Published:Updated:

ஒரு நாள் முதலாளி - கடல் மீன்... கலக்கல் வியாபாரம்!

ஒரு நாள் முதலாளி - கடல் மீன்... கலக்கல் வியாபாரம்!

ஒரு நாள் முதலாளி - கடல் மீன்... கலக்கல் வியாபாரம்!

ஒரு நாள் முதலாளி - கடல் மீன்... கலக்கல் வியாபாரம்!

Published:Updated:
தொழில்
ஒரு நாள் முதலாளி
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு நாள் முதலாளி - கடல் மீன்... கலக்கல் வியாபாரம்!

கடல் மீன்...கலக்கல் வியாபாரம்!
சுரேஷின் வியாபார வலை!

ஒரு நாள் முதலாளி - கடல் மீன்... கலக்கல் வியாபாரம்!

மகமக்கும் மீன் வாசனையோடு அலுவலகத்துக்கு வந்திருந்தார் வாசகர் சுரேஷ்.

‘‘நான் சினிமாவில் உதவி இயக்குநர். பல இடங்களுக்கும் அலையறவன். அப்படி மீன் மார்க்கெட் ஏரியாவுக்குச் சென்றபோது அங்கு லட்சக்கணக்கில் பணம் புரள்வது தெரிந்தது. கூடவே உங்கள் ‘ஒருநாள் முதலாளி’ சவாலும் நினைவுக்கு வந்தது. ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மீன் வியாபாரம் செய்து பணத்தைப் பெருக்க முடியும். கூடவே, என் வியாபாரத் திறமையை சோதித்துக்கொள்ள ஒரு வாய்ப்பு! வர்றீங்களா, போகலாம்..!’’ என்று சவாலுக்குத் தயாரானார். அந்த உழைப்பின் வாசனையை உள்வாங்கியபடியே ஓகே சொன்னோம்.

‘‘நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை... மீன் வியாபாரத்துக்கு உகந்த நாள். காலையில் அம்பத்தூர் பக்கத்தில் உள்ள புதூர் மீன்மார்க் கெட்டில் ஆட்டத்தை வெச்சுக்கலாம்’’ என்று டிரைலர் ஓட்டிவிட்டுப் புறப்பட்டார்.

காலை 6 மணிக்கெல்லாம் புதூர் மீன் மார்க்கெட்டில் ஆஜரானோம். கட்டம் போட்ட கைலி, ஆரஞ்சு கலர் டீ-சர்ட், ஒரு பழைய சைக்கிள், அழுக்குப் பையில் தராசு, எடைக் கற்கள், மீன் வெட்டும் கத்தி, கட்டை சகிதம் பிறவி மீன் வியாபாரி கெட்-அப்பில் நம்மை வரவேற்றார் சுரேஷ்.

‘‘மீன்கூடை மட்டும்தான் வாங்கணும். அதுக்கும் ஒரு ஏற்பாடு செய்திருக்கிறேன்’’ என்றபடி ஆயிரம் ரூபாயைக் கையில் வாங்கிக்கொண்டு மார்க்கெட்டுக்குள் நுழைந்தார். ஒரு மீன்கார அம்மணியிடம் சென்று ‘‘அக்கா! வியாபாரத்துக்கு புதுசா வந்திருக்கேன். கெளுத்தி மீன் மூணு கிலோ போடுங்க. கூடையோடு கொடுத்தீங்கன்னா, மீனை வித்துட்டு கூடையைத் திருப்பிக் கொடுத் திடறேன்’’ என்று தூண்டிலைப் போட்டார்.

ஒரு நாள் முதலாளி - கடல் மீன்... கலக்கல் வியாபாரம்!

‘‘புதுசா... சரி, அட்வான்ஸ் கொடுத்துட்டு இந்த பிளாஸ்டிக் டப்பை (மீன்கூடை அதுதான்!) எடுத்துக்கோ!’’ என்று சகாயம் செய்து, மூன்றரைக் கிலோ மீனோடு கொசுறும் தந்தார். கூடவே ‘‘கிலோ வுக்கு இருபது ரூபாய் லாபம் வெச்சு வித்துடு கண்ணு!’’ என்று அன்பு டிப்ஸையும் கொடுத்தார். மீனுக்கு விலையாக அன்றைய மார்க்கெட் நிலவரப்படி, ரூபாய் இருநூறும் டப்புக்கு அட்வான்ஸ் நூறுமாக கணக்கு ஆரம்பமானது.

அடுத்து மளமளவென்று ஒவ்வொரு கடையிலும் பேரம் பேசி மீன் வாங்கினார் சுரேஷ். அயிலை 50 ரூபாய், சங்கரா 85 ரூபாய், வஞ்சிரம் 110 ரூபாய், இறால் 100 ரூபாய் என்றெல்லாம் விலை இருக்க... 4 கிலோ அயிலை, 2 கிலோ சங்கரா, 2 கிலோ வஞ்சிரம், ஒரு கிலோ இறால் என்று வாங்கி கூடையை நிரப்பிவிட்டார்.

சில்லறையாக பத்து ரூபாய் பையில் இருக்க ‘‘ஆரம்பிப்போமா!’’ என்று அம்பத்தூரை நோக்கி சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார். ‘‘இதெல்லாம் தொழிலாளிகள் இருக்கற ஏரியா. ஞாயிற்றுக்கிழமையானா கவுச்சி இல்லாம சாப்பிட மாட்டாங்க. இப்போ கறி விக்கற விலையில் கட்டுப்படியாகாது. பறவைக் காய்ச்சல் பயத்தால் கோழியைத் தொடறதில்லே! அதனால், எல்லாருமே மீனுக்கு மாறிக்கிட்டிருக்காங்க...’’ என்று பேசியபடி சைக்கிளை மிதித்த சுரேஷ், விஜயலட்சுமிபுரம் என்ற பகுதியில் ஒரு தெருவுக்குள் நுழைந்தவுடன் ‘‘மீனேய்... மீனு வேணுமா மீனேய்... வஞ்சிரம், உயிர்க் கெளுத்தி, அயிலை, இறால்னு வகைவகையா இருக்கு... அத்தனையும் சல்லிசு ரேட்டு..!’’ என்று கூவ ஆரம்பித்தார்.

ஒரு நாள் முதலாளி - கடல் மீன்... கலக்கல் வியாபாரம்!

கைமேல் பலனாக ஒரு வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த ஒருவர் அழைத்தார். ‘‘என்னப்பா... இன்னிக்கு நீ வந்திருக்க... உங்க அண்ணனுக்கு உடம்புக்கு ஆகலியா?’’ என்று ரொம்ப நாள் பழகியவர்போல அவர் விசாரிக்க ஆரம்பிக்க, நொடியில் சுதாரித்துக்கொண்ட சுரேஷ், ‘‘அண்ணே, காசிமேடு போயிருக்கு. நீங்க வஞ்சிரத்தைப் பாருங்க சார்! சும்மா லட்டு மாதிரி இருக்கு’’ என்று கடையை விரித்தார்.

‘‘போனவாரம் மார்க்கெட்ல மீன் வாங்கிட்டு வந்து வீட்ல ஏக திட்டு. அவங்ககிட்ட பேசி வியாபாரத் தைப் பார்த்துக்கோ’’ என்று மனைவியை அழைத்தார்.

‘முதல் வியாபாரம். அதுவும் வீட்டுக்காரரையே மிரட்டும் தாய்க்குலம்... எப்படிச் சமாளிக்கப் போகிறோம்..?’ என்ற டென்ஷன் முகத்தில் தெரிய, ‘‘பாருங்கக்கா, சூப்பரான வஞ்சிரம்... தேன் மாதிரி இருக்கும். சங்கராகூட இருக்கு... பாருங்க’’ என்றார் சுரேஷ்.

அந்தம்மா மீனைப் பார்த்துவிட்டு, ‘‘மீன் நல்லாத்தான் இருக்கு. வஞ்சிரத்தில் ஒருகிலோ குடு... வறுக்கற மாதிரி மெல்லிசா நறுக்கிக் கொடுத்துடு தம்பி...’’ என்று சொல்லிவிட்டு, உள்ளே போனார். ஃபிளிண்டாஃப் போட்ட முதல் பந்தில் சிக்ஸர் அடித்த டோனி மாதிரி உற்சாகமாகிவிட்டார் சுரேஷ்.

‘‘தாராளமா வெட்டித் தர்றேன்கா!’’ என்று கட்டையை எடுத்துப்போட்டு கத்தியைத் தீட்ட ஆரம்பிக்க, ‘‘முதல்ல விலையைச் சொல்லு’’ என்று அந்த அம்மா பாத்திரத் தோடு வெளியில் வந்தார். இந்த பவுன்சரை எதிர்பார்க்காத சுரேஷ், ‘‘மார்க்கெட்டுல நூத்தம்பது ரூபாய்க்கு போகுது. நான் வீடு தேடி வந்து வெட்டிக் குடுக்கறேன். போட்டுக் கொடுங்க’’ என்று மீனை வெட்ட ஆரம்பித்தார்.

பீஸ்கள் ஒருபக்கம் விழ, பேரப் பேச்சு இன்னொரு பக்கம் தொடர, கடைசியில் பத்து ரூபாய் குறைத்து நூற்று நாற்பதுக்கு மீனை விற்றார். அந்த நேரத்தில் வீட்டுவாசலில் சைக்கிளில் வந்து பிரேக் அடித்த அந்த வீட்டு தளபதி, ‘‘அப்பாவுக்கு புடிக்கும்னா எப்பயும் வஞ்சிரம்தானா... ஏன், எங்களுக்கு பிடிச்ச இறால் வாங்கணும்னு உனக்குத் தோணவே தோணாதா?’’ என்று குரல் கொடுக்க, விலையே கேட்காமல் அரைக் கிலோ இறால் போடச் சொன்னார். 75 ரூபாய் இறாலுக்கு 85 ரூபாய் வாங்கி, வஞ்சிரத்தில் விட்ட பத்து ரூபாயை பிடித்துவிட்டார் சுரேஷ்!

‘‘எங்க சினிமாவில பெத்த பாசம் சென்டி மென்டை எத்தனை பார்த்திருப்போம். எங்களுக்குத் தெரியாதா எங்கே விலையை ஏத்தணும்னு!’’ என்று சொன்னபடி வண்டியை அடுத்த தெருவை நோக்கி நகர்த்தினார்.

அங்கே அடுத்த அக்கா, சுரேஷின் தொழில் திறமைக்குச் சவால் விடுவதற்காகக் காத்திருந்தார்.

ஒரு நாள் முதலாளி - கடல் மீன்... கலக்கல் வியாபாரம்!

‘‘என்ன தம்பி... இது ‘அந்நியன்’ ஸ்டைலா..!’’ என்று விசாரித்தபடியே டப்புக்குள் துள்ளும் மீன்களை நோட்டம்விட்டவர், சங்கராவைப் பார்த்துவிட்டு, ‘‘எவ்ளோ?’’ என்றார்.

‘‘ரெண்டு கிலோவா எடுத்துக்கங்க... 200 ரூபா கொடுங்க...’’ என்று சுரேஷ், டப்புக் குள் கையைவிட்டு சங்கராக்களை அள்ள, அந்தப் பெண்மணி பதறிவிட்டார். ‘‘ஏம்ப்பா... ரெண்டு கிலோவை வாங்கி நான் உன் பின்னாடியே வந்து விக்கறதா? எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் அரைக்கிலோவே அதிகம். அதுக்கு என்ன விலை சொல்லு?’’ என்றார்.

‘‘அறுபது ரூபா கொடுங்க...’’ என்று சுரேஷ் சொல்ல ‘‘ஐம்பதுனா கொடு. அதுவும் இந்தத் தராசுல எடைபோட்டா நம்ப முடியாது. உங்க தராசு இந்தப்பக்கம் அந்தப்பக்கம் ஆடும்’’ என்று ஏகப்பட்ட கண்டிஷன் போட்டார்.

எல்லாவற்றையும் சமாளித்து, கொசுறாக சிறிய மீன் ஒன்றைக் கொடுத்து 55 ரூபாய்க்கு வியாபாரத்தை முடித்தார். ஐந்து ரூபாய் அதிகம் கொடுத்தாலும் கொசுறு கிடைத்ததில் அந்தப் பெண்மணிக்குத் திருப்தி.

‘‘அந்த அம்மாவை எப்படிச் சமாளிச்சேன் பாத்தீங்களா? கொசுறுன்னா கூடுதல் விலைகூட கண்ணுக்குத் தெரியாது. இதைத்தான் வியாபாரத்தில் சின்ன மீனைக் கொடுத்து பெரிய மீன்ல வாங்கறதுனு சொல்றாங்க!’’ என்றபடி சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

‘வவ்வால் மீன் இல்லையா... அடுத்தவாரம் கண்டிப்பா வாங்கிக்கறேன்... இன்னிக்கு வீட்ல கவுச்சி கிடையாதுப்பா...’ என்று அங்கங்கே நெகடிவ் ரெஸ் பான்ஸ்களும் வரத்தான் செய்தது. தளராமல் நடந்தார்.

ஒரு நாள் முதலாளி - கடல் மீன்... கலக்கல் வியாபாரம்!

ஒரு திசையில் இருந்து ‘விஷ்ஷ்க்...’ என்று விசில் சத்தம். திரும்பி அந்தத் திசையில் பார்த்தால் அபார்ட்மென்ட் வாசலில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். சைக்கிளைத் தெருவிலேயே நிறுத்திவிட்டு போய் விசாரிக்க, ‘‘இது வெஜிடேரியன் அபார்ட் மென்ட். மீன் வாங்கறது தெரிஞ்சா பின்னிடுவாங்க. கமுக்கமா ஒரு அரைக் கிலோ இறால் போட்டு கொண்டு வர்றியா?’’ என்று அபார்ட்மென்ட்வாசி சொல்ல, சின்ன சிரிப்போடு இருந்த இறாலை கவரோடு கொண்டு போய்க் கொடுத்துவிட்டு, ‘‘மீன் சமைக்கும் போது ஒரு மெழுகுவத்தியை ஏற்றி அடுப்பு பக்கத்தில் வெச்சுட்டா மீன் வாசனை வெளியில் தெரியாது’’ என்று அவருக்கு ஒரு டிப்ஸையும் சொல்லிவிட்டு வந்தார்.

‘‘எங்கேயோ எப்போதோ படிச்சது. நம்ம தொழில் நேரத்திலே பயன்படுது’’ என்றவர், சர்வீஸ் சார்ஜோடு சேர்த்து 80 ரூபாய் வாங்கிகொண்டு பூனைநடை போட்டு சைக்கிளுக்குத் திரும்பினார்.

அப்படியே இரண்டு தெரு நோட்டம்விட்டு மூன்றாவது தெருவில் நுழைய... ஒரு வீட்டில் இருந்து அழைப்பு. அங்கு 60 ரூபாய்க்கு அரைகிலோ சங்கரா வியாபாரமானது. அப்படியே ஆள்தேடி அலைந்ததில் பேச்சுலர் கூட்டம் ஒன்று சிக்கியது. ‘‘வஞ்சிரம் சாப்பிடுங்க உடம்பு உறுதி யாகும். ஆரோக்கியம் பெருகும். உடம்பு முறுக்கேறும்’’ (சும்மா ரீல்தான்) என்று ‘பிதாமகன்’ சூர்யா போல் அள்ளிவிட, நடப்பது மீன் வியாபாரமா... லேகிய வியாபாரமா என்ற சந்தேகமே வந்துவிட்டது.

பேச்சுலர்கள் பக்கமிருந்து ரெஸ்பான்ஸை எதிர்பார்த்து சுரேஷ் காத்திருக்க, தடாரென்று, ‘‘வஞ்சிரம் என்ன விலை..?’’ என்று பின்பக்கமிருந்து குரல் வந்தது. ஒரு பெரியவர். மீனின் செவுளை உயர்த்திக் காட்டி ‘நல்ல மீன்’ என்ற சான்றோடு வெட்ட ஆரம்பித்தார். பேரம் பேசாமல் 150 ரூபாய்க்கு வாங்கிக்கொண்டு போனார் அவர்.

தன் இலக்கை மிஸ் பண்ணாமல் பேச்சுலர் களிடமும் ஒருகிலோ சங்கராவையும், அரைக்கிலோ அயிலையையும் விற்றுவிட்டார். சங்கராவுக்கு 110 ரூபாயும், அயிலைக்கு 40 ரூபாயும் கிடைத்தது.

சைக்கிளை மெதுவாக பஸ் ஸ்டாண்ட் நோக்கி நகர்த்தினார். பஸ் ஏறுவதற்காக காத்திருந்த ஒருவர், ‘‘இதே மீன் அங்கே கிலோ 50 ரூபானு விக்கிறாங்க... நீ 60 ரூபா சொல்றியே’’ என்று சொல்ல, ‘‘அது ஆத்து மீனுங்க. இது பழவேற்காடு கடல் மீன்! பொண்ணு பார்க்கும்போதும் மீனு வாங்கும்போதும் பொறந்த இடம், வளர்ந்த இடம் முக்கியம்’’ என்று ஒரு தத்துவத் தைச் சொல்லி மடக்கினார். தத்துவம் ஒர்க் அவுட் ஆனது. பஸ் ஏற நின்றவர், 150 ரூபாய் கொடுத்து, இரண்டு கிலோ உயிர்கெளுத்திக்கு அதிபதி ஆனார்.

சுரேஷ் முகத்தில் திருப்தி ரேகை. வாட்ச்சைப் பார்த்தார். மணி ஒன்பதாகி இருந்தது. சைக்கிள் கேரியரில் இருந்த பிளாஸ்டிக் டப்பில் கொஞ்சம் அயிலையும் சில கெளுத்திகளும் இருந்தன.

சைக்கிளை நிறுத்திவிட்டு, பையில் இருந்த பணத்தை எண்ணிப் பார்த்தார்.

‘‘இனி லாபத்தைக் குறைச்சுக்கலாம். ஏன்னா, மீன் வியாபாரத்துக்கான பீக் டைம் கிட்டத்தட்ட முடிஞ்சு போச்சு. இதுக்கும் மேல ஜாஸ்தி ரேட்டுக்கு விற்க முயற்சி பண்ணினா, அடிக்கிற வெயில்ல நாம கருவாடா கிடுவோம்’’ என்று சொன்ன சுரேஷ், ‘‘அதற்கு முன்னால் ஒரு பிரேக்’’ என்று டீக்கடைக்குள் புகுந்தார்.

டீ சாப்பிட்டு கொஞ்சம் இளைப்பாறியவர், அடுத்த ரவுண்டை தொடங்கினார். ‘‘உயிர் மீனும்மா... வந்து பாத்துட்டு வாங்குங்கம்மா... மீனு... மீனேய்..!’’ என்று தொண்டை வறளக் கூவியதற்குப் பலன் இருந்தது. தெருக்கோடி வீட்டில் இருந்து, ‘‘உயிர் மீனா... எங்க காட்டு...’’ என்று ஒரு தாய்க்குலம் வெளியில் வந்தார். ‘‘என்ன விலை?’’ என்றபடி டப்புக்குள் கையைவிட்டார் அந்தப் பெண்மணி.

‘‘வியாபாரத்தை முடிச்சுட்டேன். இருக்கறதை எடுத்துக்கங்க. 150 ரூபாய் கொடுங்க. கிட்டத்தட்ட ரெண்டு கிலோ இருக்கும்’’ என்றபடி எடையே போடாமல் கெளுத்தி மொத்தத்தையும் அந்தப் பெண் மணியின் பாத்திரத்தில் போட்டார். ‘‘இருப்பா... காசை எடுத்துட்டு வர்றேன்’’ என்றபடி, உள்ளே போனவர், 100 ரூபாயோடு திரும்பி வந்தார். ‘‘என்னம்மா... அசல் காசைக் கொடுக்கறீங்க... அலைச்சல் கூலியாவது கொடுங்க’’ என்று கொஞ்சம் பிகு பண்ணிய சுரேஷ், கடைசியில் 120 ரூபாயை வாங்கிக்கொண்டார்.

‘‘இனி தெருவிலே கூவினா விற்காது!’’ என்றபடி ஒரு அசைவ ஹோட்டலுக்குள் புகுந்த சுரேஷ், 200 ரூபாய்க்கு கையிலிருந்த மொத்த அயிலையையும் தள்ளிவிட்டார். அதற்குமுன், தன் வீட்டுக்கும் கொஞ்சம் எடுத்து வைத்துக்கொண்டார்.

‘‘வீட்டுல வொய்ஃப்கிட்டே மீன் மார்க்கெட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டு வந்தேன். மீனோட வரு வேன்னு காத்துக்கிட்டிருப்பாங்க. வெறுங்கையோடு போனா, வில்லங்கமாகிடும்’’ என்றவர், கத்தி, கட்டை, தராசுக்கெல்லாம் வாடகையாக ஐம்பது ரூபாயைத் தனியாக எடுத்து வைத்துவிட்டு மீதியை எண்ணினார். 1,170 ரூபாய் இருந்தது.

டப்புக்கு கொடுத்த அட்வான்ஸையும் சேர்த்தா இன்னிக்கு லாபம் 250 ரூபாய் சொச்சமும் எங்க வீட்டுல மீன் குழம்பும்... வரட்டா’’ என்றபடி சைக்கிளில் ஏறினார் சுரேஷ்.

மீன் விற்ற காசு மணமாகவே இருந்தது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism