ஸ்பெஷல்
Published:Updated:

இளமையில் முதலீடு: பன் மடங்கு லாபம்..

சி.சரவணன் படம்: ப.சரவணக்குமார்.

காலம் பொன் போன்றது என்பதற்கு 'எஃபெக்ட் ஆஃப் காம்பவுண்டிங்' (Effect of Compounding )ஒரு சிறந்த உதாரணம். நமது சிறிய முதலீட்டைக்கூட பன் மடங்காகப் பெருக்கக்கூடிய ஆற்றல் கொண்டது பவர் ஆஃப் காம்பவுண்டிங் (Power of Compounding). முதலீடுகளில் காம்பவுண்டிங் என்கிற கூட்டு வளர்ச்சி எப்படி வேலை செய்கிறது என்பதை சென்னையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் வி.கோபால கிருஷ்ணன் விளக்கிச் சொன்னார்.

''முன்னொரு காலத்தில் சதுரங்க விளையாட்டை கண்டுபிடித்தவர், அதை ஒரு மன்னனிடம் விளையாடி காண்பித்தார். மன்னனுக்கு விளையாட்டு மிகவும் பிடித்துவிட, என்ன பரிசு வேண்டும் எனக் கேட்டார். அதற்கு அவர், சதுரங்க அட்டையில் இருக்கும் 64 கட்டங்களுக்கும் அரிசி கொடுங்கள் என்று கூறி, அரிசியை எந்தக் கணக்கில், எப்படி கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். முதல் கட்டத்துக்கு ஒரு அரிசி, இரண்டாவது கட்டத்துக்கு இரண்டு, மூன்றாவது கட்டத்துக்கு நான்கு, நான்காவது கட்டத்துக்கு எட்டு என்ற கணக்கில் கேட்டார். இவ்வளவுதானா என்று சிரித்தார்  மன்னன். சில நாட்கள் கழித்து, 'சதுரங்கத்தின் 64-ம் கட்டம் எட்டும்போது 18 மில்லியன் டிரில்லியன் அரிசி தேவைப்படுகிறது.  அந்த அளவு அரிசியை வைக்க இடமும் இல்லை; அரிசியும் இல்லை’ என அதிகாரிகள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்துபோனார். அந்த அரிசி கணக்குதான் காம்பவுண்டிங் எஃபெக்ட் எனக் கூறலாம்'' என்பதை விளக்கிச் சொன்னார்.

இளமையில் முதலீடு: பன் மடங்கு லாபம்..

முதல் முதலீடு நிலை:

''சமவயதுள்ள மூன்று நண்பர்களான அருண், வருண், தருண் தலா 1 லட்சம் ரூபாயை முதலீடு செய்கிறார்கள். அருண் 30-ஆவது வயதிலும், வருண்  35-வது வயதிலும், தருண் 40-வது வயதிலும் இந்த முதலீட்டைத் தொடங்குகிறார்கள். மூவருக்கும் முதலீட்டுத் தொகை மற்றும் வருமான விகிதம் ஒன்றுதான். தலா ஒரு லட்சம், 12% வருமானம். மூவருக்கும் வேற்றுமை முதலீட்டுக் காலம்தான். ஆனால், இவர்களுடைய 50-வது வயதில் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் தொகை எவ்வளவு தெரியுமா?

தருணைக் காட்டிலும் அருண் மூன்று மடங்கு அதிக தொகையைப் பெறுகிறார். வருணைக் காட்டிலும் அருண் ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகத் தொகை பெறுகிறார். அருணுடைய முதலீடு அபாரமாக வளர்வதற்கு முக்கியக் காரணம், அவர் சிறுவயதிலேயே முதலீட்டை துவங்கியதுதான். முதலீட்டுக் காலம் அதிகரிக்க அதிகரிக்க எஃபெக்ட் ஆஃப் காம்பவுண்டிங்  தனது  மந்திரத்தை வெளிப்படுத் துகிறது. முதலீடும், வருமான வளர்ச்சியும் ஒன்றாக இருந் தாலும், அருணுடைய முதலீட்டு பெருக்கத்துக்கு முக்கியப் பங்கு வகித்தது, இளமையில் முதலீட்டை தொடங்கியதுதான்.

இளமையில் முதலீடு: பன் மடங்கு லாபம்..

இரண்டாம் முதலீடு நிலை:

மூவரின் முதலீட்டு உதாரணத்தை இன்னொரு கண்ணோட்டத்தில் பார்ப்போம். இந்தமுறை அருண், வருண், தருண் மூவரும் தங்களது 30-ஆம் வயதில் 1  லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறார்கள். இந்தமுறையும் மூவரது முதலீட்டுத் தொகையும், காலமும் ஒன்று. ஆனால், வருமானம் மாறுபடுகிறது. அருணுடைய முதலீட்டு அணுகுமுறையில் (டைவர்சிஃபைட் ஈக்விட்டி ஃபண்டு முதலீடு) சராசரி ஆண்டு வருமானம் 15% கிடைக்கிறது.

இளமையில் முதலீடு: பன் மடங்கு லாபம்..

வருண் முதலீட்டு முறையில் (பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்ட்) சற்று குறைவாக 12% வருமானம் கிடைக்கிறது. தருண் முதலீட்டு முறையில் (ஃபிக்ஸட் டெபாசிட்) 9% வருமானம் கிடைக்கிறது.

இளமையில் முதலீடு: பன் மடங்கு லாபம்..

வருமானத்தில் 3% வித்தியாசமே.  ஆனால், தருணைக் காட்டிலும் அருணுக்கு கிட்டத்தட்ட இரண்டு மடங்கு தொகை கூடுதலாகக் கிடைக்கிறது. முதலீட்டை இளம் வயதில் தொடங்குவதோடு மட்டுமல்லாமல் சற்று ரிஸ்க் எடுத்தால் காம்பவுண்டிங்கால் அதிக வருமானம் கிடைக்கும் என்பதும் மிக முக்கியம்'' என்றார் கோபால கிருஷ்ணன் .

''நம்மில் பலரும் மொத்தமாக 1 லட்ச ரூபாயை முதலீடு செய்ய முடியாது. அந்தவகையில் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை இளம்வயதிலே முதலீடு செய்துவந்தால் பவர் ஆஃப் காம்பவுண்டிங்படி பெரும் தொகையைப் பெற முடியும்.

மேலே குறிப்பிட்ட நண்பர் களில் அருண் 30 வயதிலும், வருண் 35 வயதிலும், தருண் 40 வயதிலும் மாதம் 1,000 ரூபாய் முதலீட்டை மேற்கொள்வதாக வைத்துக் கொள்வோம். இவர்களின் முதலீட்டுக்கு 12% வருமானம் கிடைத்தால் இவர்களின் 50 வயதில், தருணைவிட அருண் இரண்டு மடங்கு மட்டுமே முதலீடு செய்து நான்கு மடங்கு முதிர்வுத்தொகை  பெறுவார்.

இளமையில் முதலீடு: பன் மடங்கு லாபம்..

இதுவே ரிஸ்க் எடுத்து அருண், பேலன்ஸ்டு ஃபண்டில் (12%) முதலீடு செய்வதற்கு பதில் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்தால் அவரின் முதலீடு 9.90 லட்சமாக பெருக்குவதற்கு பதிலாக ரூ. 14.98 லட்சமாக பெருகி இருக்கும். சற்று ரிஸ்க் எடுப்பது மூலம் கூடுதலாக ரூ.5 லட்சம் கிடைத்திருக்கும்'' என்றார்  கோபால கிருஷ்ணன்.

எங்கே கிளம்பிட்டீங்க,  முதலீட்டை ஆரம்பிக்கவா?