Published:Updated:

சொன்னதை செய்ய முடியுமா?

சொன்னதை செய்ய முடியுமா?

சொன்னதை செய்ய முடியுமா?

சொன்னதை செய்ய முடியுமா?

Published:Updated:
நடப்பு
சொன்னதை செய்ய முடியுமா?
 

சொன்னதை செய்ய முடியுமா?

வாய்ப்புகளைச் சொல்கிறார்கள் வல்லுநர்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சொன்னதை செய்ய முடியுமா?

‘க லர் டி.வி\க்கும் கம்ப்யூட்டருக்கும் இடையே நடந்த தேர்தல்’ என்று சொல்லும் அளவுக்கு இந்தத் தேர்தலை ஆக்கிரமித்து, 234 தொகுதிகளிலும் போட்டியிட்டது வாக்குறுதிகள்தான்! ஆட்சியைப் பிடித்து, பதவியேற்றிருக்கும் புதிய தி.மு.க அரசு, இப்போது அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. வெற்றி பெற்றதும் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கருணாநிதியும் ‘கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வரிசைப்படி படிப்படியாக நிறைவேற்றப்படும்’ என்று சொல்லி இருக்கிறார்.

‘இந்த அறிவிப்புகள் பொருளாதார ரீதியாக எந்த அளவுக்குச் சாத்தியப் படும்..? இரண்டு ரூபாய் அரிசிக்கும் இலவச கலர் டி.வி-க்கும் எங்கிருந்து வரப்போகிறது நிதி... சமாளிப்பாரா முதல்வர் கருணாநிதி?’ என்ற கேள்வி களுக்கு விடைதேடி, நிதி மற்றும் நிர்வாகத்துறை நிபுணர்கள் சிலரைச் சந்தித்தோம்.

‘‘தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை யில் வெளியான திட்டங்களை அமல்படுத்த ஒருமுறை செலவாக ஆரம்பத்தில் 8 முதல் 10 ஆயிரம் கோடி ரூபாயும், அடுத்தடுத்த ஆண்டுகளில் 6 முதல் 8 ஆயிரம் கோடி ரூபாயும் தேவைப்படும் என உத்தேசமாகச் சொல்லமுடிகிறது. இதுதவிர, தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் குடும்பத்தில் ஒருவருக்கு ஓராண்டில் 100 நாட்கள் வேலை அளிக்கும் திட்டத்துக்காக மாநில அரசு சார்பில் 5 ஆயிரம் கோடி ரூபாயும் மற்ற சில திட்டங் களுக்கு சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரையும் செலவு வைக்கும் என்று தோன்றுகிறது.

‘இத்தனை பணத்துக்கு என்ன செய்வது? எங்கே போவது?’ என்று யோசித்தால், பதில் நம்மிடமே இருக்கிறது. இன்றைய நிலையில் மாநில அரசுக்கு வந்து சேரவேண்டிய வருமானத்தில் சுமார் 30% வசூலிக்கப் படாமலேயே இருக்கிறது. மாநில மின் வாரியத்துக்குச் சேரவேண்டிய மின் கட்டண பாக்கி, விற்பனை வரி பாக்கி, சொத்துவரி பாக்கி என மொத்தமாக 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலாகாமல் இருக்கிறது. இவற்றை தீவிர முயற்சி மேற்கொண்டு வசூல் செய்யலாம். அதேபோல, சொத்து வரி உள்ளிட்ட இனங்களில் வருமான வாய்ப்பு இருக்கிறது. பல தரப்புகளிலும் குறைத்து மதிப்பிடப்பட்டு சம்பந்தமில்லாமல் யாரோ இடையில் பலன் அடைந்து வரும் அந்த வழிகள் அடைக்கப்பட்டால் இன்னுமொரு 3,000 கோடி ரூபாய் அரசுக்கு நிதி கிடைக்க வாய்ப்பு உள்ளது. அடுத்து அரசுத் துறை நிறுவனங்களில் நிர்வாகக் காரணங்களால் நஷ்டத்தில் இயங்குபவனவற்றைச் சீர்திருத்தி லாபமீட்ட வைக்க முடியுமா என்று பார்க்கலாம். அதற்கு வாய்ப்பே இல்லை என்பனவற்றை பேசாமல் மூடிவிடலாம். இதனால் செலவாவது குறையும்.

சொன்னதை செய்ய முடியுமா?

மாநிலத்தில் மின்இழப்பு மற்றும் மின்திருட்டு மூலமான வருவாய் இழப்பு 20% வரை உள்ளது. இதைக் குறைத்தாலே கணிசமான வருமானம் கிடைக்கும். மின் உற்பத்தி நிலையங்கள் முழு உற்பத்தித் திறனுடன் செயல்பட கண்காணிப்பை முடுக்கி விடவேண்டும். ஊழியர் திறன், உற்பத்தித் திறன் போன்ற விஷயங்களில் தீவிர கவனம் செலுத்தினால் கட்டாயமாக பெரிய அளவில் வரிகளை உயர்த்தாமல் மக்கள் முகச்சுளிப்புக்கு ஆளாகாமல் நிலைமையைச் சமாளிக்கமுடியும். இதற்கு ஆலோசனை சொல்வதற்கு உடனடியாக ஒரு குழுவை அமைத்து, 3 மாத காலத்துக்குள் நிதி மற்றும் வருவாய் சீரமைப்பு ஆலோசனைகளைப் பெற்று அதை மனப்பூர்வமாக அமலாக்க வேண்டும். அப்படிச் செய்தால் சிக்கல் இன்றி மாநில அரசு தேவை யான நிதி ஆதாரங்களைப் பெறமுடியும்’’ என்று சொல்கிறார் மாநில தலைமைச் செயலாளராக இருந்தவரும் பொருளாதாரக் கட்டுரைகள் எழுதிவருபவருமான பி.எஸ். ராகவன்.

ராஜாஜி சென்டர் ஃபார் பப்ளிக் அஃபயர்ஸ் தலைவரும் முன்னணி ஆடிட்டரான ஜி. நாராயணசாமி, ‘‘விற்பனை வரி மூலமாகவும், சேவை வரி போன்றவற்றில் மத்திய அரசு கொடுக்கும் பங்கு மூலமாகவும் கிடைக்கும் வருமானம்தான் மாநில அரசின் முக்கிய நிதி ஆதாரம். இதில் பெரிய வளர்ச்சி யை எதிர்பார்க்கமுடியாது. அதிகபட்சமாக 5 முதல் 10% கூடலாம். வாக்குறுதிகளை நிறைவேற்ற இந்த நிதி மட்டுமே போதாது.

வருமானத்துக்கான வழிகளைத் தேடுவது ஒருபக்கம் என்றால், செலவுகளைக் கட்டுப்படுத்தவதன் மூலமாகவும் நிதி ஆதாரங்களைத் தேடலாம்.

சொன்னதை செய்ய முடியுமா?

விவசாயத்துக்கு முன்னுரிமை தரலாம். வழக்கமான பாரம்பரிய வழிகளிலேயே விவசாயிகள் தொடர்வதை மாற்றி, நவீன விவசாய முறைகளை மக்களுக்குப் பயிற்றுவித்து விவசாயத்தை வளர்ச்சி பெறச் செய்யவேண்டும். தண்ணீர், உரங்கள் போன்றவற் றைப் பயன்படுத்துவதில் நாம் சிக்கனமாக இருப்பதில்லை. பயிரிடும் முன் மண் பரிசோதனை செய்து, என்ன பயிர் விதைக் கிறோமோ அதற்குத் தேவையான இடுபொருட்களை மட்டும் பயன் படுத்தும்படி செய்தால் விவசாயம் லாபகரமானதாகிவிடும்.

அடுத்து, விளைந்த விவசாயப் பொருள்களை சரியான முறை யில் பாதுகாத்துப் பயன்படுத் துவதிலும் கவனம் செலுத்த வேண்டும். நம்நாட்டில் விளையும் காய்கறி, பழ வகைகளில் 80% வரை வீணடிக்கப்படுவதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. குளிர்பதன வசதி, உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் போன்றவை கிராமப் புறங்களிலேயே தொடங்கப்பட வேண்டும். அந்த தொழில்களுக்கு வலு சேர்க்க கிராமப்புற சாலைகள், மற்ற கட்டமைப்பு பணிகளை வலுப்படுத் தும்போது அதன் மூலமும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.

இப்படிச் செய்வது இன்னொரு வகையிலும் பலன் தரும். அதாவது, வேலை தேடி நகரங்களுக்கு இடம் பெயர்பவர்களின் எண்ணிக்கை குறையும். இதனால் நகரங்களின் பளு குறையும். இருக்கும் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டிய அவசர நிர்ப்பந்தங்கள் குறையும். அந்தத் தொகையை விவசாயம் சார்ந்த கட்டமைப்புப் பணிகளை வலுப்படுத்த பயன் படுத்திக்கொள்ளலாம்.

இப்படியெல்லாம் வேலை வாய்ப்பும், அதன் மூலம் வியாபாரமும் பெருகுவதால் மாநில அரசுக்கு வரி வசூலும் அதிகரிக்கும். கிராமப்புற பொருளாதாரமும் சீர் படும். இதுபோன்ற நடவடிக்கை களால் அரசின் சலுகைகளை எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் ஏழை களின் எண்ணிக்கையே குறைந்து விடுமே!’’ என்றார் பளிச்சென்று.

வருமான வரித்துறை தீர்ப்பாயத் தின் முன்னாள் உறுப்பினரும் வருமான வரித்துறை ஆலோசகரு மான எஸ்.ராஜரத்தினம் சொன்னது சற்று புதுமையான திட்டம்.

சொன்னதை செய்ய முடியுமா?

‘‘நம் மாநிலத்தில் தங்கத்துக்கு மரியாதை அதிகம். இந்தியாவில் இருக்கும் தங்கத்தில் கணிசமான பகுதி தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் இருப்பதாக ஒரு கணக்கு உள்ளது. இந்த தங்கத்தையெல்லாம் பாண்ட்கள் வெளியிட்டு, நிதி திரட்டிக் கொண்டு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பணத்தை அரசு திரும்பத் தரலாம். இது முன்பு மத்திய அரசு செய்ததுதான். அதை இப்போது மாநில அரசு செய்யலாம்.

அதே போல 15 ஆண்டுகளுக்கு முன்பு மாநில அரசு சார்பிலேயே ‘தமிழ்நாடு சிட்ஃபண்ட்ஸ்’ என்ற பெயரில் ‘சிட்’கள் நடத்திக் கொண்டிருந்தார்கள். அதை மீண்டும் தொடரலாம். இப்படி அரசு சார்பில் நடத்தப்பட்டால் உத்தரவாதம் இருக்கிறது என பெருமளவு அரசு ஊழியர்களே அதில் சேருவார்கள். அவர்களது சம்பளத்தில் இருந்து சந்தா தொகையைப் பிடித்துக் கொள்ள வழிகள் உண்டு. இதன் மூலம் அரசிடம் பணப்புழக்கம் ஏற்படும். இதைக்கொண்டு திட்டங்களை நிறைவேற்றலாம்.

அதேபோல கிராமப்புற சாலைகள், மற்ற அடிப்படை கட்டமைப்புப் பணிகளில் ஈடுபடுவதன் மூலம் அங்கெல்லாம் கிராம வேலை வாய்ப்புகள் உண்டாக்கி, மக்களின் வருமானத்தை அதிகரிக்க முடியும். மக்களிடம் நிதி திரட்டி மணிமுத்தாறு நீர்தேக்கத்தைக் கட்டத் தொடங்கியது போல, பல திட்டங்களுக்கு மக்களிடமே பணம் திரட்ட முடியும். பணி முடிந்த பிந்தைய காலப் பயன்பாட்டுக்குப் கட்டணம் வசூல் செய்து பணத்தைத் திரும்பத் தரலாம். அண்மை யில் மதுரை பைபாஸ் சாலை திட்டத்துக்கு செலவழித்த தொகையைக் கூட ஓராண்டில் திரும்பப் பெற்றதாகச் சொல்கிறார்கள்.

சொன்னதை செய்ய முடியுமா?

திட்டத்தை கையில் எடுக்கும் துணிச்சல் இருந் தால், வர்த்தக நோக்கத்தி லேயே இதுபோன்ற திட்டங் களை எடுத்து நிறைவேற்ற லாம். ‘தமிழ்நாடு அடிப் படை கட்டமைப்பு வளர்ச்சி நிதி’ தொகுப்பில் இருக்கும் பெருமளவு பணம் ‘கையில் திட்டங்கள் இல்லை’ என்ற காரணத்தால் வங்கி ஒன்றில் தூங்கிக் கொண்டு இருப்பதாகவும் அண்மை யில் கேள்விப்பட்டேன். அதைக் கிராம திட்டங் களுக்குப் பயன்படுத்தலாம்.

அடுத்து மாநில பொதுத்துறை நிறுவனங்கள் பலவும் பல கோடி ரூபாயை இன்ஷூரன்ஸ் பிரீமியமாக செலுத்திக்கொண்டிருக்கிறது. இதைச் சேமிக்க முடியுமா என்பதை யோசிக்கவேண்டும். தனியார் துறை இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் பல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அளவு சம்பளம் கொடுத்தால் இங்கும் ஆட்கள் வந்து வேலை செய்வார்கள். அவர்கள் மூலம் அரசே புதிய இன்ஷூரன்ஸ் கம்பெனி தொடங்கலாம். அதேபோல நீண்ட கால முதலீடு வேண்டி மியூச்சுவல் ஃபண்ட் தொடங்குவதும் சாத்தியம்தான்’’ என்றார் அவர்.

‘ஏழைகளுக்குக் கலர்ப்படம் காட்ட, நம்மை வரிச்சுமைக்குள் தள்ளிவிடுமோ தி.மு.க அரசு..?’ என்ற பீதியோடு இருக்கும் நடுத்தர மக்களைத் தொந்தரவுக்கு ஆளாக்காமல், இதுபோன்ற வகைகளில் நிதி ஆதாரம் தேடுவது புதிய அரசுக்கு நல்லது. வாக்களித்த மக்கள் விரும்புவதும் அதைத்தான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism