Published:Updated:

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

Published:Updated:
நடப்பு
அந்நியர் போனாலும்... ஆண்டவன் இருக்கிறார்!
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஷேர்லக் ஹோம்ஸ்
ஷேர்லக் ஹோம்ஸ்

ச்சி வெயில் நேரம். வியர்த்து, விறுவிறுத்தபடி உள்ளே நுழைந்த ஷேர்லக் ஹோம்ஸைப் பார்த்து, ‘‘என்ன ஷேர்லக்... சாவகாசமாக வெயில் குறைந்ததும் வந்திருக்கலாமே!’’ என்றோம்.

‘‘வெயிலை விடுங்கள். காதில் விழுகிற தகவல்களின் சூடு அப்படி..!’’ என்று செய்திக்குத் தாவினார். பேச விட்டோம்.

‘‘இதோ... அதோ... என்று இரண்டு வாரங்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பங்கு மார்க்கெட் கரெக்ஷன் இந்த இதழ் வாசகர் கையில் இருக்கும்போது நடந்திருந்தால் ஆச்சரியப்படக்கூடாது. மும்பை முழுக்க டெக்னிக்கல் அனாலிஸிஸ் ரிப்போர்ட் என்று சூடு பறப்பது கரெக்ஷன் பற்றித்தான். சென்செக்ஸ் 11 ஆயிரத்தைத் தொட்டதும், 300 புள்ளிகள் வரை கீழே விழும் என்கிறது ஒரு தகவல். அதைத்தாண்டி 11400-க்குப் போனால்...’’

‘‘போனால்...?’’

‘‘இன்னும் பெரிய கரெக்ஷன் கட்டாயம் என கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்கிறார்கள். அந்நிய முதலீட்டாளர்கள், வாங்கியிருந்த பங்குகள் கண்டிருக்கும் லாபத்தைக் காசாக்கிப் பார்த்துவிடத் துடிக்கிறார்கள். ஆனால் மியூச்சுவல் ஃபண்ட்கள், பை நிறைய பணத்தை வைத்துக்கொண்டு, ‘எப்போது ஷேர்விலை குறையும்... பங்குகளை வாங்கிப்போடலாம்’ என்று கண்கள் பூக்க காத்துக் கொண்டிருக்கின்றன. அதனால்தான், 10000 புள்ளிகளைக் கடந்ததுமே நடந்திருக்க வேண்டிய இந்த கரெக்ஷன் இழுபறியாகப் போய்க் கொண்டிருக்கிறது என்கிறார்கள்’’

‘‘பட்ஜெட் வந்த நேரத்திலேயே இறங்குமுகம் இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள்...’’ என்று எடுத்துக் கொடுத்தோம்.

‘‘சிதம்பரத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் பங்குச் சந்தைக்கு சாதகமாக, குறிப்பாக ஆட்டோ, டெக்ஸ்டைல்ஸ் என பல துறைக்கு அனுகூலமாக இருக்கிறது. அதனால்தான் ஆட்டோ பங்குகள் எல்லாம் விமானம் ஏறியதுபோல மேல்நோக்கி போய்க்கொண்டே இருக்கின்றன!

சின்ன கார்களுக்கு கிடைத்த வரிச் சலுகையால் ஹுண்டாய் குழும விரிவாக்கம் பற்றியும் பலரும் ஆர்வமாக இருந்தார்கள். கடந்த வாரத்தோடு 10 லட்சம் கார்கள் வேறு விற்றுத் தீர்த்திருக்கிறார்களே! கம்பெனி சேர்மனின் மகன் சென்னை வந்து, அவர்களது துணை நிறுவனம் ‘கை( kai )’க்காக இடமெல்லாம்கூட பார்த்துக்கொண்டு இருந்தார்.

ஆனால், லேட்டஸ்ட் தகவல் ‘கை’யை சீக்கிரத்தில் எதிர்பார்த்தவர்கள் கொஞ்சம் மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியிருக்கும் போல. ‘கை’ வரவு குறித்து யோசிக்கவேண்டும் என்று ஹுண்டாய்க்குள்ளேயே ஒரு பேச்சு கிளம்பியிருக்கிறது!’’ என்ற ஷேர்லக், டி.வி-யில் ஓடிய அன்றைய பங்கு விலைகளில் சிறிது கவனம் செலுத்தினார். ஜில்லென்று மோர் தந்தோம்.

ஒரு சிப் உறிஞ்சியவர், ‘‘இந்தப் பங்கு விலை பற்றிய ஸ்க்ரோல், பலரையும் ஆங்கில சேனல்களின் பக்கம் இழுக்கிறது என்பதைத் தெரிந்துகொண்ட தமிழ்சேனல், தானும் இந்த ஸ்க்ரோல் விடுவதற்கு அனுமதி கேட்டுக் காத்திருக்கிறதாம். சீக்கிரமே கிடைத்துவிடும் என்கிறார்கள்.’’

‘‘எந்த சேனல்..?’’

‘அட, அப்பாவியே!’ என்பதுபோல பார்த்த ஷேர்லக், ‘‘எல்லாம் மார்க்கெட் லீடர்தான்!’’ என்று மீண்டும் பங்குச் சந்தையில் கவனம் காட்டியவர், ‘‘மென்பொருள் நிறுவனப் பங்குகளுக்கு வரும் நாட்களில் சிறப்பான லாபம் வரும் என்று ஒரு பேச்சு இருக்கிறது. இன்னொரு தகவல்... உண்மையை அடித்துச்சொல்லும் ஹைதராபாத் மென்பொருள் நிறுவனம் போனஸ் பங்கு வெளியிடலாம். அதே போல, ஹெல்த்கேர் மற்றும் ஃபார்மா கம்பெனிகளைக் கொண்ட பன்னாட்டு குழுமத்தின் நாலெழுத்து ஃபார்மா கம்பெனியும் விரைவில் போனஸ் அறிவிக்கும் என்கிறார்கள்.’’

‘‘இப்படித்தான் முன்பு ஒருமுறை சர்க்கரை நிறுவனம் போனஸ் தரும் என்றீர்கள். நாங்களும் ஈ என்று இளித்து வாங்கிப்போட்டோம்...’’ என்று கிண்டல் விட்டோம்.

‘‘போனஸ் அறிவிப்பு தாமதமானாலும் பங்குவிலை எகிறி இருக்கிறதே... அதில் உமக்கு லாபம்தானே!’’ என நம்மை மடக்கிய ஷேர்லக்,

‘‘ஓகே. அதற்குப் பரிகாரமாக ஒரு டிப்ஸ் சொல்கிறேன். போண்டா நகரப் பெயர் கொண்ட சிமென்ட் நிறுவனத்தை ‘நகரத்தார்’ சிமென்ட்கம்பெனி வாங்கப் போகிறதாம். இந்த செய்தி கிளம்ப, மும்பையில் அந்தப் பங்குக்கு ஏக டிமாண்ட்!’’ என்றார்.

‘‘சிமென்ட் பங்குக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டு கட்டடங்களுக்கும் டிமாண்ட் அதிகம் உள்ளதாமே!’’

‘‘குடியிருப்பு கட்டடங்கள் ஒருபக்கம் இருக்கட்டும். ஆபீஸ் இடத்துக்கு எக்கச்சக்க டிமாண்ட் இருக்கிறது என்று நானும் கேள்விப்பட்டேன். தமிழ்நாட்டைக் குறி வைக்கிற ஐ.டி. கம்பெனிகளில் 20% கம்பெனி களுக்கு இடம் தரும் அளவுக்குத்தான் இங்கே புதிதாக வசதி உள்ளதாகச் சொல்கிறார்கள். இதனாலேயே மீதி ஆட்கள் யோசனையில் இருக்கிறார்கள். கிடைக்கும் கொஞ்சம் இடத்துக்கு எல்லாரும் முட்டிக் கொள்வதால் ஆபீஸ் இடவசதியின் விலை உச்சிக்குப் போகும் என்கிறார்கள்.’’

‘‘பரவாயில்லையே...! ஆனால் பங்கு விலை, ரியல் எஸ்டேட் விலை என்று பலவும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாமும் நம் பணத்துக்கு இன்னும் கொஞ்சம் பாதுகாப்பான வழியைத் தேடிக்கொள்ள வேண்டியதுதான். எது பாதுகாப்பானது ஷேர்லக்?’’ என்றோம்.

‘‘இப்போதெல்லாம் கோயில்களே தங்கள் பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். ஒருபக்கம் அதிக வருமானம், இன்னொருபக்கம் பாதுகாப்பு என்று மியூச்சுவல் ஃபண்ட்டைத் தேடிப் போகிறார்கள்!’’

‘‘உண்மைதான். அதில் மேலும் விவரங்கள் இருக்கிறதா..?’’

‘‘அந்த கோயில் பட்டியல் பற்றிப் பெரிதாகச் சொல்கிறார்கள். குருவாயூர் கோயில்தான் இந்த திசையில் முதலில் கால் வைக்கப் போகிறதாம். அடுத்து காஞ்சிபுரம், திருப்பதி கோயில்களும் இந்தப் பட்டியலில் சேரக்கூடும்’’

‘‘இப்போதுதான் புரிகிறது. அந்நிய முதலீட் டாளர்கள் இங்கிருந்து கிளம்பினாலும் ஆண்டவன் நம்மைக் கைவிட மாட்டார் என்று சொல்லுங்கள்!’’ என்று நாம் சிலேடை பேச... நம் சேட்டையை ரசித்த படியே ஜூட் விட்டார் ஷேர்லக் ஹோம்ஸ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism