Published:Updated:

‘ஊர்’வலம் - பாண்டிச்சேரி

‘ஊர்’வலம் - பாண்டிச்சேரி

‘ஊர்’வலம் - பாண்டிச்சேரி

‘ஊர்’வலம் - பாண்டிச்சேரி

Published:Updated:
நடப்பு
‘ஊர்’வலம் - பாண்டிச்சேரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 

பாண்டிச்சேரி...

தாராள சலுகை... ஏராள வாய்ப்பு!

‘ஊர்’வலம் - பாண்டிச்சேரி

பா ண்டிச்சேரி... ஒரு பெரிய நகரத்தின் பாதிகூட இல்லை. மக்கள் தொகை இரண்டு லட்சத்து சொச்சம் என்று மினியேச்சர் சைஸ்தான். ஆனால், ஒரு மாநிலத்தின் அந்தஸ்தோடு யூனியன் பிரதேசமாக இருக்கிறது. பாண்டிச்சேரியின் பொருளாதாரத்தில் சுற்றுலா, தொழிற்சாலைகள் என்று பணம் சம்பாதிக்க பல வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்த இதழ் ‘ஊர்’வலம் பாண்டிச்சேரி..!

ழகாகக் கட்டமைக்கப்பட்ட சாலைகள். துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரனைப்போல 90 டிகிரி கோணத்தில் விறைப்பாக இருக்கின்றன. நகரின் முக்கியமான வீதிகள் என்றால் நேரு வீதியும், எம்.ஜி.ரோடும்தான்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஃபிரெஞ்ச், ஆங்கிலம் ஆகிய மொழி பேசும் மக்கள் அடர்த்தியாக இருக்கிறார் கள். இப்போது புதிதாக முளைத்திருக் கும் தாபாக்கள் குஜராத்திகளும், பஞ்சாபிகளும் அதிகமாகக் குடியேறி இருப்பதைக் காட்டுகிறது.

பாண்டிச்சேரி மக்கள் தொகைக்கு ஈடாக வெளியூர், வெளிநாட்டு வாசிகளின் தினசரி நடமாட்டத்தைப் பார்க்க முடிகிறது. சாதாரண நாட்களில் ஒருமடங்கு என்றால், சனி, ஞாயிறுகளில் இது நான்கு மடங்காக இருக்கிறது. அந்த நேரத்து அதிகபட்ச வியாபார ஸ்தலங்களாகி விடுகின்றன மதுபான கடைகள்.

மதுபான விற்பனை நடப்பது 60% வெளியூர் ஆட்களால்தான்! ஆனால் இதன் மூலம் கிடைக்கும் ஆண்டு வருமானம் என்று பார்த்தால், சுமார் 60 கோடி ரூபாய்தான் என்கிறார்கள்.

‘ஊர்’வலம் - பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி என்றாலே நினைவுக்கு வருவது இரண்டே விஷயங்கள்தான். ஒன்று சுற்றுலா, இன்னொன்று உணவு வகைகள். இந்த ஊரின் அமைப்பும் சரி, கலாசாரமும் சரி... பிரெஞ்சு நாட்டின் சாயலில் இருப் பதால் மதுவகைகள் என்பது உணவுப் பழக்கத்தோடு சேர்ந்ததாக இருக்கிறது. உணவுக்கு முன் கொஞ்சம் ஒயின் அருந்தும் பிரெஞ்சுப் பழக்கம் இங்கும் இருக்கிறது.

உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நகரம் என்பதாலோ என்னவோ நகரமெங்கும் ஹோட்டல்களும் பேக்கரி ஷாப்புகளும் நிறைந்திருக்கின்றன.

வெளிநாட்டினரை ஈர்க்கும் ஹோட்டல்கள் இருக்கின்றன. புதிதாக பத்துக்கும் மேற்பட்ட நட்சத்திர ஹோட்டல்களுக்கான வேலைகள் நடந்து வருகின்றன. ‘ஹோட்டல் ஆனந்தா இன்’ நிறுவனத்தலைவர் கோவிந்தசாமி, ‘‘இங்கு ஃபிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாட்டினர் அதிக அளவில் வந்து செல்கின்றனர். அவர்களின் உணவு வகைகளில் ஒயின், முட்டை, பிரட், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் பழங்கள் கட்டாயம் இடம்பெறும். சுற்றுலா மற்றும் வியாபார விஷயமாக மற்ற மாநிலத் தவர்கள் வருகின்றனர். அதனால், எல்லாவித உணவு வகைகளுக்கும் இங்கு டிமாண்ட் இருக்கிறது’’ என்றார்.

‘ஊர்’வலம் - பாண்டிச்சேரி

டூரிஸ்ட் பிரதேசம் என்பதால், அரசும் சுற்றுலாத் துறையில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. புதிதாக பல திட்டங்கள் தீட்டி மக்களைக் கவர்கிறார்கள். குறிப்பாக கோடை விழா, உலக சுற்றுலா நாள், நாட்டிய விழா, வின்டேஜ் கார் ராலி, ஏர் ஷோ, யோகா திருவிழா என்று எல்லாவற்றுக்கும் விழா எடுத்து பயணிகளை ஈர்க்கிறார்கள்.

கடற்கரையிலிருந்து கடலுக்குள் சில மைல் தூரத்துக்கு மணல் மேடாக இருக்கும் சுன்னாம்பார் பகுதியை ஒரு சுற்றுலாத்தலம் போல மரவீடுகள், சோலார் மின்சாரம் என்றெல்லாம் பார்த்துப் பார்த்து இழைத்து உருவாக்கியிருந்தது அரசு. சுனாமி யின்போது, முழுக்க சேதமடைந்த அந்தப் பகுதியை மீண்டும் புனரமைக்கும் முயற்சியில் இருக்கிறது. இது சரி செய்யப் பட்டால் சுற்றுலாத்துறை புத்துணர்ச்சி பெறும்.

ஆனால் கப்பல், ரயில், விமானப் போக்குவரத்து போன்ற சரி செய்யப்பட வேண்டிய விஷயங்களும் இருப்பதாகச் சொல்கிறார்கள் அந்த ஊர் மக்கள். ஏற்கெனவே இங்கே இருந்து, செலவுகள் கட்டுப்படியாகாததால் மூடப்பட்டிருக் கிறது ஒரு விமான நிலையம்.

‘‘துபாய் நாட்டின் வெப்பம் 120 டிகிரிக்கும் மேல். ஆனால், அங்கு பல ஏக்கரில் பனிச்சறுக்கு மைதானத்தை உண்டாக்கி, மைனஸ் 20 டிகிரியாக குளிரை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அங்கேயே செய்யும்போது, இங்கே ஏன் அப்படி ஒரு ஸ்கேட்டிங் சென்டர் அமைத்து சுற்றுலா பயணிகளைக் கவரக்கூடாது..? இங்கு வரும் மக்கள் வெறும் கடற்கரையைத்தான் பார்க்கிறார்கள். அதைவிட, சிங்கப்பூரில் இருப்பது போல கடலுக்கு அடியில் பாதை அமைத்து, பொழுதுபோக்கு அம்சங்களை மேம்படுத்தி, சுற்றுலாப்பயணிகளைக் கவரலாமே! கடற்கரை இருப்பதால் நீர்ச்சறுக்கு, போட்டிங், சர்ஃபிங் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டு வரலாம்’’ என்றெல்லாம் தங்கள் ஆசையைச் சொல்கிறார்கள் இங்குள்ள மக்கள்.

‘ஊர்’வலம் - பாண்டிச்சேரி

பாண்டிச்சேரியில் 35 வருடத்துக்கும் மேலாக டிராவல்ஸ் நடத்திவரும் ராஜாராம், ‘‘இங்கு வரும் டூரிஸ்ட்களை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட டிராவல் நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால், வங்கியில் வட்டியைக் குறைத்து கார் லோன் தருவதால், கிட்டத்தட்ட வீட்டுக்கு ஒரு கார் வரும் நிலை இருக்கிறது. இங்கு வருபவர்கள் சொந்த காரில் வந்து விடுகிறார்கள். எங்களுக்கு பெரிய அளவில் பிழைப்பு கிடைப்பதில்லை. டூரிஸத்தை வளர்த்தால் மட்டுமே எங்களால் முன்னேறமுடியும்’’ என்றார்.

சுற்றுலாவைத் தாண்டி தொழில்கள் என்று பார்த்தாலும் பாண்டிச்சேரியில் பல வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன.

தட்டான்சாவடியில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் பாண்டிச்சேரியின் முதல் தொழிற்பேட்டை தொடங்கப் பட்டது. இப்போது, அது ஐந்தாறு தொழிற் பேட்டைகளாகப் பெருகி இருக்கிறது.

‘ஊர்’வலம் - பாண்டிச்சேரி

சிறுதொழில்கள் சங்கத்தின் செயலாளர் பார்த்தசாரதி, பாலிதீன் பேக்கேஜிங்குக்கான பைகளைத் தயாரித்து வருகிறார். ‘‘தட்டான் சாவடி, காட்டுகுப்பம், மேட்டுப்பாளையம், சேதார்பேட் ஆகிய இடங்களில் தொழிற் பேட்டைகள் இருக்கின்றன. இதில், ‘பாண்டிச்சேரி இண்டஸ்ட் ரியல் புரோ மோஷன் டெவலப்மென்ட் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன்’ (பிப்டிக்) முயற்சியால் துவங்கப்பட்ட மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டைதான் 257 யூனிட்களைக் கொண்ட பெரிய தொழிற் பேட்டை.

பாண்டிச்சேரியில் மட்டும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான 480-க்கும் மேற்பட்ட யூனிட்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலனவை சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தொழில்களே!

இதுதவிர, டிக் (மாவட்ட தொழில் மையம்) எனும் அமைப்பும் தொழில்களை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்று கிறது. தொழில் வளர்ச்சியில் ‘பிப்டிக்’ பெரும்பங்கு வகிக்கிறது. இது, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான தொழில்களுக்குக் கடன் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கி, ஊக்குவித்து வருகிறது. 1974\ம் ஆண்டு ‘பிப்டிக்’ துவங்கப்பட்ட பிறகு, பாண்டிச்சேரியில் பல தொழில் முன்னேற் றங்கள் நடந்திருக்கின்றன.

‘ஊர்’வலம் - பாண்டிச்சேரி

2004\ம் ஆண்டுவரை மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்கு 270 கோடி ரூபாய் வரை கடனாக வழங்கி உள்ளது. அதிகபட்சம் நான்கு கோடி ரூபாய்வரை கடன் தந்திருக்கிறது’’ என்றார் பார்த்தசாரதி.

தட்டான் சாவடி தொழிற்பேட்டையில் டூபை பாலி பேப்ஸ் எனும் ‘ஷூ அப்பர்ஸ்’ தயாரித்து வருகிறார் ராஜா. ‘‘இங்கு இல்லாத தொழில்களே இல்லை. பேப்பர், ஃபுட் ப்ராஸசிங், பிளாஸ்டிக், ஃபார்மா, ஆட்டோ உதிரிபாகங்கள், லெதர், கைவினை ஏற்றுமதி தொழில்கள், எலக்ட்ரானிக் துறை, மதுபானம் மற்றும் ஐ.டி என அனைத்து வகையான தொழில்களும் இருக்கின்றன. மத்தி வகை மீன்கள் ஏராளமாக கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. இப்படி எல்லா துறைகளிலும் காலூன்றி இருக்கிறது பாண்டிச்சேரி.

இது சின்ன ஊர். அண்டை மாநிலமான தமிழகத்தைவிட, பல்வேறு பொருட்களும் விலை குறைவு என்பதாலேயே இந்த ஊரை நோக்கிப் படையெடுக்கும் தமிழகத் தொழில்கள் அதிகம். அரசு தரும் சலுகைகளுக்காகவே இங்கே கடை போட்டவர்கள் ஏராளம். அந்தப் படையெடுப்பு இப்போதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

‘ஊர்’வலம் - பாண்டிச்சேரி

அப்படி உள்ளே புகுந்த ரசாயனத் தொழிற் சாலைகளால் நகரின் நிலத்தடி நீரும் சுற்றுப்புறச் சூழலும் மாசுபடத் தொடங்க... அரசே அவற்றை வெளியேற்றியது. அதன்பிறகு மாசு ஏற்படாத தொழில்களை மட்டுமே அரசு தற்போது ஊக்கப் படுத்துகிறது’’ என்றார் ராஜா.

சில நிறுவனங்கள் இந்த ஊரைவிட்டு வேறு மாநிலங் களுக்குப் படையெடுக்கின்றன என்பதுதான் இப்போது பாண்டிச்சேரியின் பரபரப்பு டாபிக். ‘‘அரசு சலுகை களுக்காக வந்த சில நிறுவனங்கள் புதிய கட்டுப்பாடு காரணமாக, அடுத்த சலுகை மாநிலத்தை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டன. நானும் என் வியாபாரத்தை விஸ்தரிக்க உத்தராஞ்சலுக்குச் செல்ல நினைத்திருக் கிறேன்’’ என்றார்.

பாண்டிச்சேரியில் பத்மம் இண்டஸ்ட்ரிஸ் எனும் அழகு சாதனப்பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வரும் சுரேஷ் பேச்சிலும் இதே ஆதங்கம் தெரிகிறது.

‘‘எல்லா வசதிகளும் இருக்கும் இடம் இது. இங்கு நல்ல நிலத்தடி நீர், சுத்தமான காற்று, மாசுபடாத தொழிற்சாலைகள் இருக்கின்றன. அதேபோல இங்கு மின்சாரம் ஒரு யூனிட்டுக்கு 1.25 ரூபாய் என்ற மிகக்குறைந்த கட்டணத்தில் கிடைக்கிறது. இந்தச் சூழலிலும் பல நிறுவனங்கள் வெளியேறுகின்றன. அந்த மாநிலங்களில் கிடைக்கும் வசதிகளைச் செய்துகொடுத்து அவர் களைத் தக்க வைக்கலாம். குறிப்பாக எஃப்.எம்.சி.ஜி துறை நிறுவனங்கள் அதிக அளவில் இடம் பெயர ஆரம்பித்துள்ளன.

‘ஊர்’வலம் - பாண்டிச்சேரி

‘இமாமி’ நிறுவனத்தின் நான்கு யூனிட் மட்டும் பெயருக்கு இயங்கிக் கொண்டிருக்கிறது. மற்றவை எல்லாமே இடம் மாறிவிட்டன. ‘ஹிந்துஸ்தான் லீவர்’ தன் 1,000 கோடி ரூபாய் திட்டத்தை வேறு மாநிலத்தில் தொடங்கப் போகிறார்கள். சலுகைகளைச் சரியாக வழங்கி அவர்களை ஈர்க்க வேண்டியது அரசின் கடமை!’’ என்றார் சுரேஷ்.

‘அக்னி நெட் பயோ ஃப்யூவல்’ என்ற நிறுவனம் ஜெட்ரோபா பயிரிட்டு, கச்சா எண்ணெயை லண்டனுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. ‘‘ஜெட்ரோபா மூலம் வேலை வாய்ப்பைப் பெருக்கி, கிராமப்புற வறுமையை ஒழிக்க முடியும். நாணயம் விகடனில்கூட ஜெட்ரோபா பற்றிய ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தீர்கள். விதைகளை கொண்டு நாற்றங்கால் உற்பத்தி செய்வது பற்றி அதில் சொல்லி இருந்தீர்கள். அதைவிட, அதிக வயதுள்ள, நன்றாக வளர்ந்த செடிகளில் இருந்து விதைகளைப் பெற்றால் அது, அதிக மகசூல் அளிக்கும். அதோடு அதிக எண்ணெய் வித்து உடையதாகவும் இருக்கும். இப்போது, எதிர்காலத்தில் இந்தத் தொழில் மூலம் பாண்டிச்சேரிக்கு இன்னொரு பரிமாணத் தைக் கொடுக்கப் போகிறோம்’’ என்றார் இந்த நிறுவனத்தின் இயக்குநர் விநாயகம்.

சென்னையில் பல ஐ.டி நிறுவனங் கள், பி.பீ.ஓ-க்கள் வந்தது போலவே, பாண்டியிலும் பல நிறுவனங்கள் பெருகி இருக்கின்றன. இங்கும் ஐ.டி பார்க் வந்துவிட்டது, ஆனால் இன்னும் முழு வீச்சில் செயல்படவில்லை. அது தவிர இங்கு கம்ப்யூட்டர் ஹார்டுவேர் துறை நன்றாகவே இருக்கிறது. விப்ரோ, ஹெச்.சி.எல், ஆக்ஸல் போன்ற பல நிறுவனங்கள் இங்கு இருக்கின்றன. மேலும், ‘டெல்’ நிறுவனம் வர இருக்கிறது.

‘ஊர்’வலம் - பாண்டிச்சேரி

புதிதாக இ-பப்ளிஷிங் துறையும் காலூன்ற ஆரம்பித்துள்ளது. ‘இன்டக்ரா சிஸ்டம்’ எனும் நிறுவனம் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. அதோடு டி.டி.பி வேலை வாய்ப்புகளும் வழங்குகிறது.

பாண்டியில் பிரபலமானது உணவும், மதுவும் மட்டுமல்ல, சண்டே மார்கெட்டும்தான். இது இல்லாத இந்த ஊரை கற்பனை செய்தே பார்க்கமுடியாத அளவுக்கு இரண்டறக் கலந்து இருக்கிறது. சுமார் 25 வருடத்துக்கும் மேலாக பாண்டிச்சேரியின் அடை யாளங்களில் ஒன்று இந்த சண்டே மார்க்கெட்.

ஆரம்பத்தில், இரண்டு மூன்று பேர் சேர்ந்து, விடுமுறை நாளான ஞாயிறன்று எம்.ஜி ரோட்டில் மூடிக் கிடந்த கடைகளின் வாசலில் கடைவிரித்தனர். அப்படியே பரவி, இன்று ஆயிரம் கடைகள் வரை இருக்கின்றன. இதற்காக கடலூர், விழுப்புரம், திண்டிவனம், சிதம்பரம், திருச்சி, சென்னை, பெங்களூர் போன்ற வெளி நகரங்களில் இருந்தெல்லாம் இளைஞர்கள் வருகின்றனர். தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலருக்கு இது நல்ல பகுதிநேரத் தொழிலாக இருக்கிறது.

சண்டே மார்க்கெட் அசோஸியேஷன் துணைத் தலைவர் டேவிட் பேசும்போது, ‘‘சாதாரண ஞாயிற்றுக் கிழமைகளில் ஒரு லட்சம் பேர் வரை வந்து செல்வார் கள். அதுவே பண்டிகை நாட்களில் பத்து லட்சம் பேர் கூடுவார்கள். வியாபாரமும் ஒரு கோடிக்கு மேல் நடக்கும். இது ஆயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பையும், 800 பேருக்கு வேலை வாய்ப்பையும் ஒருசேர தருகிறது’’ என்றார்.

‘ஊர்’வலம் - பாண்டிச்சேரி

பாண்டிச்சேரியின் கலாசாரப் பெருமைகளில் டெரகோட்டா சிற்பங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. டெரகோட்டா ஏற்றுமதியாகி அந்நியச் செலாவணியைப் பெற்றுத்தருகிறது. டெரகோட்டா சிற்பக் கலைஞரான முனுசாமி, பலருக்கும் பயிற்சி கொடுத்து சுமார் இரண்டாயிரம் கலைஞர்களை உருவாக்கியிருக்கிறார்.

‘‘டெரகோட்டா எனும் சுடுமண் சிற்பத்துக்கு பாண்டிச்சேரி சர்வதேச அளவில் புகழ் பெற்றதாகும். இந்த தொழிலில் 4,000 தொழிலாளிகள் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் ஆண்டுக்கு ரூபாய் 16 கோடிக்கும் மேல் ஏற்றுமதி நடைபெறுகிறது. அரசும் எங்களுக்காக ‘பொம்மை’ மற்றும் ‘புதுமை’ என்ற அமைப்புகளின் மூலம் கடன் வசதி மற்றும் கண்காட்சி ஏற்பாடு செய்யவும் வழிவகை செய்துள்ளது’’ என்றார்.

எது நடந்தாலும் அரசின் கவனத்தை உடனே ஈர்க்கும் அளவுக்கு சிறிய நகரம். இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால், வெளிமாநிலத் தொழிற் சாலைகள் பலதையும் இங்கே இன்னும் படையெடுத்து வர வைத்து மிகப்பெரிய தொழில்வாய்ப்புள்ள நகரமாக்கி விடலாம்.

.டி கம்பெனி ஆரம்பித்தால் விற்பனை வரியில் 10 வருடத்துக்கு வரிவிலக்கு, முதலீட்டில் 20 சதவிகித அரசு மானியம், தொழிற்சாலைக்குத் தேவையான நிலம் மற்றும் கட்டடத்தின் மீதான வரிக்கு முழுமையான விலக்கு... என்று அள்ளி வழங்கப்படும் சலுகைகளால், ஐ.டி கம்பெனிகளுக்கு நல்ல வாய்ப்பு!

பா ண்டிச்சேரியில் சுற்றிப்பார்க்க ஆட்டோ, கார் எனத் தேவையில்லை. வாடகைக்கு டூ-வீலர் (பைக்) எடுத்து சுற்றி வரலாம். அதற்கான வாடகை ரூபாய் ஒரு நாளைக்கு 75 ரூபாய் முதல் 100 வரை வசூலிக்கிறார்கள். பெட்ரோல் செலவு நம்முடையது. பல ஃபாரின் பார்ட்டிகள், அரை டவுடசரோடு ஜோடி போட்டுக்கொண்டு டூ-வீலர்களில் ஊர் சுற்றுவதைப் பார்க்க முடிகிறது. கியர் இல்லாத மற்றும் கியர் உள்ள பைக்குகள் கிடைக்கின்றன. 500 ரூபாய் டெபாசிட்டும் டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் அல்லது அடையாள அட்டை என ஏதாவது ஓர் உண்மை சான்றிதழையும் கொடுத்து நாள் முழுவதும் சுற்றிவரலாம்.

‘‘டை ல்ஸ் வியாபாரம் 1995\ம் ஆண்டுகளில் கொடிகட்டி பறந்தது. வெளியூர்களுக்கு இங்கிருந்து டைல்ஸ்கள் லாரிகளில் செல்லும். மாசுக் கட்டுப்பாடு உள்ள தொழில்களை தடை செய்த அரசு, இதிலும் கைவைத்துவிட, பெரிய டைல்ஸ் உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தி குறைந்து விட்டது. ஆனாலும் இன்றும் டைல்ஸ் விற்பனை சக்கைபோடு போடத்தான் செய்கிறது. வெளியூர் விற்பனையில் மட்டுமே கோடிக்கணகான ரூபாய் டர்ன் ஓவர் பார்க்கும் நிறுவனங்களும் இருக்கின்றன. எப்படி..? வெளி இடங்களில் இருந்து டைல்ஸை வாங்கி வைத்து தேவைக்கேற்ப சப்ளை செய்கிறார்கள். வரிச்சலுகையும் குறைந்த வரியுமாக கணிசமான ஒரு தொகை நிற்கிறது’’ என்கிறார் சுபாஷ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism