Published:Updated:

கற்றாழை தந்தது கார், பங்களா!

கற்றாழை தந்தது கார், பங்களா!

கற்றாழை தந்தது கார், பங்களா!

கற்றாழை தந்தது கார், பங்களா!

Published:Updated:
தொழில்
கற்றாழை தந்தது கார்,பங்களா!
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கற்றாழை தந்தது கார், பங்களா!
கற்றாழை தந்தது கார், பங்களா!

சா தாரண விவசாயியாக இருந்த ராமசாமி, இன்று மிகப்பெரிய மனிதர். அவரது இந்த வளர்ச்சிக்குக் காரணம் சோற்றுக் கற்றாழைதான். நம்ப முடிகிறதா..? ஆனால், இதுதான் உண்மையாக இருக்கிறது.

இதோ விருதுநகரைச் சேர்ந்த வி.கே.ராமசாமியே பேசுகிறார்.

‘‘எங்கள் ஊரில் ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயி, தன் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துகொண்டது போக மீதமிருக்கும் பணத்தில் ஒரு கார் வாங்கி உல்லாசமாக ஊரை வலம் வரலாம். நான் இதைச் சொல்லும்போது ஏதோ வேடிக்கைக்காகச் சொல்கிறார் என்றுதான் தோன்றும். ஆனால், சோற்றுக் கற்றாழைப் பயிர் பற்றி நான் சொல்லும் விவரங்களைக் கேட்டால், இது நிஜமாகவே சாத்தியமாகக் கூடிய விஷயம்தான் என்பது புரியும்.

ஐ.டி-யில் புரொஃபஸராக இருந்த யாருமே சீண்டாத பொருள் சோற்றுக் கற்றாழை. ஆங்கிலத்தில் அலோவேரா என்றழைக்கப்படுகிறது. தனியாக கவனிப்பு தேவையில்லை. அடிக்கடி தண்ணீர் பாய்ச்ச வேண்டியதில்லை. உரம் வைக்க வேண்டியதில்லை. சின்னதாக முதலீடு செய்து, இருக்கிற இடத்தில் கற்றாழையைப் பயிரிட்டால், அதுபாட்டுக்கு வருமானத்தைக் கொடுக்க அல்ல, கொட்டவே ஆரம்பித்துவிடும்.

கற்றாழையை வைத்து பலவகையில் லாபம் பார்க்க முடியும். கற்றாழையில் இருந்து சுமார் 1,557 விதமான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. சுமார் 500 விதமான அழகுசாதனப் பொருட்கள், 500 விதமான உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் தயாரிப்புக்குப் பயன்படுகிறது கற்றாழை.

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் கற்றாழை பயிரிட சாதகமான பல வாய்ப்புகள் உள்ளன. இதேபோன்ற வாய்ப்புகொண்ட இன்னொரு மாநிலம் ராஜஸ்தான். உலக மார்க்கெட்டில் கற்றாழைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. உள்ளூரிலேயே திருப்பூர் போன்ற ஏரியாவில் டையிங் யூனிட்களுக்கு கற்றாழைச் சாறு அதிக அளவில் பயன்படுகிறது. அதோடு, கற்றாழையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் க்ரீம்கள், சோப்புகள், எண்ணெய் வகைகள் போன்றவற்றுக்கு வரவேற்பு இருக்கிறது. நாங்களும் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்’’ என்றார் ராமசாமி.

இப்போது அவர், ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் கற்றாழை பயிரிட்டிருக்கிறார். அதோடு விவசாயி களோடு பேசி, காண்ட்ராக்ட் அடிப்படையில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் கற்றாழையைப் பயிரிட வைத்து அதை வாங்கிக் கொள்கிறார்.

‘‘அடுத்தகட்டமாக 100 ஏக்கரில் பயிரிட ஏற்பாடு செய்து வருகிறேன். சீக்கிரமே 1,000 ஏக்கரைத் தொட வேண்டும் என்பதுதான் எங்கள் லட்சியம்’’ என்று சொன்ன ராமசாமி, இந்திய கற்றாழை அறிவியல் கழகத்தின் தலைவராகவும் இருக்கிறார்.

கற்றாழை தந்தது கார், பங்களா!

கற்றாழை பயிரிடுவதற்கான வழிமுறைகள் பற்றிக் கேட்டபோது, விரிவாகவே பேசினார் ராமசாமி.

‘‘கற்றாழை செம்மண், கரிசல் பூமி... இரண்டிலுமே விளையும். ஒரு ஏக்கர் செம்மண் நிலத்தில் இரண் டரைக்கு இரண்டரை அடி என்ற அளவில் இடைவெளி விட்டு கற்றாழை நாற்றை நடவேண்டும். வேரை வைத்தாலும் வரும். கற்றாழையை வெட்டி வைத்தாலும் தழைத்துவரும். கன்றுகளாகப் பார்த்து நட்டு வைத்தால் வேகமான வளர்ச்சி கிடைக்கும்.

ஒரு ஏக்கரில் சுமாராக 7,500 கன்றுகள்வரை நடமுடியும். அதுவே கரிசல் பூமியாக இருந்தால், இரண்டுக்கு இரண்டு அடி இடைவெளிவிட்டாலே போதும். அதனால், அங்கு 10,000 கன்றுகள் நடலாம்.

உப்புத்தண்ணீர் இருக்கும் இடங்களிலும் உவர்நிலங் களிலும் மட்டும் இதைப் பயிரிட முடியாது. உழவு, நடவு, தண்ணீர் பாய்ச்சுதல் போன்ற ஆரம்பகட்ட செலவுகளுக்காக 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை தேவைப்படும்.

நட்டு வைத்த இரண்டாவது வருடத்திலிருந்து வருமானம் வர ஆரம்பித்துவிடும். ஆண்டுக்கு மூன்று முறை கற்றாழையில் இருந்து மகசூல் எடுக்கலாம். செம்மண் பூமியாக இருந்தால், சராசரியாக 30,000 கிலோவரை கற்றாழை கிடைக்கும். கிலோவுக்கு இரண்டு ரூபாய் என்ற கணக்கில் இதன் மூலம் ஆண்டுக்கு 60,000 ரூபாய் சம்பாதிக்கலாம். கரிசல் பூமி என்றால், மூன்று மகசூலில் 21,000 கிலோ கற்றாழை கிடைக்கும்.

ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய் பராமரிப்புச் செலவு என்று வைத்துக்கொண்டாலும் நல்ல லாபம் கிடைக்கும். ஒருமுறை பயிரிட்ட கற்றாழை 6 முதல் 9 ஆண்டுகளுக்கு நல்ல பலனைத் தருகிறது’’ என்றார்.

இந்த கற்றாழை வளர்ப்புக்கு சரியான ஆட்களாக இவர் கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பது மகளிர் சுய உதவிக் குழுவினர் பக்கம். அவர்களின் சோற்றுக்கு மட்டுமல்ல... வசதியான வாழ்க்கைக்கே வழிகாட்டும் இந்த சோற்றுக் கற்றாழை என்பது ராமசாமியின் நம்பிக்கை!

‘‘தமிழகத்தில் உள்ள சுய உதவிக் குழுவினர் அனைவருமே இந்தத் தொழிலின் மூலம் நல்ல சம்பாத்தியம் பார்க்க முடியும். பயிரிடுதல், பதப்படுத்துதல், இதை அடிப்படையாகக் கொண்ட பொருட்களைத் தயாரித்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய நான்கு வழிகளில் லாபம் ஈட்ட முடியும். அதற்கான பயிற்சியை வெகு விரைவில் தொடங்க இருக்கிறேன்’’ என்ற ராமசாமி,

‘‘எவ்வளவு உற்பத்தி ஆனாலும் வெளிநாட்டில் மார்க்கெட் இருக்கிறது. சர்வதேச கற்றாழை அறிவியல் கழகம் என்ற அமைப்புடன் கைகோத்து விரைவில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கற்றாழை பதப்படுத்தும் தொழிற்சாலையை விருதுநகரில் தொடங்க இருக்கிறோம். அதோடு, அமெரிக்க மருந்து கம்பெனிகளுக்கு 100 கோடி டன் கற்றாழையை ஏற்றுமதி செய்வதற்கான ஆர்டரையும் கையில் வைத்திருக்கிறார் ராமசாமி. எதிர்கால நம்பிக்கை கொண்ட வளம் கொழிக் கும் துறையாக மாற ஆரம்பித்திருக்கிறது கற்றாழை!

வெளிநாட்டு ஏற்றுமதி ஒருபக்கம் இருக்க, மதுரைக்கு அருகில் உள்ள கொட்டாம்பட்டியில் கற்றாழை குளிர்பானம் தயாரித்து அக்கம் பக்கத்து ஊர்களில் விற்பனை செய்து கோக், பெப்ஸிக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிறார் பாண்டியன்.

கற்றாழை தந்தது கார், பங்களா!

கற்றாழைச் சாறை சேகரித்து அரைத்து சில பல செய்முறைகளுக்கு பிறகு ‘அப்படியே குடிக்கும் கூல்ட்ரிங்’காகவும், தண்ணீர் சேர்த்து குடிக்கும் ‘கான்சன்டிரேட்டட் டிரிங்’காகவும் தயாரிக்கிறார் பாண்டியன். இதற்காக, ஃபேக்டரி ஒன்றையே கொட்டாம்பட்டியில் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

‘‘சோற்றுக்கற்றாழை எளிதாக விளையக்கூடியது என்பதால், வருடம் முழுவதும் தடையில்லாமல் கிடைக்கும். எனவே, இந்தத் தொழிலுக்கு சீசன் கிடையாது. இதற்கு முன் சோற்றுக் கற்றாழையை அழகு பொருட்கள் செய்யத்தான் உபயோகப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

நான் ருசியான ஒரு குளிர்பானமாக, சத்துள்ள ஒரு உணவுப் பொருளாக வழங்கியதும், ‘அட! வித்தியாசமா இருக்கே’ என்று இதை நோக்கி ஆர்வத்துடன் வர ஆரம்பித்தார்கள் மக்கள். நல்ல வரவேற்பு கிடைக்கவே இதைத் தொடர்கிறேன்’’ என்ற பாண்டியன், இதை மக்களுக்கு அறிமுகம் செய்த சுவாரஸ்யத்தையும் சொன்னார்.

‘‘சோதனை முயற்சியாக, ஒரு பானை நிறைய கற்றாழைக் குளிர்பானத்தை (அலோ ட்ரிங்) தயார் செய்து நண்பரின் கடையில் வைத்து முதல் நாள் இலவசமாகக் கொடுத்தேன். மறுநாள் ஒரு ரூபாய் என்று விலை வைத்தேன். விறுவிறுப்பாக விற்பனை நடந்ததும் ஒரு நம்பிக்கை வந்தது. இந்தத் தொழிலுக்கு இருக்கும் வாய்ப்பை மாவட்ட தொழில் மையம், கலெக்டர், மாநில அளவிலான கமிஷன் போன்ற இடங்களில் எடுத்துச் சொல்லி 25 லட்சம் வங்கிக்கடன் வாங்கினேன். ‘சி.பி.பிளான்டேஷன்ஸ்’ என்ற பெயரில் தொழிற்சாலையைத் தொடங்கி, குளிர்பான தயாரிப்பில் இறங்கிவிட்டேன். சென்னை தவிர தமிழ்நாடு முழுக்க விநியோகஸ்தர்களை நியமித்து முழு வேகத்தில் தொழில் கற்றாழை ஜூஸை கனஜோராக அறிமுகம் செய்துவருகிறேன்.

இன்னும் பல இடங்களுக்கு ஆர்வமானவர்களிடம் இருந்து ஏஜென்சி கேட்டு கடிதங்கள் வருகின்றன. என் தொழில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது’’ என்றார் பாண்டியன்.

கற்றாழை ஜூஸ் தயார் செய்வதற்கு அதன் இலைகளை நான்கு புறமும் வெட்டிவிட்டு நடுவில் உள்ள ஜெல்போன்ற சதைப் பகுதியை மட்டும் பயன்படுத்துகிறார்கள். இதில் மேல்புறத் தோல் நல்ல உரமாகவும் பூச்சிக்கொல்லி மருந்தாகவும் பயன்படுகிறது. கிருமிநாசினியாகவும் பயன்படுவதால் தேவைப்படுவோருக்கு மருந்துப் பொருட்களுக்குத் தரவும் திட்டங்கள் வைத்திருக்கிறார்கள்.

‘‘இப்போதைக்கு கற்றாழைத் தோலை, குழிவெட்டி அதில் போட்டு உரமாகப் பயன்படுத்தி வருகிறேன். சிறிய அளவில் வரும் இந்தக் கழிவுகளை இப்படிப் பயன்படுத்தமுடிகிறது. இதுவே சற்று அதிகமாகும்போது வேறு மருத்துவப் பயன்பாடுகளுக்கு முயற்சிக்க வேண்டும்!’’ என்கிறார் பாண்டியன்.

இவரோடு இணைந்து இந்தத் தொழிலை இத்தாலிக்குக் கொண்டு செல்லவிருக்கிறார் கோமினோ வின்சென்ட். பிறப்பில் தமிழரான இவர், இத்தாலிய தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்டவர்.

‘‘நான் பிறந்த மண்ணுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தபோது, பாண்டியனின் ‘அலோ டிரிங்’ பற்றிச் சொன்னார்கள். அதோடு ஐரோப்பிய நாடுகளில் இந்திய மூலிகை தயாரிப்புகளுக்கு நல்ல மரியாதை இருக்கிறது என்பதால் இதில் இறங்கினேன். 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பெரிய அளவில் 500 ஏக்கர் நிலத்தில் சோற்றுக் கற்றாழை பண்ணை போட இருக்கிறோம்.

அடுத்து, ஒரு நாளைக்கு 12 டன் மூலப் பொருட்களைக் கையாளக்கூடிய திறனோடு ஃபேக்டரி அமைக்கத் தீர்மானித்திருக்கிறோம். இந்தியாவுக்கு குளிர்பானங்கள், இத்தாலி மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ‘அலோ வேரா ஜாம்’ என்று இரண்டு மார்க்கெட்டையும் கலக்குவதாகத் திட்டம்!’’ என்று குஷியோடு சொல்கிறார் கேமினோ வின்சென்ட்.

இவர்கள் உற்பத்தி செய்வது என்றுதான் இல்லை. சுற்றுவட்டரத்தில் கற்றாழை பயிர் செய்கிற பலரும் இவரது திட்டத்தின்மூலம் பலனடையக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இத்தாலி போன்ற பல நாடுகளுக்கு கற்றாழை ஜாம் ஏற்றுமதிசெய்து அதிலும் சிறு விவசாயிகள் கூட நல்ல வருமானம் பெறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

தினசரி வருமானம் 300 ரூபாய்!

கற்றாழை தந்தது கார், பங்களா!

செ ன்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் கற்றாழை ஜூஸ் கடை நடத்தி வருகிறார் முனுசாமி. ‘‘சோற்றுக்கற்றாழையின் தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் சோற்றை எடுத்து தண்ணீரில் கழுவி அதனை மத்து அல்லது மிக்ஸியில் போட்டு நன்றாக மசிய அரைக்கவேண்டும்.

பிறகு அதனை மோருடனோ, தயிருடனோ கலந்தால் ஜூஸ் ரெடி. தேவை என்றால் ஐஸும் இனிப்பும் சேர்த்து லஸ்ஸி மாதிரி கொடுக்கலாம். மோர் கலந்த ஜூஸ் 5 ரூபாய்க்கும், தயிர் கலந்த ஜூஸ் 10 ரூபாய்க்கும் விற்பனையாகிறது’’ என்றார் முனுசாமி.

கோடைக்காலத்தில் மட்டுமின்றி வருடம் முழுவதும் நன்றாக நடக்கும் தொழில் இது. எல்லா ஊரிலும் யாரும் செய்யக்கூடிய இந்தத் தொழிலில் தினசரி முன்னூறு ரூபாய் வரை வருமானம் பார்க்க முடியும். இதற்கு முதலீடு என்று பெரிதாக ஏதும் தேவை இல்லை. ஒரு சைக்கிளில் வைத்தேகூட காலையில் வாக்கிங் செல்வோருக்கு விற்பனை செய்ய முடியும்.

உதவ நாங்கள் ரெடி!

கற்றாழை தந்தது கார், பங்களா!

ந்திய மூலிகை விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் டாக்டர் அமீர் ஜகானிடம் கற்றாழை பற்றிக் கேட்டோம். ‘‘கற்றாழையை நாங்கள் டாலர் மெடிசினல் பிளான்ட் ( Dollar medicinal plant ) என்போம். அந்த அளவுக்கு ஏற்றுமதிக்கான வாய்ப்புள்ள மூலிகை அது.

சுத்தமான கற்றாழையை ஜூஸாக்கி விற்றால் லிட்டருக்கு இந்தியாவில் 150 ரூபாயும், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும்போது 1,500 ரூபாயும் கிடைக்கும். இதையே ‘தீப்புண் கிரீம்’ செய்து விற்றால் 5,000 ரூபாய் வரையிலும் பவுடராக்கி ‘கேப்சூல்’களில் அடைத்து விற்றால் 6,000 முதல் 20 ஆயிரம் வரையிலும் கிடைக்கும்.

புதிதாக கற்றாழைத் தொழிலில் நுழைய ஆர்வம் காட்டுகிற எவருக்கும் எங்கே எப்படி லாபம் பார்க்க முடியும் என்ற வழிவகைகளைச் சொல்லித் தந்து உதவுவதோடு ஏற்றுமதி வாய்ப்புகளையும் காட்டத் தயாராக இருக்கிறோம்’’ என்றார் அமீர் ஜகான்.

சோற்றுக் கற்றாழை மருத்துவ பயன்கள்...

சோ ற்றுக்கற்றாழை வயிற்றுப் புண்களை ஆற்றும் தன்மை வாய்ந்தது. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு நல்ல மருந்து. ரத்தத்தைச் சுத்தப்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தும்.

சர்க்கரை நோய் உள்ளவர்களின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் குறைக்கும். இதயம் மற்றும் மூளையின் செயல்பாட்டுக்கு உதவுகிறது.

தோல் நோய்க்கு நல்ல மருந்து. வெட்டுக்காயங்களை ஆற்றும். ஆண்மையை அதிகரிக்கும்.

பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளைச் சரிசெய்யும். இதனாலேயே இது பெண்களின் நண்பன் என அழைக்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism