ஸ்பெஷல்
Published:Updated:

சாதனை மனிதர் ராஜீவ் சூரி!

ச.ஸ்ரீராம்

முதுகலைப் பட்டம் ஏதும் படிக்காமல் நோக்கியாவின் வளர்ச்சியில் பல சாதனைகளைப் படைத்தவர் இவர்.

வெளிநாட்டவர் கள் நம்மூர் கம்பெனிகளில் தலைவராக இருந்த காலங்கள் மாறி, இப்போது உலகின் பிரபல கம்பெனிகளில் நம் நாட்டினர்  சிஇஓ-வாகப் பொறுப்பேற்று நடத்தும் காலம் இது.  மைக்ரோசாஃப்ட்-க்கு சத்ய நாதெள்ளா சிஇஓ ஆனதைத் தொடர்ந்து, இப்போது நோக்கியாவின் புதிய சிஇஓ-வாக ஆகியிருக்கிறார் ராஜீவ் சூரி.

சமீபத்தில் நோக்கியாவின் செல்போன் தயாரிப்பு பிரிவை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 5.44 பில்லியன் யூரோ (சுமார் 7.5 பில்லியன் டாலர்!)    கொடுத்து வாங்கியது. இதைத்தொடர்ந்து இனி நோக்கியா நிறுவனம் நெட்வொர்க் மற்றும் மேப்பிங் தொழில்நுட்பத் துறையிலும், அதுசம்பந்தமான காப்புரிமைகளைப் பெறுவதிலும் தொடரும் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில், நோக்கியாவின் புதிய தலைமை நிர்வாகியாக இந்தியாவைச் சேர்ந்த ராஜீவ் சூரி இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

சாதனை மனிதர் ராஜீவ் சூரி!

ராஜீவ் சூரி கர்நாடகாவின் மணிபால் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் படித்தவர். முதுகலைப் பட்டம் ஏதும் படிக்காமல் நோக்கியாவின் வளர்ச்சியில் பல சாதனைகளைப் படைத்தவர் இவர். கால்காம் நிறுவனத்தில் 1989-ம் ஆண்டு உற்பத்திப் பிரிவில் தன் பணியைத் தொடங்கிய சூரி, 1995-ல் நோக்கியாவில் மார்க்கெட்டிங் மேனேஜராகத் தன் பணியைத் தொடங்கினார். 19 வருடங்களாக நோக்கியாவில் பல உயர் பொறுப்புகளில் தன் பணியைத் தொடர்ந்துவந்த சூரி, தற்போது நோக்கியா தொலைத்தொடர்பு கருவிகள் வர்த்தகப் பிரிவு தலைவராக உள்ளார்.

செல்போன் விற்பனையில் உலகில் முதலிடத்தில் இருந்த நோக்கியா மொபைல் போன்களை, ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனங்கள் பின்னுக்குத் தள்ளிவிட்ட நிலையில், நீண்டகாலமாக லாபமின்றி இயங்கிக்கொண்டிருந்த நோக்கியா நெட்வொர்க் யூனிட், ராஜீவ் சூரியின் வருகைக்குப்பின் செலவுகளைக் குறைக்கும் உத்தியைக் கையாண்டதால், கடந்த 2012-ல் மீண்டும் லாபப் பாதைக்குத் திரும்பியது.

தொடரட்டும் நம் நாட்டினரின் சாதனை!