Published:Updated:

ஜூட் பேக்... க்யூட் லாபம்..!

பொன்.விமலா, படங்கள்: எம்.உசேன்

ஜூட் பேக்... க்யூட் லாபம்..!

பொன்.விமலா, படங்கள்: எம்.உசேன்

Published:Updated:
##~##

 'சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தக் கூடாது' என்கிற விழிப்பு உணர்வு மக்களிடம் பரவ ஆரம்பித்த தருணத்திலிருந்து, அதற்கு மாற்றாக சக்கை போடு போடுகின்றன சணல் பைகள். பெரிய பெரிய கோணிப்பைகளுக்கு மட்டுமே முன்பு பயன்படுத்தப்பட்ட சணல், இன்று 'ஜூட் பேக்ஸ்’ என்ற வசீகரப் பெயருடன் பர்ஸ், ஹேண்ட் பேக், டிராவல் பேக், லஞ்ச் பேக், தாம்பூலப் பை, மளிகைச் சரக்கு வாங்கும் பிக் ஷாப்பர் பை என புதுப்புது வடிவங்களில், வண்ணங்களில் கிடைக்கின்றன.

''இந்த திருமண சீஸனில் ஜூட் தாம்பூலப் பைகளுக்கு டிமாண்ட் அதிகம்!'' என்று தகவல் சொல்லும் சென்னை, மடிப்பாக்கத்தைச் சேர்ந்த கிரிஜா, சணல் பைகள் தயாரிப்பில் சம்பாதிக்க தெம்பு கொடுக்கிறார்.

''ஏதாவது தொழில் பண்ணலாமேங்கிற எண்ணம் வந்தப்ப எனக்கு வயசு 47. அப்போ தான் இந்த சணல் பைகள் தயாரிக்கிறது பத்தி தெரிய வந்துச்சு. ஏற்கெனவே சணல் பைகள் தயாரிக்கறவங்ககிட்ட தொழிலை கத்துக்கிட்டு, தனியா செய்ய ஆரம்பிச்ச நான், கிட்டத்தட்ட 5 வருஷமா வெற்றிகரமா நடத்திட்டு வர்றேன்!''

- வெற்றிப் புன்னகையுடன், தன் கதை சொன்ன கிரிஜா, தொடர்கிறார்.

''ஆரம்பத்துல தையல் மெஷினுக்கு 8 ஆயிரம், சணல், நூல்னு மெட்டீரியல் வாங்க 2 ஆயிரம்னு சணல் பைகள் தயாரிப்புக்காக மொத்தமே 10 ஆயிரம் ரூபாய்தான் முதலீடு போட்டேன். ஜூட் பேக் தயாரிக்கிறதுக்கு பெருசா இடம் வேணும்னுகூட அவசியம் இல்லை. மெஷின் வைக்கிற அளவுக்கு இட மும், தினமும் 5 மணி நேரமும் ஒதுக்கினாலே போதும்... உட்கார்ந்த இடத்துல இருந்தே 40 பர்சன்ட் லாபம் பார்க்கலாம். பொதுவா நாம வெளியில வேலைக்குனு போக ஆரம்பிச்சா... பயணத்தோட சேர்த்து குறைஞ்சது 8 மணி நேரம் ஒதுக்க வேண்டியிருக்கும். இதுவே வீட்டுல இருந்துட்டே ஜூட் பேக் செய்ய ஆரம்பிச்சோம்னா... நேரம்ங்கிறது நம்ம கையிலதான். குழந்தைங்கள ஸ்கூலுக்கு அனுப்பிட்டு ஃப்ரீயா இருக்கும்போது ஆரம்பிச்சா, அவங்க வீட்டுக்கு வர்றதுக்குள்ள மடமடனு முடிச்சுடலாம்.

ஜூட் பேக்... க்யூட் லாபம்..!

சரி, ஜூட் பேக் தயாரிக்கிறது சுலபமா, கஷ்டமா..? தையல் பயிற்சி, உழைப்பு மற்றும் கற்பனைத்திறன் இருந்தா போதும்... சுலபமோ சுலபம். வெறும் பைகள் மட்டும் தயாரிக்காம... மொபைல் பவுச், டேபிள் மேட், வால் ஹேங்கிங் தோரணம்னு விதவிதமா செஞ்சு அசத்தலாம். இந்தத் தொழிலுக்கு ஒதுக்கிற உழைப்பையும் நேரத்தையும் பொறுத்து மாசத்துக்கு 10 ஆயிரம் முதலீடு செய்தா... நிச்சயம் 4 ஆயிரம் லாபம் கொடுக்கும். திறமையைப் பொறுத்து அதிக முதலீடு போட்டு, அதிக லாபம் எடுக்கலாம்.

மெஷின்ல உட்கார்ந்து தைக்கிறது சிரமமா இருந்தா, கட் செய்து டெய்லர்கிட்ட கொடுத்து தைத்து வாங்கலாம். ஜூட் பேக்ல எம்ப்ராய்டரி செய்து கொடுத்தா, காலேஜ் பொண்ணுங்ககிட்ட நிறைய வரவேற்பு இருக்கு. புதுமையான வடிவங்கள், கவர்ச்சியான டிசைன்கள்னு நம்மால முடிந்தவரை அழகைக் கூட்டினா, விலையும் கூடும், விற்பனையும் கூடும்!'' என்றவர், ஜூட் பேக்குகளுக்கான மார்க்கெட்டிங் குறித்துப் பேசினார்.

''பக்கத்துல இருக்கிற மளிகைக் கடைகள், ஃபேன்ஸி ஸ்டோர்கள், கோயில்களில் பூஜைப் பொருட்கள் விற்கும் இடம்னு இந்த பைகளுக்கு தேவை இருக்கிற இடங்களுக்கு நேரடியா சென்று விற்பனையைப் பெருக்கலாம். ஈவன்ட் மேனேஜ்மென்ட் நடத்துறவங்க, அலுவலகங்கள்னு நிறைய பேருடன் இணைந்தும் மார்க்கெட்டை விரிவுபடுத்தலாம். அங்க, இங்கனு அலைய முடியலைனா... மொத்த விற்பனையாவும் கொடுக்கலாம். துணிக்கடைகளை அணுகி ஆர்டர் எடுத்தும் தைத்துக் கொடுக்கலாம். நவராத்திரி நேரத்தில் பரிசுப் பொருட்களை கொடுத்தனுப்ப இந்த தாம்பூலப் பைகளுக்கு நல்ல மவுசு இருக்கும்.

இது எதுவுமே என்னால முடியாது, உட்கார்ந்த இடத்துலயே பிசினஸ் பண்ணணும்னாலும்... ஆன்லைன் மார்க்கெட்டிங் பண்ணலாம். நமக்கு ஒரு வலைதளம் உருவாக்கி... அதன் மூலமா விற்பனை செய்யலாம். ஃபேஸ்புக், டிவிட்டர்னு சமூக வலைதளங்களிலும் விளம்பரம் கொடுத்து, நம்ம இடத்துக்கே ஆர்டர்கள் வர வெச்சு சம்பாதிக்கலாம். இதுக்காக வங்கிக் கடன் வாங்கறதும் ரொம்பவே சுலபம். நம்ம எண்ணம்... நம்ம கைவண்ணம். சணல் பையில் நம்பி முதலீடு போட்டா... பெருகப் பெருகப் பணம் பார்க்கலாம்!''

- பளிச்சென முடித்தார் கிரிஜா.