Published:Updated:

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

Published:Updated:
நடப்பு
ஷேர்லக் ஹோம்ஸ்
 

 

சுடச்சுட சூரியச் செய்திகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஷேர்லக் ஹோம்ஸ்

பீஸில் இருந்தபடி ஷேர்லக் ஹோம்ஸுக்கு போன் போட்டோம். ஹலோ டியூனாக ‘வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்...’ பாடல் ஒலித்தது. இவரும் அந்த குத்தாட்ட வளையத்தில் சிக்கி விட்டாரே..? என்று யோசிக்கும்போதே ஷேர்லக்கின் குரல் கேட்டது. ‘‘ஆஸ்பத்திரிக்குள் பேச அனுமதி இல்லை, நான் வெளியில் வந்து கூப்பிடுகிறேன்’’ என்று தொடர்பைத் துண்டித்தார். அடுத்த சில நிமிடங் களில் ஷேர்லக்கிடமிருந்து போன்!

‘‘யாருக்கு என்ன உடம்புக்கு..?’’ என்று நாம் விசாரிக்க...

‘‘நண்பர் ஒருவருக்கு ‘ஃபுட் பாய்சன்’ ஆகிவிட்டது. அதனால் அவரை அழைத்துவந்து அட்மிட் செய்திருக்கிறோம். அப்பளம் சாப்பிட்டால் ஃபுட் பாய்ஸன் ஆகும் என்பது அதிர்ச்சியான விஷயம் இல்லையா..!’’ என்றார்.

‘‘என்ன... அப்பளத்தில் விஷமா... நன்றாக செக் பண்ணினார்களா?’’ என்றோம் அதிர்ச்சியோடு!

‘‘நண்பரின் வீட்டில் இருந்த மீதமுள்ள அப்பளத்தைக் கொண்டு போய் டெஸ்ட் பண்ணியே பார்த்துவிட்டோம். விசாரித்தபோதுதான் இதன் பின்னணியில் பெரிய மோசடியே இருப்பது தெரிய வந்திருக்கிறது. அப்பளம் தயாரிக்கப்பட்டு வெகு நாட்களாகிவிட்டதாம். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு சாப்பிட்டால் சுகாதாரக்கேடு என்ற நிலையில் சம்பந்தப்பட்ட கம்பெனிகள் அந்தக் கடைசி மாதத்தில் அடக்க விலைக்கு ஹோல் சேலாக யாரிடமாவது விற்று விடுவார் களாம். அதைக் குறைந்த விலைக்கு வாங்கி வருகிறவர்கள் அப்படியேவோ அல்லது லேபிளை மாற்றி லோக்கல் பிராண்ட் பெயரிலோ விற்பனை செய்கிறார்களாம். வடசென்னையில் இப்படி ஒரு அப்பளத்தை வாங்கிச் சாப்பிட்டதில்தான் நண்பருக்கு இதுபோல் ஆகிவிட்டது’’ என்று அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாகக் கொடுத்தார்.

‘‘என்ன அநியாயமாக இருக்கிறதே... நண்பர் எப்படி இருக்கிறார்?’’ என்றோம்.

‘‘ஆரம்பத்திலேயே கவனித்துவிட்டதால் ஒன்றும் பிரச்னையில்லை. ஆனால், வட சென்னைப் பகுதியில் இந்த பிஸினஸ் ஜரூராக நடக்கிறதாம். அப்பளம் மட்டுமல்ல... ஊதுபத்தி, சோப்புத் தூள் என்று வீட்டு உபயோகப் பொருட்கள் பலவற்றிலும் இந்த காலாவதி மோசடி நடப்பதாகத் தகவல். லோக்கல் பிராண்ட் என்றால் மக்கள் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும்’’ என்ற ஷேர்லக்கை அடுத்த சப்ஜெட்டுக்கு மாற்றினோம்.

‘‘சன் டி.வி பங்கு வெளியீடு பற்றி அடுத்தடுத்து தகவல்கள் சொல்லிக் கொண்டிருந்தீர். இப்போது அதுபற்றி என்ன தகவல்?’’ என்றோம்.

‘‘இதை உற்று கவனித்துக் கொண்டிருந்தவர்கள் புருவம் உயர்த்துகிறார்கள். சன் டி.வி பங்குகளுக்கு கிடைத்த ஆர்வம் பலரையும் கவனிக்க வைத்திருக்கிறது. லிஸ்ட் ஆகும்போது இன்னும் பல ஆச்சர்யங்கள் இருக்கலாம் என்பது பங்குச் சந்தை வட்டாரத்துப் பேச்சு!’’ என்ற ஷேர்லக்,

‘‘ஒரு ‘ஸ்ட்ராங்’கான செய்தி சொல்லவா..?’’ என்றார்.

‘‘டீ கம்பெனியா... இரும்புக் கம்பெனியா..? எதைப் பற்றிய செய்தியைச் சொல்லப் போகிறீர்..?’’ என்றோம் மின்னலாக.

‘‘இத்தனை பிரமாதமாக கணிக்கிறீர்களே! இரும்புத் துறை பங்குகள் பற்றித்தான் சொல்லப் போகிறேன். பொதுவாக இரும்பு பங்குகள் ஏறிக் கொண்டே வருவதில் மூன்றெழுத்து இனிஷியல் கொண்ட மும்பை நிறுவனத்து பங்குகள் ஜிவ்வென உயரத்தை எட்டும் என்கிறார்கள்’’ என்றவர்,

‘‘தாமிரம் மற்றும் அலுமினியத்துக்கு வரும் நாட்கள் மஜா காலம். அதனால், இவை சம்பந்தப் பட்ட கம்பெனிகள் சக்கை போடு போடும் என்கிறார் கள். தாமிரம் தொடர்பான கம்பெனியில் இப்போது ஹாட்டாகப் பேசப்படுவது, தமிழ்நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு காரணமாக எதிர்ப்பைக் கண்ட கம்பெனி! இப்போது காசு பார்க்கும் விஷயத்தில் அது வரவேற்பைப் பெறும் போலிருக்கிறது’’ என்று சொன்னவரை இடைமறித்தோம். ‘‘ஹலோ, ஷேர்லக்! நீங்கள் சொல்கிற க்ளூக்கள் சட்டென்று புரியவில்லை என்று வாசகர்களிடமிருந்து பல போன்கள் வருகின்றன. இன்னும் கொஞ்சம் தெளிவாக டிப்ஸ் கொடுங்கள்!’’ என்றோம். ‘‘இதைவிட தெளிவாகவா?!’’ என்று சிரித்தவர், ‘‘அதேபோல, ஒரு அலுமினிய கம்பெனியும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விஷயத்தில் எல்லாம் ஹின்ட்டால் மட்டுமே விளக்கமுடியும்! லெட் ஹஸ் கோ டு த நெக்ஸ்ட் மேட்டர்’’ என்றார் ஸ்டைலாக.

‘‘போகலாமே!’’ என்றோம்.

ஷேர்லக் ஹோம்ஸ்

‘‘கட்டுமானத்துறை காட்டும் வேகம் சிமென்ட் விற்பனையிலும் அப்படியே பிரதிபலிக்கிறது. இதனால், சிமென்ட் கம்பெனி பங்குகள் எல்லாவற்றுக்கும் வசந்தகாலம் தொடரும் என்கிறார்கள். சும்மா தூங்கிக்கொண்டிருந்த சிமென்ட் கம்பெனி ஷேர் எல்லாம் இப்போது வேகம் எடுத்துவிட்டது. குறிப்பாக, முன்னணி கம்பெனி ஷேர்கள் எல்லாம் உச்சிக்குப் போகும். தக்காண கம்பெனிக்கு சிறப்புக் காரணங்கள் இருக்கிறதாம்’’ என்ற ஷேர்லக், அடுத்து சொன்னது சூரிய செய்தி!

‘‘தேர்தல் சூட்டிலிருக்கும் சூரியன் இல்லை, இது கட்டுமானத் துறை சூரியன் பற்றிய செய்தி! சென்னையைச் சேர்ந்த ‘திடீர் மகன்’ கம்பெனியில் சீரமைப்புப் பணிகள் தொடங்கியுள்ளதாம். அதனால் விரைவில் இந்த கம்பெனி பங்குகள் அடுக்கு மாடி ஏறும் என்கிறார்கள். ஆனால், எத்தனை மாடிகள் ஏறும் என்பது பற்றித்தான் தகவல் இல்லை. அதே போல சூரியக் கொடி நிறுவனப் பங்குகளிலும் மாற்றங்கள் இருக்கும் என்கிறார்கள்’’ என்றார் ஷேர்லக்,

‘‘கூடவே ஒரு எச்சரிக்கை கொடுப்பீரே... ஓரளவு பணம் பார்த் தவுடன் கவுரவமாக வெளியேறிவிடுவது நல்லது என்பீரே...’’ என்றோம் ஜாலியாக.

‘‘அதை நீங்களே முடிவு பண்ணிக்கோங்க... சரி, நான் பிறகு கூப்பிடுகிறேன்...’’ என்று போனை கட் செய்தார்.

உடனே, ரீ-டயல் போட்டோம். ‘வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்...’ பாட்டு ஓடியது. தாளம் போட்டுக் கேட்கும்போதே, லைனில் வந்த ஷேர்லக், ‘‘என்ன செய்தியில் ஏதும் சந்தேகமா..?’’ என்றார்.

‘‘இல்லே... வாளை மீனு நல்லா இருந்தது. அதான் கேட்கலாமே...’’னு என்று இழுத்தோம். ‘‘முதல்ல ரிங் டோனை மாத்தணும்ப்பா!’’ என்று பெரிய சிரிப்போடு போனை கட் பண்ணினார் ஷேர்லக்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism