Published:Updated:

ஒரு நாள் முதலாளி - வாட்டர், ஜூஸர்... திருப்பூரில் திருவிழா!

ஒரு நாள் முதலாளி - வாட்டர், ஜூஸர்... திருப்பூரில் திருவிழா!

ஒரு நாள் முதலாளி - வாட்டர், ஜூஸர்... திருப்பூரில் திருவிழா!

ஒரு நாள் முதலாளி - வாட்டர், ஜூஸர்... திருப்பூரில் திருவிழா!

Published:Updated:
தொழில்
ஒரு நாள் முதலாளி - வாட்டர், ஜூஸர்... திருப்பூரில் திருவிழா!
 

வாட்டர், ஜூஸர்... திருப்பூரில் திருவிழா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு நாள் முதலாளி - வாட்டர், ஜூஸர்... திருப்பூரில் திருவிழா!

ரிகளில் ஒரு நளினத்தோடு நம் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தார் திருப்பூர் வாசகர் பிரம நாயகம். தனியார் நிறுவன ஊழியர்.

‘நான் திருநெல்வேலி ஆளு. அல்வா மாதிரி ஆயிரம் ரூபாயைக் கொடுங்க... பனியன் நகரத்துல பணத்தைப் பெருக்கிக் காட்டறேன்!’ என ஆர்வம் பொங்கியது அவர் வரிகளில். அவரை ‘ஒரு நாள் முதலாளி’ ஆக்கி ஆயிரம் ரூபாயை நீட்டினோம்.

எம்.எல்.ஏ. ஸீட் கிடைத்த அரசியல்வாதி மாதிரி சுறுசுறுப்பாகிவிட்டார் பிரமநாயகம். ‘‘வாங்க, கோவை வரை போய்ட்டு வந்துடுவோம்!’’ என நம்மை அழைத்துச் சென்றவர், கோவையில் இருந்த நண்பர் கடைக்குள் புகுந்தார். ‘‘அண்ணன் கடையிலே எப்பவுமே நியாயமான ரேட்டுங்க. சரியான ரேட்ல தான் எல்லாருக்கும் விற்பார்...’’ என கடைக்காரரை நமக்கு அறிமுகம் செய்ய, ஐஸ் கட்டியாக உருகிப்போனார் அவர்.

சரக்கு கைமாறியது. உற்சாகமாக திருப்பூர் புறப்பட்டார். திருப்பூரில் வியாபாரம் துவங்கியது. பிரமநாயகம் கையில் 6 கேஸ் லைட்டர்கள் (அசல் 45, வெளியே 75), 5 ஜூஸர் (அசல் 65, வெளியே 95), 6 சிப்பர் வாட்டர் பாட்டில் (அசல் 22, வெளியே 30), 6 ஸ்பின் வாட்டர் பாட்டில் (அசல் 30, வெளியே 40) போன்ற வகைகள்.நீள சீப்பு ஒரு ரூபாய் வீதம் 30 வாங்கிக் கொண்டார். [சரக்கு 937 + கைச்செலவுக்கான 63 = 1,000]

ஒரு நாள் முதலாளி - வாட்டர், ஜூஸர்... திருப்பூரில் திருவிழா!

‘‘இந்தச் சீப்புதான் எல்லாப் பொருளையும் விற்றுத் தரப் போகுது’’ என்று பிரமநாயகம் சொன்னபோது ஒன்றும் புரியவில்லை. அவரது வியாபாரத்தில் அதைக் கவனித்துக்கொள்வோம் என்று அவரை ஃபாலோ பண்ண ஆரம்பித்தோம்.

பழைய பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த ஒரு நபரிடம், ‘‘சார்... ஜூஸர் சார்! பழத்தைப் புழிஞ்சா கொட்டை மேலே நின்னுடும். அடியிலே ஜூஸ் மட்டும் இருக்கும். வாங்கிப் பாருங்க சார்...!’’ என பிரமநாயகம் கெஞ்ச...

சார் கவனிக்காதது மாதிரி நடக்கப் பார்த்தாலும் அவருடைய மனைவி ஆர்வமாகிவிட்டார். ‘‘எவ்வளவு..?’’ என அவர் கேட்க, ‘‘நூறு ரூபாம்மா’’ என பிரமநாயகம் சொன்னார். அப்படி இப்படி திருப்பிப் பார்த்து விட்டு, ‘‘இலவசமா ஏதும் தருவியா?’’ என்றபடி பிரமநாயகத்தின் கையில் இருந்த பையைப் பார்த்தார்.

‘‘ஓ... ஒரு சீப்பு தரலாம்..’’ என தடாரென்று ஆஃபரை (ஜூஸரும் சீப்பும் என்ன காம்பினேஷனோ?!) அறிவித்தவர், ‘‘இது ஸ்பெஷல் ஜூஸர்... இதுக்கு லாக் இருக்கு. அதைப் போட்டுட்டா கீழே விழாது.’’ என்று ஜூஸர் விளக்கம் கொடுத்தார். இலவச அறிவிப்பு மட்டுமில்லாமல், ஐந்து ரூபாய் தள்ளுபடியும் தந்து முதல் வியாபாரத்தை ஆரம்பித்தார் பிரமநாயகம்.

பஸ் ஸ்டாண்டில் பல ரவுண்ட் அடித்தும் அடுத்த அடி வைக்க வாய்ப்பில்லாமல் இருந்தது. ‘‘இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமைதானே... வாங்க நகராட்சி பார்க்குக்குப் போவோம். கூட்டம் அலைமோதும்... வித்து தள்ளிடுவோம்!’’ எனப் புறப்பட்டார்.

ஒரு நாள் முதலாளி - வாட்டர், ஜூஸர்... திருப்பூரில் திருவிழா!

அங்குள்ள டி.வி முன்பு ஒரு கும்பலே படுத்துக் கிடந்தது. காதலர்கள் வழக்கம் போல முதுகை காட்டிக்கொண்டு பேசிக்கொண்டு இருந்தனர். ‘‘பெரும்பாலும் இங்கே வெளியூர்க்காரங்க கூட்டம்தான் இருக்கும். இது அவங்க ஓய்வு இடம்.ரெண்டு ரூபா கொடுத்துட்டு இயற்கை காத்தோட தூக்கம்போடலாம் பாருங்க! சரி, நம்ம வியாபாரத்தைக் காதல் ஜோடிகள்கிட்ட ஆரம்பிப்போம்.’’ என்றபடி, ‘‘வணக்கம் மேடம். இது மார்க்கெட்டுக்கு புதுசா வந்திருக்கிற ஜூஸர். வெயில் காலத்துல ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். வெளியே இருநூறு ரூபாய். கம்பெனி விளம்பரத்துக்காக ஒன்லி ஹன்ட்ரட் ருபீஸ். தரமானது மேடம். சும்மா பாருங்க...’’ என்றபடி அப்பெண்மணியிடம் விடாப்பிடியாக ஜூஸரைக் கொடுக்க, வேலை செய்யும் விதத்தைக் கேட்டுவிட்டு, காதலனைப் பார்த்து ‘‘நல்லாயிருக்குல்ல..!’’ என்றார். அடுத்த கணம் காதலன் பாக்கெட்டிலிருந்து பிரமநாயகத்திடம் மாறியது பணம். ‘‘காதல் வாழ்க..! வியாபார யுக்தியைக் கவனிச்சீங்கள்ல! அந்தப் பொண்ணுக்கு கொக்கி போட்டாதான் இவர்கிட்ட ஈஸியா பணத்தைக் கறக்கமுடியும்.’’ என்று அடுத்த கஸ்டமரைத் தேடி, ஐந்து வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்றுடன் வந்த தந்தையை மடக்கினார்.

‘‘சார்... வாட்டர் பாட்டல் புதுமாடல் சார்! குழந்தைங்க உறிஞ்சும்போது அப்படியே தண்ணீர் வராம, மேல் மூடியில் உள்ள காற்றாடியின் உதவியால் கொஞ்சமா வெளியே வரும். இதனால் குழந்தைகளுக்கு புறை ஏறாது. மார்க்கெட்டுக்கு புதுசா வந்திருக்கு. விலை கம்மிதான். ஐம்பது ரூபா’’ என தட தடவென பேச, அந்த அப்பா யோசிக்க ஆரம்பித்தார். வாங்குகிற மூடில் அவர் இருப்பது தெரிந்ததும் அடுத்த அஸ்திரத்தை ஏவினார் பிரமநாயகம்.

ஒரு நாள் முதலாளி - வாட்டர், ஜூஸர்... திருப்பூரில் திருவிழா!

‘‘சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க சார்... ஐம்பது ரூபா எப்படி, எப்படியோ செலவு பண்றோம்... குழந்தைக்காக அதைச் செலவு பண்ணலாமே?’’ என சென்டிமென்ட்டாகப் போட்டுத் தாக்க, மனிதர் இரண்டு பாட்டிலாகவே வாங்கினார். உறவினர் குழந்தைக்கு ஒன்றாம்.

பூங்காவுக்குள்ளேயே ‘‘லைட்டர், வாட்டர் பாட்டல், ஜூஸர்’’ எனக் கத்தியபடி ரவுண்ட் அடித்தார். அப்படியே இளைஞர் ஒருவரைப் பிடித்து, ‘‘சீப்பு வேணுமா சார்... பொண்ணுங்க நடமாடற இடம். தலையெல்லாம் கலைஞ்சிருக்கே...’’ என அல்வா தந்து சீப்பை விற்றார்.

புது கல்யாண ஜோடியிடம் ‘‘புதுப்பொண்ணு... விளக்கேத்த உதவியா லைட்டரும் வாங்கிக்கோங்க...’’ என்று ஜோக்அடித்து, லைட்டர் விற்றார். பூங்காவில் அதிக அளவில் விற்றன சீப்புகள். கூடவே பெரிய பொருட்கள் சிலவும் விற்றதில் பை கொஞ்சம் எடை குறைந்தது.

‘‘அடுத்து டோர் கேன்வாஸிங் போவோம்’’ என கேரிபேக்கில் பொருட்களைச் சுமந்தபடி ‘அறுபது அடி ரோடு வெள்ளியங்காடு’ பகுதி தெருக்கள் வழியே நடக்க ஆரம்பித்தார்.

‘‘லைட்டர் வாங்கினா, வாட்டர் பாட்டல், சீப்பு எல்லாம் இலவசம். யோசிக்காதீங்க... நூற்றம்பது ரூபாதான்...’’ என்று கூட்டணி ஆஃபரை அறிவித்தார். சோப்புப் போட்டுக் கொண்டிருந்த ஒரு பெண்மணி நிமிர்ந்து பார்க்க, அவரை நோக்கி நடந்தார்.

பக்கத்தில் நின்றுகொண்டிருந்த நைட்டி அணிந்திருந்த பெண்களும்கூட... பொருளை ஓவராக ஆராய்ச்சி செய்தார்கள். ‘‘தரமான பொருளுங்க... டவுட்டே வேணாம். ஒரு வருஷம் கியாரன்டி உண்டு. விளம்பரத்துக்காக விலை கம்மி. இதான் என் செல் நம்பரு... எந்த பிரச்னைனாலும் கூப்பிடுங்க. மாத்தித் தர்றேன்!’’ என பிரமநாயகம் சொல்ல... சட்டென்று ஒரு நைட்டி பெண் எழுந்து வீட்டுக்குள் போனார்.

ஒரு நாள் முதலாளி - வாட்டர், ஜூஸர்... திருப்பூரில் திருவிழா!

பிரமநாயகம் ஒரு வெற்றிப் புன்னகையோடு நம்மைப் பார்த்த நேரத்தில் அவருடைய மொபைல் போன் ஒலித்து கட்டானது. வீட்டுக்குள் போன பெண் திருப்தியோடு வெளியே வர... செல் நம்பரைச் சோதித்திருக்கிறார் என்பது புரிந்தது.

கியாரன்டி தந்த ஊக்கத்தில் இரண்டு செட் விற்பனை ஆனது. கூடவே, மேல் வீடு, பக்கத்து வீடு என எல்லோரையும் அழைத்து வாங்கச்சொல்லி சிபாரிசும் செய்தார் அந்தப் பெண்மணி.

‘‘இருபது ரூபா குறைவா தருவாங்க. தயவு பண்ணி குறைச்சுக்குங்க...’’ என பிரமநாயகத்திடம் அவர்கள் சார்பாக அந்த உஷார் பெண்மணி பேரம் பேச, ‘‘பத்து ரூபா குறைச்சுக்கறேன். அதுக்கு மேல குறைச்சா கம்பெனிக்கு கட்டுப்படியாகாதுங்க!’’ என்றார் பொறுமையாக. அங்கேயே பாதி பை காலியாகி விட்டது. தன் தொழில் திறனைப் பார்த்து பிரம நாயகமே பிரமிப்பு நாயகமாகிவிட்டார்.

‘‘கியாரன்டி அது, இதுனு எல்லாம் ஆரம்பிக்கிறீங்களே... என்னது இது..?’’ என்றோம்.

‘‘இல்லீங்க... நம்மளை நம்பிப் பொருள் வாங்கறாங்க... ஒருநாள் வியாபாரம்னாலும் அதிலும் ஒரு நியாயம் இருக்கணும் இல்லீங்களா..? ஒருவேளை இதுல ஏதாவது பிரச்னைனு போன் செய்தால், நம்ம அண்ணன் கடைதானே! நான் மாத்திக் கொடுத்து டுவேன்’’ என்றபடி நடையைக் கட்டினார்.

‘‘கழுகுகூட வானத்துல உயரமா பறக்கறப்போ... சிறகை அடிக்காது. ஏன்னா அதுக்குத் தேவை கொஞ்சம் ரெஸ்ட். அதே மாதிரிதான் எனக்கும்...’’ என கவிதையாகப் பேசியபடி கூல்ட்ரிங்க்ஸ் கடைக்குள் புகுந்து, ஒரு ஜில் பாட்டிலால் தாகத்தைத் தணித்துக் கொண்டார்.

கடை வாசலிலேயே அடுத்த வியாபாரம் ஆரம்பமானது. ‘‘இந்தாப்பா ஜூஸ்காரரே..!’’ என பக்கத்து கடையில் உண்டியல் வாங்கிக் கொண்டிருந்த ஒரு பெண்மணி அழைக்க, சட்டென்று அவர் முன் கடை விரித்தார் பிரமநாயகம். கூடவே இன்னொரு பெண்ணும் சேர்ந்துகொள்ள பேரம் ஆரம்பமானது. அவர்கள் இலவசத்துக்கு மயங்குவதாகவும் இல்லை. விலையிலும் ஒரு முடிவுக்கு வர முடியாமல் ரொம்ப நேரம் திணறியது.

எவ்வளவு பேசியும் தன் விலையிலிருந்து இவர்தான் இறங்கி வரவேண்டி இருந்தது. தன் வியாபார வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தார் பிரம நாயகம்.

ஒரு நாள் முதலாளி - வாட்டர், ஜூஸர்... திருப்பூரில் திருவிழா!

அடுத்து, புது மார்க்கெட் வீதிக்குள்ளே புக, பழக் கடைக்காரம்மா ஒருவரிடம் ஜூஸரை நீட்ட ‘‘விலை அதிகம் சொல்றியே... கொஞ்சம் குறைச்சுக்கக் கூடாதா..?’’ என அங்கேயும் பேரம் துவங்கியது. ‘இனிமேலும் பேரம் பேசி அதிக நேரம் அலைய வேண்டாம். கையில் வெரைட்டியும் குறைந்து விட்டது’ என்று யோசித்தோ என்னவோ, ‘‘அசல் ரேட் எண்பது ரூபாயே கொடுங்க!’’ என்று சொல்ல பாட்டி வாஞ்சையோடு கொடுத்தார்.

பையில் ஒரு லைட்டர்களும் ஒரு வாட்டர் பாட்டிலும் மட்டுமே பாக்கி! அப்போது, திடுமென ஒரு திருப்பம். சைக்கிளில் வேகமாக வந்த ஒருவர், அவரது கையைப் பிடித்தார். ‘‘உங்களை எங்கெல்லாம் தேடறது..? சார், ஜூஸர் வேணும்..? இந்தாங்க பணம்’’ என பணத்தைத் திணிக்க, ‘‘ஜூஸர் முடிஞ்சுடுச்சே சார்!’’ என ஸாரி கேட்டாலும் விடுவதாக இல்லை அவர். ‘‘என் மனைவிக்கு ஆசை காட்டிட்டு வந்துட்டீங்க. அவ அவங்கக்காளுக்கும் போனைப் போட்டு ‘ஜூஸர்... வாட்டர் பாட்டில் ரெண்டுமே ஸ்பெஷல்க்கா. வெறும் 150 ரூபாதான்’ னு எடுத்து விட்டுட்டா! இப்போ இல்லைன்றீங்களே... ரணகளமாகிப் போகும். எப்படியாவது ஒரு ஜூஸர் வாட்டர் பாட்டில் குடுத்துடுங்க...’’ எனக் கெஞ்ச ஆரம்பித்துவிட்டார். பிரமநாயகம் முகத்தில் பட்டென ஒரு பிரகாசம். ‘‘இந்தாங்க வாட்டர் பாட்டில். இன்னும் பத்து நிமிஷத்துல உங்களுக்கு ஜூஸர் வரும். வெயிட் ப்ளீஸ்’’ கஸ்டமரை அங்கேயே நிறுத்திவிட்டு யாருக்கோ போனை போட்டார். ஜூஸர் பத்து நிமிடத்தில் கை மாறியது. பெரிய கும்பிடு போட்டுவிட்டுக் கிளம்பினார் அவர்.

‘‘நம்ம நண்பர் ஹோல் சேல் கடை இங்கேயிருக்கு. ஆனா, கோயம்புத்தூரைவிட இங்கே பத்து ரூபா விலை அதிகம். அவசரத்துக்கு அதையெல்லாம் பார்க்க முடியுமா? நம்ம பொருளோட தரம் தெரிஞ்சுதானே தேடி ஓடிவர்றார். கஸ்டமர் திருப்திதான் முக்கியம்’’ என்றவர், அடடே, இன்னும் ஒரு லைட்டர் இருக்கே!’’ என்று யோசனையாக சுற்றிலும் பார்த்தார்.

பளிச்சென்று முகம் பிரகாசமாக, எதிர்வரிசையில் இருந்த டீக்கடைக்குள் நுழைந்தார். ‘‘என்ன சேட்டா... இப்படி கேஸை எரிய விட்டுக்கிட்டே இருந்தா எவ்வளவு வீணாகும். அடிக்கடி குச்சியைக் கொளுத்தினாலும் ஒரு நாளைக்கு ஒரு தீப்பெட்டி வேணும். பேசாம, ஒரு லைட்டரை வாங்கிப் போடுங்களேன்’’ என்று பிரமநாயகம் சொல்ல, மறுபேச்சே இல்லாமல் லைட்டர் கைமாறியது.

‘‘ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டுட்டு ரோட்டிலே அலைஞ்சதுக்கு நல்ல வருமானம்தான்’’ என்றபடியே பாக்கெட்டிலிருந்த பணத்தை எடுத்துப் போட்டார். 1,390 ரூபாய் இருந்தது. இந்தாங்க ஆயிரம் ரூபா... திருப்பூர் டூ கோவை போக வர பஸ் செலவு... கூல்ட்ரிங்க்ஸ் செலவெல்லாம் சேர்த்தா, 400 ரூபாய்க்கு மேலே லாபம் கிடைக்குது. இன்னும் இந்த வியாபாரத்துல நுணுக்கமா குதிச்சா ஆர்டர் மட்டுமே வாங்கிகிட்டு உட்கார்ந்த இடத்துல பொருளை விற்று பணத்தை அள்ளலாம் போலிருக்கு. இனி கஸ்டமர்களை வலை வீசப்போறேன். ரொம்ப நன்றி!’’ என சொல்லிவிட்டு கோவை கடைக்காரருக்கு எல்லாவற்றிலும் பன்னிரண்டு பன்னிரண்டு பீஸ் ஆர்டர் தந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism