Published:Updated:

சேமிப்பை அதிகரிக்கும் வீட்டு செலவுகணக்கு!

வாழ்க்கையை மேம்படுத்தும் பக்கா ப்ளான்...

பிரீமியம் ஸ்டோரி
##~##

தீபாவளி போனஸ் லம்ப்பாக பத்தாயிரம் ரூபாய் கிடைத்ததில் சந்தோஷம் ஹேமாவுக்கு. ''எப்படியும் இந்தமுறை மைக்ரோவேவ் ஓவன் வாங்கியே தீரவேண்டும்'' என்று கூறவே, தீபாவளி அமளி எல்லாம் அடங்கிய பின்னர் நிச்சயம் வாங்கலாம் என்று சந்துரு சொல்லிவிட்டான்.

தீபாவளி முடிந்த அடுத்த வாரம் ஷாப்பிங் போய், மைக்ரோவேவ் ஓவன் மாடல்கள் பார்த்து, ஒன்றுக்கு இரண்டு கடையில் விலை விசாரித்து பேரம்பேசி திரும்பினர். அடுத்தநாள் போய் எடுத்து வரலாம் என்று திட்டம். போனஸ் பணம் வைத்த பையை எடுத்து எண்ணிப் பார்த்தால் வெறும் 4,300 ரூபாய்தான் இருந்தது. மீதி பணம் எங்கே, எப்படி செலவாச்சு என்று கணவன் மனைவி, குழந்தைகளுக்குள் ஒரே குழப்பம்.  

பணம் எங்கே போச்சு?

தீபாவளியையட்டி ஊர் சுற்றினார்கள்தான், செலவழித்தார்கள்தான் என்றாலும் ஐந்தாயிரமா செலவாகிவிட்டது? துணிமணி, பட்டாசு பட்சணம் எல்லாம் ஏற்கெனவே வாங்கியாச்சே?  பர்ஸிலிருந்து எடுக்கும்போது கீழே விழுந்து இருக்குமோ?, 100 ரூபாய் நோட்டுக்கு பதிலாக 500 ரூபாய் தந்திருப்போமோ? பலவிதமாக யோசனை ஓடிற்று. ஹேண்ட்பேக்கை கவிழ்த்துப்போட்டு, பர்ஸையெல்லாம் பிரித்து பில்களைச் சேகரித்து கூட்டிக்கழித்துப் பார்த்தால், நிஜமாகவே செலவாகித்தான் இருந்தது. நாலைந்து நாட்களில் ஐந்தாயிரமா? தங்கள் அறியாமையை எண்ணி நொந்துகொண்டனர் இருவரும்.

'கடன் இல்லை, போனஸ் கையில இருக்கேன்னு கொஞ்சம் அசால்டா செலவு பண்ணிட்டேன். எப்பவுமே இறுக்கி முடிஞ்சுகிட்டு இருந்தா அப்புறம் எங்கேருந்து சந்தோஷம்? என்று அரற்றினார் ஹேமா.

சந்தோஷமாக இருக்க பணம் செலவழிக்க வேண்டும்தான். ஆனால், இவ்வளவு ஆகும் என்று முன்கூட்டியே தெரிந்திருந்தால் சில வெட்டி செலவுகளைக் குறைத்திருக்கலாம் இல்லையா? இந்த அனுபவம் நம் எல்லோருக்கும் உண்டுதானே?

சேமிப்பை அதிகரிக்கும் வீட்டு  செலவுகணக்கு!

இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சினிமா தியேட்டருக்கு கணவன், மனைவி, ஒரு குழந்தையுடன் சென்று வர 1,000 ரூபாயைத் தாண்டிவிடுகிறது. டிக்கெட் கட்டணம் என்னவோ மூன்று பேருக்கும் சேர்த்து 300 ரூபாய்தான். ஆட்டோ, சாப்பாடு, பாப்கார்ன் என்று செலவு எகிறிவிடுகிறது.

இதேபோன்று, நம் கையை மீறி கண்ணுக்குத் தெரியாமல் செலவான அனுபவம் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் பர்ச்சேஸ் பண்ணும்போது பலருக்கு ஏற்பட்டிருக்கும். காரணம், நாமே பொருளை எடுத்துக்கொள்ளும் வசதி இருப்பதால் நமக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படாத பல பொருட்களை அள்ளிப் போட்டுக்கொண்டு வந்திருப்போம்.

இப்படி தாறுமாறாக செலவு செய்துவிட்டு, மாதக் கடைசியில் காய்கறி வாங்கக்கூட காசை எண்ணிப் பார்த்துக்கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தினர் ஏராளம்.

வீட்டுக் கணக்கு எழுதுங்க!

சேமிப்பை அதிகரிக்கும் வீட்டு  செலவுகணக்கு!

இப்படிப்பட்ட பணக்கஷ்டம் வராமல் தடுக்க ஒரு சிம்பிளான வழி, வீட்டு செலவுக் கணக்கை எழுதுவது! எதற்கெல்லாம் பணம் செலவு செய்தோம் என்பதை அந்த நாளுக்குள் எழுதி வைத்துவிடுவது!

ஹேமா - சந்துரு தம்பதியினருக்கு இந்தப் பழக்கம் இருந்திருந்தால் முதல்நாள் எழுதும்போதே, அநாவசிய செலவு எகிறுகிறது என்ற அலாரம் அடித்திருக்கும். அதன்பின் வந்த நாட்களில் வீண்செலவுகளுக்கு கடிவாளம் போட்டிருப்பார்கள் இல்லையா?

வீட்டுக் கணக்கு எழுதுவது, ஏதோ இன்று கண்டுபிடித்த விஷயமல்ல. நம் தாத்தா காலத்தில் இருந்தே வருவது. அப்போதெல்லாம் வீட்டுக் கணக்கு எழுதுவது ஒரு குடும்ப வழக்கமாகவே இருந்தது. கூட்டுக் குடும்பமாக இருந்த அந்தக் காலத்தில் வீட்டுக்குப் பெரியவர் இருப்பார். அவர் சொல்லச்சொல்ல தம்பிகள் அல்லது மகன்கள் நோட்டுப் புத்தகத்தில் எழுதுவார்கள். விவசாயத்தில் அல்லது வியாபாரத்தில் வரவு என்ன, செலவு என்ன, எதிர்காலத் தேவை என்ன என எல்லாவற்றுக்கும் ஒரு கணக்கு  இருந்தது.  கல்யாணம் காட்சி போன்ற பெரிய செலவுகளை எப்படி சமாளிப்பது என்று எல்லாரும் கூடித் திட்டமிடுவார்கள். அது அப்படியே குழந்தைகளுக்கும் வழிவழியாக வந்தது. இப்போது கூட்டுக் குடும்பமும் போச்சு, வீட்டுக் கணக்கு எழுதும் பழக்கமும் போச்சு!

தண்ணியா செலவழியும் பணம்!

பணம் தண்ணியா செலவழியுது என்பார்கள். உண்மைதான், செலவாகும் விஷயத்தில் பணம் தண்ணீரைப் போலத்தான். பெரிய செலவு வந்து வெள்ளம்போல ஒரேயடியாக அடித்துக்கொண்டு பணம் கையை விட்டுப்போகலாம் அல்லது சரியாக மூடாமல் ஒழுகும் குழாய்போல நமக்குத் தெரியாமலே சொட்டுசொட்டாக மெல்ல மெல்ல கையிலிருந்து கரையலாம். உங்கள் பணம் எப்படி உங்கள் கையிலிருந்து வழிந்தோடுகிறது என்று உங்களுக்குத் தீர்க்கமாகத் தெரிந்தால்தானே அதைத் தடுக்கும் விதம் பற்றி யோசிக்க முடியும்? அதன் பிறகுதானே சேமிக்கும் வழிகள் புலப்படும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்க ப்ளான் பண்ண முடியும். இவை எல்லாவற்றுக்கும் முதல்படி வீட்டுக் கணக்கு எழுதுவதுதான்.

சேமிப்பை அதிகரிக்கும் வீட்டு  செலவுகணக்கு!

வீட்டுக் கணக்கு: எப்படி எழுதலாம்?

பலரும் பலவிதமாக வீட்டுக் கணக்கை குறித்துவைப்பார்கள். அதில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்:

1. பாக்கெட் சைஸ் டைரி ஒன்றை கையோடு வைத்திருந்து, உடனுக்குடன் செலவுகளை எழுதிவிடுவது.

2. பொருள் வாங்கும்போது ரசீதை வாங்கி, சேர்த்துவைத்து பின்னர் எழுதிவிடுவது.

3. லெட்ஜர் புக் ஒன்று போட்டு தனித்தனி தலைப்புகள் எழுதி அதன் அடியில் செலவுகளைக் குறித்து வருவது. அப்போதுதான் மாதாமாதம் இந்த விஷயத்துக்கு சராசரி செலவு என்ன, எங்கே சராசரியைத் தாண்டுகிறோம் என்று கணக்கிடமுடியும்.

4. கம்ப்யூட்டர் பயன்படுத்துவது. மைக்ரோசாஃப்ட் எக்ஸெல் அல்லது ஓப்பனாபீஸ் கால்க் (Openoffice Calc) இதற்கு உசிதம்.

என்னென்ன தலைப்புகளில் வீட்டு செலவு கணக்கை குறித்து வைக்கலாம் என்பதை அடுத்தபக்கத்தில் பட்டியலாகத் தந்திருக்கிறேன், பார்த்துக்கொள்ளுங்கள்.

சேமிப்பை அதிகரிக்கும் வீட்டு  செலவுகணக்கு!

வீட்டுக் கணக்கு எழுத சுலப வழிகள்!

1. ஆன்லைன் பேங்கிங்குக்கு மாறுங்கள்: முடிந்தவரை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, செக்குகளைப் பயன்படுத்துங்கள். ரெகுலரான கட்டணங்களை முடிந்தவரை ஆட்டோமேட்டிக் பேங்க் டிரான்ஸாக்ஷன் மூலம் அடைக்க செட் பண்ணிவிடுங்கள். இன்ஷூரன்ஸ் கட்டணம், கிரெடிட் கார்டு பேமென்ட், கரன்ட் பில், போன் பில், வீட்டு வரி, குடிநீர் வரி போன்றவற்றை ஆன்லைனில் நெட்பேங்கிங், கிரெடிட் கார்டு மூலம் கட்டலாம். மாத முடிவில் எல்லாமே அக்கவுன்ட் ஸ்டேட்மென்டில் எழுத்தில் வந்துவிடும். (அதாவது, கிரெடிட் கார்டு பில்லை உடனுக்குடன் கட்டிவிடும்பட்சத்தில்)  

2. கேஷாகத் தரவேண்டிய நேரங்களில் ரசீதைப் பத்திரப்படுத்தி வையுங்கள்.

3. செலவுகளை எழுதிவைப்பதை ஒரு பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். வாரத்துக்கு ஒருநாள் செலவுகளைக் கூட்டி எழுதுங்கள். மாதக் கடைசியில் எல்லாவற்றையும் கூட்டி எழுத வசதியாக இருக்கும். இதற்கு 10 - 20 நிமிஷங்களுக்குமேல் தேவைப்படாது.

சேமிப்பை அதிகரிக்கும் வீட்டு  செலவுகணக்கு!

லேட்டஸ்ட் டெக்னாலஜி:

இது ஆப்ஸ்களின் காலம். செலவுக் கணக்கு குறித்துவைக்க சில ஆப்ஸ் எளிதாகக் கிடைக்கின்றன. இந்த ஃப்ரீ ஆப்ஸ் வரவு-செலவுகளை நோட் பண்ணுவது மட்டுமல்லாமல் பட்ஜெட்போட, டியூ கட்டும் தேதிகளை ஞாபகப்படுத்தவும் உதவுகின்றன. கூகுள் ப்ளேவில் இலவசமாகக் கிடைக்கின்றன.

1. Expensify: அடிக்கடி பயணம் செய்ய வேண்டிய வேலையில் இருப்பவர்களுக்கு இது உதவும். உங்கள் வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்தது மற்றும் பணமாகத் தந்தது எல்லாமே கணக்கு வைத்துக்கொள்ளலாம். இதில் ஸ்கேனிங் வசதி இருப்பதால் ரசீதுகளை உடனடியாக ஸ்கேன் செய்து கணக்கில் அந்தச் செலவையும் சேர்த்துவிடும். கையெழுத்து கோழிக்கிறுக்கலாக இருந்தால் கொஞ்சம் சிரமப்படும்.

2. Toshl Finance: உங்கள் செலவுகளை நோட் பண்ணி வாராந்திர மாதாந்திர பட்ஜெட் போட்டுக்கொடுக்கும். டியூ கட்ட வேண்டுமெனில் அலெர்ட் பண்ணும். கலர் கலரான கிராஃப்கள் மூலம் உங்கள் செலவு விவரங்களைத் தரும்.

3. Daily Expense Manager: உங்கள் தினசரி வரவு-செலவை கவனித்துக்கொள்ள நல்ல ஆப்ஸ் இது. சுயதொழில் செய்பவர்களுக்கு ஏற்றது. எங்கிருந்தெல்லாம் வருமானம் வந்தது, எப்படியெல்லாம் செலவானது என்று வகை வாரியாகப் பிரித்துக்காட்டும்.

5. Expense Tracker Plus: இது இன்னொரு செலவுகணக்கு குறித்துவைக்கும் ஆப்ஸ். இதில் செலவுடன் வரவையும் நோட் செய்து அதை நம் தேவைக்கேற்ப விதவிதமாக அனலைஸ் செய்யலாம்.

6. Easy Money: இது வீட்டுக் கணக்கு எழுதி, பில் கட்டவேண்டியதை ஞாபகப்படுத்தி, செக் கொடுத்ததையும் குறித்துவைத்து, பட்ஜெட் போட்டுத் தரும் ஒரு ஆப்ஸ்.

என்ன லாபம்?

ஒருவர் தொடர்ந்து தனது வீட்டுச் செலவு கணக்குகளை எழுதி வந்தால்தான் நம்முடைய பழக்கவழக்கங்கள் நமக்குப் புரியவரும்.

அடுத்தவர் பாராட்டவேண்டும் என்பதற்காக வீண்செலவுகள் செய்வது எங்கே (பார்ட்டி, பரிசு தருவது) என்பது தெரியும்.

நம் வாழ்க்கையை ஒருபடி மேலே முன்னேற்ற செலவு (கல்வி, முதலீடு) செய்வது எங்கே? என்பது புரியும்.

கவனக்குறைவால் செலவாவது எங்கெங்கே? என்றும் தெரியும்.

கொஞ்சம் முன்யோசனையால் தவிர்த்திருக்கக்கூடிய செலவுகள் என்னென்ன என்று அலசி ஆராய முடியும்.  

இதனால் செலவுகளைக் கட்டுக்குள் கொண்டுவந்து பணத்தை மிச்சம் பிடித்து வாழ்க்கையில் வீடு, குழந்தைகளின் உயர்கல்வி, கல்யாணம் என்று ஒவ்வொரு இலக்கினையும் சந்தோஷமாக அடையலாம். சமூகத்தில் யாரிடமும் கைநீட்டாமல் கவுரவமாக வாழலாம். என்ன, இனியாவது வீட்டுச் செலவு கணக்கை தினமும் எழுதுவீர்கள்தானே?

படம்:  ர.சதானந்த்

 ஃபைனான்ஸ் சாஃப்ட்வேர்!

 அமெரிக்காவில் பலரும் வீட்டுக் கணக்கு மற்றும் சேவிங்ஸ், முதலீடுகளைப் பற்றி துல்லியமாக கணக்கு வைத்துக்கொள்ள ஃபைனான்ஸ் சாஃப்ட்வேர் புரோகிராம்களை பணம் கொடுத்து வாங்கி உபயோகிக்கிறார்கள். விலை அதிகமில்லை, வெறும் 40 டாலர்தான்! நம்மூர் பணத்தில் 2,500 ரூபாய்.   மைக்ரோசாப்ட் மணி ப்ளஸ் பிரீமியம் மற்றும் க்விக்கென் (னிuவீநீளீமீஸீ) இதில் பிரபலம். இவை உங்கள் எல்லா வங்கிக் கணக்குகளையும் இணைத்து, உங்கள் நிதி நிலைமையை வெட்ட வெளிச்சமாக்கிவிடும். உங்கள் பட்ஜெட் என்று ஒன்றை முதலில் தயாரித்துக் கொடுத்துவிட்டீர்கள் எனில், இந்த மாதம் நீங்கள் செய்த செலவுகள் என்னென்ன, உங்கள் பட்ஜெட் என்ன, எவ்வளவு துண்டு விழுகிறது என்று விதவிதமாக சார்ட், கிராஃப் போட்டு மறக்க முடியாதபடி கலர் கலராக அமர்க்களப்படுத்திவிடும். இன்றைய நிதி நிலைமை என்ன, கடன் எவ்வளவு, முதலீடு எவ்வளவு என்று எல்லாமே பார்த்துவிடலாம்.

''நிதி நிலையை உணர முடிகிறது!'

பிரகாஷ், மதுரை.

சேமிப்பை அதிகரிக்கும் வீட்டு  செலவுகணக்கு!

''ஆரம்பத்தில் செலவுகளைக் கணக்கு பார்க்காமல் செய்து வந்தேன். அதனால் சம்பளம் வந்த சில நாட்களிலேயே காலியாகிவிடும். ஒருநாள் திடீரென்று அப்பாவின் உடல்நலம் சரியில்லாமல்போக மருத்துவச் செலவுக்கு பணத்தைப் புரட்ட படாதபாடுபட்டேன். அப்போதிருந்தே செலவுகணக்கை எழுதி, சேமிப்பைப் பெருக்கி இருக்கிறேன்.''

- ந.ஆஷிகா, படம்: இ.பொன்குன்றம்.

''கடனைத் தவிர்க்க முடிகிறது!''

 செல்வராஜ், சென்னை.

சேமிப்பை அதிகரிக்கும் வீட்டு  செலவுகணக்கு!

''கடந்த 38 ஆண்டுகளாக வரவு செலவு கணக்கு பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளேன். வாங்கும் சம்பளத்தில் ஒரு ரூபாய்கூட தப்பாமல் கணக்கில் இருக்கும். ஒவ்வொரு மாதமும் செலவு குறிப்புகளைப் பார்த்து, அதில் தேவை இல்லாத செலவுகளை அடுத்தமாதம் குறைக்க முயற்சிப்பேன். இந்தப் பழக்கம் என்னை கடனில்லாமல் வாழ வழிவகை செய்கிறது.'

- ரெ.சு.வெங்கடேஷ்

''சேமிப்பு  உயர்கிறது!'

 கோபிநாத், படப்பை.

சேமிப்பை அதிகரிக்கும் வீட்டு  செலவுகணக்கு!

''திருமணமாகி ஆறு வருடமாக வரவு செலவு கணக்குகளை எழுதி வருகிறேன். ஒரு பேனாவுக்கு செலவு செய்தாலும் அதைக் குறித்து வைத்துக்கொள்வேன். இப்படி செலவு கணக்குகளை எழுதுவதால் பொருளாதார ரீதியில் வீட்டை ஒழுங்காக நிர்வாகம் செய்ய முடிகிறது. எந்த தேவைக்கு என்ன செலவாகும் என்பதைப் புரிந்துகொண்டு அதற்கு தகுந்தாற்போல வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள முடிகிறது. இதனால் என் சேமிப்பும் உயர்ந்துள்ளது.''

- அ.பார்வதி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு