Published:Updated:

கடன்: கண்ணி வெடி கார்ட்கள்!

கடன்: கண்ணி வெடி கார்ட்கள்!

கடன்: கண்ணி வெடி கார்ட்கள்!

கடன்: கண்ணி வெடி கார்ட்கள்!

Published:Updated:
கடன்
கடன்: கண்ணி வெடி கார்ட்கள்!
 

கண்ணி வெடி கார்ட்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடன்: கண்ணி வெடி கார்ட்கள்!

கிரெடிட் கார்ட் பற்றிய கேள்விகளை
அனுப்பிக் குவித்துவிட்டார்கள் வாசகர்கள்.
அடிப்படையான சில சந்தேகங்களுக்கு சம்பந்தப்பட்ட
வங்கிகளின் நிபுணர்களிடம் பதில் பெற்று, இங்கே தந்திருக்கிறோம்.

‘‘எனக்கு வாழ்நாள் இலவச கிரெடிட் கார்டை ஒரு வங்கி வழங்கியது. ஆனால், திடீரென்று என் மாதாந்திர ஸ்டேட்மென்ட்டைப் பார்த்தபோது, ‘ஆட்டோ டெபிட் பேமென்ட்’ என்று போட்டு 800 ரூபாய் என் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டிருந்தது. என்னைக் கேட்காமலேயே எப்படி பணத்தை எடுத்துக்கொள்ள முடியும்?’’

‘‘ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். கிரெடிட் கார்ட் பிஸினஸில், வாழ்நாள் இலவச கார்ட் என்பது ஒரு கேரட். அதைக்காட்டி உங்களை அவர்கள் கவர்ந்துவிட்டார்கள். உள்ளே இழுத்தபின், அவர்கள் போக்குக்குத்தான் பல சமயங்களில் நீங்கள் போக வேண்டி இருக்கும்.

கேள்விக்கு வருவோம். நீங்கள் இலவச கிரெடிட் கார்ட்டுக்காக ஒரு படிவத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருப்பீர்கள். நிச்சயம் அதை முழுமையாக நீங்கள் படித்திருக்க மாட்டீர்கள். அவசர, அவசரமாக வெறும் கையெழுத்தை மட்டும் போட்டிருப்பீர்கள். அந்த ஃபாரத்தில் உள்ள பொடி எழுத்தில்தான் இருக்கிறது சூட்சுமம். நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்வதற்கான ஆட்டோ டெபிட் பேமென்ட் வசதிக்கு அதில் ஒப்புதல் அளித்துவிட்டீர்கள். உங்களை அறியாமலேயே நடந்த விஷயம் இது. குறிப்பிட்ட வங்கியைக் கூப்பிட்டு, இந்த வசதியை நீக்கிக்கொள்ளப் பாருங்கள்.’’

‘‘என் கிரெடிட் கார்ட் தொலைந்துவிட்டது. நான்கைந்து கார்ட்கள் வைத்திருப்பதால், இது கொஞ்சம் லேட்டாகத்தான் எனக்கே தெரிந்தது. அதற்குள் அந்தத் தொலைந்து போன கார்டின் ஸ்டேட்மென்ட் வர... அதில் தூக்கி வாரிப் போடும்படி கட்டணம். என்ன செய்வது என்று தெரியவில்லை. நான் செய்யாத செலவுகளை நிரூபித்து அந்தக் கட்டணத்திலிருந்து தப்ப முடியுமா..?’’

‘‘கிரெடிட் கார்ட் என்பது இரண்டு பக்கமும் முனையுள்ள கத்தி. நீங்கள்தான் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். கிரெடிட் கார்ட் தொலைந்தவுடன், உடனடியாக குறிப்பிட்ட வங்கியைக் கூப்பிட்டுச் சொல்லியிருக்கவேண்டும். அப்படிச் சொல்லியிருந்தால், உடனடியாக அதற்கு மேல் ஏதும் புதிய செலவுகளை ஏற்காமல் முடக்கி வைத்திருப்பார்கள். நீங்கள் வங்கியைக் கூப்பிட்டு புகார் சொல்லி, கார்டை முடக்குமுன் வரை ஆன செலவுகளையெல்லாம் நீங்கள்தான் கட்ட வேண்டி வரும். வங்கியோடு பேசிப்பாருங்கள். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், ஏதும் சலுகைகள் கிடைக்கலாம்.’’

‘‘ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வங்கி எனக்குக் கிரெடிட் கார்ட் இலவசமாகவே தர முன்வருகிறது. என்னிடம் ஏற்கெனவே இரண்டு கார்ட்கள் உள்ளன. மேலும் சில கார்ட்களை வாங்கிக்கொள்வது புத்திசாலித்தனமா?’’

‘‘நிறைய கிரெடிட் கார்ட்களைச் சேர்த்துக்கொள்ளாதீர்கள். ஒன்றோ இரண்டோ போதும். நான்கைந்து கார்ட்கள் வைத்திருந்தாலும் நீங்கள் எல்லாவற்றையும் நிச்சயம் உபயோகப்படுத்தப் போவதில்லை. மேலும், இலவசம் என்று கிரெடிட் கார்டில் எதுவுமே இல்லை. அதனால், இலவசமாகக் கொடுக்கிறார்கள் என்று எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டாம்.

சும்மா இருந்தாலும்கூட கிரெடிட் கார்ட் என்பது கண்ணி வெடி மாதிரி! அசந்தர்ப்பமான சமயங்களில் அகலக்கால் வைக்கும்போது, அது தன் வேலையைக் காட்டி வெடித்துத் தொலைக்கும். குழந்தைகள் மாதிரிதான் கார்ட்களும். இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம்!’’

‘‘ஒவ்வொரு முறையும் என் கிரெடிட் கார்டில் லேட் பீஸே நிறையக் கட்டி வருகிறேன். என் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை வங்கியே எடுத்துக்கொள்ள (ஆட்டோ டெபிட்) அனுமதி தரலாமா?’’

‘‘வேண்டாம்... செய்யாதீர்கள். ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் பணத்தைக் கட்டுவதைப் பழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். இந்த ஆட்டோ, டாக்ஸி கதையெல்லாம், உங்களை நட்டாற்றில் கொண்டு போய்தான் விட்டுவிடும்.

ஒருவேளை ஆட்டோ டெபிட் அனுமதி தந்தாகி விட்டது. மாதமானால் குறிப்பிட்ட தேதியில் வங்கி தன் மினிமம் பேலன்ஸ் தொகை 5%-ஐ உங்கள் கணக்கில் இருந்து எடுத்து வரவு வைத்துக் கொள்வார்கள். ஆனால், உங்கள் அசல் தொகை பயமுறுத்தும் அளவுக்கு வளர்ந்து விடும். அதன் மோசமான இன்னொரு பக்கத்தையும் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் செலவுகளுக்குக் கணக்கே இல்லாமல் போய்விடும். எவ்வளவு கட்ட வேண்டும், எவ்வளவு பாக்கி நிற்கிறது என்றெல்லாம் உங்கள் கட்டுப்பாட்டுக்கே வராமல், திண்டாடிப் போய்விடுவீர்கள். உஷார்!’’

‘‘திடீரென்று என் கிரெடிட் கார்டில், குழுக் காப்பீட்டுக்கு என்று 79 ரூபாய் பிடிக்கத் தொடங்கி உள்ளார்கள். இதை நான் ஏற்றுக்கொண்ட மாதிரி எனக்கு நினைவில்லை. மேலும் அந்தக் கார்டில் நான் செலவுகளே செய்வதில்லை. மூன்று மாதங்களுக்கும் இந்த 79 ரூபாய் மட்டுமே சேர்ந்துகொண்டு வந்தது. இதற்கிடையே நான் சரியாக மினிமம் தொகை செலுத்தவில்லை என்று தாமதக் கட்டணமும் அதற்கு வரியும் போட்டுவிட்டார்கள். இதை எப்படிச் சமாளிப்பது?’’

‘‘உங்களைக் கேட்காமல் எந்தப் புதுச் செலவும் உங்கள் ஸ்டேட்மென்ட்டில் வரக்கூடாது. நீங்கள் கேட்காமலேயே இதுபோன்ற காப்பீட்டுக்கான பிடித்தம் செய்யப்படுமானால், அதை நீக்கிக்கொள்ள உங்களுக்குச் சகல உரிமையும் உண்டு. ஆனால், அதை உங்கள் கார்டின் ஸ்டேட்மென்ட் வந்தவுடனே பார்த்துச் செய்திருக்கவேண்டும். அதிலிருந்து பொதுவாக 21 நாட்கள் கடந்து விட்டாலே, நீங்கள் அந்தத் தொகையை ஏற்றுக்கொண்டுவிட்டீர்கள் என்று அர்த்தப்படுத்திக்கொண்டு, தொடர்ந்து அதுபோன்ற சேவை உங்கள் அனுமதியில்லாமலேயே உங்களுக்குத் தரப்படும். ஜாக்கிரதை!

ஸ்டேட்மென்ட் வந்தால், அதைச் சரியாகப் பாருங்கள். நீங்கள் செய்த செலவுகள் மட்டும்தான் அங்கே வரிசையிடப்பட்டிருக்கிறதா, என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையற்ற இனங்கள் இருந்தால், உடனடியாக வங்கியோடு தொடர்பு கொண்டு, நீக்கிக்கொள்ளுங்கள்.’’

கடன்: கண்ணி வெடி கார்ட்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism