ஸ்பெஷல்
Published:Updated:

ஹோம் பட்ஜெட்

இரா.ரூபாவதி

ஒரு குடும்பத்தில் நிம்மதி நிலவவேண்டும் எனில், அந்தக் குடும்பத்தின் நிதிநிலை சிறப்பாக இருக்க வேண்டும். பணத் தட்டுப்பாடு உள்ள குடும்பத்தில், சின்னப் பிரச்னைகூட பெரிதாக வெடித்து எல்லோரது சந்தோஷத்தையும் கெடுக்கும். ஒரு குடும்பத்தில் நிதிநிலை சிறப்பாக இல்லாமல்போக நாம்தான் முக்கிய காரணம். சம்பளம் கிடைத்தவுடன் இஷ்டத்துக்கு செலவுசெய்தால், மாதக் கடைசியில் காசில்லாமல் தவிக்கவைத்து, கடன் என்னும் புதைகுழிக்குள் தள்ளிவிடும்.

ஹோம் பட்ஜெட்

இதுமாதிரி இருக்கும் ஒரு குடும்பத்தின் நிதிநிலையை சரிசெய்ய வேண்டுமெனில் அந்தக் குடும்பத்தின் செலவு, வரவுக்குள் இருக்க வேண்டும். வரவுக்குள் செலவு இருக்க வேண்டுமெனில் பட்ஜெட் போட்டு செலவுசெய்வது அவசியம். மாத பட்ஜெட் எப்படி போடவேண்டும், இதில் கவனிக்கவேண்டிய, தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து விளக்குகிறார் நிதி ஆலோசகர் அனிதா ஆர் பட்.

ஹோம் பட்ஜெட்

''வருமானத்தில் பட்ஜெட் போடும் பழக்கம்தான் தேவையில்லாத செலவுகளைக் குறைத்து, எதிர்காலக் குறிக்கோள்களை விரைவாக நிறைவேற்றுவதற்கு உதவும். நிரந்தரமான செலவுகள் என்ன, எவ்வளவு சதவிகிதம் கட்டாயம் சேமிக்க வேண்டும் என்பதைத் தெரிந்துக்கொண்டாலே இலக்குகளை எளிதாக அடைந்துவிட முடியும்.

பட்ஜெட் போடுவது எளிதான காரியமில்லை. இந்த வேலையைப் பெண்களால் மட்டுமே சிறப்பாகச் செய்ய முடியும். ஏனெனில், எந்த செலவையும் எப்போது செய்ய வேண்டும் என்பது குறித்த புரிதல் இயற்கையாகவே பெண்களுக்கு அதிகமாக இருக்கும். ஆனால், பல பெண்களும் பட்ஜெட்

போடுவதை சிறப்பாகச் செய்வதில்லை. இரண்டு, மூன்று மாதம் ஒப்புக்கு  பட்ஜெட் போட்டுவிட்டு, நிறுத்திவிடுவார்கள். சிலர் சின்ஸியராக  பட்ஜெட்

போடுவார்கள். ஆனால், அதுபடி நடக்கமாட்டார்கள். இப்படி செய்வதால் எந்த பயனும் இல்லை.  பட்ஜெட்டை ஏன், எதற்காக போடுகிறோம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

ஹோம் பட்ஜெட்

(பெரிதாக்க படத்தின் மேல் கிளிக்குக!...)

குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்!

பட்ஜெட் போடும்போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நான்தான் பணம் சம்பாதிக் கிறேன். எனவே, நான் போடும் பட்ஜெட்டை அனைவரும் பின்பற்ற வேண்டும் என நினைக்கக் கூடாது. உங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வீட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் தெரியப் படுத்த வேண்டும். அப்போது தான் பட்ஜெட்டை புரிந்துகொண்டு அதைப் பின்பற்றுவார்கள். பட்ஜெட் போடும்போது குழந்தைகளும் உடனிருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

ஹோம் பட்ஜெட்

பணம் குறித்த விஷயங்கள் குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது என நினைப்பது தவறு. பணம் எப்படி வருகிறது, அதில் என்னென்ன செலவுகள் செய்யவேண்டும் என்பது குழந்தைகளுக்குத் தெரிய வேண்டும். அப்போதுதான் அவர்கள் பணத்தைக் கையாளுவதில் சிக்கல் வராது.  தேவையில்லாத பொருட்களை வாங்கிதரச் சொல்லி அடம் பிடிக்க மாட்டார்கள்.

பணத்தைத் தாண்டி சிந்தியுங்கள்!

பட்ஜெட் போடுவது உங்கள் மகிழ்ச்சிக்கு ஒரு தடையல்ல.  இது உங்கள் பணத்தைத் திறமையாக கையாள உதவும். தங்கள் வங்கிக் கணக்கில் இருப்பு கொஞ்சம் அதிகமானதுமே அடுத்து என்ன வாங்கலாம் என்றுதான் பலரும் யோசிக்கிறார்கள். அதாவது, புதிய கார், புதிதாகத் துணிகள், புதிய வீடு, ஆபரணங்கள் எனத் தங்களின் தேவைகளை அதிகமாக்கிவிடுகிறார்கள்.

மேலும், பக்கத்து வீட்டில் அது இருக்குது, இது இருக்குது, நம் வீட்டில் இல்லை, அதை யெல்லாம் நாமும் வாங்கிவிட வேண்டும் என்று துடிக்கக் கூடாது. எந்தப் பொருளை வாங்குவதற்குமுன்பும் அது தேவைதானா, அந்தப் பொருள் இல்லாமல் நிலைமையைச் சமாளிக்க முடியாதா என்றெல்லாம் யோசிக்க வேண்டும். இதனால்  தேவையில்லாதப் பொருட்களை வாங்குவது குறையும். பொருட்கள் வாங்குவதால் மட்டும் உங்களின் சமூக மதிப்பு கூடிவிடாது. நீங்கள் நடந்துகொள்ளும் விதத்தைப் பொறுத்துதான் சமூக மதிப்பு உருவாகும். அடுத்த வாரமும் பட்ஜெட் போடுவோம்.

ஹோம் பட்ஜெட்

மூன்றில் ஒரு பங்கு சேமிப்பு 

ஹோம் பட்ஜெட்

''நிதி நெருக்கடி இல்லாமல் குடும்பம் நடத்துவதற்கு உறுதுணையாக இருப்பது இந்த பட்ஜெட்தான். பட்ஜெட் போட்டுக் குடும்பம் நடத்துவதால் சேமிப்பு எப்போதும் இருக்கும். இதனால் எந்தப் பிரச்னையையும் எளிதாகக் கையாள முடிகிறது. மேலும், வாங்கும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு தொகையைச் சேமிப்புக்கு ஒதுக்கிவிடுவேன். மெடிக்ளைம் பாலிசி இருப்பதாலும் மருத்துவச் செலவுகளிலிருந்து தப்பித்துவிடுகிறோம்.''

ஹோம் பட்ஜெட்

நிம்மதியாக இருக்கிறேன்!

''பத்து ஆண்டுகளுக்குமுன் எந்தவிதமான பட்ஜெட்டும் போடாமல் வருகிற பணத்தை அப்படியே செலவு செய்வோம். இதனால் சம்பளம் வாங்கிய முதல் வாரத்தில் மட்டும்தான் கையில் பணம் இருக்கும். அதன்பிறகு திண்டாட்டமாகவே இருக்கும். இதனால் அவசரத் தேவைகளுக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைதான் வரும். அதன்பிறகுதான் பட்ஜெட் என்பதே போட ஆரம்பித்தோம். இன்றைக்கு எங்கள் வாழ்க்கை நிம்மதியாக இருக்கிறது!''

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், ஆ.முத்துக்குமார், ஜெ.வேங்கடராஜ்.