வேலை |

இளைஞர்களின்
இனிய கவனத்துக்கு..! |
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனிமேஷன். இன்றைய சினிமாவை ஆட்டிப்படைக்கும் விஷயமாக, கிட்டத்தட்ட கண்கட்டி வித்தை மாதிரி ஆகிவிட்டது. நூறு பேரை வைத்துப் படமாக்கும் ஒரு காட்சியை பத்தாயிரம் பேராக்கும் அளவுக்கு கண்ணை மிரட்டுகிற கிராஃபிக்ஸைத் தமிழ்ப் படங்களிலேயே பார்க்க முடிகிறது. |

இப்படி நாம் கிராஃபிக்ஸ் வித்தையைப் பார்த்து மகிழ்கிற அதே நேரத்தில் அந்த கிராஃபிக்ஸ் துறையில் இருக்கிற பலரும் அந்நிய நாட்டு ஆர்டர்களோடு சூப்பர் வருமானம் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது எதிர்காலத்தில் இன்னும் பலடங்கு எகிறும் என்பதால், இந்தத் துறை நோக்கிப் பலரும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். சென்னையில் மட்டுமே புதிதாக மூன்று நிறுவனங்கள் முளைத்திருக்கின்றன. கோடிக்கணக்கான ரூபாய் முதலீட்டில் நூற்றுக்கணக்கான ஆட்களின் உழைப்போடு அனிமேஷன் இண்டஸ்ட்ரி சீறிப் பாயத் தயாராகிவிட்டது. இதனால், இந்தியாவே செல்வச் செழிப்பாகும் நாள் சீக்கிரமே வரும் என்னும் அளவுக்கு காட்சிகள் நடக்கின்றன அனிமேஷன் துறையில். விண்ணை நோக்கி சீறும் வேகத்தில் பாய்ந்து வேலை வாய்ப்புகள் இத்துறையில் காத்திருக்கின்றன.
|


சென்னையில் இருக்கும் ‘நிபுணா’ நிறுவனத்தின் அனிமேஷன் பிரிவின் பொதுமேலாளர் அழகர்சாமி, ‘‘இன்றைக்கு டி.வி சீரியல்களில்கூட முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது அனிமேஷன். தமிழ்நாட்டிலேயே இப்படி இருக்கும்போது வெளிநாடுகள் எவ்வளவு வேகமாக முன்னேறி இருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள். அதுதான் நமக்குப் பெரிய வருமான வாய்ப்பாக இருக்கப்போகிறது’’ என்றார். அவரே தொடர்ந்து, ‘‘வெளிநாட்டு சினிமாக்கள், சீரியல்கள் எல்லாம் தங்களின் அனிமேஷன் தேவைகளுக் காக இந்தியாவைத் தேடி வரக் காரணமே, நம் ஊரில் அங்கே செய்யும் செலவுகளைக் காட்டிலும் இங்கே குறைந்த செலவில் செய்து வாங்கிக் கொள்ள முடியும் என்பதுதான்! இப்போதும் அதுதான் நம் ஊரில் உள்ள திறமையான அனிமேட்டர்களுக்கு பிரமாதமான வேலைவாய்ப்பையும் விஷூவல் கம்யூனிகேஷன் படித்து வெளியே வரும் புதியவர்களுக்கு நல்ல வருமானத்தையும் ஏற்படுத்தித் தரப்போகிறது’’ என்றார்.
|


நம் அனிமேஷன் இன்ஜினீயர்களுக்கு வெளி நாடுகளில் நல்ல மரியாதை இருப்பதற்கு முக்கியமான காரணம் தொழில் நேர்த்தி! பரபரப்பாக ஓடிய ஆங்கிலப் படம் ‘நார்னியா’வுக்கான அனிமேஷன் வேலைகளில் பெரும்பான்மையானவை இந்திய அனிமேஷன் ஸ்டூடியோக்களில் உருவானவை தான்! ‘‘பன்னாட்டு கம்ப்யூட்டர் நிறுவனங்கள் பலவும் தங்கள் கிளைகளைப் பரப்ப தமிழகத்தை நோக்கி ஓடிவரும் நேரத்தில், அதை ஒட்டிய அனிமேஷன் கம்பெனிகளும் இங்குதான் அமையும். அதனால், அடுத்துவரும் காலங்களில் அனிமேஷன் துறைக்கு தமிழ்நாட்டில் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது’’ என்றார் அழகர்சாமி. சென்னையை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஒருபக்கம் இருக்க... மும்பையின் ‘ஆட்லேப்ஸ்’ நிறுவனம், விஜயா கலர்லேபுடன் சேர்ந்து வடபழனியில் அனிமேஷன் ஸ்டூடியோ ஒன்றை இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளது. ஆட்லேப்ஸ் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, இதன் 51% பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது கவனிக்கத்தக்கது. |

ஆட்லேப்ஸ் நிறுவனத்தின் வர்த்தக தலைமை மேலாளர் பிரபாகரன் பேசும்போது, ‘‘எங்கள் இலக்கு இங்குள்ள இளைஞர்களின் திறமையை பயன்படுத்திக் கொள்வதுதான். இந்தியில் ராம்கோபால் வர்மாவின் தயாரிப்புகளுக்கு, அனிமேஷன் செய்யும் வாய்ப்புகளைப் பெறும் முயற்சியில் இருக்கிறோம். இதன்மூலம் எங்கள் நிறுவனத்தில் அனிமேஷன் துறைக்கான வேலை வாய்ப்பு பெருக வாய்ப்பு அதிகமாக இருக்கிறது’’ என்றார். அனிமேஷனுக்கான பயிற்சி களை வழங்கிவரும் ‘மாயா அகாடமி’, சென்னையில் அவ்வப் போது மாணவர்களை ஊக்குவிக் கவும், திறமைகளை வளர்க்கவும் அனிமேஷன் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் தொடர்பான கருத்தரங்குகளை நடத்தி வருகிறது. |

அதில் ஹாலிவுட் படங்களுக்கு கிராஃபிக்ஸ் அனுபவம் வாய்ந்தவர்களையும், வல்லுநர்களை அழைத்து இத்துறைக்கான வேலைவாய்ப்புகளை சொல்லி ஊக்குவித்து, தயார்படுத்திவருகிறது. அதேபோல இத்துறையில் பெரிய கனவுகளோடு நுழைந்திருக்கும் பல இளைஞர்கள், பெரிய நிறுவனங்களில் வேலை செய்துகொண்டே, அந்நிய நிறுவனங்கள் பலவற்றில் ஆர்டர் பிடித்து, கூட்டாக அதைச் செய்து தந்து வருமானம் பார்ப்பதும் நடந்து கொண்டிருக்கிறது. வேலையோடு கூடவே, தொடர்பு களையும் வளர்த்துக்கொண்டு, இத்துறையில் தங்கள் முழுத் திறமையையும் காட்டி புதிய சவால்களுக்குத் தயாராகும் இந்த இளைஞர்களின் நோக்கமே, எதிர்காலத்தில் ஒரே நோக்கம் கொண்ட நண்பர்களுடன் இணைந்து தனி நிறுவனம் தொடங்கவேண்டும் என்பதுதான். உங்களுக்கு கனவுகளோடுதான் வேலை பார்க்கவேண்டும், கற்பனைகளோடு தான் வாழவேண்டும் என்ற ஆசை இருந்தால் சம்பாதிக்கலாம். அதற்கு அற்புதமான வாய்ப்பாக கதவு திறந்து காத்திருக்கிறது அனிமேஷன் துறை.
|

|