Published:Updated:

‘ஊர்’வலம் - இராணிப்பேட்டை

‘ஊர்’வலம் - இராணிப்பேட்டை

‘ஊர்’வலம் - இராணிப்பேட்டை

‘ஊர்’வலம் - இராணிப்பேட்டை

Published:Updated:
நடப்பு
‘ஊர்’வலம் - இராணிப்பேட்டை
 

இராணிப்பேட்டை

தோள் கொடுக்குது தோல் தொழில்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘ஊர்’வலம் - இராணிப்பேட்டை

ணலாகக் கிடக்கும் பாலாறு, அனல் கிளப்பும் வெயில், அதைப் பொருட்படுத் தாமல் பர்தாவும் குல்லாவும் அணிந்து நடமாடும் இஸ்லாமிய மக்கள் என்று அரேபிய பாலைவனப் பகுதிக்குள் நுழைந்துவிட்ட பிரமிப்பு வருகிறது!

அதேசமயம், ‘தொழில் வேண்டுமா... வேலை வேண்டுமா... கடை வைத்துப் பிழைக்க வேண்டுமா? என்னிடம் வாருங்கள்’ என்று இருகரம் நீட்டி வரவேற்று வாழ்க்கை தரும் பூமியாகவும் இருக்கிற ராணிப்பேட்டையில்தான் இந்த இதழ் ‘ஊர்’வலம்!

ராணிப்பேட்டையின் எல்லா அசைவுகளிலும் இருக்கின்றன தோல் தொழிற்சாலைகள். ‘‘இந்தியா வின் இரண்டாவது பெரிய தோல் தொழிற்பேட்டை... ஆசியாவின் 60% தோல் உற்பத்திசெய்யும் இடம்... தோல் பொருட்கள் ஏற்றுமதி மூலம் தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் இரண்டாவது சிறு நகரம் போன்ற பல பெருமைகளைக் கொண்டிருக்கிறது எங்கள் ஊர்!’’ என்கிறார்கள் இங்குள்ள மக்கள்.

‘ஊர்’வலம் - இராணிப்பேட்டை

பிரிட்டிஷ் காலத்தில் தேசிங்கு ராஜா வேலூருக்கு அருகில் நடந்த போரில் கொல்லப்பட்டதால், அவருடைய மனைவி இங்கே சதியில் இறங்கி மாண்டார் என்றும், அந்த ராணி நினைவாகவே ஹஸ்நாலிப்பேட் என்ற பெயர் வந்து, பிறகு அது ராணிப்பேட்டையானதாகவும் வரலாறு கூறுகிறது.

தோல் தொழிற்சாலைகளும், ரசாயன நிறுவனங்களும் இங்கு கொடிகட்டிப் பறக்கின்றன. இந்த நகரின் தொழில் ஜாம்பவான்களாக உயர்ந்து நிற்பது ஈ.ஐ.டி பாரிவேர், திருமலை கெமிக்கல்ஸ், பெல் பாய்லர் யூனிட், மல்லாடி ஃபார்மாசூட்டிகல்ஸ், கிரீவ்ஸ்-சாமே டிராக்டர் தொழிற்சாலை போன்றவைதான்.

காமராஜர் ஆட்சிக்காலத்தில் இந்தப் பகுதியில் சிப்காட் தொடங்க முடிவு எடுக்கப்பட்டு, 1974\ல் தொழில்பேட்டை ஆரம்பிக்கப்பட்டது. இன்று சிப்காட் மற்றும் சிட்கோ இரண்டும் நகரின் தொழில் வளர்ச்சியில் இரட்டைக் கோபுரங்களாக உயர்ந்து நிற்கின்றன. 750 ஏக்கரில் கிட்டத்தட்ட 630 நிறுவனங்களுக்கும் மேல் இங்கு இருக்கின்றன. இதில் 90% தோல் தொழில்களே. மீதமுள்ளவைதான் பாய்லர், கெமிக்கல், ஆட்டோ உதிரிபாகம் என சிறிதும் பெரியதுமானவை!

‘‘தோல் தொழில் என்று பொதுவாகப் பார்த்தால் ஒரே தொழில் போலத் தோன்றினாலும் முடிநீக்குவது, சுத்தம் செய்வது, துர்நாற்றம் இல்லாமல் போக்குவது வரை ஒரு தொழிலாகவும், அவற்றைப் பயன்படுத்தும் வகையில் பதப்படுத்தப்பட்ட தோலாக (ஃபினிஷ்டு லெதர்) மாற்றுவதை இன்னொரு தொழிலாகவும் செய்கிறார்கள். இதில் நீரைப் பிழிவது, வண்ணம் ஏற்றுவது, சுருக்கம் இன்றி அயர்ன் செய்வது என பல வேலைகளும் இருக்கின்றன.

அதன் பின்னர் ஷூ, லெதர் பேக், ஜாக்கெட், கையுறை போன்றவை தயாரிக்கும் கம்பெனிகள் பலவும் இருக்கின்றன. இந்தத் தயாரிப்புகளில் 90% ஏற்றுமதி செய்யப்படுகின்றன’’ என்றார் அமிர்த கடேசன். இவர் ராணிப்பேட்டை சிட்கோ தொழில் முனைவோர் சங்கத் தலைவர்.

‘ஊர்’வலம் - இராணிப்பேட்டை

தோல் தொழில்தான் ராணிப்பேட்டையின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கிறது என்றாலும் அந்தத் தொழிலிலும் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது என்கிறார்கள் இங்குள்ள தொழில் அதிபர்கள்.

‘‘உற்பத்திக்குத் தேவையான தோல்கள் அதிகமாக கேரளாவிலிருந்து வாங்கப் படுகிறது. உள்ளூரிலும் கொஞ்சம் வாங்கு கிறார்கள். 25 ஆண்டுகளுக்கு முன் சிறிய எண்ணிக்கையில் தொடங்கப்பட்ட இந்தத் தொழில்கள், இன்று விஸ்வரூபம் எடுத்து அதிகரித்துள்ளது.

‘ஊர்’வலம் - இராணிப்பேட்டை

இடையே மாசுக்கட்டுப்பாடு என்ற இக்கட்டில் இந்தத் தொழில் சிக்கியபோது, ‘ராணிப்பேட்டையின் ராஜாங்கம் அவ்வளவுதான்’ என்று பலரும் நினைத் தார்கள். தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் கழிவு நீர், நிலத்தடி நீரைப் பாதிக்கிறது என்ற பிரச்னையைத் தீர்க்க மத்திய, மாநில அரசுகளோடு நாங்களும் இணைந்து 3.5 கோடி ரூபாய் செலவில் பொதுவான எஃப்ளுயன்ட் ட்ரீட்மென்ட் அமைத்தோம். மீண்டும் கம்பீரமாக நடைபோடுகிறது இந்தத் தொழில்’’ என்றார் எஃப்ளுயன்ட் ட்ரீட்மென்ட்டின் இயக்குநரும் ஸ்ரீலெதர் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவருமான ரகுநாதன். இந்த எஃப்ளுயன்ட் ட்ரீட்மென்ட் மூலம் நாள் ஒன்றுக்கு 15 லட்சம் லிட்டர் கழிவு நீர் சுத்திகரிக்கப்படுகிறதாம்.

‘‘லெதர் இண்டஸ்ட்ரியை நம்பிப் பிழைப்பவர்கள் மட்டுமே கிட்டத்தட்ட பத்தாயிரம் பேருக்கு மேல் இருக்கிறார்கள். இதில் 60 சதவிகிதத்துக்கு மேல் பெண்களே வேலை செய்கிறார்கள்! இந்தத் தோல் வர்த்தகம் மூலம் 400 கோடி ரூபாய்க்கு மேல் ஏற்றுமதி நடக்கிறது. இதில் ரா லெதர் எனப்படும் பதப்படுத்தப்படாத தோலின் வர்த்தகம் மட்டுமே 250 கோடி ரூபாய்’’ என்றார் ரகுநாதன்.

இங்கு இருக்கும் பெரும்பாலான தொழில் அதிபர்கள் ஆரம்பத்தில் ஏதாவது ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து, அந்த அனுபவத்தைச் சேர்த்து தனியாகத் தொழில் ஆரம்பித்தவர்கள்தான்.

எல்லாத் துறைகளைப் போலவே, தோல் தொழிலுக்கும் சீனா போட்டியாக நிற்கிறது. இதுபற்றிப் பேசினார் ஷூ அப்பர் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த காந்திஜோதி. ‘‘குறைந்தது 30 லட்சம் ரூபாய் ஷூ அப்பர் தொழிலுக்குத் தேவைப்படும். ஒரு ஜோடி ஷூக்கள் தயாராவதற்கு முன் கிட்டத்தட்ட அறுபது நிலைகளைத் தாண்ட வேண்டும். எண்பது ஆட்களைக் கொண்டு தொழில் நடத்தி நாளுக்கு 300 முதல் 400 ஷூவின் மேல்பாகம் செய்தால் மட்டுமே நிலைத்து நிற்கமுடியும். இதுவே ஷூவின் அடிப் பாகம் தயாரிக்க வேண்டுமென்றால் முதலீடே இரண்டு கோடி ரூபாய் தேவைப்படும்.

ஆனால், சீனாவின் உற்பத்தி திறன் அதிகமாக இருக்கிறது. நாள் ஒன்றுக்கு 3,000 ஜோடிகளை உற்பத்தி செய்து அடித்துத் தள்ளுகிறார்கள். ஒருமுனையில் ஆரம்பித்தால் மறுமுனையில் ஷூவாக வெளிவரும். இப்படி அதிக அளவில் தயாரிக்கும்போது சீனர்களால் குறைந்த விலையில் கொடுக்க முடிகிறது. இங்கே நாம் தடுமாறிக் கொண்டிருக்கிறோம்’’ என்றார் புலம்பலாக.

‘ஊர்’வலம் - இராணிப்பேட்டை

இந்த ஊரின் தலையெழுத்தையே நிர்ணயம் செய்யக்கூடியது தோல் தொழில்தான் என்றாலும் லெதர் பொருட்களுக்கான டிஸைனிங் செய்யக்கூடிய திறமையானவர்கள் இங்கு இல்லை. அப்படிப்பட்ட திறமைசாலிகளை உருவாக்கும் டிரைனிங் சென்டர்கூட இல்லை என்பது இந்த ஊரின் வளர்ச்சியைப் பாதிக்கும் முக்கியமான அம்சம்தான்.

தோல் தொழிற்சாலைகள் தவிர்த்துப் பார்த்தால், ராணிப்பேட்டையை வளமாக வைத்திருப்பது ‘பெல்’ நிறுவனம். 1983\ம் ஆண்டு, திருச்சி ‘பெல்’ பாய்லர் யூனிட்டின் ஒரு பிரிவு இங்கு அமைக்கப்பட்டது. சித்தூர் சாலையில் அமைந்திருக்கும் ‘பெல்’லை நம்பி சுமார் 140 துணை யூனிட்கள் தொழில் வாய்ப்பைப் பெற்று இயங்கிவருகின்றன.அதை ஒட்டி வேலை வாய்ப்பு, வியாபாரங்கள், குடியிருப்புகள் என ஒரு குட்டி பொருளாதாரமே இயங்கிவருகிறது. ரியல் எஸ்டேட் தொழில் ஏறுமுகத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டுவரை நவல்பூர், தண்டலம், பிஞ்சி, பாரிநகர், பாரதி நகர் போன்ற பகுதிகளில் சதுர அடி 500 ரூபாயாக இருந்தது, தற்போது ஆயிரம் முதல் ரூ 1,200 வரை விலைபோகிறது. ஆனாலும் அடுக்குமாடி குடியிருப்பு கலாசாரம் இன்னும் இங்கு வரவில்லை. எந்தப்பக்கம் பார்த்தாலும் தொழிலாகவே தெரியும் இந்த ரசாயன பூமியில் இல்லாமல் போனது விவசாயம்.

தொழிற்சாலைகள் பெருகிக் கிடக்கும் இந்த ஊரில் லாரி, வேன், ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடைகள், மெக்கானிக் ஷாப்கள், கனரக வாகனங்களின் டயர் கடைகள், அதைச்சுற்றி சின்னச் சின்ன ஓட்டல்கள் என பல திசைகளிலும் சிறுசிறு வணிகம் கிளைத்துச் செழித்துக் கிடக்கிறது. சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த ஊர் இருப்பதால் அந்த வழியாக வந்து போகும் லாரிகள், கன்டெய்னர்கள் வேன்கள் போகிற போக்கில் இந்த ஊரின் பொருளாதாரத்தை உயர்த்திக் கொண்டிருக்கின்றன.

போக்குவரத்துக்கு வசதி ஏற்படுத்தித் தருவதற்காக நகராட்சியே, சென்னை சாலையில் டிரான்ஸ்போர்ட் நகர் என்று ஒரு வளாகத்தை உருவாக்கி, லாரிகளை புக் பண்ண வசதி செய்து கொடுத்திருக்கிறது. இதனால், லாரி புரோக்கர்கள் நிறைந்த வளாகமாக இருக்கிறது அது! வாகன புழக்கம் இருக்கும் அளவுக்கு சர்வீஸ் சென்டர்கள் அதிக அளவில் இல்லை.

‘ஊர்’வலம் - இராணிப்பேட்டை

ராணிப்பேட்டையின் வளர்ச்சியில் ஆரம்பம் முதலே தோள் கொடுத்து வருவது ஈ.ஐ.டி பாரிவேர் நிறுவனம். அதன் நிர்வாக இயக்குநர் ரங்கநாதன், ‘‘இரண்டாயிரம் பேருக்கு மேல் வேலை செய்யும் எங்கள் நிறுவனம் ஆண்டுக்கு 250 கோடி ரூபாய்க்கு உள்நாட்டு வியாபாரமும், ஒன்பது கோடி ரூபாய் வரை ஏற்றுமதி வியாபாரமும் செய்துவருகிறது. கிட்டத்தட்ட 24 வண்ணங்களில் 1,500 வகையான பாத்ரூம் செராமிக் பொருட்களைத் தயாரிக்கிறோம்’’ என்று தங்களைப் பற்றிச் சொன்னவர், ‘‘இங்குள்ள மக்கள் உழைக்கத் தயங்காதவர்கள். இதை நான்கு தலைமுறையாகக் கண்கூடாகப் பார்த்து வருகிறோம் நாங்கள்’’ என்றார்.

ராணிப்பேட்டையின் இன்னொரு முகமாக இருக்கும் கெமிக்கல் தொழிலில் பல பிரபல நிறுவனங்கள் கால் பதித்துள்ளன. மல்லாடி ஃபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் பொதுமேலாளர் பாலகிருஷ்ணன் கூறும்போது, ‘‘தொழிற்சாலைகள் இங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியிருக்கிறது. ஆண், பெண் இருவருமே வேலைக்குச் செல்கிற கலாசாரம் இருந்து வருகிறது. இதனால் மக்களின் வாங்கும் சக்தி நன்கு உயர்ந்திருக்கிறது. ஆனால், இங்கு இருக்கும் உயர்மட்ட மக்களுக்குப் பயன்படும் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு இருக்கத்தான் செய்கிறது. அதுபோன்ற பொருட்களைத் தேடி சென்னைக்குத்தான் போக வேண்டியிருக்கிறது. இதற்கு இங்கேயே ஒரு ஏற்பாடு செய்தால் நல்ல வரவேற்பு இருக்கும்’’ என்று மேல்மட்டத்து மக்களின் பிரச்னைகளைச் சொன்னார்.

‘ஊர்’வலம் - இராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் இன்னொரு மிகப்பெரிய நிறுவனம் திருமலை கெமிக்கல்ஸ். இதன் மனித வளத்துறை தலைமை அதிகாரி ரவீந்திரநாத், ‘‘இங்கு வேலை மற்றும் தொழில்களுக்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. ஆனால், அடையாளம் காணப்படாமல் இருப்பதுதான் உண்மை. டயர் மற்றும் தோல் தொடர்பான பல நிறுவனங்கள் சரியான நிர்வாகம் இல்லாத காரணத்தால் மூடப்பட்டுக் கிடக்கின்றன. இந்த கம்பெனிகளை புதியவர்கள் முயற்சி எடுத்து மீண்டும் திறக்கலாம். ஒரு நிறுவனத்துக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் அங்கே முடங்கிக்கிடக்கிறது. புதிதாக வருபவர்கள் அதைப் பயன்படுத்தி, ஆரம்ப கட்டச் செலவுகள் இல்லாமல் தொழில் தொடங்க முடியும்.

அதேபோல, ஐ.டி, சாஃப்ட்வேர் நிறுவனங்களைத் தொடங்குவதற்கு சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் ஊர் என்பது போன்ற சாதகமான பல அம்சங்கள் இங்கு இருக்கிறது. நான்கு வழிச்சாலை அமைந்த பிறகு, சென்னைக்குச் செல்லும் நேரம் குறைந்திருப்பது லாபகரமான விஷயம். இந்த வசதிகளைப் பயன்படுத்தி சென்னையில் இருக்கும் பல பன்னாட்டு நிறுவனங்களின் உதிரிபாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களை இங்கு தொடங்கலாம்’’ என்பது போன்ற யோசனைகளை அடுக்கிக்கொண்டே போனார்.

‘ஊர்’வலம் - இராணிப்பேட்டை

பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் தங்களுடைய பி.பீ.ஓ கிளைகளைத் துவங்க சென்னையை அடுத்து கோவை, திருச்சி என்று இடம் தேடிக் கொண்டிருக்க, திருமலை கெமிக்கல்ஸின் பி.பீ.ஓ நிறுவனம் தன் கிளையை ராணிப்பேட்டையில் அமைத்திருக்கிறது. அதன் மேலாளரான கோமதி பேசும்போது, ‘‘இதுபோன்ற வேலைகளை இங்கிருந்தும் செய்யமுடியும் என்பதை நிரூபித்து இருக்கிறோம். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கானஅவுட்சோர்ஸிங் திட்டங்களைச் செய்து வருகிறோம். சென்னையில் உள்ள பி.பீ.ஓ\வில் இருக்கும் வாகன வசதி, உணவு போன்ற அத்தனை நல்ல அம்சங்களையும் நாங்களும் கொடுத்துவருகிறோம். இதனால் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் முடித்தவர்கள் சென்னைக்குத்தான் செல்லவேண்டும் என்ற நிலையை மாற்றி, புதியபாதை காட்டியிருக்கிறோம். விரைவிலேயே இது பல நிறுவனங்களாகப் பெருகும். இதன்மூலம் வேலைவாய்ப்பு மேலும் அதிகமாகும்’’ என்று நம்பிக்கையுடன் சொன்னார்.

‘ஊர்’வலம் - இராணிப்பேட்டை

சென்னையின் தி.நகரில் நிறைந்து கிடக்கும் அடுக்குமாடி வணிகவளாகங்களைப் போல, ராணிப்பேட்டையில் ஓங்கி உயர்ந்து நிற்பது விமல் சூப்பர் டிபார்ட்மென்ட் ஸ்டோர்! அதன் நிறுவனர் நந்தகுமார், ‘‘ஒரு நகரத்தின் வளர்ச்சிக்கு அடையாளமாக டிபார்ட்மென்ட் ஸ்டோர்களைச் சொல்லலாம். ஒருகூரையின் கீழே எல்லாம் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்ற முயற்சிதான் இது. மக்களின் வாங்கும் திறன் அதிகமாக இருப்பதால் எங்களைப் போன்ற தொழில் நடத்துபவர்கள் மேலும் உற்சாகத்துடன் கடையை விரிவுபடுத்திக் கொண்டே போகிறோம்’’ என்றார் நந்தகுமார்.

ராணிப்பேட்டைக்கு என்று தனியாக ரயில்வே ஸ்டேஷன் கிடையாது. இங்குள்ள பாரிநிறுவனம் தன் வசதிக்காக சென்னையில் இருந்து தனி ரயில்பாதையை அமைத்திருந்தது. இப்போது அந்தப் பாதையும் புதர் மண்டிக்கிடக்கிறது. அதைப் புதுப்பித்தால் இங்குள்ள மக்களுக்கும் வணிகர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பல சாதகங்கள் இருந்தாலும் சிறு சிறு பாதகங்களால் இன்னமும் உயரங்களை எட்டிப் பிடிக்க முடியாமல் நிற்கிறது ராணிப்பேட்டை. பாதகங்களைக் களைய உரியவர்கள் மனது வைத்தால் ராணிப்பேட்டை ராஜ கம்பீரத்தோடு ஜொலிக்கும்... இது நிச்சயம்!

‘ஊர்’வலம் - இராணிப்பேட்டை
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism