Published:Updated:

‘நாயுடு ஹால்’ ரகசியம்...

‘நாயுடு ஹால்’ ரகசியம்...

‘நாயுடு ஹால்’ ரகசியம்...

‘நாயுடு ஹால்’ ரகசியம்...

Published:Updated:
தொழில்
‘நாயுடு ஹால்’ ரகசியம்...
 

 

‘நாயுடு ஹால்’ ரகசியம்...
மாற்றத்தில் கிடைத்தது மளமள வெற்றி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘நாயுடு ஹால்’ ரகசியம்...
‘நாயுடு ஹால்’ ரகசியம்...

‘‘க டைக்குள்ளே வர்ற கஸ்டமர், வெளியே போகும்போது நம்ம பிராடக்ட்டோட போனால், அவங்களை நாம திருப்திப்படுத்திட்டதா அர்த்தம். எதுவுமே பர்ச்சேஸ் பண்ணாம போய்ட்டா மனசு பதறிப்போகும். ஏன்னா, நாம இழந்தது ஒருத்தரை இல்ல... 100 பேரை. வெரைட்டி இல்லேன்னு யாரும் வெறுங்கையோட போகக்கூடாது. எங்க ‘நாயுடு ஹால்’ வளர்ந்ததுக்கு அதுவும் ஒரு காரணம்!’’ என்கிறார் அரவிந்த்.

பெண்களின் உள்ளாடைகளுக்குப் பெயர் பெற்ற ‘நாயுடு ஹால்’ நிறுவனத்தின் இளைய தலைமுறை வாரிசு. அரவிந்த் பொறுப்பேற்றபின் நிறுவனத்தில் கிடுகிடு வளர்ச்சி.

‘‘வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தற அளவுக்கு டிஸைன்களும் வெரைட்டியும் நம்ம கடையில் இருக்கணும். அதுதான் என்னோட முதல் நோக்கமா இருந்தது’’ என்கிற அரவிந்த், அப்பாவும் தாத்தாவும் ஏற்படுத்தித் தந்த பாதையில் அழகாக பயணித்துக் கொண்டிருக்கிறார். ஒன்றைப் பத்தாக்கத் தெரிந்த வித்தைக்காரர்.

அப்பா ஆரம்பித்த கடைக்கு இன்று ஐந்து கிளைகளை உருவாக்கி இருக்கிறார். இன்னும் பத்து கிளைகளுக்கு வேலைகள் நடந்து கொண்டிருக் கின்றன. இந்த கிடுகிடு வளர்ச்சி எப்படி சாத்திய மானது..? ‘‘எல்லாம் சின்னச் சின்ன கஸ்டமர் அட்ராக்ஷன் டெக்னிக்தான்!’’ என்று ஒருவரியில் சொல்கிற அரவிந்த், ஜெயித்த கதை பேசுகிறார்!

பணக்கார வீட்டுப்பிள்ளை தோற்றம்கூட இல்லாமல் படு எளிமையாக இருக்கிறார். அவரே வந்து ஒப்புக் கொண்டால்தான் கடையின் உரிமையாளர் என்பது தெரியுமளவுக்கு படு பவ்யம்.

‘‘எங்க தாத்தா கோவிந்தசாமி டெய்லரா இருந்தவர். புதுமையான சிந்தனைகள் கொண்டவர். ஒருத்தரைக் கண்ணால பார்த்த மாத்திரத்திலேயே அவரால கச்சிதமாக டிரஸ் தைக்கமுடியும். அப்பாவும் டெய்லர் தான். கார் ஷெட்டில் கடை போட்டு வருமானம் பார்த்தவர். அப்படியே படிப்படியாக வளர்ந்து இந்தக் கடையை ஆரம்பித்தார்.

‘பெண்களுக்காக... பெண்களுக்கு!’ என்று மட்டுமே கடையை நிர்மாணித்தார். ஒவ்வொரு கட்டமாக கடையை வளர்த்து சென்னையின் முக்கியமான ஏரியாவான பாண்டி பஜாரில் இந்தக் கடையை வைத்திருக்கிறோம். இப்போது பெண்களுக்கான உள் ஆடைகள் மட்டுமல்லாமல் அவர்களுக்குப் பயன்படும் எல்லா பொருட்களும் பொட்டு, நெயில்பாலிஷ், ஹேர்பேண்ட், சென்ட் என்று ஆரம்பித்து பெண்களுக்கான சகலமும் கொண்ட கடையாக மாற்றிஇருக்கிறேன்.

‘நாயுடு ஹால்’ ரகசியம்...

மாற்றி இருக்கிறேன் என்று நான் சொல்வதில் ஓர் அர்த்தம் இருக்கிறது. எங்கள் கடைக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வருபவராக இருந்தால், கடையில் மாற்றம் நடந்திருப்பதைக் கவனிக்க முடியும். சின்னச் சின்னதாக மாற்றம் நடந்துகொண்டே இருக்கவேண்டும் என்று நான் செய்த ஐடியாதான் இந்த அளவுக்கு விற்பனையை உயர்த்திக்கொடுத்தது என்று சொல்வேன்.

நான் அப்படிச் செய்ததற்குக் காரணம் இருக்கிறது. + 2 படிக்கிறபோது ஃபெயிலாகிவிட்டேன். என்னைக் கவலையோடு பார்த்த என் அப்பா, ‘‘சரி... ஃபுல் டைமா கடைக்கு வந்துடு!’’ என்று சொல்லிவிட்டார். அப்படி 15 ஆண்டுகளுக்கு முன் கடைக்குள் வந்த நான், கடையை வளர்க்க அப்பா பட்ட கஷ்டங்களைப் பார்த்து வளர்ந்தேன். அதோடு ஒப்பிட்டால், என் முயற்சிகள் எல்லாம் ஒன்றுமே இல்லை.

அவர் மும்பைக்கு துணி வாங்கச் செல்லும்போது நானும் உடன் செல்வேன். அங்குள்ள வியாபாரிகளின் அணுகுமுறை மொத்தமும் பிஸினஸாகவே இருக்கும்.

‘நாயுடு ஹால்’ ரகசியம்...

காசு இருந்தால் கடவுளுக்கான மரியாதை கிடைக்கும். காசு தந்தால் எந்த சரக்கும் எப்போதும் கிடைக்கும். காசு இல்லாவிட்டால் எத்தனை முறை வாங்கியவராக இருந்தாலும் தெரியாத ஆளைப் பார்ப்பதுபோல் பார்ப்பார்கள். காசு எத்தனை முக்கியம் என்பதை அங்கே தான் கற்றுக்கொண்டேன். அதேசமயம், நேர்மையான வழியில் மட்டுமே பணம் வரவேண்டும் என்ற என் அப்பாவின் பாடத்தையும் மனதில் இருத்திக் கொண்டேன். உழைப்பைக் கொட்டத் தயாரானேன்.

இன்றுவரை மும்பை சென்றால் வெறுமே துணிகளை வாங்கிவிட்டு வந்துவிடுவது கிடையாது. அங்குள்ள பஜாரின் பெரிய பெரிய கடைகளைச் சுற்றிச் சுற்றிப் பார்ப்பேன். எல்லாக் கடைகளுக்கும் ஏறி இறங்குவேன். அங்கு பொருட்களை அடுக்கி வைத்திருக்கும் விதத்தைக் கவனிப்பேன். வாங்க நினைத்ததைத் தவிரவும் கூடுதலான பொருட்களை வாங்க வைக்க என்ன செய்யலாம். கடையின் செக்ஷன்கள் எந்த வரிசையில் அமைத்தால் மக்களுக்குப் பிடிக்கும் என்றெல்லாம் யோசிப்பேன்.

உதாரணத்துக்கு, ஒரு கடைக்குள் நுழைந்ததும் புடவைகள் பகுதி, மேல்தளத்தில் பிளவுஸ் செக்ஷன், அதையட்டி உள்ளாடைகள் பகுதி இருக்கிறது என்று கொள்வோம். புடவை எடுக்க நினைத்து வருகிற பெண் மணி மாடியில் பிளவுஸ் செக்ஷன் என்ற ஒன்று இருப் பதை அறியாமலே வெளியேறிவிட வாய்ப்பு இருக்கிறது.

‘நாயுடு ஹால்’ ரகசியம்...

அதுவே, நுழைந்ததும் உள்ளாடைப் பகுதி, அப்படியே மாடிக்குச் சென்று புடவை எடுத்துவிட்டு, பில் போட கீழே இறங்கும்போது பிளவுஸ் செக்ஷன் வழியே வெளி யேற வேண்டும் என்பது போல பாதை அமைத்தால், புடவை வாங்க வந்தவர் பிளவுஸ் வாங்குவார், பிளவுஸ் தேர்வு செய்கிறபோது அருகிலிருக்கிற அழகு சாதனங்கள், பரிசுப் பொருட்கள் இருக்கிற இடத்துக்குப் பார்வை போகும். அங்கிருக்கிற ஏதாவது ஒரு சென்ட் அவரைக் கவரலாம். இப்படி கஸ்டமர்களை ஈர்க்க வைப்பது இன்டீரியரில் ஒரு கலை. அது கடை உரிமையாளரின் ரசனைக்கேற்ப மாறுபடும். பல இடங்களையும் கவனித்து அதில் எது சிறப்பானது என்பதை உள் வாங்கிக் கொள்வேன். அந்த மாற்றங்களை என் கடையில் செய்வேன்.

‘மாதா மாதம் உங்கள் கடையில் இருக்கிற பொருட்கள் இடம் மாறிக் கொண்டே இருக்கின்றன. எது எங்கே இருக்கிறது என்று தேடி கடை முழுக்க அலைய வேண்டி இருக்கிறது. ஒரே இடத்தில் வைத்தால், வந்தோமா... வாங்கினோமா என்று போய்க் கொண்டே இருப்போம். ஏன் சார் எங்களை மாடி மாடியாக ஏறி, இறங்க விடுகிறீர்கள்..?’ என்று என் கஸ்டமர்கள் உரிமையோடு கோபித்துக் கொள்வார்கள்.

ஆனால், நான் செய்யும் மாற்றங்களால், என் கடை யில் என்னென்ன பொருட் கள் கிடைக்கும் என்பது எல்லா வாடிக்கையாளர் களையும் போய்ச் சேருகிறது இல்லையா..! இன்றில்லாவிட்டாலும் நாளை அந்தப் பொருளின் தேவை வரும்போது என் கடையைத் தேடி நிச்சயமாக வருவார்கள். அந்த வகையில் வாடிக்கையாளர்களை நேரடியாகச் சந்திக்கும் பிஸினஸில் உள்ள எவருக்குமே ‘பிளேஸ்மென்ட் ஆஃப் ஸ்டாக்ஸ்’ என்பது மிக முக்கியம்!’’ என்று சொல்கிறார் அரவிந்த்.

‘நாயுடு ஹால்’ ரகசியம்...

இன்டீரியரில் இவர் செய்யும் மாற்றங்களால் கடையின் ஒரு பகுதியில் எப்போதும் ஏதாவது ஒரு வேலை நடந்துகொண்டே இருக்குமாம். ‘‘உலகம் வேகமா ஓடுது. பொருளுக்கான தேவை இருக்கிறதோ இல்லையோ சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஷாப்பிங் செல்வது என்பது நிறைய வருமானம் பார்க்கிற இளைய தலைமுறையின் மனப் போக்காக இருக்கிறது. அதற்கான மாற்றங்களைக் கடையில் கொண்டுவந்து அவர்களின் ரசனைக்கேற்ப கடையை வைத்திருக்க வேண்டி இருக்கிறது. இதற்காக ஆகிற செலவுகள் என்னைப் பொறுத்தவரை முதலீடுதான்’’ என்றும் சொல்கிறார் அரவிந்த். கடைக்குத் தேவையான உடைகளை இவர்களே தையல் தொழிற்சாலை அமைத்துத் தயாரித்துக் கொள்கிறார்கள்.

‘‘அதேபோல, நம்மிடம் உள்ள பொருளின் இன்றைய ஃபேஷன் என்னவோ அது கடையில் இருந்தே ஆகவேண்டும். வந்து கேட்கிற வாடிக்கையாளர் ‘சிவாஜி’ படத்தில் ஸ்ரேயா போட்டு வருகிற சுடிதார் கிடைக்குமா..?’ என்ற கேள்வி யோடு வருவார் என்பதை முன்கூட்டியே உணர்ந்து படம் ரிலீஸ் ஆகிற தேதியில் அது நம் கடையில் இருக்கிறமாதிரி பார்த்துக் கொள்ளவேண்டும். இது ஒரு கோணம். இப்படி எங்கெல்லாம் ஃபேஷன் மாறுகிறது... பெண்களின் ஸ்டைல் மாறுகிறது என்பதைக் கவனித்து அதை நம் கடையில் அது இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதேசமயம், என் தாத்தாவும் அப்பாவும் கட்டிக்காத்த பழைமையையும் விடுவதாக இல்லை.

ஓர் உண்மை தெரியுமா..? இவ்வளவு மாற்றங்கள் வந்து விட்டாலும் இன்னமும் எங்கள் கடை பிரேசியர்களில் அதிகம் விற்பனையாவது என் தாத்தா வடிவமைத்ததுதான். அதையும் விட்டுவிடக் கூடாது! டிரையல் பார்த்து பிரா வாங்க ஆர்வம் காட்டும் இளைய தலை முறையையும் விட்டுவிடக் கூடாது. இந்த பேலன்ஸ்தான் எதிர்கால வளர்ச்சி தரும். ஒன்றைப் பத்தாக்கித் தரும்’’ என்கிறார் அனுபவப் பாடம் தந்த தெளிவோடு.

இளமைக்குக் குறிவைக்கும் புதுமைகள் எப்போதுமே ஜெயிக்கும் என்பதற்கு அரவிந்த் ஒரு நல்ல உதாரணம்.

போட்டிக்கு நடுவே ஜெயிப்பதுதான் சவால்!

‘நாயுடு ஹால்’ ரகசியம்...

பா ண்டி பஜாரில் இருக்கிற நாயுடு ஹாலில் பெண்களுக்கான பொருட்கள் கடை அரவிந்த் நிர்வாகத்தில் இருக்கிறது. அதை அடுத்து இருக்கிற குழந்தைகள் மற்றும் ஆண்களுக்கான பொருட்களை விற்கும் ‘நாயுடு ஹால்’ கடை, அவருடைய சித்தப்பா வேணுகோபால் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குடும்ப பாகப்பிரிவினையில் இந்த ஏற்பாடு நடந்திருக்கிறது. ‘‘எங்க சித்தப்பாவும் குரு மாதிரிதான். அவர் விற்கிற பொருளை நானும், என் கடையில் இருப்பதையும் அங்கேயும் விற்பதில்லை என்ற கட்டுப்பாட்டோடு அருகருகே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால், என் இதர கிளைகளான அண்ணாநகர், அடையார் பகுதிகளில் அந்தப் பகுதிக்குத் தேவையான அனைத்தும் விற்கிறேன். ஆண்டுக்கு குறைந்தபட்சம் மூன்று கிளைகள் என்பது என் இலக்கு. இந்த வருடத்தில் எட்டு கிளைகளாக தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்த இருக்கிறேன்.

குரோம்பேட்டை, வேளச்சேரி கிளைகள் கிட்டத்தட்ட முடியும் நிலையில் இருக்கின்றன. ‘இந்த இரு இடங்களிலும் கூட எதற்கு கிளைகள்... என்ன பெரிய வருமானம் வரும்?’ என்று சில நண்பர்கள் கேட்டார்கள். இங்கேயும் என் ‘பிளேஸ்மென்ட்’ பாலிசிதான். ஏர்போர்ட் வந்துவிட்டு, தென் தமிழகம் வரை செல்லும் எத்தனையோ பேர் சிட்டிக்குள் வருவதில்லை. நெரிசலுக்குப் பயந்து அப்படியே கிளம்பிவிடுகிறார்கள். அவர்களது பார்வையில் படும்படி என் கிளையை குரோம்பேட்டையில் வைத்தால், கஸ்டமர்கள் திருப்தியாக வாங்கிச் செல்வார்கள் இல்லையா..? வேளச்சேரியில் இன்டர்நேஷனல் நிறுவனங்களில் பணியாற்றும் பலரும் குடியேறி இருக்கிறார்கள். மக்கள் நெருக்கம் உள்ள பகுதிகளில் வைக்கும் பிஸினஸ் எப்போதுமே ஜெயிக்கும். அங்கே பல லட்சம் பேர் வசிக் கிறார்கள் என்பதை மனதில் கொண்டு ஒரு பகுதியிலேயே நல்ல இடத்தில் கடை திறக்க இருக்கிறோம். பெரிய வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையோடு களம் இறங்கி இருக்கிறேன்.

மயிலாப்பூரில் இடம் பார்க்கச் சொல்லும்போதே, ‘பக்கத்தில் பெரிய ஜவுளி நிறுவனங்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி இருக்கிறேன். தொழிலில் போட்டி எப்போதுமே முக்கியம். போட்டிக்கு நடுவே ஜெயிப்பதுதான் எப்போதுமே சவால். சவாலில் ஜெயிக்கவேண்டும் என்ற வெறி இருக்கிறதே, அது உள்ளூர ஒரு தீயை எரிய விட்டுக்கொண்டே இருக்கும். வெற் றிக்கு வழிகாட்டும் ஜுவாலை அது!’’ என்கிறார் அரவிந்த்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism