Published:Updated:

ஒரு லிட்டர், நூறு ரூபாய்!

ஒரு லிட்டர், நூறு ரூபாய்!

ஒரு லிட்டர், நூறு ரூபாய்!

ஒரு லிட்டர், நூறு ரூபாய்!

Published:Updated:
நடப்பு
ஒரு லிட்டர், நூறு ரூபாய்!
 

ஒரு லிட்டர், நூறு ரூபாய்! வயிற்றைக் கலக்கும் வதந்திகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு லிட்டர், நூறு ரூபாய்!

ங்கள் பட்ஜெட்டில் இப்போது பெட்ரோலுக்கு எவ்வளவு பணம் ஒதுக்குகிறீர்கள்..? இன்னும் சில மாதங்களில் அதே அளவு பணம் ஒதுக்கினால் பாதிதூரம்தான் போகமுடியும், ஏனென்றால்... கொஞ்சம் திடமாக உட்கார்ந்துகொள்ளுங்கள். இதே போக்கில் இருந்தால் பெட்ரோல் விலை சீக்கிரமே டபுளாகிவிடும் என்கிறார்கள்.

லி ட்டருக்கு நூறு தருவதாக வண்டி விற்பவர்கள் சொன்ன காலம் போய், அரசாங்கம், நூறுக்கு ஒரு லிட்டர் தரும் காலத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம் நாம். கொஞ்சம் கசப்பு மருந்தாக இருந்தாலும் இந்த உண்மையை உணர்ந்து சுதாரித்து, முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்வது நல்லது.

தேர்தல்கள் முடிந்துவிட்டநிலையில், மத்திய அரசு எடுக்கப்போகும் தீவிர நடவடிக்கை பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை உயர்த்துவதுதான் என்ற பேச்சு தீவிரமடைந்திருக்கிறது. இனியும் தாமதிக்கமுடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்தில் இருந்து செய்திகள் வரத் தொடங்கியுள்ளன. விலையேற்றத்தைத் தள்ளிப்போடாதீர்கள். அழுத்தம் தாங்காமல், வெடித்தால் அப்போது மத்திய அரசால் தாங்கமுடியாது என்பது அவர்களுடைய வாதம்.

என்ன அழுத்தம்... ஏன் தாங்க முடியாது? சற்று விரிவாகப் பார்ப்போம்...

ஒரு லிட்டர், நூறு ரூபாய்!

சர்வதேச சந்தையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐம்பது டாலர்களாக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை, இப்போது கிட்டத்தட்ட 75 டாலர். அடுத்த மூன்று நான்கு மாதங்களுக்குள் அது நூறு டாலரைத் தொடலாம் என்கிறார்கள் எண்ணெய் வர்த்தக நிபுணர்கள்.

சீரான வேகத்தில் முன்னேறிக்கொண்டிருக்கும் இந்தியாவும் சீனாவும், தங்கள் வளர்ச்சியைத் தொடர, பல துறைகளில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அந்தத் துறைகளுக்கு அடிப்படைத் தேவையாக இருப்பது பெட்ரோலியப் பொருட்கள். அதனால், நம்முடைய தேவை அதிகமாகிக் கொண்டே போக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்காகப் போட்டி போடும் நிலை. ஏற்கெனவே, அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் அதிக தேவையுடன் இருக்க... போட்டியாளர்கள் அதிகமானதால், பொருளின் விலையும் அதிகமாகிக் கொண்டே போகிறது!

இன்னொரு பக்கம் பார்த்தால், எண்ணெய் வளம் மிக்க இரான், இராக், நைஜீரியா போன்ற நாடுகள் தங்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்னைகளால் எண்ணெய் சப்ளையை முழுவீச்சில் செய்யமுடியாத நிலையில் இருக்க... விளைவு - விலை எகிற ஆரம்பித்துவிட்டது.

எரிகிற தீயில் எண்ணெயாக, ‘உலக அளவில் எண்ணெய் உற்பத்தி உச்சத்தை எட்டிவிட்டது. இனிமேல் எண்ணெய் வளங்களே இல்லை. மேலும் தோண்ட முடியாது’ என்றெல் லாம் வதந்தி கிளப்பி, கிலியூட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பெட்ரோலியத்தைத் திரவத் தங்கம் என்பார்கள். உலகம் முழுவதும் அதன் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதால், அதைக் கைக்குள் வைத்திருந்தால்தான் எதிர்காலத்துக்கு வழி என்று நினைத்து, உலகின் பல நாடுகள் அதைவைத்து நடத்தும் அரசியலும் இந்த கச்சா எண்ணெய் விலையேற்றத்துக்குக் காரணம் என்கிறார்கள்.

இதெல்லாம் உலக நிலவரம்... இது இந்திய அளவில் பாதிப்பை ஏற்படுத்தத் தான் செய்யும் என்றாலும் இந்தியாவின் சில உள்நாட்டு நிலைமைகளும்தான் இந்த அபரிமிதமான விலை உயர்வுக்கு வழி வகுத்திருப்பதையும் மறுப்பதற்கு இல்லை.

ஆண்டுக்கு 10% வளர்ச்சி என்று முன்னேறிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் கச்சா எண்ணெய் தேவைக்கு 70% வரை இறக்குமதி செய்யும் நிலையில்தான் இருக்கிறோம்.

கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையுயர்ந்தபோது, நம் இறக்குமதிச் செலவு கிட்டத்தட்ட 52% உயர்ந்துவிட்டது. சர்வதேச சந்தைக்கேற்ப உள்நாட்டு சில்லறை விலையை ஏற்றாமல், அரசியல் காரணங்களால் அதைத் தள்ளி வைத்து, தள்ளி வைத்து எண்ணெய் நிறுவனங்கள்மேல் ஏற்றிவிட்டார்கள். இதனால் நஷ்டம் முழுவதும் எண்ணெய் நிறுவனங்களைச் சுற்ற ஆரம்பித்து விட்டது.

‘‘2005-06\ம் ஆண்டில், இந்த எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் கெரசினில் 14,384 கோடி, சமையல் எரிவாயுவில் 10,245 கோடி, டீசலில் 13,284 கோடி, பெட்ரோலில் 2,680 கோடி என்று சுமார் 40,595 கோடி ரூபாய். இந்த நிலை தொடர்ந்தால், 2006\07ம் ஆண்டில், இந்த நஷ்டம் 73,512 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துவிடும்.

பெரிய நிறுவனங்கள்தானே நஷ்டமடைகின்றன என்று கவனிக்காமல்விட்டால், அது வைரஸ் போல பரவி, நம்நாட்டின் வளர்ச்சியில் பெரிய பாதிப்பை உண்டாக்கிவிடும்’’ என்கிறார்கள் இத்துறையைக் கூர்ந்து கவனித்து வருபவர்கள். “ஓராண்டு காலகட்டத்தில் சராசரியாக எண்ணெய் விலை பத்து டாலர் உயருமானால், அது ஆசியாவின் வளர்ச்சியை 0.6% பாதிக்கும். இதுவரை 20% அளவுக்கு எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. இது இந்தியாவின் வளர்ச்சியை 1.1% பாதிக்கும்” என்று சொல்கிறார் ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமை பொருளியல் நிபுணர் இப்சால் அலி.

ஒரு லிட்டர், நூறு ரூபாய்!

நிறுவனங்களின் சுமையைக் குறைத்து இந்த விலை உயர்வை எப்படி மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்பதுதான் அரசின் கையில் இப்போது இருக்கும் மிக முக்கியமான பிரச்னை. சேலையில் விழுந்த முள் மாதிரி அணுகவேண்டிய இப்பிரச்னையில் சேலையாக இருப்பது சமையல் எரிவாயு மற்றும் கெரசினை நம்பி இருக்கும் கோடிக்கணக்கான நடுத்தர அடித்தட்டு மக்கள். ‘அந்த மக்களின் பட்ஜெட்டில் கை வைக்காமல் எப்படி விலை உயர்வைக் கொண்டுவருவது?’ என்ற கேள்விதான் இப்போது ஆளும் அரசைக் குடைந்து கொண்டிருக்கிறது. இன்றுவரை இதற்கான பதில் கிடைத்ததாகத் தெரியவில்லை.

2002 ஏப்ரல் வரை ஒரு திட்டம் நடைமுறையில் இருந்தது. ஆயில் பூல் அக்கவுன்ட் ( Oil Pool Account ) என்று அதற்குப் பெயர். ஒவ்வொரு எண்ணெய் விலையேற்றத்தையும் தாங்கிக்கொண்டு, சாதாரண மக்களுக்குப் பாதிப்பு அதிகம் தெரியாமல் பாதுகாத்து வந்த ஐம்பதாண்டு கால நிதிக் களஞ்சியம் இது. கச்சா எண்ணெயின் சந்தை விலை குறையும்போது, இந்தக் களஞ்சியத்தில் வருமானம் அபரிமிதமாகச் சேரும். சர்வதேச சந்தையில் விலை உயரும்போது அதை ஈடுகட்ட இந்த நிதித்தொகுப்பு கைகொடுக்கும். எண்ணெய்க்காக இருந்த இந்த நிதித் தொகுப்பில் அதீதமாக சேர்ந்துவிட்டது பணம்.

அப்படி உபரியாகச் சேர்ந்த நிதியை பிற வளர்ச்சிப் பணிகளுக்குச் செலவழிக்க ஆரம்பித்து ஒரு கட்டத்தில் இந்தக் களஞ்சியமே காலியாகிவிட்டது. 2002\ம் ஆண்டு யஸ்வந்த் சின்ஹா நிதியமைச்சராக இருந்தபோது அவரிடம், ‘கச்சா எண்ணெய் இறக்குமதித் தீர்வைகளைப் படிப்படியாகக் குறைத்து, பின்னர் முற்றிலும் நீக்கிவிடலாம். அதன்மூலம், சர்வதேச சந்தை விலையை அப்படியே இங்கே வைத்துக்கொள்ளலாம்’ என்று யோசனை சொல்லப்பட... அப்போதைக்கு நன்றாக இருந்த அந்த யோசனையை ஏற்று அவரும் இந்தக் களஞ்சியத்தை மூடிவிட்டார்.

ஆனால், களஞ்சியமும் இல்லாமல், இறக்குமதி தீர்வைகளைக் குறைக்கவும் முடியாமல் சிக்கலில் சிக்கிவிட்டது மத்திய அரசு. தீர்வைகளை நீக்கவேண்டும் என்ற கோரிக்கையைத்தான் இப்போது இடதுசாரிகள் சொல்கிறார்கள். ஆனால், ‘‘அந்த வருமா னத்தைக் கணக்கில்கொண்டுதான் ஏராளமான சமூக நலத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதைக் குறைக்கவோ நீக்கவோ முடியாது’’ என்கிறார் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

இன்னொருபக்கம், மாற்று எரிசக்தி வசதிகளை பெருக்கி, பயன்படுத்தவேண்டும் என்றும், உள்நாட்டிலேயே எரிவாயு கண்டு பிடிப்புப் பணிகள், எண்ணெய்த் துரப்பனப் பணிகளை மேம்படுத்தவேண்டும் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால், நாட்டின் தேவைக்கு அதெல்லாம் எந்த அளவுக்குக் கைகொடுக்கும் என்பது தெரியவில்லை.

‘‘இறக்குமதித் தீர்வைகள் எவ்வளவு வசூலிக்கவேண்டும் என்று நிதி அமைச்சகம் திட்டமிட்டபோது, கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 60 டாலர் இருக்கும் என்று கணக்கிட்டுத்தான் பட்ஜெட்டில் வருமானம் கணக்கிடப்பட்டுள்ளது. இன்று கச்சா எண்ணெய் விலை 70 டாலருக்கு மேல் போகும்போது, வருமானம் மேலும் கூடத்தானே செய்கிறது. அப்படிச்செய்யாமல், 60 டாலருக்கான அளவிலேயே தீர்வைகள் வசூலிக்கப்பட்டால், விலை உயர்வு பாதிப்பு மக்களை அதிகம் துன்புறுத்தாது!’’ என்றும் யோசனைகள் சொல்லப்படுகின்றன.

நல்ல யோசனைகள். செய்வாரா சிதம்பரம்? மக்களைப் பாதிக்காமல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற அக்கறையோடு இந்த விஷயத்தை அணுகினால் நல்லது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism