Published:Updated:

அதிகரிக்கும் வங்கிகளின் வாராக் கடன்... என்னதான் தீர்வு?

அதிகரிக்கும் வங்கிகளின் வாராக் கடன்... என்னதான் தீர்வு?

பிரீமியம் ஸ்டோரி
##~##

அண்மையில் மும்பையில் நடைபெற்ற வங்கிகளுக்கான கருத்தரங்கில் பேசிய மத்திய ரிசர்வ் வங்கியின் துணைத் தலைவர் கே.சி.சக்ரபர்த்தி, ''கடந்த 13 வருடத்தில் பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடனானது லட்சம் கோடி ரூபாய்க்குமேல் அதிகரித்துள்ளது. இதில், 95 சதவிகித பணத்தைக் கடனாக வாங்கியது பெரிய நிறுவனங்கள்தான். வாராக் கடனை மறுசீரமைப்பு செய்து அதன் அளவை வங்கிகள் குறைத்து கணக்கு காண்பிக்கின்றன. இது தவறான வழிமுறையாகும்'' என்று வங்கிகளைக் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

வங்கிகளின் வாராக் கடன் இவ்வளவு அதிகமாக இருப்பது ஏன், அதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஓய்வுபெற்ற பொது மேலாளர் எஸ்.இளங்கோவனிடம் கேட்டோம்.  

''வங்கிகளின் வாராக் கடன் பிரச்னை எப்போதும் இருப்பதுதான். வளரும் நாடுகளில் வாராக் கடன் பிரச்னையைத் தவிர்க்க முடியாது. இதன் அளவை வேண்டுமானால் குறைக்கலாம். வங்கிகளின் வாராக் கடன் என்பது 3 சதவிகிதத்துக்குமேல் இருக்கக் கூடாது என்பது ஆர்.பி.ஐ.-ன் விதி. ஆனால், இன்று 7 பொதுத்துறை வங்கிகள் இந்த அளவை தாண்டி நிற்கின்றன. 2001 மார்ச் முதல் 2013 மார்ச் வரை வங்கிகளின் மொத்த வாராக் கடன் மதிப்பானது ரூ.2,04,512 கோடியாக உள்ளது. 2013 ஜூன் வரை வாராக் கடன் 51%  அதிகரித்துள்ளது.

ஒரு வங்கியானது கடன் தருவதற்கு முன்பு, கடன்கேட்டு வருபவர்களின் பின்னணி, அவர் செய்யும் தொழிலுக்கான எதிர்காலம், அவருடைய அனுபவம், வாங்கும் கடனை திரும்பக்கட்டுவதற்கான திறன் அவருக்கு உள்ளதா இவற்றை யெல்லாம் ஒருமுறைக்கு பலமுறை விசாரித்து அதன்பிறகே கடன் தரலாமா  என்று முடிவெடுக்க வேண்டும்.  கடனுக்கு ஈடாக தரப்படும் உத்தரவாத சொத்து குறித்த அடிப்படையான ஆவணங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா?, உத்தரவாத சொத்தின் தற்போதைய மதிப்பு என்ன? யார் பெயரில் அந்தச் சொத்து உள்ளது? என்பதையெல்லாம் கவனிக்கவேண்டும். கடனுக்கு ஈடாக தரும் சொத்து வேறொருவருடையதாக, பாகப்பிரிவினை செய்யப்படாத சொத்தாக இருக்கக் கூடாது.

அதிகரிக்கும் வங்கிகளின் வாராக் கடன்... என்னதான் தீர்வு?

டார்கெட் வைத்து தருவது!

எல்லா பொதுத்துறை வங்கிகளுக்கும் கடனுக்கான இலக்கை நிர்ணயம் செய்திருப்பார்கள். இந்த இலக்கை எளிதாக எட்ட பெரிய நிறுவனங்களுக்கு கடன் தருகிறார்கள் வங்கி அதிகாரிகள்.  நிர்ணயித்த இலக்கை அடைந்தால்தான் பதவி உயர்வு  கிடைக்கும் என்று அவசரப்பட்டுவிடுகிறார்கள்.  மேலும், கிளை மேலாளராக அதிகபட்சம்

5 ஆண்டுகள்தான் ஓர் ஊரில் இருக்க முடியும். கொடுத்த கடனை வசூலிக்கும் காலம் வருவதற்குள் வேறு கிளைக்கு பதவி உயர்வு பெற்று சென்றுவிடுகிறார்கள்.

அதிகரிக்கும் வங்கிகளின் வாராக் கடன்... என்னதான் தீர்வு?

கொடுத்த கடன் தொழில் தொடங்க பயன்படுத்தப்படுகிறதா, கடன் வாங்கி தொழிலை செய்யாமல் தங்கள் சொந்த காரியங்களுக்கு பயன்படுத்துகிறார்களா என்று  கவனிப்பது வங்கி அதிகாரிகளின் கடமை.  

கடன் தொகை முழுவதையும் ஒரே தவணையாக தரக்கூடாது என்பது விதி. இயந்திரங்கள் வாங்க கடன் தரும்போது அவற்றை சப்ளை செய்யும்  நிறுவனத்துக்கு நேரடியாகவோ காசோலையாகவே தரவேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் சரியான முறையில் வேலை நடக்கிறதா என்று வங்கி அதிகாரிகள் நேரடியாகச் சென்று ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், வேலை நெருக்கடி காரணமாக இதை சில வங்கிகள் சரியாக செய்வதில்லை.

தனியாரும் பொதுத்துறையும்!

தனியார் வங்கிகளில் வாராக் கடன் மதிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. தனியார் வங்கிகள் பெரிய நிறுவனங்களுக்கு கடன் தருவதை முடிந்தவரை தவிர்க்கின்றன. அவர்கள் முழுக்கமுழுக்க நுகர்வோர் கடன் வழங்குவதில்தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்தக் கடனை எளிதாக திரும்ப வாங்கிவிட முடியும். கடன் பணம் திரும்ப வரவில்லை என்றாலும்கூட அதன் அளவு சிறிதாகவே இருக்கும். இதனால் லாபம் பெரிதாக குறையாது.  

போட்டி மனப்பான்மை..!

பெரிய நிறுவனங்கள் கடன் கேட்டு விண்ணப்பிக்கும்போது, அந்த நிறுவனங்கள் வேறு வங்கிகளில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளதா, அந்த வங்கியில் ஏன் கடன் தரவில்லை என்பதைப் பார்க்க வேண்டும். பெரும்பாலான வங்கிகள் இதைச் செய்வதில்லை. விஜய் மல்லையா விஷயத்தில் இதுதான் நடந்தது. இந்த விஷயத்தை எஸ்.பி.ஐ. செய்த தவறியதால்தான் இன்று அதன் என்.பி.ஏ. அதிகமாக இருக்கிறது'' என்றார்.  

அதிகரிக்கும் வங்கிகளின் வாராக் கடன்... என்னதான் தீர்வு?

வங்கிகளின் வாராக் கடன் அதிகமானதுக்கு அரசியல் தலையீடு ஒரு காரணமா என கே.பி.எம்.ஜி. நிறுவனத்தின் பார்ட்னர் நாராயண் ராமசாமியிடம் கேட்டோம். ''வங்கிகள் கடன் வழங்குவதில் அரசியல் தலையீடு இருப்பது உண்மைதான். ஆனால்,  வாராக் கடன் உயர அது மட்டுமே காரணமல்ல. வாராக் கடன் இல்லாத நாட்டில் பொருளாதார வளர்ச்சி என்பதும் இருக்காது. சீனாவில் வாராக் கடன் 30 சதவிகிதத்தைத் தாண்டி சென்றுவிட்டது. அதிகமாக கடன் தரும்போதுதான் வளர்ச்சி அதிகரிக்கும். வாராக் கடனுக்கு பயந்து கடனே தரவில்லை எனில், எந்த புதிய திட்டமும் வராது'' என்றார்.

''பிறகு ஏன் வாராக் கடன்கள் உயர்ந்ததால், வங்கித் துறையின் வளர்ச்சி பாதிப்படையும் என்கிறீர்கள்'' என்று அவரிடம் கேட்டோம். ''வாராக் கடன் அதிகமாவதால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துச் சொல்லவேண்டியது கடமை. அதைத்தான் செய்கிறோம்'' என்றார்.

அதிகரிக்கும் வங்கிகளின் வாராக் கடன்... என்னதான் தீர்வு?

இதுபற்றி இளங்கோவனிடம் கேட்டோம். ''அரசியல் தலையீடு கட்டாயம் இருக்கும். ஆனால், அதற்கெல்லாம் அதிகாரிகள் அடிபணிந்து போகக்கூடாது. தவிர, வாராக் கடன் வசூலிப்பதற்கான வழிமுறைகளை இன்னும் கடுமையாக்கவேண்டும். கடனை திரும்பச் செலுத்தாதவர்களின் சொத்துகளை விற்று பணமாக மாற்றுவதற்கான வழிமுறை களை செய்யவேண்டும். ஆனால், இதை வங்கிகளால் அவ்வளவு எளிதாக செய்ய முடியாதபடிக்கு கடன் வாங்கியவர்கள் வங்கி மீது வழக்குபோட்டு சிக்கல் ஏற்படுத்துவார்கள். இதனைத் தடுக்க இதுபோன்ற வழக்குகளை விசாரிக்கும்போது, கடனைக் கட்டாதவர்கள் முதலில் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையைக் கட்டியபிறகே வழக்குத் தொடுக்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவர வேண்டும்.

மேலும், லோக் அதாலத், சர்ஃபாஸி சட்டம், டெப்ட்ஸ் ரெக்கவரி ட்ரிபியூனல் (Debts Recovery Tribunal)ஆகிய சட்டங்களைப் பயன்படுத்தி வாராக் கடனை ஓரளவுக்கு வசூலிக்கலாம். சர்ஃபாஸி சட்டத்தின் மூலமாக சிறிய கடனை வசூலிக்கலாம்.

10 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள கடன் எனில் டெப்ட்ஸ் ரெக்கவரி ட்ரிபியூனல் மூலமாக வசூலிக்கலாம்'' என்றார்.

பெரும்பாலான வங்கிகள் தங்களுடைய வாராக் கடன் அளவை வெளிப்படையாக தெரிவிப்பதில்லை. வாராக் கடனை மறுசீரமைப்பு கடனாக மாற்றி கணக்கு காண்பித்துவிடுகின்றன. இதனால் உண்மையான வாராக் கடன் மதிப்பை தெரிந்துகொள்ள முடிவதில்லை.

அதிகரிக்கும் வங்கிகளின் வாராக் கடன்... என்னதான் தீர்வு?

இன்னொரு அதிர்ச்சியான விஷயம் என்னவெனில், வாராக் கடன்களை ஈடுசெய்ய வங்கிகள் வைத்திருக்கும் கையிருப்பானது பொதுத்துறை வங்கிகளில் தொடர்ந்து குறைந்து வருகிறது. புரவிஷன் கவரேஜ் ரேஷியோ (PCR) என்று அழைக்கப்படும் இந்த கையிருப்பு கடந்த மார்ச் மாதத்தில் 54 சதவிகிதமாக இருந்தது. ஆனால், இப்போது 50 சதவிகிதத்தைவிட குறைந்துவிட்டது. வெளிநாடுகளில் உள்ள வங்கிகள் 70 - 80 சதவிகிதம் அளவுக்கு இந்தக் கையிருப்பை வைத்திருக்கும்போது நம் நாட்டு வங்கிகளில் இந்தக் கையிருப்பைக் குறைந்து வருவது நல்ல அறிகுறியல்ல.

பொதுத்துறை வங்கிகள் என்பது நாட்டின் சொத்து. அது நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்தமானது. வங்கிகளின் வாராக் கடன் அதிகரிக்க அதிகரிக்க, வங்கிகள் மீது நம்பிக்கை குறைந்து பொருளாதார வளர்ச்சி பாதிப்படையும். வங்கிகள் புதுமையைப் புகுத்த வேண்டும் என்று கூறும் நிதி அமைச்சர், பொதுத்துறை வங்கிகளின் செயல்பாட்டில் அரசாங்கத்தின் குறுக்கீட்டை அடியோடு ஒழிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் தனித்தன்மையோடு செயல்பட வழிவகுக்க வேண்டும்.

- இரா.ரூபாவதி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு