Published:Updated:

சம்பாதிக்காவிட்டாலும் சேமியுங்கள்!

சம்பாதிக்காவிட்டாலும் சேமியுங்கள்!

சம்பாதிக்காவிட்டாலும் சேமியுங்கள்!

சம்பாதிக்காவிட்டாலும் சேமியுங்கள்!

Published:Updated:
சேமிப்பு
சம்பாதிக்காவிட்டாலும் சேமியுங்கள்!
 

சம்பாதிக்காவிட்டாலும் சேமியுங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சம்பாதிக்காவிட்டாலும் சேமியுங்கள்!

ழக்கம் போல இரவு சாப்பிடும் நேரம்... ரங்கராஜன் வீட்டில் குடும்ப மீட்டிங் ஆரம்பமானது. ரங்கராஜன் திருச்சியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் மனைவி லதா குடும்பத் தலைவி. மகன் கார்த்திக், பிஷப் ஹீபர் கல்லூரியில் படிக்கிறான். மகள் பிரேமா பள்ளியில் படிக்கிறாள்.

சாப்பாட்டை அளைந்து கொண்டே இருந்த ரங்கராஜனிடம் வழக்கமான கலகலப்பு மிஸ்ஸிங். ஜார்ஜ் புஷ் தொடங்கி முனைக்கடை அண்ணாச்சி வரை அத்தனை பேரையும் கமென்ட் அடித்து சிரிக்கச் சிரிக்கப் பேசும் ரங்கராஜன் டல்லாக உட்கார்ந்திருந்தார்.

‘‘என்னங்க... பணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டீங்களா... முப்பதாம் தேதிக்குள்ள கட்டணுமே?’’ லதா பேச்சைத் தொடங்கினார்.

விஷயம் இதுதான். ஒரு எதிர்பாராத செலவு காரணமாக மாத பட்ஜெட்டில் துண்டு விழுந்துவிட்டது. வங்கிக்கு கட்ட வேண்டிய வீட்டுக்கடன் ஈ.எம்.ஐ\க்கு பணம் குறைகிறது. நாளைக் குள் வங்கிக் கணக்கில் பணத்தைக் கட்டாவிட்டால் அபராதம், அது இதுவென ஏகக் குழப்பமாகி விடும். எப்படியாவது சமாளித்து விடலாம் என்று நினைத்த ரங்கராஜனால் முடியவில்லை. அவர் எதிர்பார்த்த இடத்தில் பணம் கிடைக்காததால், முதல் நாள் மாலையில் மனைவியிடம் சொன்னார். அப்போதுகூட, ‘‘இன்னொருவரிடம் கேட்டிருக்கிறேன். கண்டிப்பாகக் கிடைத்து விடும்’’ என்று சொல்லியிருந்தார். இப்போது, அதுவும் இல்லை என்கிற சூழல். தன் நிலையை விளக்கிச் சொன்னார் ரங்கராஜன்.

பிள்ளைகளும் லதாவும் சட்டென எழுந்துவிட்டார்கள். ‘பண விஷயத்தில் கில்லாடி என்று நினைத்திருந்த தனக்கு சங்கடம் வரக்கூடாது என்று அவர்கள் எழுந்து போயிருக்கலாம்’ என்று நினைத்த ரங்கராஜன் பெருமூச்சோடு என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார். எதிரே நிழலாட, மனைவி நின்றிருந்தார். அவர் கையில் ஒரு காசோலை. ‘‘என்ன லதா... இது யார் கொடுத்த செக்?’’ என்று ஆச்சரியமாகக் கேட்டபடி, செக்கை வாங்கிப் பார்த்தார். ரூபாய் பத்தாயிரம் மட்டும் என்று எழுதி, கீழே லதா என்று குண்டுகுண்டான கையெழுத்து. அதிர்ந்துவிட்டார்.

‘‘உன் பேங்க் அக்கவுன்ட்டில் இவ்வளவு பணம் இருக்கா... இதுவரை எனக்குச் சொல்லவே இல்லையே... பத்தாயிரம் ரூபாய் சேர்ந்தது எப்படி..?’’ என்று ஆச்சரியத்தோடு கேட்டார் ரங்கராஜன். பிள்ளைகள் வந்து நிற்க... அவர்கள் கையிலும் வங்கி பாஸ் புத்தகங்கள்.

சம்பாதிக்காவிட்டாலும் சேமியுங்கள்!

‘‘தேவைப்பட்டால் எங்கள் கணக்கில் இருந்துகூட பணம் எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்று அவர்கள் நீட்டிய பாஸ் புத்தகத்தை வாங்கிப் பார்த்தார் ரங்கராஜன். இரண்டு பேருமே இரண்டாயிரம் ரூபாய்க்குக் குறைவில்லாமல் சேமித்திருந்தார்கள்.

ரங்கராஜனின் குழப்பம் தீர்ந்தது. உங்களுக்கு குழப்பம் ஆரம்பித்திருக்குமே...! எதற்கு ஒரே வீட்டில் இத்தனை பேருக்கு வங்கியில் கணக்கு என்று!

குடும்பத்தில் எல்லோரும் சம்பாதிக்கிறோமோ இல்லையோ எல்லோரும் சேமிக்கவேண்டும். அவரவர் கையில் கிடைக்கும் பணத்தை அவரவர் செலவு செய்து கொண்டே போனால், தேவை என்று வரும்போது திணற வேண்டியதாகிவிடும்.

உழைப்பவர் ஒருவராக இருந்தாலும் செலவு என்பது எல்லோருக்கும் இருக்கிறதே... அப்படி செலவுக்குக் கிடைக்கும் பணத்தில் கொஞ்சம் சேமித்து வைக்கும்போது தேவைப்படும் நேரத்தில் வெளியில் கையேந்த வேண்டிய நிலை ஏற்படாது. இப்போது ஒரு சேமிப்புக் கணக்குத் துவங்க 25 ரூபாய்கூடப் போதும் என்கிற அளவுக்கு பல வங்கிகள் திட்டங்கள் வைத்திருக்கின்றன.

அதனால், வீட்டில் இருக்கும் பெரியவர்கள், குழந்தைகள் பெயரில் கணக்கைத் துவக்கிவிட்டால், அவர்களுக்குக் கிடைக்கும் பணத்தைச் சேமிக்கத் தொடங்குவார்கள். குழந்தைகளுக்கு சேமிக்கச் சொல்லிக் கொடுப்பதன் மூலம் வாழ்க்கையின் அர்த்தத்தைக் கற்றுக்கொடுக்க ஆரம்பியுங்கள்.

அவர்களுக்குக் கிடைக்கும் பாக்கெட் மணியில் ஒருபகுதியை சேமிக்கச் சொல்லி, பெரும் தொகை சேர்ந்தவுடன் அவர்களுக்கே உபயோகமான பொருளை வாங்கிக்கொடுங்கள்.

புதிய இலக்குகளை நிர்ணயித்து, சேமிக்கத் தூண்டுங்கள். விருந்தாளிகள், நண்பர்கள் வீட்டுக்கு வரும்போது, ‘‘இது நான் என் பிள்ளைக்கு வாங்கிக் கொடுத்தது... இது என் பிள்ளை தானே பணம் சேர்த்து வாங்கியது!’’ என்று பாராட்டிச் சொல்லுங்கள். உங்கள் வார்த்தைகள் அவர்களை மேலும் சேமிக்கத் தூண்டும். குழந்தைகளும் ஓய்வான நேரத்தில் ஏதாவது பகுதி நேர வேலை பார்த்து சம்பாதிப்பதையும் சேமிப்பார்கள்.

அதேபோல, பெண்களும் செய்யவேண்டும். ‘வீட்டில்தானே இருக்கிறோம். நாம் சேமித்து என்னாகி விடப்போகிறது..?’ என்று அலட்சியம் காட்டாதீர்கள். ஒரு இக்கட்டான தருணத்தில் நீங்கள் கைகொடுக்கும்போது உங்கள் குடும்பமே ஆனந்தப் பெருமூச்சு விடும். அதுதான் உங்களுக்கு அழகு!

சம்பாதிக்காவிட்டாலும் சேமியுங்கள்!

வருடம் முழுக்க சேரும் பணத்துக்கு செலவு ஏதும் வரவில்லை என்றால் அத் தொகையை வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட்டாக மாற்றிப் போடுங் கள். அது மேலும் பெருகும்.

சேமிப்பு ஒரு பழக்கம். பழகினதை விட முடியாது என்பது கெட்ட பழக்கத்துக்கு மட்டும் இல்லை, நல்ல பழக்கத்துக்கும் பொருந்தும். இந்தப் பழக்கத்தை விட்டுவிடாதீர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism