Published:Updated:

பேக்கேஜுக்கும் உண்டு பாலிசி!

பேக்கேஜுக்கும் உண்டு பாலிசி!

பேக்கேஜுக்கும் உண்டு பாலிசி!

பேக்கேஜுக்கும் உண்டு பாலிசி!

Published:Updated:
பாதுகாப்பு
பேக்கேஜுக்கும் உண்டு பாலிசி!
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பேக்கேஜுக்கும் உண்டு பாலிசி!
பேக்கேஜுக்கும் உண்டு பாலிசி!
பேக்கேஜுக்கும் உண்டு பாலிசி!

னோகர், மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் உயர் அதிகாரி. பறந்துகொண்டே இருக்கிற வேலை. டெல்லி கான்ஃபரன்ஸுக்குச் செல்ல அவர் ஏறிய விமானம், கடுமையான மூடுபனி காரணமாக குறித்தநேரத்தில் தரையிறங்காமல் போக... ஜிவ்வென்று கரைந்தது நேரம்.

ஒரு வழியாக விமானம் தரையிறங்க...கான்ஃபரன்ஸுக்குச் செல்கிற அவசரத்தில் விமான நிலையத்திலிருந்து சென்ற டாக்ஸியிலேயே தனது லேப்டாப்பை தவறவிட்டுவிட்டார் மனோகர். இதனால் கான்ஃபரன்ஸில் அவர் பல சங்கடங்களை அனுபவிக்க நேர்ந்தது. ஆனால், தவறவிட்ட அதிநவீன லாப்டாப்பை ஒரு பைசாகூட செலவில்லாமல் அவரால் திரும்பப் பெற முடிந்திருக்கிறது. எப்படி..?

எல்லாம் இன்ஷூரன்ஸ் கைங்கர்யம் தான்! நிறுவனத்தில் அவர் தனக்காக ‘அக்காம்பனைய்ட் பேக்கேஜ் இன்ஷூரன்ஸ்’ பாலிசி எடுத்திருந்ததுதான் இதற்குக் காரணம்.

மனோகருக்கு மட்டும்தான் என்றில்லை; அடிக்கடி பயணம் செல்லும் யாரும் இது போன்ற பாலிசியை எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக சேல்ஸ் பிரதிநிதிகள், மெடிக்கல் ரெப்கள் போன்ற தொடர்பயணத்தில் இருக்கும் பலருக்கும் இது போன்ற பாலிசி பாதுகாப்பானது.

அண்மைக்காலமாக பிரபலமாகி வரும் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் ஒன்றாக இருக்கிறது இந்த ‘பேக்கேஜ் இன்ஷூரன்ஸ்’. பயணத்தில் பாது காப்பை விரும்பும் யாரும் இவ்வகை பாலிசி எடுக்கலாம்.

‘‘பல கார்ப்பரேட் அலுவலகங்களில் அறிவு சார்ந்த கடுமையான பணியில் இருப்பவர்களுக்கு ஓய்வு அளிக்க, குடும்பத்துடன் சில நாட்கள் சுற்றுலா சென்றுவர அனுமதியும், அலவன்ஸும்கூட தரும் பல நிறுவனங்கள் இது போன்ற இன்ஷூரன்ஸுக்கும் ஏற்பாடு செய்து தருகிறார்கள் என்பது லேட்டஸ்ட் நடைமுறை!’’ என்கிறார் இத்துறையில் இருக்கும் ஒரு இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்.

பேக்கேஜ் இன்ஷூரன்ஸ் - உயிர் காப்பீடு அல்லாத, பொதுக் காப்பீடு நிறுவனங்களின் வரம்பில் வருகிறது. இன்றைய நிலையில் அனைத்துவகை உள்நாட்டு பயணங்களின்போது நாம் தவறவிடும் பொருட்களுக்கு மட்டுமின்றி, பயணத்தின்போது ஏற்படும் வாகன விபத்து, தீ விபத்து, பயணத்தின் இடையில் ஸ்டிரைக் அல்லது வேறு கலவரங்களில் சிக்கிக்கொள்வதால் ஏற்படும் பொருள் இழப்பு மற்றும் எடுத்துச்செல்லும் பொருட் கள் திருடுபோவது போன்றவற்றால் ஏற்படும் இழப்புகளையும் சரிக்கட்ட இந்த பேக்கேஜ் இன்ஷூரன்ஸ் வழி செய்கிறது.

இவ்வகை காப்பீடுகளுக்கு பல இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் உச்சவரம்பு வைத்துள்ளன. சில நிறுவனங்கள் அதிக தொகைக்கும் காப்பீடு வழங்குகின்றன. இன்னும் சில நிறுவனங்கள் மற்றவகை காப்பீட்டுத் திட்டங்களுடன் இதையும் ஒருங்கிணைத்து வழங்குகின்றன.

இந்தத் திட்டத்தின் இழப்பீட்டை பொறுத்த அளவில், பொதுவாக பல நிறுவனங்களும் ‘பயணத்தில் இழக்க நேரும் கையிருப்பு பணம், பொன், வெள்ளி, நகை போன்றவை இந்தக் காப்பீட்டு வரம்புக்குள் வராது’ என்கின்றன.

ஆனால் ‘நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்’ போன்ற சில நிறுவனங்கள் கூடுதல் பிரீமியம் வாங்கிக்கொண்டு இதை அனுமதிக்கின்றன, சில கட்டுப் பாடுகளோடு. உதாரணமாக, இந்த காப்பீடு பெற விரும்புபவர் தங்கள் பயணத்தின்போது எடுத்துச்செல்லும் நகைகளின் பட்டியலையும், அந்த நகைகளின் மதிப்பு குறித்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டி இருக்கும். திருமணம் போன்ற வைபவங்களுக்கு நீண்ட தூரம் பயணம் செல்லும்போது, இந்தப் பட்டியலைக் கொடுத்து பாலிசி பெறுவது பாதுகாப்பானதுதானே!

பேக்கேஜுக்கும் உண்டு பாலிசி!

இவ்வகை இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தவர்கள் ஒருவேளை பொருட்களை இழக்க நேர்ந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் இது குறித்து தகவல் தெரிவித்து முதல் தகவல் அறிக்கை பெறவேண்டும். அடுத்து, இழப்பு குறித்து இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கும் தகவல் தர வேண்டும். இந்தத் தகவல் கிடைத்தவுடன் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ‘பொருள் இழப்பு உண்மைதானா?’ என்பது குறித்து விசாரிக்க தங்கள் தரப்பிலிருந்து ஆட்களை நியமிப்பார்கள்.

போலீஸ் விசாரணையில் 90 நாட் களுக்குள் அந்தப்பொருளைக் கண்டு பிடிக்க முடியாமல் போனால், அதற்கான சான்றிதழைப் பெற்று இன்ஷூரன்ஸ் நிறுவனத்தாரிடம் ஒப்படைத்து காப்பீட்டுத் தொகையைப் பெறலாம்.

ஒருவேளை தீ விபத்து, கலவரம் போன்றவற்றில் பொருள் நாசமாகியிருந்தால் அதற்குரிய ஆவணங்களைக் கொடுக்க வேண்டி இருக்கும்.

உள்ளூர் பயணம் ஓகே! வெளிநாடு செல்லும்போது அல்லது உள்நாட்டிலேயே விமானப் பயணத்தின்போது சந்திக்கும் இழப்புகளுக்கும் காப்பீடு உண்டா..?

உண்டு! இதற்கென தனியான திட்டங்கள் உள்ளன. அத்துடன், ‘லாஸ்ட் பேக்கேஜ்’ என்ற பெயரில் ஒரு சிறப்பு திட்டமாக இதை வழங்கும் நிறுவனங்களும் உண்டு.

இந்த காப்பீட்டின் பிரீமியத் தொகை பொதுவாக, உள்நாட்டு பேக்கேஜ் காப்பீட்டு பிரீமியத்தை விட அதிகமாக இருக்கும். காரணம் - விமானப் பயணம் செல்பவர் களின் தேவைகளும், அவர்களது பொருட் களின் மதிப்பும் அதிகமாக இருக்கும் என்பதே!

மேலும் இப்பாலிசி வழங்கும் நிறுவனம், அதன் இணைப்பாக வழங்க முன்வரும் இதர அம்சங்களைப் பொறுத்தும் நிறுவனத்துக்கு நிறுவனம் பிரீமியம் மாறுபடும்.

பொதுவாக, இந்த வகை பாலிசிகள் ஒரு காலவரம்புக்கு உட்பட்டவை! அதாவது, பாலிசி எடுக்கும்போதே ‘இது இத்தனை மாதத்துக்கானது’ என்ற கண்டிஷனுடன்தான் வழங்கப்படும். அந்த கால வரம்புக்குள் பயணம் கிளம்பினால் பாலிசி பாதுகாப்பு உண்டு. நீண்டகால அளவுள்ள பாலிசிகளுக்கு அதிக பிரீமியம் வசூலிக்கப்படுகிறது. என்ன... இனி, லக்கேஜைக் கையிலெடுக்கும்போதே பாலிசியும் எடுத்துடுவீங்கதானே!

பிரீமியம் எவ்வளவு?

ந்தவகை பாலிசி, ஐ.ஆர்.டி.ஏ. நிர்ணயிக்கும் கட்டண வரையறைக்குள் அடங்காது. எனவே, ஒவ்வொரு நிறுவனம் வசூலிக்கும் பிரீமியத் தொகையும் மாறுபடக்கூடும். எனினும் இவ்வகையான அடிப்படை பாலிசிக்கு உத்தேசமாக - ஒருவர் காப்பீடு கேட்கும் தொகையில், ஆயிரம் ரூபாய்க்கு ஏழரை ரூபாய் முதல் 10 ரூபாய் வரை பிரீமியமாக வசூலிக்கப்படுகிறது.

‘பெரிய தொகைக்கு காப்பீடு கேட்கும் நபர்கள் அதற்கான பிரீமியத் தொகையை செலுத்தத் தயாராக இருந்தாலும் அவரது மாத வருமானம், குடும்பப் பின்னணி, சமூக அந்தஸ்து, அடிக்கடி பயணம் செய்பவரா... மாதத்தில் எத்தனை நாட்களை பயணத்தில் செலவிடுபவர்?’ என்பது போன்ற பல விவரங்களைப் பரிசீலித்த பிறகே, இன்ஷூரன்ஸ் பாலிசி வழங்குகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism