Published:Updated:

பாரதிய மஹிலா பேங்க்: வந்தாச்சு பெண்கள் வங்கி!

பாரதிய மஹிலா பேங்க்: வந்தாச்சு பெண்கள் வங்கி!

##~##

இன்று எல்லாத் துறைகளிலும் பெண்களின் பங்கு கணிசமாக இருக்கிறது. பல லட்சம் பெண்கள் இன்றைக்கு வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டுகிறார்கள். என்றாலும், நாடு முழுக்க உள்ள பெண்களின் எண்ணிக்கையில் 26 சதவிகிதத்தினரே வங்கிகளில் கணக்கு வைத்திருக்கிறார்கள். ஓரளவுக்குப் படித்த பெண்கள்கூட வங்கிகளில் நுழைந்து, கணக்குத் தொடங்கி, கடன்கேட்டு விண்ணப்பிக்க தயக்கம்காட்டவே செய்கிறார்கள். அவர்கள் தயங்கி நிற்பதற்கு நியாயம் சொல்கிற மாதிரி, வங்கிகள் என்பது இன்றும்கூட ஆண்கள் ஆட்சி செலுத்தும் ஓர் இடமாக இருந்து வருகிறது.

இந்தப் பிரச்னைக்கு ஒரு நல்ல தீர்வுகாண அமைக்கப்பட்டதுதான் பாரதிய மஹிலா பேங்க். 2013-14-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 1,000  கோடி ரூபாய் செலவில் பெண்களுக்கான தனி வங்கி ஆரம்பிக்கப்படும் என நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார். அவர் அறிவித்த ஒன்பது மாதங்களில் ஏழு கிளைகளுடன் இந்த வங்கி ஆரம்பமாகியுள்ளது. இந்த வங்கியின் செயல்பாடுகள் குறித்து அதன் நிர்வாக இயக்குநர் மற்றும் சேர்மன் உஷா அனந்தசுப்ரமணியனுடன் பேசினோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பாரதிய மஹிலா பேங்க்: வந்தாச்சு பெண்கள் வங்கி!

''நாட்டிலேயே முதல்முறையாக இந்தியா முழுக்க மொத்தம் ஏழு இடங்களில் பாரதிய மஹிலா வங்கியைத் தொடங்கி இருக்கிறோம். சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, லக்னோ, அஹமதாபாத், கவுஹாத்தி ஆகிய இடங்களில் கிளைகள் திறந்திருக்கிறோம். 2014 மார்ச் மாதத்துக்குள் இன்னும் 25 கிளைகள் தொடங்கப் போகிறோம். 2020-க்குள் இந்தியா முழுவதும் 500 கிளைகள் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த வங்கியை லாபம் தரும் வங்கியாக மாற்றுவதற்கான அனைத்து வேலைகளையும் செய்து வருகிறோம்'' என்றவர், இந்த வங்கியின் மூலம்  கிடைக்கும் சேவைகள் மற்றும் வட்டிவிகிதம் குறித்தும் நம்மிடம் விளக்கினார்.

''பாரதிய மஹிலா வங்கியில் குறுந்தொழில் செய்வதற்கான கடன் வழங்கப்படும். தொழில் என்பது சிறிய அளவிலான உணவகம், கூடை நெய்தல், தையல் வேலைகள் போன்ற 5,000 ரூபாய் முதலீடு தேவைப்படும் தொழில் களுக்குகூட இந்த வங்கியின்மூலம் கடன் கிடைக்கும். தகுதி உடையவர்களுக்கு விரைவாக கடன் வழங்குவதற்கான அத்தனை வேலைகளையும் செய்வோம். மேலும், வங்கிக் கணக்கு ஆரம்பித்த அன்றே பாஸ்புக், டெபிட் கார்டு தந்துவிடுவோம்.

பாரதிய மஹிலா பேங்க்: வந்தாச்சு பெண்கள் வங்கி!

எல்லா வங்கிகளிலும் சேமிப்புக் கணக்கில் உள்ள பணத்துக்கு 4% வட்டிதான் தருகிறார்கள். ஆனால், எங்கள் வங்கியில் 1 லட்சம் ரூபாய் வரை 4.5 சதவிகிதமும், அதற்குமேல் 5 சதவிகித வட்டியும் தருகிறோம். அதேபோல, ஒரு ஆண்டு காலத்துக்கான டெபாசிட்களுக்கு 9% வரை வட்டி தருவோம்.

பெண்கள் சுயஉதவிக் குழுக்களுக்கு 7 சதவிகித வட்டியில் கடன் தரவேண்டும் என ஆர்.பி.ஐ. அறிவித்துள்ளது. எனவே, சுயஉதவிக் குழுக்கள் குறைந்த வட்டியில் கடன்பெற முடியும். வீட்டுக் கடன், கல்விக் கடன் என அனைத்துவிதமான கடன்களும் கிடைக்கும்.

சுயஉதவிக் குழுக்கள் மட்டுமல்லாமல் பெண்களுக்கு பயன்படும் பொருட்களைத் தயாரிப்பவர்கள் எங்கள் வங்கியில் கடன் வாங்கலாம். அதாவது, அழகு சாதனப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றுக்கும் கடன் கிடைக்கும். இது மட்டுமல்லாமல் நிதி சார்ந்த கல்வியையும் பெண்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.

பாரதிய மஹிலா பேங்க்: வந்தாச்சு பெண்கள் வங்கி!

எதிர்காலத்தில் மொபைல் வேன்கள் மூலமாக கிராமப்புறங்களுக்குச் சென்று பெண்களிடம் பொருளாதாரத்தில் ஏன் வளர்ச்சிபெற வேண்டும், அதனுடைய அவசியம் என்ன என்பது குறித்தும், கடன் ஏன் வாங்கவேண்டும் என்பது குறித்தும் வங்கி ஊழியர்கள் மூலமாக எடுத்துச் சொல்வோம். தொழில்நுட்ப ரீதியாகவும் விரைவில் நெட்பேக்கிங் மற்றும் எஸ்.எம்.எஸ். அலெர்ட், விபத்து காப்பீடு பாலிசி போன்ற வசதிகளையும் செய்து தருவோம். இப்போதுதான் ஆரம்பித்து உள்ளோம். இனிமேல், பெண்களின் முன்னேற்றத்துக்கு என்னென்ன தேவை என்று கண்டுபிடித்து, அதற்கேற்ப எங்கள் சேவையை வடிவமைப்போம்'' என்று முடித்தார் உஷா.

பெண்களுக்கென ஒரு தனி வங்கி என்கிற கோரிக்கை நிறைவேறிவிட்டது. இனி இதனை பயன்படுத்தி முன்னேற்றம் காணவேண்டியது அவர்களின் கடமை!

- இரா.ரூபாவதி,
படங்கள்: பா.கார்த்திக்.