பிரீமியம் ஸ்டோரி
##~##

 ன்ஜின் தயாரிப்பில் தன்னிகரில்லாத ஒரு கம்பெனியாக இருக்கும் இந்தநிறுவனம், பெரிய ப்ராண்டு கம்பெனிகளுடன் இன்ஜின் சப்ளைக்கான ஒப்பந்தங்களைச் செய்துள்ளது!

இந்த வாரம் நாம் ஸ்கேனிங்குக்கு எடுத்துக்கொண்டது, கிரீவ்ஸ் காட்டன் எனும் ஆட்டோ-இன்ஜின் தயாரிக்கும் கம்பெனியை.

ஆட்டோமொபைல் துறைதான் மிகவும் கீழேயிருக்கிறதே, இப்போது இந்த கம்பெனியை ஏன் ஸ்கேன் செய்யவேண்டும் என்று வாசகர்கள் கேட்கலாம். ஆட்டோ துறை மேல்நோக்கிய போக்கினை அடையும்போது இந்த கம்பெனி மிளிரக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என்பதால்தான் ஸ்கேனிங்குக்கு இதை எடுத்துக்கொள்கிறோம்.  

ஆட்டோமொபைல் துறை வேகமாக வளரும்போது இன்ஜின் தயாரிப்பை தனியாரிடம் அவுட்சோர்ஸ் செய்வது அந்தத் துறையின் மரபு. அதிலும், கிரீவ்ஸ் காட்டனுக்கு இன்ஜின் தயாரிப்பில் இருக்கும் நீண்டகால தொழில் அனுபவம் ஆட்டோமொபைல் கம்பெனிகள் இன்ஜின் தயாரிப்பை விரும்பி ஒப்படைப்பதற்கு உகந்ததாக இருக்கிறது.

கம்பெனி ஸ்கேன் !

கிரீவ்ஸ் காட்டன் பொதுவாக அதிகபட்சமாக பத்து ஆண்டுகள் வரையிலான இன்ஜின் சப்ளைக்கான நீண்டகால ஒப்பந்தங்களை ஆட்டோமொபைல் கம்பெனிகளுடன் செய்துகொள்கிறது. இந்த அளவுக்கு நீண்டகால ஒப்பந்தங்கள் செய்யப்படுவதற்கு காரணம், டெக்னிக்கலாக கிரீவ்ஸ் காட்டனிடம் இருக்கும் உயரிய அனுபவம் எனலாம். இந்த அனுபவமும் டெக்னிக்கல் செயல்பாடுகளும்தான் கிரீவ்ஸ் காட்டனை சிறந்த கம்பெனியாக்குகிறது.

மூன்று சக்கர வாகனங்களுக்கான இன்ஜின் தயாரிப்பில் தன்னிகரில்லாத ஒரு கம்பெனியாக இருக்கிறது கிரீவ்ஸ் காட்டன். நான்கு சக்கர வாகனங்களில் டாடா மோட்டாருக்கு மட்டும் இன்ஜின் சப்ளை செய்து சிறிய அளவிலான மார்க்கெட் ஷேரை வைத்துள்ளது இந்த கம்பெனி.

கம்பெனி ஸ்கேன் !

பியாஜியோ, டாடா மோட்டார்ஸ், எம் அண்டு எம் போன்ற பெரிய ப்ராண்டு ஆட்டோமொபைல் கம்பெனிகளுடன் இன்ஜின் சப்ளைக்கான ஒப்பந்தங்களைச் செய்து கொண்டுள்ளது கிரீவ்ஸ் காட்டன்.

இதரவகை இன்ஜின் தயாரிப்புகள்!

வெறுமனே ஆட்டோ இன்ஜின்கள் மட்டுமல்லாமல் விவசாயத்துக்கு தேவையான உபகரணங்களுக்கு இன்ஜின் தயாரிப்பு, ஜெனரேட்டர்களுக்கான இன்ஜின் தயாரிப்பு,  தொழிற்சாலைகள் மற்றும் கப்பல்களில் மெட்டீரியல் ஹேண்டிலிங் செய்வதற்கு உதவும் வாகனங்களுக்கான இன்ஜின் தயாரிப்பு, சுரங்கம் மற்றும் கட்டுமானத் தொழிலுக்கு உதவும் உபகரணங்களுக்கான இன்ஜின் தயாரிப்பு என பல்வேறு தொழில்களிலும் கால்பதித்துள்ளது கிரீவ்ஸ் காட்டன். இந்த ஆட்டோ அல்லாத இன்ஜின் தயாரிப்பு மிகவும் லாபகரமான தொழிலாக மாறும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

கம்பெனி ஸ்கேன் !

உதாரணமாக, விவசாயத்துக்கு கூலிவேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் போவதால் எல்லாப் பணிகளும் மெஷின்களின் மூலம் செய்யப்படுகிறது. களத்துமேட்டில் இயங்கும் இந்த மெஷின்கள் டீசல் இன்ஜின்களின் உதவியுடனேயே செயல்படுகின்றன. எதிர்காலத்தில் இத்தகைய மெஷின்களின் பயன்பாடு வெகுவேகமாக அதிகரிக்கும் என்பதால் கிரீவ்ஸ் காட்டன் இந்தத் தொழிலில் லாபம் பார்க்கும் வாய்ப்பு அதிகம் எனலாம்.

ஒருபுறம் ஆட்டோ துறையில் பெரிய கம்பெனிகளுக்கு சப்ளை செய்துவரும் கிரீவ்ஸ் காட்டன், மறுபுறம் இதுபோன்ற இன்ஜின்களை விற்பனை செய்து சர்வீஸ் செய்வதற்கான பெரிய நெட்வொர்க்கையும் அகில இந்திய ரீதியாக நிறுவியுள்ளது.

ஆட்டோ துறை நன்றாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதுபோன்ற அத்தியாவசியத் துறைக்கு இன்ஜின் சப்ளை செய்யும் தொழில் எப்போதும் நடந்துகொண்டேதான் இருக்கும். இதையும் தாண்டி செலவினங்களைக் குறைப்பதில் இந்த கம்பெனி காட்டும் உள்ளார்ந்த அக்கறைத் தொடர்ந்து நல்ல லாபத்தைக் கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை.

கம்பெனி ஸ்கேன் !

சிறப்பு என்ன?

கிரீவ்ஸ் காட்டன் கம்பெனி  லாபத்தில் முதலீட்டாளர்களுக்கான பலன்களை அளிப்பதில் முதலீட்டாளர்களின் தோழன் என்று சொன்னால் மிகையாகாது. கடந்த பத்து ஆண்டுகளாக சிறப்பான செயல்பாட்டினையும் கிட்டத்தட்ட 18 காலாண்டுகளாகத் தொடர்ந்து டிவிடெண்டையும் தந்து வருகிறது.

தொழிலில் பணத்தைப் புழங்கவிடும் திறனும் முதலீட்டாளர்களுக்கு சரியான ரிட்டர்னைக் கொடுக்கும் திறனும் நிரம்பவே கொண்டுள்ளது கிரீவ்ஸ் காட்டனின் நிர்வாகம். இதையும் தவிர்த்து கம்பெனியின் நிர்வாகம் இன்ஜின் தயாரிப்பு (ஆட்டோமொபைல் மற்றும் இதர இன்ஜின்கள் துறையில்) தலைசிறந்த அனுபவம் கொண்டதாக இருக்கிறது என்பதையும் மனதில்கொள்ள வேண்டும்.

கவனிக்க வேண்டியவை..!

தொழில் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் நல்ல பல விஷயங்களைக் கொண்டிருந்த போதிலும், பெரிய அளவில் (ஏறக்குறைய ஐம்பது சதவிகித மொத்த விற்பனை அளவில்) ஆட்டோ துறையைச் சார்ந்திருப்பது என்பது ஒரு நெருடலான விஷயம். ஆட்டோ துறையின் வாழ்வும் தாழ்வும் இந்த கம்பெனியைக் கணிசமான அளவில் பாதிக்கும். நீண்ட நாட்களுக்கான மொத்த சப்ளை கான்ட்ராக்ட் என்பதால் ஆட்டோ துறை நன்றாக இருக்கும் போதுகூட இன்ஜின்களை அதிக லாபம் வைத்துவிற்க முடியாத நிலையிலேயே இருக்கும் கிரீவ்ஸ் காட்டன். வங்கி வட்டி விகிதங்கள் கூடினால் ஆட்டோமொபைல் துறை கொஞ்சம் தடுமாற ஆரம்பித்துவிடும். இருப்பினும், அகில இந்திய ரீதியாக உள்ள மின்சாரத் தட்டுப்பாடு ஜெனரேட்டர்களுக்கான இன்ஜின்களுக்கான டிமாண்டை எப்போதும் தக்கவைக்கும் என்பது ஓர் ஆறுதலான விஷயம்.

எதை நம்பி இறங்குவது?

ஒற்றை சிலிண்டர் இன்ஜின்களில்  ஏறக்குறைய எழுபத்தைந்து சதவிகிதத்துக்கும் மேலான மார்க்கெட் ஷேரைக் கொண்டுள்ளது இந்த கம்பெனி. அதேபோல், ஆட்டோமொபைல் அல்லாத துறைகளுக்கான இன்ஜின்களிலும் ஒரு ஸ்திரமான கால் பதித்திருப்பதால் தொழில் ரீதியான ரிஸ்க்கை ஏகமாகக் குறைத்துக் கொண்டுள்ளது இந்த கம்பெனி.

மத்திம ரக ரிஸ்க் உடைய தொழிலையும், நீண்ட அனுபவம் மற்றும் மார்க்கெட் ஷேரை கொண்டுள்ளதையும்,  நல்ல லாப அளவினை உள்ளடக்கியுள்ளதையும்,  சிறப்பான டிவிடெண்ட் தரும் குணத்தினையும், அதிக அளவிலான ப்ரமோட்டர் ஹோல்டிங்கும், குறைந்த அளவிலான எஃப்ஐஐ ஹோல்டிங்கும் கொண்டிருப்பதை மனதில்கொண்டு கிரீவ்ஸ் காட்டன் பங்குகளை விலை குறையும்போது வாசகர்கள் குறைந்த எண்ணிக்கையில் வாங்கி தங்கள் முதலீட்டின் ஓர் அங்கமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

- நாணயம் ஸ்கேனர்.

(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய விலையிலேயே வாங்கவேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்!)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு