Published:Updated:

‘சிகிச்சை’யில் மெடிக்ளைம்!

‘சிகிச்சை’யில் மெடிக்ளைம்!

‘சிகிச்சை’யில் மெடிக்ளைம்!

‘சிகிச்சை’யில் மெடிக்ளைம்!

Published:Updated:
நடப்பு
‘சிகிச்சை’யில் மெடிக்ளைம்!
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘சிகிச்சை’யில் மெடிக்ளைம்!
‘சிகிச்சை’யில் மெடிக்ளைம்!

தா ம்பரத்தைச் சேர்ந்தவர் ராஜன். அவருக்கு பைல்ஸ் (மூல நோய்). இது தொடர்பான சிகிச்சைக்காக சென்னையில் ஒரு முன்னணி மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். ‘‘உங்களுக்கு மருத்துவக் காப்பீடு வசதி இருக்கிறதா?’’ என்று மருத்துவமனை ஆட்கள் விசாரிக்க ‘‘இருக்கிறது’’ என்றிருக்கிறார் ராஜன். சிகிச்சை தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளை செய்துவிட்டு, ‘‘அடுத்த வாரத்தில் வசதியான நாளில் வந்து மருத்துவமனையில் சேர்ந்துவிடுங்கள். அதிகபட்சம் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருக்கவேண்டி வரலாம்’’ என்று சொல்ல, ராஜனும் அதற்குத் தயாராக வந்து சேர்ந்தார்.

சிகிச்சை நல்லபடியாக முடிந்து, அவர் வீடு திரும்பியபோது அவரிடம் 32 ஆயிரம் ரூபாய்க்கான பில்லைக் காட்டியிருக்கிறார்கள். கொஞ்சம் அதிர்ந்தாலும், ‘மெடிக்ளைமில் போகப் போகிற பில்தானே!’ என்று கையெழுத்துப் போட்டுவிட்டு மருத்துவ காப்பீட்டுத் தொகைக்கான வேலைகளை முடித்து, வீடு திரும்பியிருக்கிறார். பின்னர் விசாரித்த போது, இவரைவிட தீவிர பாதிப்பு கொண்ட வேறு ஒருவருக்கு 15 ஆயிரம் ரூபாயில் அதே குழு மருத்துவம் செய்தது தெரியவந்திருக்கிறது. ஆனால், இதற்காக ராஜனும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ‘ஆரம்ப நிலைதான் என்றாலும் லேசருக்கும் அடுத்த கட்ட நவீனமான ‘ஸ்டேப்லர்’ முறையில் சிகிச்சை, சூப்பர் டீலக்ஸ் ஏ.ஸி அறை என்று மருத்துவமனை ராஜமரியாதை கொடுத்ததற்கு ஏற்ற பில்தான்.

இந்த சிகிச்சையில் தேவைக்கும் அதிகமான வசதியான சிகிச்சை பெற்ற ராஜனுக்கும் லாபம், அவருக்கு சிகிச்சை கொடுத்து பில்லை நீட்டிய மருத்துவமனைக்கும் லாபம். இடையில், ராஜனுக்கு மருத்துவக் காப்பீட்டு வசதியைக் கொடுத்த காப்பீட்டு நிறுவனம்தான் பாவம், விழிபிதுங்கி நிற்கிறது. இது ஓர் உதாரணம்தான். இதுபோல பலரும் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களைத் திகைக்க வைத்து நஷ்டத்தில் தள்ளுவதாகத் தகவல்கள் வருகின்றன. இந்த நஷ்டக் கதை என்பது கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வருவதாகவும் இப்போது அது அதிகரித்திருப்பதாகவும் தகவல்.

‘சிகிச்சை’யில் மெடிக்ளைம்!

இதனால், உடனடியாக ஏதாவது செய்து தங்கள் நஷ்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிற பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள், கூட்டாக சில நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. ‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டும்’ என்ற கதையாக நஷ்டம் ஏற்படுத்துபவர்களைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் இந்த நடவடிக்கைகள், சாமானியனின் பாக்கெட்டைப் பதம்பார்க்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

இதெல்லாம் நியாயம்தானா என்ற சர்ச்சை இப்போது சூடுபிடித்திருக்கிறது. மெடிக்ளைம் இன்ஷூரன்ஸ் என்னவாகப் போகிறது என்ற கேள்விகள்தான் இப்போது பல இடங்களிலும் நடக்கும் பட்டிமன்றம்.

இனி குறைந்தபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் அதிகபட்சமாக 3 லட்சரூபாய் என்ற அளவில்தான் மருத்துவக் காப்பீட்டு பாலிசி எடுக்க முடியும். 45 வயதில் ஒருவர் முதல்முறையாக மருத்துவக் காப்பீட்டு பாலிசி எடுப்பதாக இருந்தால் முழுமையான மருத்துவப் பரிசோதனை கட்டாயமாக்கப்படும். அப்போது அவருக்கு இருப்பதாகக் கண்டுபிடிக்கப்படும் நோய்களுக்கான சிகிச்சைக்கு பாலிசி க்ளைம் பெறமுடியாது. காப்பீட்டு நிறுவனத்தார் இப்படி பல புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் யோசனையில் இருப்பதாகத் தெரிகிறது.

அதோடு, இனிவரும் நாட்களில் விற்கப்படும் பாலிசிகளில் ‘இன்ன நோய்க்கு இந்த அளவு வரைதான் செலவுகள் அனுமதிக்கப்படும்’ என வரம்பு நிர்ணயிக்க வேண்டும். குறிப்பாக, மருத்துவமனையில் இருக்கும் காலத்தில் தங்கும் அறைக்கான செலவு, (1 லட்ச ரூபாய்க்கான பாலிசி என்றால், அதிகபட்ச ஒரு நாள் வாடகை 1,000 ரூபாய் மட்டும்) மருத்துவருக்கான கட்டணம் போன்றவற்றில் உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும்’ என்பது போன்ற திட்டங்களை நான்கு பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களும் வடிவமைத்து, ஐ.ஆர்.டி.ஏ (இன்ஷூரன்ஸ் ரெகுலேட்டரி டெவலப்மென்ட் அதாரிட்டி)யிடம் சமர்ப்பிக்கப் போவதாகத் தெரிகிறது.

எப்படி சமாளிப்பது என்ற யோசனைகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, இன்னொருபக்கம் இந்த நஷ்டத்துக்கு என்ன காரணம் என்ற ஆலோசனைகளும் நடக்கின்றன. இன்ஷூரன்ஸ் துறையினர் முதலில் கைகாட்டி குற்றம் சாட்டுவது ‘தேர்ட் பார்ட்டி அட்மினிஸ்ட் ரேட்டர்’ எனப்படும் ஏஜென்சிகளைத்தான்.

‘சிகிச்சை’யில் மெடிக்ளைம்!

இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் சார்பாக பாலிசிதாரரின் நோய் பற்றியும் அவருக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை பற்றியும் தெளிவாகத் தெரிந்துகொண்டு சிகிச்சைக்கு ஒப்புதல் அளிக்கவேண்டிய இந்த ஏஜென்சிகள் ஏனோதானோவென்று செயல்பட்டு மருத்துவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிவிடுகின்றன என்பது இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் குற்றச்சாட்டு.

ராஜனின் அனுபவத்தைப் பார்க்கும்போது அது உண்மைதானோ என்று தோன்றுகிறது. ஏனென்றால், சாதாரண பைல்ஸ் ஆபரேஷனுக்கு 32 ஆயிரம் ரூபாய் ஆகாது என்பதைச் சொல்லவேண்டியது அந்த தேர்ட் பார்ட்டியின் பொறுப்புதான். அந்த பார்ட்டிக்கும் டாக்டருக்கும் என்ன நட்போ தெரியவில்லை... அதில் ஒத்துழைப்பு கொடுத்து அனுமதித்திருக்கிறார்கள்.

2003-ம் ஆண்டுதான் இந்த அணுகுமுறை தொடங்கப்பட்டது. அதற்கு முன்வரை நோயாளி தன் செலவில் சிகிச்சை பெற்றுக்கொண்டு பிறகு, பில்களைக் கொடுத்து இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளும் முறைதான் இருந்தது. ‘பாலிசிதாரருக்கு நன்மை செய்ய வேண்டும். கையை விட்டு ஒருபைசாகூட செலவு செய்யாமல், அவருக்கு சிகிச்சை வழங்கப்பட வேண்டும். அதற்கான ஏற்பாட்டை இன்னொருவர் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்ற நல்ல நோக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் ‘தேர்ட் பார்ட்டி அட்மினிஸ்ட்ரேட்டர்’ முறை. ஆனால், அது தாறுமாறாகப் போய்விட்டதாகக் குற்றம்சாட்டுகின்றன பாதிக்கப்பட்ட சில பொதுத்துறை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்.

மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களின் நஷ்டத்துக்கு இன்னொரு காரணமாக, தனியார் நிறுவனங்களின் அணுகுமுறை மற்றும் போட்டியைச் சொல்கிறார்கள். தனியாரின் வருகையால் தனிப்பட்ட முறையில் மருத்துவக் காப்பீடு எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் நிறுவனங்களே தங்கள் ஊழியர்களுக்கு மருத்துவக் குழுக் காப்பீட்டுத் திட்டத்தை எடுத்துக் கொடுப்பதும் நடந்திருக்கிறது. குறைந்தவிலையில் வழங்கப்பட்ட இந்த ‘குரூப் இன்ஷூரன்ஸ்’தான் இப்போது சிக்கலை உருவாக்கிவிட்டிருக்கிறது என்கிறார்கள். போட்டியை சமாளிக்க குறைந்த விலைக்கு விற்றுவிட்டு, இப்போது விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பொதுத்துறை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கிடுக்கிப்பிடி போடுவதால் பாதிப்பு நுகர்வோருக்குத்தான் என்று சொல்லப்பட்டாலும் சில சாதகமான விஷயங்களும் இருப்பதாகத் தெரிகிறது. யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் கார்க், ‘‘எங்கள் நிறு வனம் பூனாவில் உள்ள ‘நேஷனல் இன்ஷூரன்ஸ் அகாடமி’யை அணுகி, சேமிப்புடன் கூடிய புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வடிவமைத்துத் தர கேட்டுக் கொண்டுள்ளது இதன் படி ஒரு குறிப்பிட்ட ஆண்டில் மருத்துவச் செலவுகள் எதற்கும் உட்படாத ஒரு பாலிசிதாரருக்கு கிடைக்கும் போனஸ் தொகையை அப்படியே அவரது சேமிப்புக் கணக்கில் சேர்க்கப்படும். இந்த பாலிசி நடைமுறைக்கு வந்தால், ‘மருத்துவச் செலவு இல்லாத ஆண்டுகளில் செலுத்திய பிரீமியத்தொகை வீண் செலவாகிறது’ என்ற காரணத்தால் தற்போது யோசிப்பவர்களும் மருத்துவ பாலிசி எடுக்க முன்வரக்கூடும்’’ என்கிறார்.

‘சிகிச்சை’யில் மெடிக்ளைம்!

இது ஒருபுறம் இருக்க, ‘யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா’வும் தன் பங்குக்கு ஒரு மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்யும் எனத் தெரிகிறது. இதற்காக, இது ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து நீண்டகால மருத்துவக் காப்பீட்டு திட்டம் ஒன்றை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. தற்போது மார்க்கெட்டில் இருக்கும் திட்டங்கள் எல்லாம் ஓராண்டுக்கான பாலிசிகள்தான் என்பது கவனிக்கத்தக்கது.

அத்துடன் இந்த புதிய திட்டத்தின்படி, ஒரு பாலிசிதாரர் மருத்துவ செலவு கோராத ஒவ்வொரு ஆண்டுக்கும் அவரது பிரீமியத் தொகையில் சிறப்புக் கழிவும் தரப்படுமாம். வேறு சில சிறப்பம்சங்களும் இதில் இருக்கும் என்கிறார்கள். புதிதாக நான்கு வகையான நீண்டகால மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நேஷனல் இன்ஷூரன்ஸ் அகாடமி வடிவமைத்துள்ளதாம்.

இவைதவிர, தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மருத்துவக் காப்பீட்டுக்கெனவே தனி நிறுவனம் தொடங்க வரிந்து கட்டிக்கொண்டு இறங்கி இருக்கிறார்கள். இந்திய நிறுவனங்களுடன் சேர்ந்து அந்நிய நிறுவனங்கள் மெடிக்ளைம் இன்ஷூரன்ஸ் துறையில் கால்பதிக்கும் முயற்சியில் இருக்கின்றன. ஆனால், புதிய இன்ஷூரன்ஸ் நிறுவனம் தொடங்க 100 கோடி ரூபாயை ஆரம்ப மூலதனமாக வைக்க வேண்டும் என்ற ஐ.ஆர்.டி.ஏ-வின் நிபந்தனைதான் கொஞ்சம் தயங்க வைக்கிறது. அந்தத் தொகையை 50 கோடியாகக் குறைக்கவேண்டும் என்ற கோரிக்கை பலமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அப்படிக் குறைக்கப்பட்டால் பல நிறுவனங்கள் உள்ளே வரும்.

ஐ.ஆர்.டி.ஏ. என்ன செய்யப் போகிறது என்று காத்திருந்து பார்ப்போம்!

‘சிகிச்சை’யில் மெடிக்ளைம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism