Published:Updated:

நேற்று மெக்கானிக்... இன்று டீலர்!

நேற்று மெக்கானிக்... இன்று டீலர்!

நேற்று மெக்கானிக்... இன்று டீலர்!

நேற்று மெக்கானிக்... இன்று டீலர்!

Published:Updated:
தொழில்
நேற்று மெக்கானிக்... இன்று டீலர்!
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நேற்று மெக்கானிக்... இன்று டீலர்!
நேற்று மெக்கானிக்... இன்று டீலர்!

‘‘வா ழ்க்கைக்கும் வெற்றிக்கும் இப்போதைக்கு 700 படிகள்!’’ என்று தன் ஊழியர்களைக் கைகாட்டுகிறார் ஸ்டாலின். நாகர்கோவிலில் சத்தமில்லாமல் வளர்ந்திருக்கிறது ஸ்டாலினின் சாம்ராஜயம். டெரிக் ஆட்டோ ஏஜென்சி, ஆன்டன் ஃபிஷ் நெட், டெரிக் மோட்டார் என்று குமரியின் நுழைவு வாசல்களெங்கும் வளர்ந்து இளங்குருத்தாக நிற்கின்றன இவரது தொழில்கள்.

‘‘ஒரு தொழிலுக்கு வருவதற்கு ஒரு வாசல்தான். ஆனால், குழப்பி, நஷ்டப்படுத்தி அனுப்பவோ ஒன்பதுவாசல்கள். உழைப்பும் கனமான நம்பிக்கையும்தான் இத்தனை தூரம் என்னைக்கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. சாதாரண மெக்கானிக்காக வாழ்க்கையைத் துவங்கிய நான், இன்று நான் டி.வி.எஸ் நிறுவனத்தின் டீலர். கேரளாவிலும் ஒரு நிறுவனத்தைத் துவக்கியிருக்கிறேன். ஹோண்டா ஜெனரேட்டர், ஹுண்டாய் கார் ஏஜென்சி, மீன்பிடி வலை தொழில், வலை தயாரிக்கிற நூல் கம்பெனி என்று ஐந்து நிறுவனங்கள் என்னிடம் இருக்கின்றன.

‘நாணயம் விகடன்’ வாங்கிய உடனேயே முதலில் படிப்பது, ஒருநாளில் ஆயிரம் ரூபாயை வைத்து எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்ற சவால் பகுதியைத்தான். ஒன்றைப் பத்தாக்குகிற அந்த வித்தைதான் சிறுவயது முதலே என் கனவு. அதை நான் என் இருபதாவது வயதிலேயே செய்திருக்கிறேன்’’ என்றபடியே தான் வளர்ந்துவந்த பாதையை நோக்கித் திரும்பிப் பார்க்கிறார்.

‘‘நான் பிறந்தது ஒரு குக்கிராமத்தில். அங்கே ஒரு சிறுவியாபாரி என்றுகூட யாருமில்லை. அருகில் இருக்கிற நாகர்கோவில் சின்ன டவுன். 60 பைசா டிக்கெட் எடுத்து அங்கு போவதே பெரிய விஷயமாக இருக்கும். நான் ஒரு மெக்கானிக் ஷாப்பில் அசிஸ்டென்ட்டாகச் சேர்ந்தேன்.

ஆஸ்பத்திரியும் மெக்கானிக் ஷாப்பும் ஒண்ணு. ஆஸ்பத்திரினா நோயாளிகள் வருவாங்க. மெக்கானிக் ஷாப்புக்கு சீக்காளி வண்டிகள் வரும். துறுதுறுனு இருப்பேன். பர,பரனு வேலை பார்ப்பேன். நான் சின்னப் பையன் என்பதால் எல்லோரும் என்னை அன்பா நடத்தினாங்க. அந்த வேலையிலே சேர்ந்து அஞ்சு வருஷம் சிறுகச் சிறுக சேமிச்சு 10,000 ரூபாய்வரை வைத்திருந்தேன்.

அதுதான் என் வெற்றிக்கான ஆரம்பம். அந்த ஐந்திலக்க தொகைதான் எனக்கு நம்பிக்கை கொடுத்த பெரிய தொகை. எந்த ரூபாய் என் கனவாக இருந்ததோ, அதை அடைஞ்சுட்டேன். நம்மோட அடுத்த லட்சியம் என்னனு யோசிச்சப்போ, சவுதிக்குப் போய் சம்பாதிக்கலாம்னு தோணுச்சு. செலவுதான் கொஞ்சம் அதிகம். ஆசைக்கு முன்னால செலவு பெரிய விஷயமா..? அங்கே, இங்கே புரட்டி ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கி சவுதிக்குப் போனேன். ஐந்துவருட கடின உழைப்பு. திரும்பி வந்து, வாங்கின கடனை அடைத்தேன். கல்யாணம் செய்தேன். கையில் கொஞ்சம் காசு இருந்தது.

இனி, வெளிநாடெல்லாம் வேண்டாம். இங்கேயே சம்பாதிக்கணும்னு முடிவு செய்தேன். நான் வேலை பார்த்த மெக்கானிக் தொழிலில் என்ன செய்யலாம்னு யோசித்தேன். அப்போ, மஸ்கட்னு ஒரு வண்டி மார்க்கெட்ல இருந்தது. அதுக்கான டீலர்ஷிப் எடுத்து, சின்ன அளவிலே எங்க ஏரியாவிலே சப்ளை செய்தேன். இந்தப் பகுதியிலே அந்த வண்டியை அதிகமா விற்றேன். ஆனா, சில பிரச்னைகளால அந்த வண்டி வருவது நின்றுபோனது!

நேற்று மெக்கானிக்... இன்று டீலர்!

அடுத்து, குஜராத் அரசாங்கம் நடத்திய ஒரு டூ வீலர் நல்லா போயிட்டிருந்தது. அந்த வண்டியோட தரம் நன்றாக இருக்க... அதற்கான ‘டீலர் ஷிப்’பை எடுத்தேன். அதுதான் ஆரம்பம். அவங்க கொடுத்த 120 வண்டியையும் இரண்டே மாதத்தில் விற்றுக்காட்டினேன். இன்னும் வண்டி வேண்டும் என்று கேட்டபோது அந்த வண்டியின் தயாரிப்பையே நிறுத்திவிட்டதாகச் சொன்னார்கள். ஏமாற்றமாக இருந்தது.

அடுத்து, வெவ்வேறு நிறுவன ஏஜென்சிக்கு முயற்சி செய்தேன். டி.வி.எஸ் கம்பெனி அதிகாரிகளைப் பார்க்கப் போவதும் வருவதுமாகவே இருப்பேன். டீலர்ஷிப் கிடைக்காம சலிப்போடு திரும்பி வருவேன். என் மனைவி தந்த ஊக்கத்தில் தொடர் முயற்சிசெய்து, 12-வது தடவை வெற்றி பெற்றேன். ஏகப்பட்ட கண்டிஷனோடு டி.வி.எஸ் சுசூகி பைக்குக்கான ஏஜென்சி கொடுத்தார்கள். இருபது நாட்களில் முதல் ரவுண்ட் பைக்குகளை விற்றேன்.

ஒரு சின்ன அல்லிச் செடியை குளத்தில் வீசினால், அது நிதானமாக ஆனால் ஆழமாகப் பரவும் பாருங்க... அப்படித்தான் நானும் வளர்ந்தேன். தொண்ணூற்றி ஒன்றில் தமிழ்நாட்டிலேயே அதிகமாக டி.வி.எஸ் மோட்டார் பைக் விற்றது நான்தான்.

தமிழ்நாட்டோட கடைசி ஊரு இது! குமரி மாவட்டத்துக்காரங்க ஒரு குண்டூசியைக்கூட நூறு முறை விசாரிச்சு வாங்கற நல்ல கஸ்டமர்ஸ். இந்த பதினெட்டு வருஷத்தில் ஒரு லட்சம் வண்டிகளை விற்றிருக்கிறேன். இன்று டி.வி.எஸ் கம்பெனியில் எனக்கு நல்ல மரியாதை. அந்த கம்பெனியோட எம்.டி. வேணு ஸ்ரீனிவாசன் சார்தான் என் வெற்றிக்குக் காரணம்’’ என்கிறார் ஸ்டாலின்.

தொழிலில் வருகிற வருமானத்தை அடுத்தடுத்து தொழிலை விரிவுபடுத்துகிற திட்டத்தோடு முதலீடு செய்துகொண்டே வந்திருக்கிறார் ஸ்டாலின். டீலர்ஷிப் துறையில் கிடுகிடுவென வளர்ந்திருக்கிற இவர், தென் தமிழகத்தின் ஹுண்டாய் காரின் டீலர்ஷிப் எடுத்திருக்கிறார். தனது டூ-வீலர் தொழிலை குமரி எல்லையைத் தாண்டி கேரளத்துக்கும் விரிவுபடுத்தி இருக்கிறார்.

டீலர்ஷிப்பில் வந்த வருமானத்தை வைத்து, மாவட்டத்தில் கொடிகட்டிப் பறக்கிற மீன்பிடித் தொழிலுக்கான வலைகள் பின்னுவதிலும் கால் பதித்திருக்கிறார். ஒரு மாதத்துக்கு 80 டன்வரை மீன் பிடிக்கக்கூடிய வலையைத் தயார் செய்யும் ஃபேக்டரி ஆரம்பித்துள்ளார். இங்கே தயாரிக்கிற வலைகளைப் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார். இந்தியாவில் வலைப்பின்னல் தொழிலில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்திருக்கிற ஸ்டாலின், வலை பின்னுவதற்குத் தேவையான மூலப்பொருட்களை ஜெர்மனியில் இருந்து வரவழைத்து வலையாக்கி அனுப்புகிறாராம். சின்னதும் பெரியதுமாக ஐந்து தொழில் நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார் ஸ்டாலின்.

‘‘குறைவா செலவு பண்ணணும்... அதிக உற்பத்தியை எட்டணும். என் பாலிஸி இதுதான். வலையை பொறுத்தவரையில் 60% கடலிலும் 40% ஏரி, குளம், ஆறு போன்ற மற்ற இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. சின்ன கண்ணி, பெரிய கண்ணி என்று விதவிதமான வலைகள் இருக்கின்றன’’ என்கிற ஸ்டாலின்,

‘‘பொதுவாக பிஸினஸில் யார் வேண்டுமானாலும் இறங்கமுடியும்... ஜெயிக்கமுடியும். ஆனால், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகும் இதே தொழிலில் நிற்க வேண்டுமானால், இன்றைய சூழலுக்கு ஏற்ற மாதிரி பிஸினஸ் பண்ணவேண்டும்... வேகமாக மாறிக் கொள்ளத் தயாராக இருக்கவேண்டும். எப்போது எந்த விற்பனைக்கு வரவேற்பு இருக்குமென்பது தெரிந்து வேகமாக அந்தத் தொழிலை பிக்-அப் செய்துகொள்ளத் தெரியவேண்டும். சுனாமி வந்தபோது கடல் வலையைவிட கடற்கரை ஓரமாக நிலத்தில் பயன்படுத்தும் வலையை அதிகமாக உற்பத்தி செய்தேன். அதேமாதிரி, எப்போதுமே அளவுக்கு அதிகமாக உற்பத்தி செய்து அதை ஸ்டாக் வைப்பது கிடையாது. எவ்வளவு தேவையோ அந்த அளவுக்கு மட்டும் வேகமாக உற்பத்தி செய்வேன்.

என் தொழிலாளர்கள் அத்தனை பேரையும் அதற்குத் தகுந்தமாதிரி தயார்படுத்தி வைத்திருக்கிறேன். ஒரு ஆள் என்னிடம் வேலைக்கு வரும்போது அவரோடு சேர்த்து அவருடைய குடும்பத்தையும் நான் கவனித்துக்கொள்கிறேன்.

தன் குடும்பத்துக்கான தேவைகள் நிறைவேறும்போது, தொழிலாளர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். கடுமையாக உழைக்கிறார்கள். அவர்களுடைய குழந்தைகளுக்காக ஒரு தொகையை ஒதுக்கி, திருமண காலத்தில் பயன்படுகிற மாதிரி கொடுப்பேன். இதுபோன்று தொழிலாளர்களின் குடும்ப நலனில் நான் காட்டும் அக்கறையும் என்னுடைய வெற்றிக்கு ஊன்றுகோலாக இருக்கிறது.

இன்னொரு டெக்னிக்கும் உண்டு. தொழில் துவங்க வாய்ப்பிருக்கிறது என்றாலும் வெற்றி பெற இருக்கும் வாய்ப்புகளையும் ஆராய்ந்துதான் முடிவெடுப்பேன்’’ என்கிற ஸ்டாலின்,

‘‘ஒரு டூ வீலரை பார்ட் பார்ட்டாகக் கழட்டிவிட்டு மாட்டச் சொன்னால் அரை மணிநேரத்தில் பிரச்னையை சரிசெய்து கஸ்டமர்களைத் திருப்திப் படுத்துகிற அளவுக்கு மாட்டிவிடுவேன். பழையதை மறக்காமல், நவீன தொழில் நுட்ப யுத்தியோடு இருப்பதும் தொழிலில் வெற்றி பெற அடிப்படைக் காரணமாக அமையும். இது எல்லாத் தொழில்களுக்குமே பொருந்தும்.

இப்போதும் நான் வேலை பார்த்த மெக்கானிக் ஷாப்பைப் பார்க்கும்போது, சிலிர்ப்பாக இருக்கிறது. கையால் எளிதில் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் ஆசைகளை வைத்திருந்ததால் மட்டுமே என்னால் ஜெயிக்க முடிந்தது’’ என்கிற ஸ்டாலின், தன் அடுத்த இலக்கை நிர்ணயித்துவிட்டார்-

‘‘ஒரு சின்ன வணிக உலகத்துக்குள் அனைத்து பொருட்களும் கிடைக்குமளவுக்கு ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்ட ஆசைப்படுகிறேன்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism