Published:Updated:

தங்கம்... இன்னும் விலை ஏறுமா?

சே.புகழரசி

தங்கம்... இன்னும் விலை ஏறுமா?

சே.புகழரசி

Published:Updated:

மஞ்சள் நிறமுள்ள மென்மையான ஆபரணமான தங்கம், நம் மக்களின் தவிர்க்க முடியாத  அங்கமாக உள்ளது. பொங்கல், தீபாவளி என எல்லா பண்டிகை காலத்திலும் நம்மவர்கள் தங்கம் வாங்குவார்கள். இப்போது அட்சய திருதியை அன்றும் சில கிராம் தங்கமாவது வாங்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். இன்னும் சிலர், தங்கத்தின் விலை ஏற்கெனவே அதிகமாக இருக்கிறதே! இனியும் விலை உயருமா எனப் பலர் கேட்கிறார்கள்.தற்போதுள்ள நிலையைவைத்துப் பார்த்தால், இனிவரும் காலத்தில் தங்கத்தின் விலை உயருமா, அதில் முதலீடு செய்யலாமா, எதிர்காலத்தில் விலை எப்படி இருக்கும் என கமாடிட்டி நிபுணர் ஷ்யாம் சுந்தரிடம் கேட்டோம். விரிவாக எடுத்துச் சொன்னார் அவர்.

தங்கம் விலை அதிகரிக்கும்!

''தற்போதுள்ள நிலையைவைத்துப் பார்த்தால், இனிவரும் காலத்தில் தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. காரணம், தற்போது சீனாவில் தங்கத்தின் தேவை அதிகரித்துக்கொண்டே போகிறது.  2013-ல் சீனாவின் தங்கம் இறக்குமதி 1132 டன்களாக இருந்தது. இது 2017-ல் 20% அதிகரித்து, 1350 டன்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தங்கம்... இன்னும் விலை ஏறுமா?

அடுத்த ஆறு வருடங்களில் சீனாவில் நடுத்தர மக்கள்தொகை 60% என்ற அளவில் இருக்கக்கூடும் என்பதால் தங்கத்தின் தேவை அதிகரிக்கும். இதனால் தங்கத்தின் விலை அதிகரிக்கலாம் என வேர்ல்டு கோல்டு கவுன்சில்  கூறியுள்ளது.

தங்கத்தின் உற்பத்தி செலவு சந்தை விலைக்கு அருகில் இருப்பது போன்ற பல காரணங்களால் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கலாம். அமெரிக்காவின் பொருளாதாரம் தற்போதுள்ள நிலையிலிருந்து மீண்டு வருவதாக எதிர்பார்க்கப்பட்டாலும், 2008-க்குப் பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் அங்கு பணவீக்க மானது இன்னும் 2 சதவிகித அளவை எட்டவில்லை.

மேலும், கடந்த சில வருடங்களாக வட்டி விகிதங்களை 0.25 சதவிகிதத்துக்கும் குறைவாகவே வைத்திருக்கிறது. வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை 6.7 சதவிகிதமாக இருப்பது போன்ற காரணங்களும், தற்போது உக்ரைனில் நிலவிவரும் பதற்றத்தாலும் தங்கம் விலை அதிகரிக்கவே நிறைய வாய்ப்புண்டு.

தங்கம்... இன்னும் விலை ஏறுமா?

சமீபகாலம் வரை உச்சத்தில் இருந்த நம் நாட்டின் நடப்பு கணக்குப் பற்றாக்குறையைப் போக்க  மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தது. குறிப்பாக, தங்க இறக்குமதி வரியை 2 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக அதிகரித்தது. இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் கட்டாயம் 20 சதவிகிதத்தை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் புதிய உத்தரவைப் பிறப்பித்தது. இதனால் நடப்பு கணக்குப் பற்றாக்குறையும் கட்டுக்குள் வந்துள்ளது. மேலும், தங்கத்தின் இருப்பும் குறைந்துள்ளது. இதனால்,  விலை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது.

எப்போது அதிகரிக்கும்?

இன்னும் ஆறு மாதங்களுக்குப்பின் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதங்களை அதிகரிக்கும்பட்சத்தில், அதன் தாக்கமானது தற்போது வெளியாகிவரும் பொருளாதாரம் சார்ந்த சாதகமான புள்ளிவிவரங்களில் சில எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். மேலும், அமெரிக்காவின் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்கள் படிப்படியாகக் குறையும்பட்சத்தில் அந்த நாட்டின் ஜிடிபி-யில் 2015 மத்தியில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

தங்கம்... இன்னும் விலை ஏறுமா?

ஆகையால் இந்தியாவைப் பொறுத்தவரை, தற்போதைய நிலையில் இன்னும் 1 வருட காலத்துக்கு  இதேநிலை தொடர வாய்ப்புண்டு. அதேசமயம், அமெரிக்க டாலரின் மதிப்பு சர்வதேச நாணயங்களுக்கு நிகராக சரியும்பட்சத்தில் (2015 பிற்பகுதியில்) சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஏறுவதற்கு சாத்தியக்கூறு அதிகம்'' என்றார்.

சந்தை வட்டாரங்களில் நிபுணர்களிடம் பேசியபோது, தங்கம் விலை எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்றே கூறுகிறார்கள். இதையடுத்து தங்கத்தில் முதலீடு செய்யும்போது, தங்க நகை வாங்கி முதலீடு செய்ய லாமா, கோல்டு இடிஎஃப் எனப்படும் பேப்பர் தங்கத்தில் முதலீடு செய்ய லாமா அல்லது கோல்டு ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா? அவ்வாறு முதலீடு செய்யும்போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும்? இந்த முதலீட்டின் மூலம் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை விரிவாக எடுத்துச் சொன்னார் அனிராம் நிறுவனத்தின் சிஐஓ அனிதா பட்.

''தங்கத்தில் முதலீடு செய்யும்போது தங்க நகைகள், காயின்கள், பார்கள், கோல்டு இடிஎஃப், கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் போன்றவை முக்கிய இடத்தில் உள்ளன.

தங்கநகை!

தங்க நகையாக வாங்கும்போது செய்கூலி, சேதாரம், இறக்குமதி வரி, வாட் வரி போன்றவற்றை கவனித்து வாங்கவேண்டும். தங்க நகையை முதலீட்டு நோக்கில் வாங்குபவர்களைவிட ஆபரணமாக வாங்குபவர்களே அதிகம். இதை முன்னரே வாங்குவதைவிடத் தேவைக்கேற்ப அவ்வப்போது வாங்கிக் கொள்ளலாம். அப்போதுதான் லேட்டஸ்ட் ஃபேஷனில் நகை வாங்கி அணிய முடிவதோடு, செய்கூலி, சேதாரத்தையும் குறைக்க முடியும்.

தங்கம்... இன்னும் விலை ஏறுமா?

தங்க காயின்கள்!

தங்க நகையோடு ஒப்பிடும்போது அதிகளவு சேதாரம் இல்லாமல் தங்கத்தில் முதலீடு செய்ய காயின்கள் சிறந்த வழியாகும். ஆனால், இந்தக் காயின்களை விற்கும் நகைக் கடைகள் திரும்ப வாங்கிக்கொள்ளும்போது விலையில் சுமார் 5% வரை குறைத்து விடுகின்றன. மேலும், இந்த தங்க காயின்களை விற்கும்போது சுமார் 2% வரை சேதாரம் உண்டு. சில குடும்பங் களில் தங்கம் வாங்குவதே அதை அவசரகாலத்துக்கு அடகுவைத்துக் கொள்ளத்தான். ஆனால், காயினை வங்கிகளில் சென்று அடகும் வைக்க முடியாது. இதுபோன்ற விஷயங்களை முதலீட்டாளர்கள் கவனித்து முதலீடு செய்வது நல்லது.

கோல்டு இடிஎஃப்!

கோல்டு இடிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு வேண்டும். இந்த டீமேட் கணக்குக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.500 வரை கட்டணம் வசூலிக்கப்படும். இந்த முதலீட்டுத் திட்டத்தில் ஒரு யூனிட் என்பது 1 கிராம் தங்கத்தைக் குறிக்கும். பங்குச் சந்தை போன்றே இதில் தங்கத்தை வாங்கலாம், விற்கலாம். இதில் லாபம் என்பது தங்கத்தின் விலை மாற்றத்தைப் பொறுத்தே இருக்கும். இதில் தங்கமாகப் பெற முடியாது. யூனிட்களை விற்றுப் பணத்தைத்தான் எடுத்துக்கொள்ள முடியும்.

தங்கம்... இன்னும் விலை ஏறுமா?

இதில் கவனிக்கவேண்டிய விஷயம், கோல்டு இடிஎஃப் யூனிட்களை வாங்கும்போதும், விற்கும்போதும் சுமார் 0.5% கட்டணம் கட்ட வேண்டும். மேலும், ஓராண்டுக்குள் வெளியேறினால் குறுகியகால மூலதன வரி கட்டவேண்டியிருக்கும். இந்த வரி அவரவர் வருமான வரி வரம்பு அடிப்படையில் இருக்கும். (நீண்டகால மூலதன ஆதாய வரி ஓராண்டுக்குமேல் செல்லும்போது கோல்டு இடிஎஃப், கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் இரண்டுக்கும் 10% அல்லது பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப்பின் 20% இருக்கும்) இதில் சாதகமான விஷயம் என்னவெனில் செய்கூலி, சேதாரம் இல்லை. தங்க நகை, காயின்களைப்போன்றே பாதுகாக்க வேண்டிய பிரச்னை இல்லை.

தங்கம்... இன்னும் விலை ஏறுமா?

கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட்!

கோல்டு சேவிங்ஸ் ஃபண்டும் கோல்டு இடிஎஃப் போலத்தான். இதன்மூலம் திரட்டப்படும் நிதி, அதே நிறுவனத்தின் கோல்டு இடிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யப்படும். இதில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு தேவையில்லை. இதற்கு பான் கார்டு இருந்தால் மட்டும் போதும். இதில் எஸ்ஐபி முறையில் மாதம் ரூ.1,000-கூட முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்ய நுழைவுக் கட்டணம் இல்லை. இதிலிருந்து ஒரு வருடத்துக்குள் வெளியேறினால் 2% வெளியேறும் கட்டணம் கட்ட வேண்டும். இதில் குறுகியகால மூலதன வரி ஓராண்டுக்குள் வெளியேறினால் இருக்கும். இது அவரவர் வருமான வரி வரம்பின் அடிப்படையில் இருக்கும். இதன்மூலம் கிடைக்கும் வருமானம்  கோல்டு இடிஎஃப் திட்டத்தைவிட குறைவாகவே இருக்கும்.ஆக, இதையெல்லாம் கருத்தில்கொண்டு அவரவருக்கேற்ற தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்வது நல்லது'' என்றார் அனிதா பட்.

தங்கம்... இன்னும் விலை ஏறுமா?
தங்கம்... இன்னும் விலை ஏறுமா?

தங்கத்தில் முதலீடு செய்வதில் உள்ள நல்ல, கெட்ட விஷயங்களைச் சொல்லிவிட்டோம். இனி முடிவெடுக்க வேண்டியது நீங்கள்தான்!      

படங்கள்: ப.சரவணக்குமார்,
ஜெ.வேங்கடராஜ்.