ஸ்பெஷல்
Published:Updated:

ஹாபிஸ்: ஜாலி முதலீடு, சர்ப்ரைஸ் லாபம்!

செ.கார்த்திகேயன்

நாய் வளர்ப்பு: செல்வம் தரும் செல்லப்பிராணி!

எனக்கு சிறுவயதிலேயே நாய்கள் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. நாய்கள் நமது வீட்டைக் காப்பதோடு,  நம்மையும் இளைப்பாறச் செய்து மகிழ்விக்கிறது. தினசரி கவலை களின் காரணமாக ஏற்படும் சோர்வுகள், நாய்க்குட்டிகளுடன் விளையாடும்போது  காணாமல் போய்விடுகிறது எனக்கு என்று பரவசம்பொங்கப் பேசினார் கோவையைச் சேர்ந்த சுரேஷ். இவர் 'கோவை பெட்ஸ்’ என்கிற செல்லப்பிராணிகளுக்கான கடையின் உரிமையாளர். பொழுதுபோக்காக நாய் வளர்க்க ஆரம்பித்த இவர், அதனையே ஒரு தொழிலாகச் செய்துவருகிறார்.

ஹாபிஸ்: ஜாலி முதலீடு, சர்ப்ரைஸ் லாபம்!

பொழுதுபோக்கு டு பிசினஸ்!

'சின்ன வயதில் இருந்தே நாய்கள் என்றால் எனக்கு ஏகபிரியம். ஆனால், வீட்டில் நாய் வளர்க்கக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். எனக்கு 17 வயதானபோது என் பெற்றோர்களுடன் போராடி டாபர்மேனை வாங்கினேன். நாங்கள் இருவரும் நண்பர்களாகவே வளர்ந்தோம். என் டாபர்மேன், நான் என்ன சொன்னாலும் கேட்கும்.  

எனக்கும் என் டாபர் மேனுக்கும் இருந்த நட்பை பார்த்து, கோவைவாசிகளில் பலர் அவர்கள் வளர்த்த செல்ல நாய்களுக்கு பயிற்சி தர என்னை அழைத்தார்கள். பயிற்சிக்கென்று தனியாகக் கட்டணத்தை நியமித்துச் சம்பாதிக்க ஆரம்பித்தேன்.

இதன்பின் என்னைத் தேடிவந்த சிலர், நாய்க்குட்டி விலைக்குக் கிடைக்குமா என்று கேட்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு வாங்கித் தந்தேன். நாளுக்குநாள் என்னிடம் நாய்களைக் கேட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, இதையே பிசினஸாகச் செய்ய ஆரம்பித்தேன். நாய்களை விற்பதற்காகவே 1999-ல் பெட் ஷாப் ஒன்றை கோவையில் ஆரம்பித்தேன்.

லட்சம் நாய்கள்!

இதுவரை சுமார் ஒரு லட்சம் நாய்களை வாடிக்கையாளர்களுக்கு விற்றிருக்கிறேன். நாய்களின் வகைகளைப் பொறுத்தும், அதன் தேவையைப் பொறுத்தும் விலையை நிர்ணயம் செய்வேன். எல்லா  மாநிலங்களில் இருந்தும் வந்து என்னிடம் நாய்களை வாங்கிச் செல்கிறார்கள். தற்போது தினமும் 5-10 நாய்களை விற்கிறேன். சராசரியாக ஒருநாளைக்கு நாய்களை விற்பதன்மூலம் பராமரிப்புச் செலவுகள்போக, ரூ.2,000-2,500 வரை லாபம் கிடைக்கும்.

நாய் வளர்ப்பவர்களிட மிருந்தும் நாய்க்குட்டிகளை வாங்கிக்கொள்கிறேன். ஒரு நாய்க்குட்டியை அதன் வகையைப் பொறுத்து சுமார் ஐந்தாயிரம் ரூபாய் வரை விற்கலாம். நாய்க்குட்டிக்கு 3-6 மாதம் வரை பயிற்சி தர மாதம் ரூ.2,000-3,000 வரை கட்டணம் வாங்குகிறேன்.

ஹாபிஸ்: ஜாலி முதலீடு, சர்ப்ரைஸ் லாபம்!

ஒரு நாய்க்கு சராசரியாக ஒவ்வொரு மாதமும் சுமார் 15 கிலோ டாக் ஃபுட் தேவைப் படும். இதன் விலை ரூ.2,500-6,000 ரூபாய் வரை அதன் தரத்தை பொறுத்து மாறுபடும்.

40 வகை நாய்கள்!

இப்போது என்னிடம் டால்மேசன், கிரே ஹவுண்ட், கிரேட் டேன், லேபர் டாக், புல் டாக், சிவாவா, செயின்ட் பெர்னார்ட், ராட்வீலர், ஜாக் ரஸ்ஸல் டேர்ரியர், பக் என்று தொடங்கி அனைவரும் வளர்க்கக்கூடிய வகைகளான ஜெர்மன்ஷெப்பர்டு, பொமரேனியன் என்று என்னிடம் 40 வகை நாய்கள் இருக்கின்றன'' என்றார், சுரேஷ்.

வெறும் ஹாபியாக நாய் வளர்க்க ஆரம்பித்து, இன்றைக்கு அதையே ஒரு பிசினஸாக வெற்றிகரமாக செய்துவரும் சுரேஷ் உள்ளபடியே வித்தியாசமான பிசினஸ்மேன்தான்!

படங்கள், செய்தி: ர.சதானந்த்.