Published:Updated:

செல்போன் - லைஃப்டைம் ஃப்ரீயா... தொல்லையா?

செல்போன் - லைஃப்டைம் ஃப்ரீயா... தொல்லையா?

செல்போன் - லைஃப்டைம் ஃப்ரீயா... தொல்லையா?

செல்போன் - லைஃப்டைம் ஃப்ரீயா... தொல்லையா?

Published:Updated:
நடப்பு
செல்போன் - லைஃப்டைம் ஃப்ரீயா... தொல்லையா?
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செல்போன் - லைஃப்டைம் ஃப்ரீயா... தொல்லையா?

‘‘ஆ ண்டவா... எப்போ பார்த்தாலும் போனும் கையுமாகவே இருக்கா என் பொண்ணு... அவளுக்கு நல்ல புத்தியைக் கொடுப்பா...’’ என்று தந்தை, சாமியைக் கும்பிடுவார். மகளோ, ‘‘ஆண்டவா... எனக்குப் புதுசா, லேட்டஸ்ட் மாடல் போன் வாங்கிக் கொடுக்க அப்பாவுக்கு புத்தி சொல்லுப்பா...’’ என்று கும்பிடுவாள்.

இது செல்போனுக்கான விளம்பரம் இல்லை. ஆனால், பல குடும்பங்களில் இப்படித்தான் சாமியைக் கன்ஃப்யூஸ் பண்ணுகிறார்கள். சும்மா சாமி ஆடுபவனுக்கு உடுக்கை அடித்துவிட்டது போல, இப்போது செல்போன் கம்பெனிகள் எல்லாமே ‘வாழ்நாள் முழுக்க இன்கமிங் கால்கள் ஃப்ரீ’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இளைஞர்களை செல்போன் பக்கம் இழுத்திருக்கிறது.

அதாவது ஒரு செல்போன் கனெக்ஷனை வாங்கி விட்டால் போதும். வாழ்நாள் முழுக்க, வரும் இன்கமிங் கால்களை பேசிக்கொண்டே இருக்கலாம். அவுட்கோயிங் பேசுவதற்கு மட்டும் ரீ\சார்ஜ் பண்ணிக்கொண்டால் போதும்’ என்பதுதான் செல்போன் கம்பெனிகள் அறிவித்திருக்கும் திட்டம்.

ஆனால், ‘இது முழுக்க வியாபார தந்திரம். வாழ்நாள் முழுக்க இலவச சேவை செய்வதற்கு யாரும் தயாராக இருக்கமாட்டார்கள். இதுபோன்ற விளம்பரங்களில் நுணுக்கமாக சில விஷயங்களை, கவனிக்க முடியாத அளவுக்கு சாமர்த்தியமாகச் சொல்லி ஏமாற்றுகிறார்கள்’ என்று அக்கறையோடு சிலர் கவலைப்படுகிறார்கள்.

இந்தத் திட்டத்தின் பின்னணியில் என்னதான் இருக்கிறது என்பதை ஆராயக் களம் இறங்கினோம்.

செல்போன் - லைஃப்டைம் ஃப்ரீயா... தொல்லையா?

வாழ்நாள் முழுவதும் இன்கமிங் திட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு முதலில் பரபரப்பை உண்டாக்கியது ‘ஏர்டெல்’ நிறுவனம்தான். அதன் பிறகு அனைத்து நிறுவனங்களும் மார்க்கெட்டில் குதித்தன.

எல்லா நிறுவனங்களுமே தங்கள் கட்டணம் ஆயிரம் ரூபாய்க்குக் குறைவாக இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருந்தன. ரூபாய் 999 மற்றும் 888 என்பது போன்ற மேஜிக் எண்களால் மக்களைக் கவர்ந்து இழுக்கப் பார்த்தன.

செல்போன் நிறுவனங்களின் விளம்பரங்களின் பின்னணியில் நமக்குக் காத்திருக்கும் முதல் அதிர்ச்சி, ‘வாழ்நாள் முழுக்க ஃப்ரீ என்றால் யாருடைய வாழ்நாள் என்பதே! அது செல்போன் நிறுவனத்தின் வாழ்நாளும் அல்ல, வாங்கும் வாடிக்கையாளரின் வாழ்நாளும் அல்ல. ஆயுள் தண்டனை என்றால் 14 ஆண்டுகள் என்பது மாதிரி, செல்போன் நிறுவனங்கள் நிர்ணயம் செய்யும் வாழ்நாள் - இரண்டு ஆண்டுகள்!

ஒருவேளை அந்தத் திட்டத்தின் வாழ்நாளே அவ்வளவுதானா..? என்று விசாரித்தால், ‘‘அப்படியெல்லாம் இல்லை, இரண்டு வருடங்கள் ஒரு செல்போனை பயன்படுத்தியவர் கை சும்மா இருக்காது. கை சும்மா இருந்தாலும் பேசின வாய் சும்மா இருக்காது. எங்கள் வலையின் சுகம் கண்டுவிட்ட அவர்கள் எப்படியும் கனெக்ஷனைத் தொடருவார்கள். அடுத்து சில ஆண்டுகளுக்குத் தானாகவே நீட்டித்துக் கொள்வார்கள்’’ என்று சாதுர்யம் பேசுகிறார்கள் செல்போன் கனெக்ஷன் விற்பனை செய்யும் ஏஜென்ட்கள்.

‘‘அப்படி நீட்டிக்கப்படும் ஆயுளைப் பற்றி இப்போதே தெளிவாகச் சொல்ல வேண்டியதுதானே!’’ என்ற கேள்விக்கு பதில் இல்லை. ஆக, வாழ்நாளுக்கும் இலவசம் என்பதே வார்த்தை ஜாலம் என்பது தெளிவாகிறது.

சரி, இரண்டு ஆண்டுகளுக்கு இலவசமாகப் பேச முடியுமே... அது நமக்குக் கிடைத்த சலுகைதானே என்று யோசித்தால், அதுவும் இல்லை என்பதுதான் அடுத்த அதிர்ச்சி!

நாம் கட்டணமாகச் செலுத்தும் ஆயிரம் ரூபாயில் அதிகபட்சம் ஐம்பது ரூபாய்க்குதான் அவுட்கோயிங் கால்கள் செய்யமுடியும். அந்தக் கட்டணம் முடிந்து விட்டால், உங்களால் ‘மிஸ்ட் கால்’ கொடுக்கக்கூட முடியாது. எஸ்.எம்.எஸ் அனுப்பவும் முடியாது. அதனால், நீங்கள் யாருடனாவது பேச வேண்டுமானால் தவித்துப்போகவேண்டியதுதான்! நீங்கள் விரும்புபவர்களோடு பேசுவதைவிட, உங்களிடம் பேச நினைப்பவர்களிடம் மட்டுமே பேசவேண்டிய நிலை.

இதுவே, சாதாரண திட்டங்களில் செல்போன் கனெக்ஷன் வாங்கியிருந்தால், இதே ஆயிரம் ரூபாய்க்கு ஆறுமாதங்களுக்கு சுமாராக 900 ரூபாய்வரை அவுட்கோயிங் பேசிக்கொள்ள முடியும். எனவே, நீங்கள் ‘ஆயுட்கால இன்கமிங் இலவச திட்டத்’தின் கீழ் போனாலும், அடிக்கடி ரீ\சார்ஜ் செய்து கொண்டால்தான் கனெக்ஷனைப் பயனுள்ள வகையில் தொடரமுடியும். ஆக, கொடுப்பதுபோல கொடுத்துவிட்டு வேறு வழிகளில் உங்களிடம் இருந்து பணத்தை வசூலித்துவிடுகின்றன செல்போன் நிறுவனங்கள். மொத்தமாக ஆரம்பத்தில் வசூலிக்கும் கட்டணமே அவர்களுக்கு நல்ல லாபம்தான்!

அதோடு நாம் ரீசார்ஜ் செய்யும்போது முழுத் தொகைக்கும் பேசும் வாய்ப்பு கிடைப்பது போலத் தெரிந்தாலும் பல்ஸ் ரேட்டில் வித்தியாசம் காட்டி, அவர்களுடைய இழப்பை ஈடுசெய்து கொள்கிறார்கள்.

சிம்கார்ட் போட்டுப் பேசும் ஜி.எஸ்.எம் ( Global System for Mobile communication ) தொழில்நுட்பம் கொண்ட போன்களாவது பரவாயில்லை. வேண்டாம் என்றால் கார்டை மாற்றிவிட்டுப் போய்க்கொண்டே இருக்கலாம். ஆனால், போனிலேயே கனெக்ஷன் கொடுக்கும் சி.டி.எம்.ஏ ( Code Division Multiple Access ) வகை போன்களில் எசகுபிசகாக மாட்டிக்கொண்டால் ஆயுளுக்கும் அவஸ்தைதான்!

‘ஆயுளுக்கும் இன்கமிங் இலவசம்தானே... அது எந்த போனாக இருந்தால் என்ன?’ என்று யோசித்தால் அங்கேயும் செக் வைத்திருக்கிறார்கள். சிம்கார்ட் போட்டு பேசும் செல்போன்களில் அதிகபட்சம் ஆறுமாதத்துக்குத்தான் ரீ-சார்ஜ் செய்யாமல் இன்கமிங் சேவையை அனுபவிக்க முடியும். அதாவது, உங்களுடைய அவுட்கோயிங் லிமிட் முடிந்துவிட்டாலும் இன்கமிங் மட்டுமாவது வந்து கொண்டிருக்குமே என்று நீங்கள் ஆறுதல் அடைய முடியாது.

இந்த வகையில் சி.டி.எம்.ஏ போன்களில் குறிப்பிட்ட காலம் முடியும்வரை இன்கமிங்கை இலவசமாகக் கொடுக்கிறார்கள். ஆனால், அவர்கள் கொடுக்கும் மாடல் போனைத்தான் வாங்கிக் கொள்ளவேண்டும் என்ற நிர்ப்பந்தம் அதில் இருக்கிறது.

லேண்ட் லைனிலும் வாழ்நாள் முழுவதும் இலவச இன்கமிங் திட்டத்தை டாடா இண்டிகாமும், ரிலையன்ஸும் அறிமுகப்படுத்தியுள்ளன.

எல்லாமே மைனஸ் பாய்ன்ட்களாகவே இருக்கிறதே என்று யோசித்தால், சில ப்ளஸ் பாயின்ட்களும் இருக்கத்தான் செய்கின்றன. கிட்டத்தட்ட மாதம் நூறு ரூபாய் செலவில் இரண்டு வருடத்துக்கு ஒரு போன் கிடைக்கிறது. அதோடு, அதிகம் அவுட்கோயிங் பேசத் தேவையில்லாத அலுவலக ஊழியர்களுக்கும் நகர்ப்புறத்தில் வாரிசுகள் இருக்க... போன் என்றால் என்னவென்றே தெரியாத அப்பாவி கிராமத்து அப்பாக்களும் இப்படி ஒரு போன் வசதியால் பில் பிரச்னை இன்றி வாரிசுகளுடன் உறவினர்களுடன் பேசிப் பயனடைய முடியும். அதுபோன்ற எட்டாக்கனியான இருந்த நபர்களுக்கும் ‘ஓகே... சீப்பா கிடைக்குது!’ என்ற நபர்களுக்கும்தான் இது நிஜமான லாபம்.

ஆனால், ஒரு விஷயம், இது எல்லாமே நாம் கட்டுப்பாடுடன் இருப்பதில்தான் இருக்கிறது. போன் இருக்கிறதே என்று கொஞ்சம் ஆடம்பரமாக இறங்கினால், ஆயுட்கால போன் ஆயுளுக்கும் உங்கள் பர்ஸை அரிக்கும் கறையானாக மாறிவிடும்!

ட்ராய் வைத்த செக்!

வா ழ்நாள் முழுவதுமான இன்கம்மிங் திட்டத்தில் இடையில் கட்டணங்கள் எதையும் சேர்க்க கூடாது என்று தொலைபேசி சேவை நிறுவனங்களை கட்டுபடுத்தும் ட்ராய் அமைப்பு செக் வைத்துள்ளது. ‘வாக்குறுதி அளித்தபடியே இச்சேவையை அந்நிறுவனம் ஈடுபடும் காலம் வரை இலவசமாக இன்கமிங்களை அளிக்க வேண்டும். உரிம காலம் முடியும்போது வாடிக்கையாளருக்குத் தெரிவிக்கவும், விரும்பிய கட்டணத் திட்டத்துக்கு மாறிக்கொள்ளவும் வாடிக்கையாளர்களுக்கு உரிமை அளிக்க வேண்டும்’ என்று ட்ராய் தெரிவித்துள்ளது.

திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆறு மாதத்துக்குப் பிறகு கட்டணத்தில் மாற்றம் செய்யவும், இத்திட்டத்தில் இருந்து எந்நேரமும் வெளியேறவும் தங்களை அனுமதிக்க வேண்டும் என்று செல்போன் நிறுவனங்கள் கோரியதன் விளைவாகவே ட்ராய் இந்த அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

அரசு அதிரடி!

செ ல்போன் நம்பரை மாற்றாமலே தற்போது இருக்கும் நிறுவனத்தின் திட்டத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்தின் திட்டத்திற்கு மாறும் வசதியை கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு வாடிக்கையாளர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்றாலும் சேவை நிறுவனங்களின் பாடு திண்டாட்டம்தான். டாடா இண்டிகாம் ‘ஒன் வேல்டு\ஒன் பிளான்’ என்ற திட்டத்தை ஏப்ரல் ஆரம்பத்தில் கொண்டு வருகிறது. இதில் உள்ள சிம்கார்டை சி.டி.எம்.ஏ மற்றும் ஜி.எஸ்.எம் தொழில்நுட்பம் ஆகிய இரண்டிலும் போடலாம். இச்சேவையை உலகில் 186 நாடுகளுக்குச் செல்லும்போது பயன்படுத்தலாமாம்.

ஒரே இந்தியா... ஓகேவா..?

செல்போன் - லைஃப்டைம் ஃப்ரீயா... தொல்லையா?

டுத்த பரபரப்பாகக் கிளம்பி இருப்பது இந்தியா முழுக்க ஒரே கட்டணத்தில் பேசும் திட்டம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒரே ரூபாயில் பேசலாம் என்று பி.எஸ்.என்.எல் ஆரம்பித்து வைக்க, இதே அம்சத்துடன் கூடிய திட்டத்தை டாடா இண்டிகாம், ரிலையன்ஸ், ஏர்டெல்லும் அளிக்கின்றன. ஆனால், உள்ளுக்குள் பார்த்தால் ஏகப்பட்ட நிபந்தனைகள்!

பி.எஸ்.என்.எல் அறிவித்த இந்தத் திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட 60% எஸ்.டி.டி கட்டணம் குறைந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. அறிவித்த 20 நாளில் இரண்டரை லட்சம் புதிய சந்தாதாரர்கள் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளனராம். ஆனால்,எஸ்.டி.டி பூத் வைத்திருப்பவர்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது என்பதால் பப்ளிக் போனில் பேசும் ஏழைமக்களுக்கு இதனால் ஒரு பயனும் இல்லை. அதிகம் வெளியூர்களுக்குப் பேசும் தேவை இருப்பவர்களுக்குப் பயனுள்ள திட்டம் இது.

செல்போன் - லைஃப்டைம் ஃப்ரீயா... தொல்லையா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism