Published:Updated:

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

Published:Updated:
நடப்பு
ஷேர்லக் ஹோம்ஸ்
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஷேர்லக் ஹோம்ஸ்

‘‘இ தோ... அரைமணி நேரத்தில் அங்கே இருப்பேன்!’’ என்று சொன்ன ஷேர்லக்குக்காக காத்துக் கிடந்ததுதான் மிச்சம். இரண்டு மணி நேரத்துக்கு மேலாகியும் ஆளைக் காணவில்லை. எரிச்சலோடு வெளியில் எட்டிப் பார்த்தபோது படுதோரணையாக வந்து கொண்டிருந்தார்.

‘‘வாங்க ஹோம்ஸ்! வர்றதே லேட்டு. இதிலே படு ஸ்டைலா வேற வர்றீங்க..! வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிடுச்சு போல!’’ என்று நாம் கேட்டதும், மனிதர் சிரித்துவிட்டார்.

‘‘மறுபடி ஏறின வேதாளம் நான் இல்லை. இரும்புதான்!’’ என்று பொடி வைத்துப் பேசிய ஷேர்லக்,

‘‘நண்பர் ஒருத்தர் வீடு கட்டறார். போன மாசம் என் யோசனைப்படி, மொத்தமா இரும்பு வாங்கினார். இப்ப என்னன்னா, இரும்பு விலை ஏறப்போகுதுனு தகவல் வருது. இந்தியாவுல மட்டுமில்லை. உலக அளவிலே இந்தவிலை உயர்வு இருக்கும்னு சொல்றாங்க! அதாவது, இப்ப இருக்கற விலையைப் போல, 30% வரை ஏறப்போகுதாம். சில மாசத்துக்கு முன்னாடிதான் விலை குறைச்சாங்க!’’ என்றார் ஷேர்லக்.

‘‘ஹையோ! அப்போ, பங்கு வாங்கினவங்க நிலைமை ஜாலி... வீடு கட்டப்போறவங்கள்லாம் காலினு சொல்லுங்க!’’ என்றோம்.

‘‘கிட்டத்தட்ட அப்படித்தான்! ஏற்கெனவே பட்ஜெட் அறிவிப்புக்கு அப்புறம் அதிகரிக்கத் தொடங்கின இரும்பு கம்பெனிகளின் பங்குகள், இப்போ இன்னும் அதிகரிக்கும். இரும்பு கம்பெனி பங்கு எதுவும் கையில் இருந்தால் பொறுமையாகக் காத்திருங்கள். சமீபகாலமாக ஏறும் இரும்புப் பங்குகளின் விலைகூட சென்செக்ஸ் 11000 புள்ளிகளைத் தாண்ட ஒரு காரணம்!’’ என்றார் ஷேர்லக்.

‘‘அதேமாதிரி ஐரோப்பாவோட யூரோ மதிப்பும் 15% வரை கூடப்போறதா ஒரு ரிப்போர்ட் வந்திருக்கு’’ என்ற ஷேர்லக், சடாரெனத் தலையைப் பிடித்தபடி உட்கார்ந்துவிட்டார்.

‘‘என்ன ஷேர்லக்... என்ன ஆச்சு?’’ என்றோம்.

‘‘வேறேன்ன!... பி.பீ.தான். லேசாக தலைசுற்றல்!’’ என்றார்.

ஷேர்லக் ஹோம்ஸ்

‘‘இந்த மாதிரி நேரங்களில் கொஞ்சம் போல இனிப்பு சாப்பிடச் சொல்வார்களே! சாக்லெட் இருக்கு வேணுமா?’’ என்றபடி இரண்டு சாக்லெட்களை எடுத்து அவர் கையில் தந்தோம்.

‘‘இதில் கூடுதலாக கொடுத்த சாக்லெட் எதற்கு தெரியுமா? சன் டி.வி விரைவிலேயே பங்குச் சந்தைக்குள் பிரீமிய ரேட்டுடன் களம் இறங்கும் என்று சொன்னீரே. அது நடந்துவிட்டது. அதற்குத்தான்!’’

நெகிழ்ந்து போன ஷேர்லக், ஒரு சாக்லெட்டை எடுத்து வாயில் போட்டபடி சிரித்தார். ‘‘வாய்க்கு ஸ்வீட் தந்த உங்களுக்கு, மூன்று சர்க்கரை பங்கு செய்தி சொல்கிறேன்’’ என்று தொடர்ந்து பேசினார். ‘‘தன் பெயரில் ‘போலி’யைக் கொண்டுள்ள ‘சிம்’பிளான அந்த சர்க்கரை நிறுவனத்தின் மீது அந்நிய முதலீட்டாளர்கள் ஒரு கண் வைத்திருக்கிறார்களாம். விரைவில், இப்பங்கு டபுள் செஞ்சுரி போடும் என்கிறார்கள்.

அடுத்து, சண்டை போட்டுக்கொண்ட பிரபல சகோதரர்களின் தங்கை கணவருக்கும் சொத்து பிரிப்பில் கணிசமான தொகை கிடைத்து அதையெல் லாம் சர்க்கரை கம்பெனி பங்குகளிலேயே அள்ளித் தெளிக்கிறாராம். ஏற்கெனவே 2 கம்பெனிகள் வாங்கப்பட்டுவிட்டன. இன்னும் வேட்டை தொடர்கிறது என்கிறார்கள். இப்போது 22 ரூபாய்க்கு கை மாறிக்கொண்டிருக்கும் அவரது நிறுவன பங்குகள் விரைவில் 40 ரூபாய் வரை செல்லும் என்ற பேச்சு சந்தை வட்டாரத்தில் இருக்கிறது’’ என்றவர்,

‘‘ம்.... இன்னொரு சர்க்கரை செய்தி என்னவோ?’’ என்றோம் ஞாபகமாக.

‘‘இது முழுக்க சர்க்கரை செய்தி அல்ல. நதிகளின் ‘சங்கம’ நிறுவனம் சர்க்கரை, இன்ஜினீயரிங் என இரண்டு தொழிலிலும் ஈடுபட்டு வந்தது. இப்போது அதைத் தனித்தனியாகப் பிரிக்கப் போகிறதாம். இதனால், வெளித்தெரியாமல் புதைந்து கிடந்த அந்த நிறுவனத்தின் மதிப்பு வெளிவரப் போகிறது என்கிறார்கள். 100 ரூபாய் ரேஞ்சில் உள்ள பங்குவிலை கிடுகிடுவென கால் செஞ்சுரிக்கு மேல் உயருமாம்’’

‘‘உங்களிடம் பேசும்முன் கத்தை கத்தையாக காசு வைத்துக்கொண்டால் செமத்தியான முதலீடாக அமையும் போலிருக்கிறதே!’’ என்றோம்.

நாம் போட்ட கொக்கி சரியாகவே வேலை செய்தது. அடுத்த டிப்ஸை அவிழ்த்துவிட்டார் ஷேர்லக். ‘‘டென்டிஸ்ட்கள் பயன்படுத்துவதாக விளம்பரம் செய்யப்படும் ஒரு பேஸ்ட் தன் பங்குகளைத் திரும்ப வாங்கிக்கொள்ளும் யோசனையில் உள்ளதாம். இதனால், அதன் மொத்த பங்குமூலதனம் குறைந்து, பங்கு விலை கூடும்’’ என்றார் ஷேர்லக்.

போன் அடித்தது. எடுத்துப் பேசினார் ஷேர்லக்.

‘‘பறவைக் காய்ச்சலில் நடுங்கத் தொடங்கிய கோழிப் பண்ணைத் தொழில் பரிதாபமாக இருக்கிறது! பங்குச் சந்தையில் பட்டியலிட்ட பல கோழி நிறுவனப் பங்குகளின் விலைகள் தரை தட்டிவிட்டன என்பது பழைய செய்தி. இரண்டாவது முறை அந்த பீதி பரவியபோது, 3 கோடி ரூபாய்க்கும் குறைவான முதல் போட்ட சில கம்பெனிகள் நலிந்துவிட்டன. பல கம்பெனிகளில் வேலை செய்துவந்த டாக்டர்களுக்கு சம்பளம், பயணப்படிகூட தள்ளிப்போகிறதாம். பெரும்பாலானவர்களுக்கு கம்பெனி தரப்பிலிருந்து ‘தினசரி டூர் ப்ரோகிராம் தேவையில்லை’ என்று ஆணை பறந்திருக்கிறது பலர் ‘தீனி போடுவதுகூட கட்டுப்படியாகவில்லை’ என கோழிகளைப் பட்டினி போட்டுக் கொல்கிறார்களாம். 25 ரூபாய் செலவு செய்து கோழியை வளர்த்ததற்கு 10 ரூபாய் கூட கிடைக்காமல் இருந்த நிலை மாறி இப்போது சில இடங்களில் 15 ரூபாய் விலை கிடைக்கிறதாம். பறவைக் காய்ச்சல் பிரச்னையால் ரிலையன்ஸ் மற்றும் சில பன்னாட்டு நிறுவனங்களும் இந்திய பவுல்ட்ரி தொழிலில் இறங்கும் திட்டத்தைக் கைவிடும் யோசனையில் இருக்கின்றனவாம்’’

‘‘அது என்ன நியாயம்? உலகில் பரவலாக எல்லா நாடுகளையும்தான் பறவைக் காய்ச்சல் தொட்டிருக்கிறது. அதற்கு பயந்து மற்ற நாடுகளில் கோழி வளர்க்காமலா இருந்துவிட்டார்கள்..? கொஞ்சநாள் போனால் எல்லாம் சரியாகிவிடும். அதுவரை சமாளிக்க முதுகெலும்பு கொஞ்சம் வலுவாக இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள்’’ என்றோம். ‘‘ஆம். நன்றாகச் சொன்னீர்!’’ என்றபடி நடையைக்கட்டினார் ஷேர்லக் ஹோம்ஸ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism