Published:Updated:

நஷ்டஈடு தர நயமான பாலிசி!

நஷ்டஈடு தர நயமான பாலிசி!

நஷ்டஈடு தர நயமான பாலிசி!

நஷ்டஈடு தர நயமான பாலிசி!

Published:Updated:
பாதுகாப்பு
நஷ்டஈடு தர நயமான பாலிசி!
 

நஷ்டஈடு தர நயமான பாலிசி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நஷ்டஈடு தர நயமான பாலிசி!

தி யாகராஜன் காப்பீட்டு நிறுவன ஊழியர். நடுத்தரக் குடும்பம்தான். அதனால் மிகுந்த சிரமங்களுக்குப் பிறகு, கடந்த ஆண்டுதான் சொந்த வீடு கட்ட முடிவு செய்து, வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்து அனுமதி பெற்றார்.

வீடு கட்டும் பணியைத் தொடங்குவதற்குமுன் அதற்குத் தேவையான தண்ணீருக்காக தனது இடத்தில் கிணறு ஒன்றை வெட்ட ஆட்களை அமர்த்தினார். அதில் தண்ணீர் கிடைக்கும் அறிகுறி தெரிந்தபோது, அவர் விட்ட நிம்மதி பெருமூச்சு, வெகுவிரைவில் சோகப் பெருமூச்சாக மாறிப்போனது. கிணறு வெட்டும் பணி நடந்து கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் மேய்ந்துகொண்டிருந்த மாடு ஒன்று தவறி கிணற்றுக்குள் வீழ்ந்ததில், உள்ளே பணியில் இருந்த தொழிலாளியை உள்ளே விழுந்த மாட்டின் குளம்பு கிழித்துவிட, அவர் மிக மோசமாக காயமடைந்தார். உடனடியாகச் சிகிச்சை அளிக்கப்பட்டும், அது பலனின்றி அந்தத் தொழிலாளி இறந்து போனார்.

இது தியாகராஜனை ரொம்பவே பாதித்தது. அவரது வீட்டில் இருந்தவர்கள் இந்தச் சம்பவத்தை ஓர் அபசகுனம் என்று சொல்லி, வீடு கட்டும் திட்டத்தைக் கைவிடச் சொன்னாலும், தியாகராஜன் மனத்தை வாட்டியதெல்லாம் அந்தத் தொழிலாளியின் குடும்பம் குறித்த கவலைதான். தொழிலாளியின் மரணத்துக்கு தியாகராஜன் நேரடி காரணம் இல்லை என்றாலும், இந்தச் சம்பவத்துக்கு நாம்தான் பொறுப்பேற்க வேண்டும் என்பது தியாகராஜனுக்குள் ஓர் உறுத்தல் இருந்தது.

அந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு அப்போ தைக்கு தியாகராஜனால் மிகப்பெரிய அளவில் உதவி செய்ய இயலவில்லை என்றாலும், அவர் புத்திசாலித்தனமாக செய்திருந்த ஒரு காரியம், அந்தத் தொழிலாளி குடும்பத்துக்கு மிகவும் பயன்பட்டது. தனது வீடு கட்டும் பணியைத் தொடங்கும்முன் செய்த உடனடி காரியம் - இதுபோன்ற எதிர்பாராத சம்பவங்களில், விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுக்கு இழப்பீடு வழங்கும் ‘லயபிலிட்டி இன்ஷூரன்ஸ்’ பாலிசி எடுத்ததுதான்.

‘லயபிலிட்டி இன்ஷூரன்ஸ்’ என்பது பொறுப்புக்கான காப்பீடு! இவை ஆயுள் காப்பீடு அல்லாத பொதுக் காப்பீட்டு நிறுவன வரம்பில் வருபவை. பொதுவாக அனைத்து காப்பீட்டு நிறுவனங்களுமே இவ்வகை பாலிசிகளை வழங்குகின்றன. ஒவ்வொரு நிறுவனக் காப்பீட்டிலும் சில தனித்தன்மைகள் உள்ளன. சில நிறுவனங்கள் இதை மற்றசில காப்பீட்டு பாலிசிகளோடு சேர்த்தும் வழங்குகின்றன.

பொதுவாக, ‘லயபிலிட்டி இன்ஷூரன்ஸ்’ என்பதில் சில உட்பிரிவுகளும் உள்ளன. உதாரணமாக, தொழிற்சாலை சார்ந்தது (பொதுமக்களுக்கான ஆபத்து), தொழிற்சாலை சாராதது, பணியாளரது இழப்புக்கானது, டாக்டர்கள்... வழக்கறிஞர்கள் என தொழில்முறை நிபுணர்களுக்கான பாதிப்பு சார்ந்தது என சிலவகைகளைச் சொல்லலாம். ஆனால் இவை அனைத்திலும், இழப்பீடு தரவேண்டிய அளவு பாதிப்பு ஏற்படுத்திய சம்பவத்துக்கு பொறுப்பை ஏற்க முன்வருபவர்கள் இந்த பாலிசி எடுக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

நஷ்டஈடு தர நயமான பாலிசி!

பல ஆண்டுகளுக்குமுன் போபாலில் யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் விஷவாயு கசிந்த சம்பவம் ஞாபகம் இருக்கிறதா? அப்போது ஏராளமானவர்கள் இறந்ததும், கண்பார்வை இழந்ததும், ஊனமுற்றதும் இந்தியாவின் கருப்பு வரலாறு. அதுபோல, பொதுமக்களுக்கு ஆபத்து உண்டாக்கக் கூடிய தொழிற்சாலைகளில் முதல்வகை லயபிலிட்டி பாலிசிகள் பிரபலம்.

‘‘போபால் சம்பவத்துக்கு பிறகு, ஆபத்து உண்டாக்கக்கூடிய ரசாயனங்களை, மற்ற வகைப் பொருட்களைக் கையாளும் எல்லா தொழிற்சாலைகளுக்கும், சேமிப்புக் கிடங்குகளுக்கும் இந்தவகை பாலிசிகள் இப்போது அவசியமாக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் இந்த பாலிசி பிரபலமாகத் தொடங்கியதே போபால் சம்பவத்துக்கு பிறகுதான்!’’ என்கிறார் இன்ஷூரன்ஸ் துறை அதிகாரியான நடராஜன்.

இதுதவிர, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள, ஆனால் மேலே சொன்னது போன்ற ரசயானம், தொழிற்சாலை போன்றவை சாராத சில இடங்களும் உண்டு. உதாரணமாக, சினிமா தியேட்டர், ஹோட்டல், மருத்துவமனை, பள்ளி, கல்லூரி போன்றவற்றைச் சொல்லலாம். இதுபோன்ற இடங்களில் நடக்கும் தீ விபத்து, குண்டு வெடிப்பு, அல்லது ஹோட்டலில் உள்ள நீச்சல்குளம் போன்ற இடங்களில் நடக்கும் பல்வேறு விபத்துகளின்போது பாதிக்கப்படும் மக்களுக்கு இழப்பீடு தர லயபிலிட்டி பாலிசிகள் எடுக்கப்படுகின்றன. இது, இரண்டாம் வகை!

இதுதவிர, தியாகராஜன் சந்தித்தது போன்ற சம்பவங்களில்... அலுவலகம், கடை போன்ற இடங்களில் நடக்கும் அசம்பாவிதங்களில் பாதிக்கப்படும் பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்க மூன்றாம் வகையும் உண்டு. இதை ‘ஒர்க்மென் காம்பன்சேஷன் லயபிலிட்டி பாலிசி’ என்கிறார்கள்.

அடுத்து, தொழில்முறை ஆட்களான டாக்டர், வழக்கறிஞர், ஆர்கிடெக்ட் போன்றவர்கள் தங்களது பணியில் சிறு கவனக்குறைவால் தவறவிடும் பிசகு, சில நேரங்களில் அவரது வாடிக்கையாளர்களுக்கு மிகப் பெரிய பாதிப்பை உண்டாக்கிவிட வாய்ப்புண்டு. உதாரணமாக - ‘டாக்டர், தான் செய்ய வேண்டிய ஆபரேஷனை ஆள் மாற்றி செய்துவிட்டார்’ என்று பத்திரிகை ஜோக்காக நாம் படித்தது ஒருவேளை நிஜமாகவே நடந்துவிட்டால்..? அந்த டாக்டர் மீது நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடரப்படும். அப்போது அந்த டாகடர் தர வேண்டிய இழப்பீடு தொகையில் இருந்து டாக்டரைப் பாதுகாக்கவும் இந்த வகை இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க முடியும்.

இப்படி பல அவதாரங்கள் எடுக்கும் இந்த லயபிலிட்டி பாலிசியை வழங்கும் நிறுவனங்கள் அந்த பாலிசியின் நோக்கம், பயன்பெறும் நபர்களின் எண்ணிக்கை, எவ்வளவு காலத்துக்கு இந்த காப்பீடு தேவை போன்ற பல்வேறு விஷயங்களைக் கருத்தில்கொண்டு பிரீமியத் தொகையை நிர்ணயிக்கிறார்கள்.

நஷ்டஈடு தர நயமான பாலிசி!

பொதுமக்களுக்கான லயபிலிட்டி காப்பீடு திட்டம் என்றால் இதற்கு மொத்த காப்பீடு தொகை எவ்வளவு என்பதை நிர்ணயிக்க தனிமுறை (ஃபார்முலா) ஒன்றும் காப்பீடு நிறுவனங்களால் கையாளப்படுகிறது.

இதுதவிர, இயற்கை சீற்றங்களான புயல், வெள்ளம், நிலநடுக்கம், போக்குவரத்தின்போது வாகனங்களில் ஏற்படும் சாலை விபத்துகள் போன்றவற்றுக்கும் இந்தத் திட்டத்தில் காப்பீடு பெற முடியும். இதற்கு ஒரு சிறுதொகையை மட்டுமே கூடுதல் பிரீமியமாக செலுத்த வேண்டியிருக்கும்.

இந்த பாலிசியின் சில பிரிவுகளில், குறிப்பாக பொதுமக்கள் பலர் பாதிப்பைச் சந்திக்கும் விபத்துகளில் இழப்பீடு பெறுவது மற்றவகை பாலிசிகளைப் போல விரைவில் முடியக்கூடிய சமாசாரம் அல்ல. விபத்து நடந்தவுடன் அதனால் ஏற்பட்ட பாதிப்பு பற்றி உடனடியாக இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். அதன்பின் பாதிப்புக்கு இழப்பீடு தேவை என வழக்கு தொடர்ந்து, இதுகுறித்து நீதிமன்ற விசாரணை நடக்கும். அதன்பின் நீதிமன்றம் பல்வேறு முறைகளில் பாதிப்பின் அளவை மதிப்பிட்டு, இழப்பீட்டுத் தொகை எவ்வளவு என்பதை நிர்ணயிக்கும். அதன்பிறகே இழப்பீடு வழங்கப்படும்.

விபத்துகளில் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டிருந்தால் அப்போது மொத்த இழப்பீட்டுத் தொகை அதிகமாக இருக்கும். அதுபோன்ற சூழலில் நீதிமன்றம் நிர்ணயிக்கும் மொத்த இழப்பீட்டுத் தொகை, இன்ஷூரன்ஸ் நிறுவனம் நஷ்ட ஈடாக ஒதுக்கக்கூடிய தொகையைவிட அதிகமாக இருந்தால், அந்த கூடுதல் தொகையை அரசின் நிதி தொகுப்பில் இருந்து வழங்குவார்கள்.

டாக்டர்கள் போன்ற தொழில் முறையினருக்கான மற்ற சில வகை பாலிசிகளில் இழப்பீடு வழங்க வேண்டிய சூழல் உருவானால், இதுபற்றிய தகவல் கிடைத்தபின் இன்ஷூரன்ஸ் நிறுவனமே விசாரணை மேற்கொண்டு, தொடர்புள்ள பல விஷயங்களையும் பரிசீலித்து அதற்கு ஏற்ப இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யும்.

நமக்கு மட்டுமல்ல... நம்மை நம்பி வந்தவர்களையும் நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் காக்க வேண்டியது நம் கடமை! சில நேரங்களில் சந்தர்ப்ப சூழலால் மற்றவர்கள் பாதிக்கப்படும்போது, அதற்கு பொறுப்பான நாம், அவர்களுக்கு நஷ்டஈடு தரவேண்டி வரலாம். இதுபோன்ற சூழலில் நம்மை சட்டரீதியாகவும் பணவகையிலும் பாதுகாத்துக்கொள்ள இந்த பாலிசி பயன்படுகிறது. எனவே லயபிலிட்டி இன்ஷூரன்ஸைத் தேர்ந்தெடுப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism