Published:Updated:

ஒரு நாள் முதலாளி - ஃபேன்ஸி பாசி வாங்கலியோ...

ஒரு நாள் முதலாளி - ஃபேன்ஸி பாசி வாங்கலியோ...

ஒரு நாள் முதலாளி - ஃபேன்ஸி பாசி வாங்கலியோ...

ஒரு நாள் முதலாளி - ஃபேன்ஸி பாசி வாங்கலியோ...

Published:Updated:
தொழில்
ஒரு நாள் முதலாளி - ஃபேன்ஸி பாசி வாங்கலியோ...
 

 

ஃபேன்ஸி பாசி வாங்கலியோ££...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு நாள் முதலாளி - ஃபேன்ஸி பாசி வாங்கலியோ...
ஒரு நாள் முதலாளி - ஃபேன்ஸி பாசி வாங்கலியோ...

ரு முடிவோடுதான் வந்திருந்தார்கள் இரண்டு பெண்களும்! சென்னையில் உள்ள எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரியில் பி.காம் முதலாண்டு படிக்கிறார்கள் கற்பகமும், கிறிஸ்டி னாவும்!

‘‘எங்களின் படிப்பே பணம் சம்பந்தப் பட்டதுதான். படிச்சதை பிராக்டிகலா செயல் படுத்திப் பார்க்க உங்களின் ‘ஒருநாள் முதலாளி’ பகுதி லட்டு மாதியான வாய்ப்பு. எங்கள் கல்லூரி மாணவிகளுக்குத் தொழில் தொடங்குவது பற்றி டிப்ஸ்கள் கொடுக்கும் கல்லூரி தொழில் முனைவோர் அமைப்பில் கேட்டபோது டபுள் ஓகே சொல்லிட்டாங்க. ஃபேன்ஸி பொருட்கள் வியாபாரம் பண்ண லாம்னு வந்திருக்கோம். எடுங்க, ஆயிரம் ரூபாயை!’’ என்று கொஞ்சம் மிரட்டல் தொனியில் கேட்டார்கள் இருவரும். சந்தோஷ ஆச்சர்யத்தோடு பணத்தை எண்ணிக் கையில் கொடுத்தோம்.

டூ-வீலரைக் கிளப்பி, அடையார் பக்கம் போனார்கள். ‘‘பொண்ணுகளை பியூட்டி குயின்களாக்கும் இடம் இங்கேதான் இருக்கிறது. ஃபேஷன் என்ற பெயரில் பெண்களின் காதிலும் கழுத்திலும் தொங்கும் மாட்டல்களும் செயின்களும் தயாராவது இங்கேதான். அதை வாங்கி, பெண்கள் கூடும் ஏரியாவில் விற்பதுதான் எங்கள் திட்டம்’’ என்றபடி, வண்டியை பார்க் செய்தார்கள். அதிர்ந்து போய் பார்த்தோம். காரணம், அவர்கள் போனது, ஃபேன்ஸி ஸ்டோர் மொத்தக் கடைக்கு இல்லை! பாசிமணிகளை விற்றே பேர் வாங்கிய இனத்தவரின் குடியிருப்புப் பகுதிக்கு.

ஒரு நாள் முதலாளி - ஃபேன்ஸி பாசி வாங்கலியோ...

‘‘கல்லூரிப் பெண்களின் பர்ச்சேஸ் ஸ்பாட் இதுதான். இன்னிக்கு நம்ம ஹோல்சேல் டீலரே சின்னம்மாதான்!’’ என்று ஃபேஷன் ரகசியத்தைப் புட்டுப்புட்டு வைத்தபடியே அந்தப் பெண்மணியின் எதிரே அமர்ந்தார்கள்.

‘‘எல்லாமே நவரத்தின கல்லு பாசி! டெல்லிக்குப் போய் வாங்கி வந்தது’’ என்றவாறு விலையைச் சொன்னார் சின்னம்மா. பேரம் பேசி, கடைசியில் 10 கொலுசுகள் மற்றும் பல கலரில் கையில் போடும் பேண்ட் 10 (இரண்டும் சேர்த்து 100 ரூபாய்), தோடுகள் வித விதமாக 20 ஜோடி (200 ரூபாய்), கலர்கலராக சிறு செயின்கள் 15 (200 ரூபாய்), பெரிய மாலைகள் 2 (80 ரூபாய்) என பர்ச்சேஸை முடித்தார்கள். மொத்தம் 580 ரூபாய் ஆனது.

‘‘அவ்வளவுதானா பர்ச்சேஸ்..?’’ என்றோம்.

‘‘மீதிக்கு இன்னொரு ஏரியாவில் பொருள் வாங்கப் போகிறோம்!’’ என்றபடி, அங்கேயே ஒரு கடையில் புகுந்து 400 ரூபாய்க்கு நல்ல காட்டனில் சல்வார் துணி பீஸ்களை வாங்கி னார்கள்.

‘‘இங்கே ஆரம்பிக்குது நம்ம வியாபாரம்!’’ என்று வண்டியை பெண்கள் கல்லூரிப் பக்கமாகத் திருப்பினார்கள். பரீட்சை நேரமென்பதால், பலரும் சீரியஸாகப் படித்துக் கொண்டிருக்க, ‘‘பாஸாக வழிகாட்டும் அதிர்ஷ்டக்கல் செயின், தோடு... அள்ளிக்கோங்க, மொத்தமே பத்து பீஸ்தான் இருக்கு’’ என்று ஜோராகக் குரல் கொடுக்க, ஜூராஸிக் பார்க் படத்தில் தலை தூக்கும் டைனோசர்கள் போல பல தலைகள் நிமிர்ந்தன. அந்தத் தலைகளைக் குறிவைத்து நெருங்கிப் போய்ப் பேச ஆரம்பித்தார் கற்பகம்.

இன்னொருபக்கம், கிறிஸ்டினா கையிலிருந்த செயின்களை டிஸ்பிளேயாகக் காட்ட... மெதுவாகக் கூட்டம் சேரத் தொடங்கியது.

ஒரு நாள் முதலாளி - ஃபேன்ஸி பாசி வாங்கலியோ...

‘‘என்ன விலை?’’ என்று மையமாகக் கேட்டு பாசிகளை ஆராய ஆரம்பித்தனர். ‘‘செயின் 30 ரூபாய்’’ என்றவுடன், ‘உண்மையிலேயே அதிர்ஷ்ட கல்தானா?’ என்று தீவிரமாய் யோசித்தனர். ‘‘கண்முழிச்சுப் படிக்கிறீங்க... படிச்சது எக்ஸாம்ல வரலேன்னா என்ன பிரயோஜனம்? அதுக்குக் கொஞ்சம் அதிர்ஷ்டக்காத்து தேவை!’’ என்று இவர்கள் விட்ட பீலா பிரம்மாஸ்த்திரம் குறி தப்பவில்லை. லேகிய வியாபாரி மாதிரி பல டயலாக்குகள் விட்டு, கற்பகமும் கிறிஸ்டினாவும் ஓடியாடி கேன்வாஸ் செய்ததற்குப் பலன் கிடைத்தது. அங்கு மட்டும் 6 செயின்கள், ஒரு செட் தோடு விற்பனையாயின. ‘‘அதிர்ஷ்டமாவது... கல்லாவது..? பாசி பார்க்க பளிச்சுனு இருக்கு! அதனால வாங்கறோம்!’’ என்று கவுன்ட்டர் கொடுத்த பெண்களும் உண்டு.

குஷியாக, அடுத்த ரவுண்டுக்கு அவர்கள் தேர்ந்தெடுத்தது மிடில் கிளாஸ் மக்கள் வாழும் சைதாப்பேட்டை பகுதி காலனியை! ‘‘கணவரை ஆபீஸுக்கும், பிள்ளைகளை ஸ்கூலுக்கும் அனுப்பிவிட்டு இப்போது கொஞ்சம் ஃப்ரீயாகவே இருப்பார்கள் தாய்க்குலங்கள். அதனால், இப்போது போனால் ‘க்ளிக்’காகும்’’ என்றபடி காலனிக்குள் நுழைந்தார்கள். இந்தமுறை டெக்னிக்கையே மாற்றி இருந்தார்கள். ஒரு சல்வார் மெட்டீரியல் துணியுடன் அதற்கு மேட்ச்சாக பெரிய மாலை, தோடுகள், கொலுசு, கையில் மாட்டிக்கொள்ளும் வளையல் பேண்ட் போன்றவற்றை வைத்து ஒரு ‘மேட்சிங் செட்’ கூட்டணியை அமைத்தார்கள். 400 ரூபாய் என விலை நிர்ணயம் செய்தார்கள். பலரும் சும்மா புரட்டிப் பார்த்துவிட்டுப் போக, ஒரு குடும்பத்தலைவி, ‘‘இந்த ப்ளூ கலரைத் தேடி எத்தனை கடை ஏறி இறங்கியிருப்பேன் தெரியுமா... கிடைக்கணும்னு இருக்கறது கிடைக்காமப் போகாது’’ என்றபடி ஒரு சல்வார் செட்டை வாங்கிக்கொண்டார். ஆனால், விலையாகக் கொடுத்தது 350 ரூபாய்தான். அதானே... பேரம் பேசாவிட்டால் அது என்ன வியாபாரம்!

ஒரு நாள் முதலாளி - ஃபேன்ஸி பாசி வாங்கலியோ...

வெயில் உச்சிக்கு ஏறி இருந்தது. ‘‘ஆபீஸ்களில் லஞ்ச் நேரத்தில் பெரும்பாலும் இதுபோன்ற வியாபாரம்தான் நடக்கும். நாமும் கொஞ்சம் முயற்சி செய்யலாமே...’’ என்றபடி ஒரு அலுவலகத்துக்குள் நுழைந்தார்கள். பெண் ஊழியர்கள் பக்கம் போய், பாசி மாலை உள்ளிட்ட புதிய மாடல் பொருட்களை கலர்கலராக பரப்ப, அலுவலகத்தின் ஓரமாக உருவானது திடீர் கடை. டெமோ ஆரம்பமானது.

‘‘இதுதான் மார்க்கெட்டுக்குப் புதிதாக வந்திருக்கும் செயற்கை ரத்தின தோடு... கலர்ஃபுல் கொலுசு... பார்ட்டிக்கு போட்டுட்டு போகிற மாலை... புது புது ஃபேஷனை விரும்புகிறவர்களுக்கு இது அரிய வாய்ப்பு. குறைந்த விலையில் கொடுக்கிறோம். எல்லா வயசுக்கும் பொருந்தும். காலேஜுக்கும் போடலாம். ஆபீஸுக்கும் பயன்படுத்தலாம். உங்களில் அந்த அதிர்ஷ்டசாலி யாரு?’’ என்று கணீர் குரலில் கற்பகம் பேச, கிறிஸ்டினா பொருட்கள் கைமாறும் திசையைக் கவனித்து, பர்சனல் கேன்வாஸிங்கில் இறங்கினார்.

ஒரு நாள் முதலாளி - ஃபேன்ஸி பாசி வாங்கலியோ...

‘‘காலையில எனக்கும் எம் பொண்ணுக்கும் சின்ன சண்டை. இந்த பாசியை வாங்கிக் கொடுத்தா சமாதானமாகிடுவா!’’ என்ற பெண்ணிடம், ‘‘உங்க பொண்ணுக்கு இதையும் வாங்கிக் கொடுத்துப் பாருங்க! அம்மா அம்மான்னு உங்களையே சுத்தி வருவாங்க...’’ என்று கொக்கி போட்டு, தோடுகளையும் விற்றார்.

‘‘நான் அவளுக்கு எதுவும் வாங்கித் தர்றதில்லைனு எம்பொண்ணு அடிக்கடி சொல்லுவா, அதுக்குனே இன்னைக்கு ஏதாச்சும் கொடுக்கணும்’’ என்றபடி வாங்கிப் போனார் இன்னொரு பெண்மணி. இப்படியே கொலுசுகள் ஐந்தும் (50 ரூபாய்), ஐந்து பேண்ட்களும் (50 ரூபாய்), தோடுகள் 10 செட்டும் (200 ரூபாய்), சிறிய செயின்கள் ஐந்தும் (100 ரூபாய்) வாங்கினார்கள் அங்குள்ள பெண்கள். ஒரே இடத்தில் செம விற்பனை. பெண்கள் கூட்டம் நகர ஆரம்பிக்க... ஆண்கள் கூட்டம் ஒன்று உள்ளே வந்தது.

‘‘வாங்கண்ணா... வாங்க! எல்லாமே புதுப்புது டிஸைன்... வாங்கிட்டு போய் உங்க வீட்ல அசத்துங்க...’’ என்று இவர்கள் லாகவமாகப் பேச கூட்டம் ஆர்வமானது. ‘‘உங்க மனைவி என்ன கலர்?’’ என்று இவர்கள் கேட்க ‘‘நல்ல கலருங்க!’’ என்றார் ஒருவர் வெட்கத்துடன்.

‘‘இந்த காட்டன் சல்வார் மெட்டீரியல் அவங்களுக்கு எடுப்பா இருக்கும். இதோட தோடு ஒரு ஜோடி, நவரத்தின மாலை, கொலுசு, பேண்ட் மொத்தமா சேர்த்து 350 ரூபாதான். வாங்கிட்டுப் போய் கொடுங்கண்ணா! அப்புறம் பாருங்க... உங்க மனைவி உங்க மேல பொழியப்போற அன்பை...’’ என்ற இவர்களின் பாசமலர் பேச்சில் மயங்கி காசை வெளியே எடுத்தார் அவர்.

‘‘நம்ம திட்டம் 350 ரூபாய்க்கு விற்கறதுதான். பெண்கள்னா பேரம் பேசுவாங்க. அதனால் 50 ரூபாய் ஏத்திச் சொல்லி கடைசியில் குறைச்சுக்கறது. ஆண்கள் அப்பாவிகள்! சொன்ன ரேட்டுக்கு வாங்கிடுவாங்க. அதனால், கரெக்ட் ரேட் சொல்லி விற்கலம்’’ என்ற பிஸினஸ் தத்துவத்தைச் சொல்லிவிட்டு, கடிகாரம் பார்த் தார்கள்.

மணி மதியம் இரண்டரை... ‘‘இந்த நேரத்தில் எங்கு சுற்றினாலும் வேலைக் காகாது. ஒருமணிநேரம் ரெஸ்ட்... அப்புறமாக மீண்டும் ரவுண்ட்..!’’ என்றபடி வீட்டுக்குக் கிளம்பியவர்கள், நான்கு மணிக்கு வந்தார்கள்.

செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பமானது. பளிச்சென்று காஸ்டியூம் மாற்றியிருந்தார்கள். ‘‘சேல்ஸில் அழுது வடியாமல் பளிச்சென்று இருக்கணும். அதுதான் ரொம்ப முக்கியம். அதுதான் வீட்டுக்குப் போயிட்டு ஃப்ரெஷ்ஷா திரும்பியிருக்கோம்’’ என்று பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

போகிற வழியில் குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் இருந்து அழைத்துக்கொண்டு இரண்டு அம்மாக்கள் திரும்பிக் கொண்டிருக்க வண்டியை பிரேக் போட்டார்கள். பேசிப் பேசி கரெக்ட் பண்ணி இரண்டு வண்ணங்களில் ஐந்து செட் தோடு, மற்றும் செயின்களை சேல்ஸ் பண்ணிவிட்டுத்தான் நகர்ந்தார்கள். மொத்தம் 180 ரூபாய் கைமாறியது.

ஒரு நாள் முதலாளி - ஃபேன்ஸி பாசி வாங்கலியோ...

வண்டி நேராக ஒரு லேடீஸ் ஹாஸ்டலுக்குச் சென்றது. வேலைக்குப் போனவர்கள், கல்லூரிக்குப் போனவர்கள் என ஒவ்வொருவராகத் திரும்பிக்கொண்டு இருந்தார்கள். ‘‘வந்து பார்த்துட்டு அப்புறம் சொல்லுங்க... இதே பொருள் பெரிய பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் பத்துமடங்கு விலை அதிகம். அதே தரத்திற்கு மலிவா உங்க இடம் தேடி வந்து தர்றோம். இப்ப இல்லேன்னா இந்த வாய்ப்பு எப்பவும் இல்லை’’ என்ற கிறிஸ்டினாவின் குரலுக்கு செவிமடுத்தனர் சில பெண்கள். ஆட்களையும் பொருளையும் மாறி மாறி பார்த்தவர்கள், ‘‘விலை ஓவரா இருக்கும் போலிருக்கே...’’ என்றவர்களை மடக்கி, ‘‘3 செட் கொலுசு, 3 பேண்ட், 2 செட் தோடுகள் எல்லாம் சேர்த்து 100 ரூபாய்க்கு மேல் வரும். கடைசி வியாபாரங்கிறதால 75 ரூபாய்க்குத் தர்றோம்’’ என்று இவர்கள் சொல்ல, பேரம் 50 ரூபாய்க்கு முடிந்தது. அடக்க விலைதான். ஆனாலும் சேல்ஸை முடிக்கிற அவசரம்!

எல்லாப் பொருட்களும் காலி. கையில் இருந்த பணத்தை எண்ணி பார்க்க 1,520 ரூபாய் இருந்தது. ஆயிரம் ரூபாயை நம்மிடம் கொடுத்துவிட்டு, ‘‘தியரியா படிச்சதை பிராக்டிகலா அப்ளை செய்ய நல்ல வாய்ப்பு! புத்திசாலித்தனம் இருந்தால் பிஸினஸ்ல லாபம் பார்க்கிறது ரொம்ப ஈஸி. அதைக் கற்றுக் கொடுக்கும் நாணயம் விகடனுக்கு ஹேட்ஸ் ஆஃப்’’ என்று சல்யூட் அடித்துவிட்டு வண்டியைக் கிளப்பினார்கள்.

ஒருநாள் முதலாளிகளைச் சுமந்துகொண்டு கம்பீரமாக ஓடியது அந்த வண்டி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism