீர கப்பல் துறை!

நமதுநாட்டின் துறைமுகங்களை வலுவாக்குவதும், துறைமுகங்களை நிர்வகிப்பதில் பல நவீன வழிமுறைகளைப் புகுத்துவதும், சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை நமது கப்பல் நிறுவனங்கள் பெற உதவும். அதேசமயம், சர்வதேச அளவில் ஒப்பிடும்போது, இந்திய துறை முகங்கள் அதிகச் செலவு பிடிக்கக்கூடியதாக உள்ளன. இது குறையவேண்டும் என்பது பலருடைய கோரிக்கை.

இதை உறுதிப்படுத்தும் விதமாக, ‘மற்ற பல நாடுகளின் துறைமுகங்களில் ஆகும் செலவைவிட, சென்னை துறைமுகத்திலிருந்து ஹுண்டாய் கார்களை ஏற்றுமதி செய்ய ஆகும் செலவு மிக மிக அதிகம்’ என்கிறார் ஹுண்டாய் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பி.வி.ஆர்.சுப்பு. இதில் இந்திய துறைமுகங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது சீனா.

அண்மைக்காலமாக ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்க நாடுகளிலிருந்து பல தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு வரும் இறக்குமதிப் பொருட்களை, கப்பல்களைக் கையாளும் வாய்ப்புகளை சிங்கப்பூர் மற்றும் இலங்கை போன்ற நாடுகள் தட்டிப் பறிப்பதாக ஒரு கருத்து இருக்கிறது. வலுவான துறைமுக வசதிகளைப் பெற்றால், அதற்கேற்ப இந்திய நிறுவனங்கள் பெறும் வர்த்தக வாய்ப்புகளும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

இப்படி வெளியில் இருக்கும் பல சவால்களை கப்பல் துறை சந்தித்து மீள்வது ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் உள்ளுக்குள்ளேயே பல சவால்கள் இருக்கின்றன. அதில் பெரும் சவாலாக இருப்பது இந்திய கப்பல் போக்குவரத்துத் துறை சட்டங்களும், அண்மைக் காலமாக அவற்றில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களும்தான்! பொருட்களை விரைவாக ஏற்றுமதி செய்ய, புதிய வாய்ப்புகள் உருவாகும் என்ற நோக்கில் இந்தியத் துறைமுகங்களுக்கிடையே மற்ற நாட்டு கப்பல்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகள் அண்மையில் நீக்கப்பட்டன.

இண்டஸ்ட்ரி - கம்பீர கப்பல் துறை!

இது பெரிய பாதிப்புதான். இதனால் இந்திய கப்பல் நிறுவனங்கள் கடும் போட்டியைச் சமாளிக்கவேண்டிய சூழல் உருவாகிவிட்டது. இதனால், நம் கப்பல் நிறுவன வியாபாரங்களில் ஓட்டை விழலாம்.

அதேபோல, நம் நாட்டு நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளுக்கு சிலரைத் தயார் செய்து, அவர்களை வெளிநாட்டவர்கள் சம்பள ஆசைகாட்டி ஈர்த்துவிடாமல் இருக்க, செய்யும் கூடுதல் செலவுகள் கவலைதரும் விஷயம்தான். காரணம், மென்பொருள் தயாரிப்புத் துறை போலவே, கடல் மற்றும் கப்பல் சார்ந்த தொழில்நுட்ப நிர்வாகத்திலும் உலக அளவில் இந்தியர்களுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. ஆனால், அண்மைக்காலமாக இந்திய கப்பல் நிறுவனங்களில் பணி புரிந்து பயிற்சியும், அனுபவமும் பெற்ற பலர் நாடு தாவுவது அதிகரித்திருப்பதால், மற்ற நாடுகளைச் சேர்ந்த டெக்னீஷியன்கள் இந்திய கப்பல்களில் முக்கியப் பொறுப்புகளை ஏற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நிறுவனங்களின் கோரிக்கையை அடுத்தே இப்படி ஓர் அறிவிப்பு!

பெருகிவரும் தேவையை ஈடுகட்டும் அளவு தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் கிடைக்காததும் கப்பல் நிறுவனங்களுக்கு இன்னொரு சவால்தான். இந்தியாவில் தற்போது அரசுத்துறை நிறுவனங்கள் தவிர, பல தனியார்த்துறை நிறுவனங்களும் இத்துறையில் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் ஈடுபட்டு வந்தாலும், அதில் இன்னும் முன்னேற்றமும் நவீனமும் தேவை என்பதே உண்மை!

கப்பல்துறை கொள்கைகளைப் பொறுத்தவரை, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களும் ஒருமித்த கருத்து கொண்டவையாக இல்லை என்பது இன்னொரு பெரிய பிரச்னை. உதாரணமாக வர்த்தகத் துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை, கப்பல் போக்குவரத்துத் துறை போன்றவற்றுக்கு இடையே பலமான கருத்து வேறுபாடுகள் உள்ளன. இந்தியாவுக்குத் தேவையான எல்.என்.ஜி எரிபொருட்களை இறக்குமதி செய்ய, இந்திய கப்பல் நிறுவனங்களுக்குத்தான் வாய்ப்புக் கிடைக்கவேண்டும் என்ற கருத்து கப்பல் போக்குவரத்துத் துறையிடம் உள்ளது. ஆனால், ‘எந்தக் கப்பலைப் பயன்படுத்தவேண்டும்?’ என்பதை இறக்குமதியாளர் முடிவு செய்துகொள்ள அனுமதிக்கவேண்டும் என்கிறது வர்த்தகத் துறை. இந்த மாதிரி இழுபறி சூழலில் பெட்ரோநெட் போன்ற பல இந்திய நிறுவனங்கள் தங்களது தேவைக்கு பல்வேறு வாய்ப்புகளைப் பரிசீலித்து, இப்போது சொந்தமாகவே ஒரு கப்பல் வாங்கும் திட்டத்தையும் பரிசீலித்து வருகிறது.

இதுபோன்ற சவால்களையும் எதிர்கொண்டாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன இந்திய கப்பல் நிறுவனங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism