Published:Updated:

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

Published:Updated:
நடப்பு
ஷேர்லக் ஹோம்ஸ்
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஷேர்லக் ஹோம்ஸ்

கொஞ்சமும் கணிக்க முடியாத காஸ்ட்யூமில் வந்தார் ஷேர்லக். கையில் ப்ரேஸ்லெட், மோதிரம்... கழுத்தில் மொட மொட செயின்!

‘‘எ ன்ன ஷேர்லக்... இதென்ன கலாட்டா..? சென்னை கோட்டையில்தான் காஸ்ட்யூம் மாறிவிட்டது என்றால், நீங்களுமா..?’’ என்றபடி வரவேற்றோம்.

‘‘இன்றைக்கு என் பிறந்த நாள்! வீட்டில் இருப்பவர்கள் நச்சரித்ததால் இந்த வேஷம்... மற்றபடி வேறு ஒன்றுமில்லை’’ என்று வெட்கப்பட்டார்.

‘‘அதானே, பார்த்தோம். தங்க மகனாக ஜொலிக்கிறீரே..! ஆட்சி மாற்றம் பற்றிய பந்தயப் பணம் ஏதும் வந்ததோ என்று நினைத்தோம்...’’

‘‘இதில் பந்தயம் போட என்ன இருந்தது..?’’ என்று கொஞ்சம் சவடாலாகவே கேட்ட ஷேர்லக், ‘இன்னும் ஏறும்... ஆயிரத்தை எட்டும்’ என்று உங்கள் நிருபர் தங்க விலையேற்றம் பற்றி எழுதியது நடந்தேவிட்டது பார்த்தீரா..? நான்கு இலக்கத்தை எட்டி முத்தமிட்டு நிற்கிறதே தங்கம்..! தங்க மார்க்கெட்டில் லேட்டஸ்ட் தகவல் என்ன தெரியுமா..? இத்தனை விலையேற்றத்துக்கும் சர்வதேச சந்தையில் நிகழும் விலையேற்றத்தைத்தான் காரணமாகச் சொல்கிறார்கள். இப்படி விலை ஏற, இரான் தங்கம் வாங்கிக் குவிப்பதும் முக்கியமாகப் பேசப்படுகிறது. அந்த நாடு உலக ஜாம்பவானான அமெரிக்காவுக்கே சவால் விடுவது வெறும் வெத்து வேட்டில்லை.

ஒருவேளை அமெரிக்கா தங்கள் மீது தாக்குதலைத் தொடங்கினாலும் அதைச் சந்திப்பதற்கான ஆயத்தங்களை செய்யத் தொடங்கிவிட்டதாம் இரான். அதனால்தான் அவர்கள் தங்கமாக வாங்கிக் குவிக்கிறார்கள்’’ என்றார்.

‘‘அவர்கள் சண்டையில் நம் பாக்கெட் சரிகிறதே..! சரி, அடுத்த விஷயத்துக்குப் போவோமா?’’ என்றோம்.

‘‘இரண்டில் ஒரு விரலைத் தொடுங்கள்!’’ என்றார்.

‘‘என்ன விளையாட்டு இது..?’’ என்றபடி அவர் நீட்டியதில் ஆள்காட்டி விரலைத் தொட்டோம்.

‘‘இது அதிர்ச்சி செய்தி விரல்! இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் பங்குச் சந்தையில் ஒரு பெரிய சரிவு இருக்குமாம். மும்பையின் பங்குத்தரகு நிறுவனம் ஒன்று சொல்லும் தகவல் இது.

தடக்கென விழுந்தாலும் கிடுகிடுவென சில நாட்களில் சந்தை சீராகிவிடும் என்கிறார்கள். ஆனால், நீண்டகால அடிப்படையில் அச்சப்படும்படி ஒன்றும் இல்லையாம். உடனடியாக பங்கு வாங்கத் துடிப்பவர்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளச் சொல்லித்தான் அந்த நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்தத் தகவலைச் சொல்கிறதாம்’’ என்றார்.

‘‘மாதக் கடைசி என்ன...? இப்போதே பலரது போர்ட்ஃபோலியோக்கள் சிவப்புக் கொடி ஆட்டி, பேப்பர் லாபத்தையெல்லாம் தின்றபடிதானே இருக்கின்றன..!’’ என்றோம்.

‘‘இது சும்மா! ‘பெட்ரோல்’, ‘தேர்தல்’ பூச்சாண்டிகள் வேலை. நாளரு நூறு பாயின்ட்கள் ஏறிக் கொண்டே இருந்தால் என்னாவது..? சிறு சரிவுதானே, பொறுமையாக இருங்கள். சந்தைக்கு இது இளைப்பாறல் நேரம். இப்படி லேசாக இறங்கி எனர்ஜி ஏற்றிக்கொண்டு, மீண்டும் ஜிவ்வென மேலேறும் என்பது உங்களுக்குத் தெரியாததா என்ன?’’ என்றார்.

ஆறுதலடைந்த நாம், ‘‘சரி, அடுத்த விரல் தரும் செய்தி என்ன..?’’ என்றோம்.

‘‘நாட்டுக்காக ஆர்கானிக் கெமிக்கல் தயாரிக்கும் கம்பெனி பங்குகள் கூடிய விரைவில் அரை செஞ்சுரியை இலகுவாகத் தாண்டும் என்கிறார்கள். மும்பையைச் சேர்ந்த இந்த நிறுவனம் முன்னணி சகோதரர்களில் ‘சின்ன தம்பி’ கண்ணில் மாட்டியிருக்கிறதாம்.’’

‘‘ஓ.... மும்பை பிரதர்ஸுக்கு செம பெயர் சூட்டி இருக்கிறீர்களே... ‘சின்ன தம்பி, பெரிய தம்பி’ நன்றாகத்தான் இருக்கிறது பட்டங்கள்!’’ என்றோம் அவரது ரசனையைப் பாராட்டியபடி.

‘‘சுட்டெரிக்கும் மீடியா பங்கு ஒன்று பற்றி சந்தையில் உலவும் செய்தி என்ன தெரியுமா?’’

‘‘சன் டி.வி பற்றியா..?’’

‘‘அந்த விஷயத்தில் நான் முன்பு சொன்ன செய்தியில் இப்போதும் மாற்றம் இல்லை. அடுத்த ஆண்டுக்குள் சன் பங்குகள் இப்போது இருப்பதுபோல இரட்டிப்பாகவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். நான் சொல்ல வந்தது, இன்னொரு மீடியா கம்பெனி செய்தி! 100 ரூபாயைத் தொடத் துடிக்கும் இந்த பங்கு இன்னும் ஒரு மாதத்தில் 20% வரை ஏற்றம் காணும் என்கிறார்கள்’’ என்றவர், ‘‘ஓகே!’’ என்று தோள் குலுக்கினார், கிளம்ப ஆயத்தமானவராக.

ஜில்லென்று ஜிகர்தண்டா வரவழைத்துத் தந்தோம். ஒரு சிப் சாப்பிட்டவர், ‘‘டாடா காட்டுமுன் இந்த குளிர்பானத்துக்காக, மகாராஷ்டிராவில் தொலைபேசி பணியில் ஈடுபட்டுள்ள ஒரு கம்பெனியைப் பற்றிய செய்தியைச் சொல்லிவிடுகிறேன்.

நஷ்டத்தில் இயங்கி வந்த இந்த கம்பெனி பங்குகளில் இப்போது அதீத அக்கறை காட்டப்படுகிறதாம். ஆர்வம் உள்ள புரோக்கர்கள் சிலர் பரப்பும் இந்தச் செய்தியால் இப்போதைய விலையில் கணிசமான வளர்ச்சியிருக்கும் என்கிறார்கள்’’

‘‘கடந்த வாரத்தில் ஏறி, இறங்கிய குறைந்த விலைப் பங்கு நிறுவனத்தையா சொல்கிறீர்கள்..?’’

‘‘டெலிபோனில் சொல்கிறேன்...’’ என்று டாடா காட்டி, நாற்காலியைக் காலி செய்தார் ஷேர்லக்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism